Published:Updated:

குழந்தைகளை பிக் பாஸ் பார்க்க வைக்காதீர்கள் ப்ளீஸ்..! 73-ம் நாள் - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

குழந்தைகளை பிக் பாஸ் பார்க்க வைக்காதீர்கள் ப்ளீஸ்..! 73-ம் நாள் - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

குழந்தைகளை பிக் பாஸ் பார்க்க வைக்காதீர்கள் ப்ளீஸ்..! 73-ம் நாள் - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

குழந்தைகளை பிக் பாஸ் பார்க்க வைக்காதீர்கள் ப்ளீஸ்..! 73-ம் நாள் - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

குழந்தைகளை பிக் பாஸ் பார்க்க வைக்காதீர்கள் ப்ளீஸ்..! 73-ம் நாள் - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

Published:Updated:
குழந்தைகளை பிக் பாஸ் பார்க்க வைக்காதீர்கள் ப்ளீஸ்..! 73-ம் நாள் - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.

இன்றைய நாளின் மிக முக்கியமான, சுவாரசியமான விஷயம் சில போட்டியாளர்கள் அவர்களின் சுற்றங்களை, நட்புகளை நீண்ட நாட்கள் கழித்து பார்த்ததுதான். இது சார்ந்த பகுதிகள் உணர்ச்சிகரமாகவும், நெகிழ்ச்சியாகவும் கூடவே நகைச்சுவையும் கலந்திருந்தது. நமக்கும் சரி, சம்பந்தப்பட்ட போட்டியாளர்களுக்கும் சரி, இனிய ஆச்சர்யத்தை தந்த பிக் பாஸூற்கு நன்றி. என்னவொன்று, சரியான சமயத்தில் அவர்களை நிறுத்தி வெளியே அனுப்பியதுதான் எரிச்சலும் வேதனையும். 

மனித உடல் மீது நிகழ்த்தப்படும் வதைகள் தொடர்பான காட்சிகள் இன்றும் இருந்தன. மறுபடியும் அதேதான். சவால்கள் கடுமையாக இருக்கும் என்பது முன்பே அறிவிக்கப்பட்டு விட்டதுதான் என்றாலும் அது அருவருப்பாகவோ, அச்சமூட்டுவதாகவோ இல்லாமல் மூளைக்கு வேலைக்கு தரும் விதமாக அல்லது பார்ப்பவர்களுக்கும் பங்கேற்பவர்களுக்கும் சுவாரசியம் தரும் விதமாக சவால்கள் அமைவது முறையானது. மாறாக ஹாரர் திரைப்படங்களில் வரும் விதமாக போட்டியாளர்கள் விதம்விதமாக கொடுமைப்படுத்தப்படுவது கேவலமாக இருக்கிறது. நுண்ணுணர்வும் இளகிய மனமும் உள்ளவர்களை அதிகம் பாதிப்பது போன்ற மோசமான காட்சிகள். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

ஹிப் ஹாப் தமிழனின் இசை இம்சையில் ‘ஆம்பளை’ திரைப்படத்தில் இருந்து ‘பழகிக்கலாம்’ என்ற பாடல் ஒலித்துத் தொலைந்தது. (முதலில் என்ன பாடல் என்று தெரியாமல் பிறகு இணையத்தில் தேடி வெற்றிகரமாக கண்டுபிடித்து விட்டேன்). 

“எல்லோரும் Freeze’ என்று காலையிலேயே தன் அலப்பறையைத் துவங்கினார் பிக்பாஸ். பாவம், ஹரீஷ். தன் கண்ணாடியை உயர்த்திய படி அப்படியே உறைந்திருந்தார். மூக்குக் கண்ணாடி விளம்பரம் போல் இருந்தது. அவருடைய கண்ணாடி வழியாக அவருடைய முகம் விசித்திரமாக தெரிந்தது. 

பிறகு ஒவ்வொருவராக உறைந்த நிலையில் இருந்து விலக்கி விடப்பட்டார்கள். ரிலீஸ் என்றாலும் சிநேகன் அப்படியே யோசனையில் அமர்ந்திருந்தார். பிறகு ஆரவ் மட்டும் உறைய, மற்றவர்கள் அவரை நெருங்கி பயங்கரமாக கிண்டலடித்தனர். குறிப்பாக பிந்து நிறைய கலாய்த்தார். பிறகு பிந்து உறையும் போது ஆரவ் அவரது நெருங்கி கலாட்டா செய்ய, அந்தச் சமயம் பார்த்து ஆரவ்விற்கும் freeze கட்டளை வந்தது. சினிமா டூயட்டின் உறைந்த காட்சி மாதிரி அமைந்த அதை ‘ஆயிரம் தாமரை மொட்டுக்களே’ பாடல் பாடி கலாய்த்தார் ஆரத்தி. 

பிறகு ஜூலி freeze. “நேத்து யாரோ தும்ம வைக்க டிரை பண்ணாங்களே” என்று தக்க சமயத்தில் தன் பிரத்யேக அலப்பறையை துவங்கினார் ஆர்த்தி. எனவே ஜூலியை பழிக்குப் பழி வாங்கும் விதமாக ஹரீஷ், அவரின் மூக்கில் குச்சியை நுழைக்க ஜூலி கண்ணீருடன் அப்படியே நின்றார். உறைந்த நிலையில் இருக்கும் போதும் பிந்துவின் கண்கள் மட்டும் பேசிக் கொண்டே இருக்கின்றன. 

