Published:Updated:

சினேகனின் பாசப் போராட்டமும் கணேஷின் காதல் பசலை நோயும்! 74-ம் நாள் பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

சினேகனின் பாசப் போராட்டமும் கணேஷின் காதல் பசலை நோயும்! 74-ம் நாள் பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

சினேகனின் பாசப் போராட்டமும் கணேஷின் காதல் பசலை நோயும்! 74-ம் நாள் பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

சினேகனின் பாசப் போராட்டமும் கணேஷின் காதல் பசலை நோயும்! 74-ம் நாள் பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

சினேகனின் பாசப் போராட்டமும் கணேஷின் காதல் பசலை நோயும்! 74-ம் நாள் பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

Published:Updated:
சினேகனின் பாசப் போராட்டமும் கணேஷின் காதல் பசலை நோயும்! 74-ம் நாள் பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.


பிக்பாஸ் வீட்டில் மிக மிக நெகிழ்ச்சியானதொரு சம்பவம் நடந்தது. மனதை உருக்க வைக்கும் காட்சி. பார்த்த எவரும் கண்கலங்காமல் இருந்திருக்க மாட்டார்கள். சினேகன் தந்தையாரின் வருகை. அந்தக் கிராமத்து முதியவர் தள்ளாடி தள்ளாடி வரும் காட்சியைப் பார்க்கவே அத்தனை நெகிழ்ச்சியாக இருந்தது. 

நேற்றைய தினத்தில் பிக்பாஸ் வீட்டில் எல்லோரும் அழுவதைப் பார்த்து இதுவும் ஒரு task-ன் பகுதியோ என்று நினைத்து விட்டேன். அதற்காக இப்போது வருந்துகிறேன்; மன்னிப்பு கேட்கிறேன். இது போல் பல விஷயங்கள் முதலில் வேறு மாதிரியாகக் காண்பிக்கப்பட்டு பிறகு போட்டி என்கிற விஷயம் என்று அறிய நேர்ந்ததால் இதுவும் அப்படியோ என்று தோன்றி விட்டது. விளையாட்டு வினையான தருணம். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிநேகனின் அழுகைக்கான காரணம் என்று சமூகவலைதளங்களில் வேறு ஒரு செய்தி வந்து கொண்டிருந்தது. அதைப்பற்றிச் சொல்ல விரும்பவில்லை. ஆனால், வதந்திகளையும் மோசமான யூகங்களையும் பரப்புவதில் நாம் எத்தனை குரூரமாக இருக்கிறோம் என்பதற்கான உதாரணம் அது. பொறுப்புள்ள குடிமகனாக நாம் வெட்கி தலைகுனிய வேண்டிய விஷயங்கள் அவை. 

சரி, வரிசைக் கிரமமாக நிகழ்ச்சிகளைப் பார்ப்போம். 

**

‘போகன்’ திரைப்படத்திலிருந்து ‘டமாலு டூமீலு’ என்ற பாடல் ஒலித்தது. ஆனால், எவரும் நடனமாடும் மனநிலையில் இருக்கவில்லை. கணேஷின் கண்கள் பாதிக்கப்பட்டு இருந்த துயரம்தான் காரணம். ஆரத்தி மட்டும் மெலிதாக அசைந்தார். 

வாக்குமூல அறைக்கு வரவழைக்கப்பட்டார் கணேஷ். அவருடைய கண்கள் சிவந்து மூடியிருந்தன. பார்க்க சற்று கவலையாகத்தான் இருந்தது. “டாக்டர் வந்திட்டிருக்கார்.. அதுவரை கண்ல கைவைக்காதீங்க.. கவனமாக இருங்க’ என்றார் பிக் பாஸ். 

கணேஷின் நிலைமைக்கு தான்தான் காரணம் என்கிற குற்றவுணர்வுடன் அழுது கொண்டே இருந்தார் சிநேகன். ‘இது task தானே? யாருக்கு வேணா நடந்திருக்கும். அழாதீங்க” என்று மற்றவர்கள் ஆறுதல் சொன்னார்கள். கணேஷிற்கு ஆறுதல் சொல்லும் வகையில் ‘இன்னிக்கு உங்களுக்கு ஸ்பெஷல் கெஸ்ட் வரலாம்” என்றனர். “அய்யோ.. இந்த நிலைமையில் மனைவி பார்த்தால் அவங்களுக்கு கஷ்டம்’ என்றார் கணேஷ். “இருந்தாலும் டிவில பார்த்துட்டு இருப்பாங்கள்ல. நேரா வந்தா உங்களுக்கும் சந்தோஷம்தானே” என்றனர் நண்பர்கள். பிறகு தன் மனநிலையை மாற்றிக் கொண்ட கணேஷ், குளிர்கண்ணாடியை ஸ்டைலாக மாற்றிக் கொண்டு ‘இப்படி சமாளிச்சுடுவேன்’ என்றார். அப்போதுதான் நமக்கும் சற்று நிம்மதியாக இருந்தது. 