சக்தி பேச முற்படும் போதெல்லாம் பிக்பாஸ் அவரை freeze செய்ய வைக்கலாம் போல் இருந்தது. அவருக்கு சிநேகனிடம் என்னதான் பிரச்சினை என்றே தெரியவில்லை. அதை தெளிவாகவும் சொல்லித் தொலைக்காமல், தவணை முறையில் சிநேகனிடம் எதை எதையோ கேட்டு சிநேகனை மட்டுமல்லாமல் நம்மையும் எரிச்சல்படுத்துகிறார். 

ஆர்த்தி, ஜூலி, சக்தி, ஆகியோரின் மீள்வருகை திட்டமிட்டு அமைக்கப்பட்டது என்பது மறுபடியும் உறுதியாகிறது. பிக்பாஸ் வழிகாட்டுதல்களின் படி அவர்கள் துணிச்சலுடன் நடந்து கொள்கிறார்கள். வெளியில் நடந்த விஷயங்களைப் பற்றி உள்ளே பேசுகிறார்கள். சில விஷயங்களில் இந்த மூவருக்கு மட்டும் முன்னுரிமையும் பிரத்யேக அதிகாரமும் தரப்படுகிறது. 

பார்வையாளர்கள் தீர்மானித்து ‘இவர்கள் இருக்கக்கூடாது’ என்று வாக்களித்து வெளியேற்றிய பின், ‘நிகழ்ச்சியை நடத்துவது எங்கள் இஷ்டம்’ என்கிற வீம்பு பிடித்த விதிகளுடன் அவர்களை பிக்பாஸ் மறுபடியும் உள்ளே அழைத்து வந்து கலகம் செய்ய வைப்பதும் அவர்களுக்கு முன்னுரிமை தருவதும், ஒருவகையில் வாக்களித்த பார்வையாளர்களை அவமானப்படுத்தும் விஷயமாகும். பார்வையாளர்களின் பங்களிப்பில்லாமல் இந்த நிகழ்ச்சி வெற்றி பெறாது என்கிற அடிப்படையை நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் புரிந்து கொள்வது அவசியம். 

“நான் மறுபடி வந்ததுல சந்தோஷமா… இல்ல..” என்று சிநேகனிடம் இழுத்தார் சக்தி. ‘அம்மா மேல சத்தியமா சந்தோஷம்” என்று மிகையாக எதிர்வினையாற்றினார் சிநேகன். 

“நிறைய விஷயங்கள் உங்க கிட்ட கேட்கணும். உங்களை என் அண்ணனாத்தான் பார்த்தேன். உங்களுக்கு நிறைய விஷயம் தெரியும்-ன்றதால உங்க கட்டுப்பாட்டிலதான் நாங்க இருந்தோம். ஒருவகையில் தப்பு எங்க பேர்லயும் இருக்கலாம். அதுவரைக்கும் ஒழுங்கா பேசிய நீங்கள், கமல் வர்ற அன்னிக்கு மட்டும் மக்கள் கைத்தட்டலைக் கேட்டவுடனே அதுக்கேத்த மாதிரி மாத்தி பேசிடறீங்க. உங்களுக்கு நல்லா கேம் தெரிஞ்சிருக்கு. உங்க மேல வருத்தம் இருக்கு. தந்திரமாக நடந்துக்குட்டீங்க” என்று குத்துமதிப்பாகவே பேசிக் கொண்டிருந்தார் சக்தி. ‘இதுதான் விஷயம்’ என்று குறிப்பாக எதையும் அவர் மேற்கோள் காட்டாமல் ‘டிரிக்கர்’ செய்தது எரிச்சலாக இருந்தது. 

“நானும் இந்த விளையாட்டிற்கு புதுசுதான். அனுபவமெல்லாம் இல்லை. எல்லோரையும் அனுசரிச்சு போகத்தான் முயன்றேன். எந்த தந்திரமும் செய்யலை. மனதறிந்து எந்த தவறும் செய்யாததால் எனக்கு குற்றவுணர்ச்சி இல்லை. நான் கேம் ஆடலை. அதையும் மீறி நான் எதையாவது செய்திருந்தா, மன்னிச்சிடுங்க” என்றார் சிநேகன். ‘சரி விடுங்க.’ என்று நகர்ந்தார் சக்தி. இனியாவது அவர் குழப்பாமல் இருப்பாரா என்று தெரியவில்லை. 

வீட்டினுள் அடைபட்டதால் அது சார்ந்த மன அழுத்தத்தினாலும், போட்டியில் வெல்ல வேண்டும் என்பதால் அதற்கான உத்திகளிலும் ஏறத்தாழ எல்லோருமேதான் அவரவர்களின் வழிகளில் தன்னிச்சையாக முயன்றிருப்பார்கள். இது இயல்பு. சிநேகன் மட்டுமே தலைமைதாங்கி எல்லோரையும் ஏமாற்றினார் என்பது போல நினைத்துக் கொள்ளும் சக்தியின் புலம்பல் அபத்தம். ஏமாறும் அளவிற்கு அவர்கள் முட்டாள்களா என்ன?

**

இப்போது சிநேகனை நோண்டுவது ஜூலியின் முறை. ‘நான் எது செஞ்சாலும் கேமுக்காக பண்ணேன்றாங்க’ என்று அனத்திய சிநேகனை “நீங்க நீங்களா இல்லையே!” என்று ஆரம்பித்தார் ஜூலி. “இந்த பிக் பாஸ் வீட்ல என்ன கத்துக்கிட்டீங்க?” என்பது அம்மணியின் அடுத்த கேள்வி. “யாரையும் நம்பக்கூடாதுன்னு கத்துக்கிட்டேன்” என்றார் சிநேகன். “அது நீங்க கத்துக் கொடுத்த பாடம்ணே” என்று வளர்த்த கடா மார்பில் பாய்ந்தது. “என் வாயைப் புடுங்கறதுதான் உன் task-ஆ?” என்ற சரியான கேள்வியைக் கேட்டார் சிநேகன். “உங்க வாயைப் புடுங்கி எனக்கு என்ன கிடைக்கப் போகுது. வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் பழக்கம் எனக்கில்லை” என்றார் ஜூலி. அப்ப கடப்பாரையா இருந்தா ஓகே வா பாசமலர்?

தாம் பங்கு கொண்ட விளையாட்டில் அது சார்ந்த சில தன்னிச்சையான பிசிறுகள் நிகழக்கூடும் என்பதை புரிந்து கொள்ளாமல் மற்றும் ஏற்றுக் கொள்ளாமல் ஏதோ அவை தங்கள் வாழ்க்கைக்கு இழைக்கப்பட்ட வரலாற்றுத் துரோகம் என்கிற அளவில் ஒவ்வொருவரும் மறுகுவது மிகையாகத் தெரிகிறது. ‘தன் மீது பிழையேதுமில்லை. எல்லாவற்றிற்கும் அடுத்தவர்தான் காரணம்’ என்கிற அடிப்படையான தற்பாதுகாப்பு உணர்வு ஒவ்வொருவரையும் ஆள்கிறதோ என்று தோன்றுகிறது.  

**

அடுத்து நிகழ்ந்தது ஓர் இனிய ஆச்சர்யம். கதவைத் திறந்து கொண்டு படுக்கையறைக்குள் நுழைய முற்பட்ட வையாபுரியை ‘freeze’ செய்தார் பிக்பாஸ். வீட்டின் கதவுகள் திறக்கப்பட்டன. நடுத்தர வயதில் ஒரு பெண்மணி உள்ளே வந்தார். பார்த்தவுடனேயே அது வையாபுரியின் மனைவி என்பது தெரிந்து போயிற்று. இந்த வேடிக்கையை அவர்களின் வாரிசுகள் வாக்குமூல அறையில் இருந்து கொண்டு காமிராவின் வழியாக பார்த்துக் கொண்டிருந்தார்கள். 

“என் பொண்டாட்டி.. பொண்டாட்டி” என்று உறைந்த நிலையிலேயே உற்சாகப்பட்டார் வையாபுரி. “வையா.. வையா.. ” என்று அழைத்தபடியே வந்தார் அவரின் வீட்டம்மணி, (என் காதில் முதலில் “பையா.. பையா..” என்று அழைப்பது மாதிரி ஒலித்தது). “ஏன் எதுவுமே பேசமாட்டேங்கறீங்க. புது வையாபுரியை பார்க்கலாம்னு ஆசையா வந்தேன். Task முக்கியமா, நான் முக்கியமா?” என்றார் திருமதி. பிக் பாஸ் பலமாக பயிற்சி தந்து அனுப்பியிருக்கிறார் என்பது நன்றாகத் தெரிகிறது. 

வையாபுரி தன் உறைந்த நிலையை கைவிட்டு மனைவியை கட்டியணைத்துக் கொண்டார். நெகிழ்வான காட்சியது. “உங்களை ஜெயிச்சிட்டுதானே வரச்சொன்னேன். இப்படி task-ஐ நடுவுல விட்டுட்டா என்ன அர்த்தம்?” என்று கேட்டார் திருமதி வையாபுரி. ம்..ஹூம் சில அடிப்படையான விஷயங்களில் இல்லத்தரசிகளின் குணாதிசயங்களை மாற்றவே முடியாது. 

“ப்ளீஸ்.. ப்ளீ’ஸ்” என்று காய்கறி வாங்க வரச் சொல்லி முதலில் கெஞ்சி விட்டு பிறகு வாங்கி வந்தவுடன் ‘என்னாதிது… இப்படி வாங்கிட்டு வந்திருக்கீங்க.. காய்ஞ்சு போனது.. வதங்கிப் போனதெல்லாம் கடைக்காரன் உங்க தலைல கட்டியிருக்கான். ஏமாந்து அப்படியே வாங்கிட்டு வந்திருக்கீங்க. உங்களைப் பார்த்தவுடனே இளிச்சவாயன்னு எப்படித்தான் கண்டுபிடிக்கறாய்ங்களோ” என்று இடதும் வலதுமாக மாற்றி மாற்றி இண்டிகேட்டர் போடுவதில் இல்லத்தரசிகள் ‘மன்னி’கள். 

நெகிழ்வான உணர்வுடன் தன் மனைவியை கட்டியணைத்தபடி வெளியே அழைத்து சென்று விட்டார் வையாபுரி. தம்பதியினர் கார்டன் ஏரியாவில் அமர்ந்தபடி ஆசை தீர பேசித் தீர்த்தனர். “மாறிட்டீங்க இல்லையா. பழைய வையாபுரி இல்லையே.. ஏன் இப்படி இளைச்சுட்டீங்க.. (வையாபுரி எந்தக் காலத்துல குண்டா இருந்திருக்காரு?) சரியா சாப்பிடறது இல்லையா… இங்க சாப்பாடு சரியில்லையா?’ என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனார் திருமதி. ‘அதெல்லாம் இல்ல. நான் நல்லாத்தான் இருக்கேன். இங்க சாப்பாடு அருமையாத்தான் இருக்கு. ஆர்த்தி நல்லா சமைப்பா’ என்று வையாபுரி சொன்னவுடன் ‘என் சமையலை விட நல்லா இருக்குமா?’ என்றார் திருமதி பட்டென்று. இது போன்ற ஒப்பீடுகள் குடும்பத் தலைவிகளை எரிச்சல் அடைய வைப்பதென்பது பல நூற்றாண்டுகளாக வழக்கத்தில் இருக்கிறது. 

“பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா” என்று ஜனகராஜ் மாதிரி மகிழும் ஆண்களின் மத்தியில் “என் பொண்டாட்டி வந்திருக்கா கணேஷ்” என்று வித்தியாசமாக கத்தும்படியாகி விட்டது வையாபுரியின் நிலைமை. ‘நெஜம்மாவே மாறிட்டீங்களா” என்று இன்னமும் தீராத சந்தேகத்துடன் திருமதி கேட்க, ‘கேமிரால அழுதேன்னே.. பார்க்கலையா” என்றார் வையாபுரி. ‘ஜெயிச்சுட்டு வாங்க” என்று அம்மணி சொல்லிக் கொண்டிருக்கும் போது ‘Freeze’ என்ற குரல் கேட்டது. “ஆனந்தி.. நீங்க போகலாம்’ என்ற மகேந்திர பாகுபலியின் குரல் கேட்டது. 

‘போகுதே.. போகுதே.. என் பைங்கிளி வானிலே.… ‘ என்கிற பாடல் உள்ளுக்குள் தாறுமாறாக ஒலிக்க.. மனைவி போவதை உறைந்த நிலையில் கலங்கலாகப் பார்த்துக் கொண்டிருந்தார் வையாபுரி. “அடப்பாவிகளா… குடும்பத்துக்குள்ள குண்டு போடறீங்களேடா” என்று மைண்ட் வாய்ஸ் அவருக்குள் ஒலித்திருக்க வேண்டும். 

பிறகு வையாபுரியின் மகனும் மகளும் வந்தனர். எல்லோரையும் இயல்பாக விசாரித்துக் கொண்டே சென்று வையாபுரியின் இடத்தை அடைந்ததும் ‘யப்பா…’ என்றான் மகன். மனைவியை விடவும் தங்களின் வாரிசுகளை பார்ப்பதில் ஒவ்வொரு தந்தைக்கும் அதிக ஆனந்தம். Task-ஐ கைவிட்டு அவர்களையும் உடனே அணைத்துக் கொண்டார் வையாபுரி. தந்தையை விடவும் மகன் உயரமாக இருக்கிறான். 

திருமதி. வையாபுரி மறுபடியும் உள்ளே வர அனைவரும் அவரிடம் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு உற்சாகமாக பேசினார்கள். ‘ஐம்பது வயசுல லவ் வந்திருக்கு” என்று தன் கணவரை பாசத்துடன் கட்டிக் கொண்டார் ஆனந்தி. ‘ஏதாவது ஒரு பாட்டு பாடுங்க…’ என்று ஆரத்தி வேண்டுகோள் வைக்க, ‘இஞ்சி இடுப்பழகா.. கள்ளச்சிரிப்பழகா.. மறக்க மனம் கூடுதில்லையே” என்று டைமிங்காக பாடினார் வீட்டம்மா. வையாபுரியின் சைஸூக்கு ஏற்ற பாட்டுதான். 

taskஐ மீறியதால் வையாபுரியை அவரது குடும்பத்தார் நீச்சல் குளத்தில் தள்ளி விட வேண்டும் என்கிற உத்தரவு வந்தது. “வாங்கடா.. அப்பாவை பிடிச்சு குளத்தில் தள்ளிவிடலாம். ரொம்ப நாள் ஆசை” என்றார் திருமதி. என்னவொரு வில்லத்தனம்!. மனைவியை விடவும் வாரிசுகள்தான் அப்பாவை தள்ளிவிடுவதில் ஆர்வமாக இருந்தார்கள். பெத்த மனசு என்ன பாடு பட்டிருக்கும்.

வையாபுரியை உறைந்த நிலையில் நிற்க வைத்து விட்டு அவரின் குடும்பத்தாரை வெளியே வரச்சொன்னார் வில்லன் வீரப்பா.. கண்களாலேயே வையாபுரி விடை தர, அவர்கள் வெளியேறினார்கள். அவர்கள் போகும் கடைசி தருணம் வரை பார்த்துக் கொண்டிருந்தார் வையாபுரி. ‘உங்கள் லக்ஸரி பட்ஜெட் கேன்சலாகி விட்டது’ என்று குறும்பாக சொல்லிக் கொண்டே வெளியேறியது சின்ன வாண்டு. 

மிக நெகிழ்ச்சியுடன் பிக்பாஸிற்கு நன்றி சொன்ன வையாபுரி, “இனி 200 நாள் கூட தாங்குவேன். பொண்டாட்டி சொன்னா… பத்து முறை கூட குளத்துல குதிச்சு எந்திரிப்பேன்” என்று படு உற்சாகமாகி விட்டார். வையாபுரியின் துள்ளலைப் பார்த்தால் வீட்டில் வாரிசுகளின் எணணிக்கை விரைவில் மூன்றாகி விடும் போலிருக்கிறது. 

வையாபுரியின் நெகிழ்ச்சியான உணர்வை இதர போட்டியாளர்கள் ஜாலியாக கிண்டலடித்து தீர்த்தார்கள். 

வையாபுரியின் மூலமாக நமக்கும் ஒரு பாடம் கிடைக்கிறது. உறவுகளின் அருமை அருகாமையில் இருக்கும் போது நமக்கு புரிவதில்லை. விலகலில் இருக்கும் போதுதான் ஆழ்மனதில் ஒளிந்துள்ள பாசம் பீறிட்டுக் கொண்டு வருகிறது. நம்மை நமக்கே அடையாளம் காட்டும் தருணம். உறவுகள் அருகில் இருக்கும் போதே ஒவ்வொரு கணத்தையும் கொண்டாடித் தீர்க்க வேண்டும் என்கிற உபதேசம் வையாபுரிக்கு மட்டுமல்லாமல் நமக்கும் கிடைக்கிறது. காலம் தாழ்ந்து பாடம் கற்பதால் உபயோகம் ஏதுமில்லை. 

அடுத்த இன்ப அதிர்ச்சி பிந்துவிற்கு. படுக்கையறையில் அமர்ந்து மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருந்த பிந்து உள்பட அனைவரையும் உறையச் செய்தார் பிக்பாஸ். பிரதான வழியைத் திறந்து கொண்டு இரண்டு நபர்கள் உள்ளே வந்தார்கள். பாபி மற்றும் ராஜ். பிந்துவின் எட்டுவருட நண்பர்களாம். 

உறைந்திருந்த நிலையில் அவர்களைப் பார்த்த ஆச்சர்யத்தில் பிந்துவின் கண்களும் முகமும் ஒரு கதகளி ஆட்டத்தையே நிகழ்த்திவிட்டது. தெலுங்கு வாசனையுடன் ‘என்ன எப்படியிருக்கீங்க? உன்னைப் பார்க்க ஹைதராபாத்ல இருந்து வந்திருக்கோம். நீ என்னடான்னா பேசாம உட்கார்ந்திருக்க. உனக்கு பிடிச்ச ஸ்வீட் கொண்டு வந்திருக்கோம். ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுக்கத்தான் வந்தோம்” என்றெல்லாம் வந்தவர்கள் பாசமழை பொழிய அதற்கும் மேல் தாங்காமல் பாபியை அணைத்துக் கொண்டார் பிந்து. “எவ்ளோ முயற்சி பண்ணினேன். என்னால் தாங்க முடியலை.” என்று நெகிழ்ந்தார். “எங்களால் முடிஞ்சது.. உன்னை நீச்சல் குளத்தில் தள்ளிவிடலாமென்று வந்திருக்கிறோம்” என்று கலாட்டா செய்தார்கள் நண்பர்கள். 

அனைவருக்கும் உறைந்த நிலை விலக்கப்பட்டதும் எல்லோரிடமும் உற்சாகமாகப் பேசினார் பாபி. ‘பிந்து உங்களை காதலிக்க முயற்சி செய்வதைப் பார்த்தேன்” என்றார் ஹரிஷூடம். ஆரவ்வின் புகழ் ஹைதராபாத் வரை பரவியிருக்கிறது. அங்கு அவருக்கு ரசிகர்கள் இருக்கிறார்களாம். எனில் ஆரவ் தெலுங்குப் பட ஆக்ஷன் ஹீரோவாகி விடலாம். ‘ரேய்…. சம்ப்பேஸ்தானுரா…” 

Task-ல் இருந்து விலகியதால் பிந்துவுக்குத் தண்டனை. ஆனால் அவர் வேறு எவரையாவது நாமினேட் செய்யலாமாம். பிந்துவின் மீது பிக் பாஸிற்கு ஏன் தனி கரிசனம்? பிந்துவிற்குப் பதிலாக நீச்சல் குளத்தில் குதிக்க தியாகவுள்ளத்துடன் ஜூலி முன்வந்தார். அவரைத் தள்ளி விட்ட பிந்துவின் தோழி பாபி, அதற்காக நன்றியும் மன்னிப்பும் கேட்டது அடிப்படை நாகரிகத்தின் வெளிப்பாடு. 

அடுத்த task. வாக்குமூல அறைக்கு தனித்தனியாக செல்லும் போட்டியாளர்கள் அங்கிருக்கும் தாள்களில் ஒவ்வொரு போட்டியாளரைப் பற்றியும் ஒரு வார்த்தையில் மதிப்பீடு செய்து எழுத வேண்டும். அவ்வாறே எழுதி அந்தச் சீட்டுக்களை காமிராவின் முன் காட்டினார்கள். ஒரே கணம் மட்டுமே அந்தச் சீட்டுக்களை பார்க்க முடிந்தது. 

ஒவ்வொரு போட்டியாளரைப் பற்றியுமான மற்றவர்களின் மதிப்பீடுகள் தொகுக்கப்பட்டு கார்டன் ஏரியாவின் பல இடங்களில் ஒளித்து வைக்கப்படும். அதை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். கண்டுபிடித்து எடுத்தார்கள். அவரவர்களின் சீட்டுக்களை பரஸ்பரம் தந்தார்கள். 

பிறகு வரவேற்பறையில் ஒவ்வொருவரும் தங்களைப் பற்றிய மதிப்பீடுகளை தாங்களே வாசிக்க வேண்டும். விதம் விதமான அபிப்ராயங்கள். சிலவற்றை எளிதில் யூகிக்க முடிந்தது. 

தன் முறை வரும் போது ஜூலி ஒரு அபிப்ராயத்தை வாசிக்க மறுத்து விட்டார். பிறகு பிக்பாஸ் வற்புறுத்த ‘hyper’ என்கிற மதிப்பீட்டை வேறுவழியின்றி வாசித்தார். ஜூலி வாசிக்கும் போது ஆர்த்தி எரிச்சலூட்டும் ஒலியை எழுப்பினார். ஜூலியின் ஆட்சேபத்திற்குப் பிறகும் ஆர்த்தி அவ்வாறு தொடர்ந்து செய்தது அநாகரிகமானது. (Hyper என்று எழுதியது சுஜா என்பது பிறகு தெரிந்தது. உரையாடலின் இடையில் தன்னிச்சையாக அவரே சொல்லி விட்டார்).

**

இம்முறை வந்தது ஹரீஷின் பெற்றோர். ஹரீஷின் தந்தை இளமையாக இருக்கிறார். எல்லோருக்கும் ஒரே மாதிரியான பேட்டர்னை பிக்பாஸ் சொல்லித் தந்தார் போலிருக்கிறது. ‘ஏன் யாரும் எங்களிடம் பேச மாட்டேன்றீங்க?’ என்றபடி நுழைந்தார் ஹரீஷின் தந்தை. சிநேகனுக்கு முன்பே பழக்கமாம். “என்ன கவிஞரே… என்னை அடையாளம் தெரியலையா?’ என்று கேட்க taskதான் முக்கியம் என்பது போல் அமர்ந்திருந்தார் சிநேகன். 

படுக்கையறையில் படுத்திருந்த ஹரீஷிடம் ‘டார்லிங்.. டார்லிங்’ என்று அழைத்தபடி வந்தார் ஹரீஷின் அம்மா கல்யாணி. ‘என்னடா … அப்பா வந்திருக்கேன். கம்னு படுத்திருக்க” என்று தன் பங்கிற்கு வெறுப்பேற்றினார் தந்தை.  வாய்க்குள்ளேயே முனக வேண்டிய கட்டாயம் ஹரீஷிற்கு. ஆரவ்வையும் பிரத்யேகமாக விசாரித்தார் ஹரீஷின் தந்தை. மற்றவர்கள் செய்ததால் வேறு வழியில்லாமல் அதே பாணியில் தன் விரதத்தைக் கலைத்த ஹரீஷ் தன் பெற்றோரைக் கட்டியணைத்துக் கொண்டார். 

அனைவரையும் உற்சாகமாக விசாரித்தார் ஹரீஷின் தந்தை. நீச்சல் குளத்தில் இருந்து வந்த ‘பழைய நண்பனான’ சிநேகனை பிரத்யேகமாக விசாரித்தார். ஹரீஷின் தந்தையின் வயதுள்ளவருக்கு சிநேகன் நண்பன் என்றால், சிநேகன் ரொம்…… ப சீனியர் போலிருக்கே. மகனை தனியாக அழைத்த ஹரிஷீன் தாய்,.. ‘காலைல எழுந்தவுடனே டான்ஸ் ஆடு. உள்ளே தனியா ஆடாத. வெளியில் வந்து ஆடு” என்று ரகசிய டிப்ஸ் தந்தார். மகன் ஜெயிக்க வேண்டும் என்று விரும்புகிற தாயுள்ளம். ஹரீஷ் தனது task-ல் இருந்து விலகியதால் அவருக்கு தண்டனை தர உத்தேசிக்கப்பட்டது. வில்லங்கமாக ஏதும் இல்லை. அவருடைய தந்தை மகனை விதம் விதமான போஸில் செதுக்க வேண்டுமாம். குறும்புடன் அவர் அதைச் செய்ததும் மற்றவர்களிடமிருந்து உற்சாகமாக விடைபெற்றனர் ஹரிஷீன் பெற்றோர். 

வந்திருந்த உறவினர்கள் அனைவரும் பொதுவாக இயல்பாகவும் குறும்பான நகைச்சுவையுணர்வுடன் நடந்து கொண்டது மகிழ்ச்சி. நெகிழ்ச்சியாக அழும் ‘அழுகாச்சி’ சீன்கள் இல்லாமலிருந்தது ஆறுதல். உள்ளுக்குள் இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் இயல்பாக நடந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு. 

அடுத்த task ‘அமைதிக்குப் பெயர்தான் சாந்தி’யாம். மனிதர்களை பூந்தியாக ஆக்கி விடுவார்கள் போலிருக்கிறது. அதன்படி வீட்டின் போட்டியாளர்கள் இரண்டு அணியாகப் பிரிக்கப்படுவார்கள். ஒவ்வொரு அணியும் தங்களிடமிருந்து ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். 
கார்டன் ஏரியாவில் போடப்பட்டிருக்கும் இரண்டு சேர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த இரு நபர்களும் அமர வேண்டும். அவரவர்களின் எதிர் அணி, சேர்களில் அமர்ந்திருக்கும் நபரை கிண்டல், தொந்தரவு செய்து சேரிலிருந்து எழுந்திருக்கச் செய்ய முயற்சிக்க வேண்டும். தோற்ற அணியிலிருந்து ஒருவர், வெளியேற்றத்திற்கு நேரடியாக தகுதியாவார். 

மனித உடல்களின் மீது நிகழ்த்தப்பட்ட கொடூரமான அந்த task துவங்கியது. கணேஷின் முகத்தில் சோப்பு நீரை  சிநேகன் ஆவேசமாக விசிறியடிக்க “தலையில் ஊத்துங்க.. அது ஓகே… கண்ணில் ஊத்தாதீங்க.. நீங்க செய்யறது தப்பு சிநேகன்” என்று கணேஷ் கோபப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் மனிதர் கோபப்படுவது இது இரண்டாவது முறை என நினைக்கிறேன். ஓவியா கார்ப்பெட்டை இழுத்தபோது கோபித்துக் கொண்டது முதல்முறை. 

“இந்த task-க்கிற்காக நான் குருடாக முடியாது. கண்ல நல்லா பட்டுடுச்சு.’ என்று அவர் வருத்தப்பட்டது நியாயமானது. மனித உடலின் பாகங்களுக்கு சேதம் ஏற்படாமல் இந்த taskகள் அமைக்கப்பட வேண்டும் என்று நேற்றைய கட்டுரையிலேயே சொல்லியிருந்தேன். உடனே மன்னிப்பு கேட்ட சிநேகன் பிறகு தன் முறையை மாற்றிக் கொண்டு நீரை தலையில் ஊற்றினார். “நான் சொன்னேன்ல.. அப்படிச் செய்யாதீங்கண்ணே...” என்று சிநேகனிடம் சொன்ன சக்தி… ஒண்ணுமில்ல… உங்க கண்ணுக்கு ஒண்ணும் ஆகவலை” என்று இரண்டு பக்கமும் கோல் போட்டார்.

போட்டியாளரின் மீது மிளகாய்ப் பொடி கலந்த நீரை ஊற்றுவதற்கு திட்டமிட்டிருந்தார்கள் போலிருக்கிறது. வையாபுரி அது வேண்டாம் என்று சொல்லியிருந்தார் போல. தவறுதலாகவோ அல்லது திட்டமிட்டோ சிநேகன் அந்த நீரை கணேஷின் மீது ஊற்ற, பதறிப் போனார் வையாபுரி. ‘நான் அதை ஊத்த வேண்டாமின்னு சொன்னேன்ல.. எப்படியாவது ஜெயிச்சுட்டுப் போங்க..’ என்று பக்கெட்டை விசிறியடித்து விட்டுச் சென்றார். நியாயமான கோபம். பிறகு நல்ல தண்ணீரை கணேஷின் மீது ஊற்றினார்கள். என்றாலும் தன் கண்கள் பாதிக்கப்பட்டதோ என்கிற பதற்றத்தில் இருந்தார் கணேஷ். சக்தி வழக்கம் போல ‘எனக்குத் தெரியாது” என்று நழுவியவர் “ஆனா சிநேகனுக்கும் இது தெரியாது” அவரையும் காப்பாற்றினார். சிவப்பு நிறத்தில் இருக்கும் நீரைப் பார்த்தாலே தெரியாதா என்ன?

கணேஷை விடவும் ஆர்த்தியின் நிலைதான் மிகவும் பாவம். வீடு கழுவிய தண்ணீர், குப்பை, நுரை ஸ்ப்ரே.. என்று என்னெனத்தையோ போட்டார்கள். அடையாளம் தெரியாத அளவிற்கு அவர் உடல் முழுவதும் மறைந்தது. ‘தலையில் முட்டை உடைய மாட்டேங்குதே’ என்று கவலைப்பட்டார் ஆரவ். தண்ணீரை ஊற்றிய போது ஆரத்தியின் உடல் முழுவதும் குளிரால் நடுங்கியது. பார்க்கவே பயமாகவும் பரிதாபமாகவும் இருந்தது. என்றாலும் ஜெயிக்க வேண்டும் என்கிற பிடிவாதத்துடன் அமர்ந்திருந்தார் ஆர்த்தி. “யார் யாருக்கு பழிவாங்கணுமோ அப்புறம் பழிவாங்குவேன்’ என்று அந்த நிலையிலும் சபதமெடுத்தார். அவர் காதுக்குள்ளில் நுரை அப்பியிருந்தது. அதனால் பாதிப்பு ஏதும் ஏற்படக்கூடாதே என்று கவலை தோன்றியது.

போட்டியில் வெல்ல வேண்டும் என்கிற ஆவேசம் வெறியாக மாறிய தருணம் என்று அதைச் சொல்லலாம். எவரையாவது நாம் அடிக்கத் துவங்கி, அவர் பலவீனராக இருந்தாலும் கூட, அடிக்கும் உற்சாகத்தில் நம் ஆழ்மனதிலுள்ள மிருக இச்சை கிளம்பி, அவரை இன்னமும் அதிகமாக அடிக்கச் சொல்லுமாம். காவல்துறையினர் அதிகம் அனுபவிக்கும் குரூரமான இன்பம் இது. போட்டியாளர்களுக்கு அது போன்ற காட்டுமிராண்டித்தனமான இச்சை உள்ளுக்குள் இருந்து கிளம்பியிருக்க வேண்டும் போல. 

இதற்கிடையில் சோதனையாக மழை பெய்யத் துவங்கியது. கணேஷூம் ஆரத்தியும் பிடிவாதமாக அமர்ந்திருந்தார்கள். ‘அய்யோ.. வந்துருங்க…. என்று எல்லோரும் வற்புறுத்தியும் அவர்களின் பிடிவாதம் தளரவில்லை. இதில் மிகையாக பதறியவர் ஜூலி. இடியுடன் மழை பெய்யத் துவங்கியுடன் இன்னமும் மிகையாக பதறியவர் ஒருநிலையில் ‘அவர்களைக் காப்பாத்துங்க’ என்று மாதாவிடம் மண்டியிட்டு கண்ணீருடன் பிரார்த்தனை செய்யத் துவங்கி விட்டார். 

ஜூலியின் இந்த நடவடிக்கையை இளகிய மனதுடன் கூடிய மனிதநேயம் என்றுதான் சொல்ல வேண்டும் என்று தோன்றுகிறது. தன் மீது கவனமும் அனுதாபமும் உண்டாக இந்த விஷயத்திலும் அவர் நடிப்பார் என்று சொல்லத் தோன்றவில்லை. அவரது பிரார்த்தனை உண்மை என்றால் இதுவரையான ஜூலியின் அத்தனை பிழைகளையும் மன்னிக்கலாம். அத்தனை உருக்கமான பிரார்த்தனை. பிறகு மழையில் நனைந்து கொண்டு பாடல் பாடி கணேஷை உற்சாகப்படுத்தியது சிறப்பு. ஆனால் இன்னொன்றும் சொல்ல வேண்டும். சிக்கலான தருணங்களில் அதிகம் பதற்றப்படுவதும் மிகையாக கத்துவதும், சூழலை இன்னமும் கடினமாக்கும் என்பதை ஜூலி புரிந்து கொள்வது நல்லது.  

“ஆடியன்ஸ் நம்மைப் பார்த்தா என்ன நினைப்பாங்க” என்று கவலைப்பட்டார் வையாபுரி. “பார்த்தா பார்க்கட்டும்’ என்று பொங்கினார் ஜூலி. “இங்க இருக்கிற நிலைமை அவங்களுக்குப் புரியாம இருக்கலாம். மழைதானே பெய்யுது. ஏன் எந்திரிச்சி வந்துட்டாங்க’ன்னு தோணலாம், இல்ல பாவம்-னும் தோணலாம்” என்றார் ஹரீஷ். ‘அதில்ல.. நாம எதை எதையோ ஊத்தினோம் இல்லையா..அதை தப்பா நெனப்பாங்களா’ என்றார் வையாபுரி. 

ஹரீஷ், ஒரு விஷயம், குரூரமான மனோபாவத்தினாலோ அல்லது எந்தவொரு நிர்ப்பந்த்தினாலோ மற்றவர்களுக்கு உடல்ரீதியான கொடுமை செய்து கொண்டிருக்கிறவர்களுக்கு வேண்டுமானால் தாங்கள் செய்து கொண்டிருப்பதன் குரூரத்தை அந்தக் கணத்தில் உணர முடியாமல் இருக்கலாம். ஆனால் பார்வையாளர்களுக்கு அதன் கொடுமை பல சதவீதங்களில் பெருகி பாதிக்கப்பட்டவரின் மீது அனுதாபமும் கொடுமையை இழைக்கிறவரின் மீது கோபமும் ஏற்படுத்தும். எனவே போட்டியாளர்களின் சிரமங்களை எங்களால் நன்றாகவே யூகிக்க முடிகிறது. 

அடாது மழை பெய்தாலும் விடாது அமர்ந்திருந்தனர் போட்டியாளர்கள். பிறகு எல்லோரும் வற்புறுத்தவே, அவர்கள் தந்த ஆலோசனையின் படி ஆர்த்தியும் கணேஷூம் இணைந்தபடி எழுந்தது சிறப்பான முடிவு. 

“வீடு கழுவுன தண்ணியெல்லாமா ஊத்துவீ்ங்க.. உடம்பெல்லாம் அரிக்குது” என்று ஆதங்கப்பட்ட ஆர்த்தி, ‘யாரு தலைல முட்டையை உடைச்சது? ஜூலியா.. பழைய பகையை தீர்த்துக்கிட்டா” என்றார். அந்த விஷயத்தை போட்டுக் கொடுத்த சுஜா ‘அவங்களுக்குத் தெரியல. தொடக்கூடாதுன்றதால. தூரமா நின்னு ஓங்கி அடிச்சிருப்பாங்க. என்றவர், ‘அவங்க தெரியமாப் பண்ணிடறாங்க. அதனாலதான் hyper’ன்னு சொன்னேன்’ என்று இரண்டு விதமாகவும் பேசினார். 

கணேஷின் கண்களில் மருந்து விட அவர் சற்று ஓய்வாக படுத்திருந்து எழுந்தார். எல்லோரும் சற்று கவலையுடன் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஜூலி கணேஷிற்கு உதவி செய்து கொண்டிருக்கும் போதே வீட்டின் விளக்குகள் அணைந்தன. 

நாளைய பகுதியைக் காட்டினார்கள். உருக்கமான ஒரு பாடலுக்கு எல்லோரும் கண்ணீர் மல்க அழுது கொண்டிருந்தார். ‘யார் சிறப்பாக அழுகிறார்கள்?’ என்கிற task போல. 

‘மனித உணர்வுகளின் மீது ஆடப்படும் சூதாட்டம்’ என்று இந்த நிகழ்ச்சியைப் பற்றி பல முறை நான் எழுதிக் கொண்டிருப்பதை பிக் பாஸ் தொடர்ந்து நிரூபித்துக் கொண்டேயிருக்கிறார். நகைச்சுவை சார்ந்த பகுதிகள், விளையாட்டுக்களின் உற்சாகம் நமக்கும் தொற்றுகிறது. அதைப் போலவே மனித மனங்களின் குருரமான பகுதிகளை வெளிக்கொணரும் விளையாட்டுக்கள், அவை விளையாட்டு என்று தெரிந்தாலும் நம்மைப் பாதிக்கிறது. இது சார்ந்த எச்சரிக்கையையும் கவலையையும் பலமுறை கூறி விட்டோம். 

இந்த நிகழ்ச்சி இன்னமும் கடுமையாகப் போகும் சூழலில் என்னெ்னன நடக்குமோ என்று கவலையாக இருக்கிறது.  பேசாமல் நாம் freeze ஆகி அமைதியாக இருந்து இதைப் புறக்கணிப்பது கூட ஒருவகையில் நல்ல தீர்வாக இருக்கும் போலிருக்கிறது.

இது ஒரு புறமிருக்க,  இவற்றையெல்லாம் பார்க்கும் சிறார்கள், விளையாட்டுக்காக தங்களின் இடையே இது போன்ற போட்டிகளை நடத்திக் கொண்டால் அதைவிடவும் ஆபத்து வேறொன்றுமில்லை. கலாசாரக் கண்காணிப்பு, அபத்தமான தணிக்கைமுறைகள் போன்றவற்றில் எனக்கு நம்பிக்கையில்லாவிட்டாலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் உள்ளடக்கம் பற்றிய கண்காணிப்பும் தணிக்கையும் தேவையோ என்று தோன்றி விட்டது. குழந்தைகள் உட்பட வீட்டின் வரவேற்பறையில் அனைவரும் புழங்கக்கூடிய prime time-ல் இது ஒளிபரப்பாவதால், நிகழ்ச்சியின் வடிவமைப்பாளர்கள் இது சார்ந்த சுயபொறுப்புடன் இயங்குவது நல்லது.