‘சிநேகன் இரவு முழுவதும் அழுது கொண்டே இருக்கிறார், சாப்பிடவில்லை” என்று சொன்னார்கள். ‘சிநேகன் எங்கே இருக்கிறார்?” என்று கேட்ட கணேஷ், பக்கத்தில் இருந்த சிநேகனை இறுக்கமாக அணைத்து “இது சின்ன விஷயம். இது எவருக்கும் நடக்கும்.. கவலைப்படாதீங்க. நான் எப்பவும் சொல்வேன்ல. சிநேகன் வீட்டோட தாய்” என்று பாதிக்கப்பட்ட நிலையிலும் சிநேகனுக்கு ஆறுதல் சொன்னார். சுயநலம், ஜாக்கிரதையான நடுநிலைமை என்ற சில விமர்சனங்களை கணேஷின் மீது சொன்னாலும் பல சமயங்களில் பெருந்தன்மையான கனவானைப் போல நடந்து கொள்வது கணேஷின் மிகப் பெரிய பலம். 

கணேஷ் சமாதானப்படுத்தியும் வெளியே டைனிங் டேபிளில் கண்ணீருடன் அமர்ந்திருந்த சிநேகனை சுஜா செல்லமாக மிரட்டினார். “கவிஞரே.. இது மாதிரி.. யோசிச்சிக்கிட்டு அழுதிட்டே இருந்தா, அவ்ளதான். என்னோட வேற ரூபத்தைப் பார்க்க வேண்டியிருக்கும்” என்றார். ‘இதையே எங்களால பார்க்க முடியலைம்மா” என்றது ஆர்த்தியின் கவுன்ட்டர் டயலாக். “சும்மா.. அழுதிகிட்டு.. இதுக்கப்புறமும் அழுதீங்கன்னா.. அடி உதைதான்” என்றார் சுஜா.. ‘அது ஒண்ணுதான் குறையா இருந்துச்சு. அதையும் கொடுத்திடுங்க” என்றார் ஆர்த்தி. ‘Crazy fellow’ என்றபடி நகர்ந்தார் சுஜா. 

**

மதியம் 02.00 மணி. ‘தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்’ என்கிற உருக்கமான பாடல் ஒலிபரப்பானது. தகப்பனின் பெருமையைச் சொல்லும் இந்தப் பாடல், பாண்டிராஜ் இயக்கத்தில் யுவன்சங்கர் ராஜா இசையில், நா.முத்துக்குமாரின் வரிகளில் “கேடி பில்லா கில்லாடி ரங்கா’ என்ற திரைப்படத்தில் உள்ளது. 

எல்லோரும் ‘freeze’ என்கிற கட்டளை வந்தவுடன் உறைந்து நின்றனர். கதவு திறக்கப்பட்டது. தொன்னூறு வயது மதிக்கத்தக்க ஒரு வயதான உருவம் இரு இளைஞர்களின் உதவியோடு, காற்றில் சருகு போல மெள்ள மெள்ள நகர்ந்து வந்தது. ஒலிக்கின்ற பாடலையும் வரும் உருவத்தையும் முடிச்சுப் போட்டு ஏறத்தாழ அனைவருமே கவிஞரின் தந்தை என்று யூகித்து விட்டார்கள். சிநேகன் அத்தனை கதை கதையாக சொல்லியிருப்பார் போலிருக்கிறது. 

பிக்பாஸ் கட்டளையைக் காற்றில் தூக்கிப் போட்டு விட்டு முதலில் ஓடியவர் சுஜா. வாசலில் அமர்ந்திருந்த ஜூலி அசையாமல் அமர்ந்திருந்தார். ஆனால், வாசலில் வரும் தந்தையைப் பார்த்தபடி கலங்கிய நிலையில் இருந்த சிநேகன் உறைந்த நிலையை அதற்குப் பிறகும் தொடர்ந்தது சற்று நெருடல். பிறகு தன்னிச்சையாக அனைவருமே பிக்பாஸின் உத்தரவைத் தூக்கிப் போட்டு விட்டு அந்த வயதான கிழவரை நோக்கி ஓடினர். 

சிநேகனின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய பின்னணி விவரங்கள் அதிகம் நமக்குத் தெரியவில்லையென்றாலும், ‘உறவுகளிடமிருந்து விலகி பல வருடமாக தனியாகத்தான் வாழ்கிறேன்’ என்பதை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல முறை சொல்லியிருக்கிறார். தன்னுடைய ஊர் பற்றிய நினைவுகளையும் சில சமயங்களில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். 

தந்தையைப் பார்த்ததும் ஓவென்று கதறித்தீர்த்து விட்டார் சிநேகன். அந்த நேரத்தின் மனநிலை உண்மையாகத்தான் இருக்க வேண்டும். குழறலான மொழியில் சிநேகனின் தந்தையும் கலங்கியது மிக உருக்கத்தை ஏற்படுத்தியது. முதியவர்கள் அழும் காட்சியைப் பார்க்க நேர்வது என்பது மிகக் கொடுமையானது. கல் மனதுள்ளவர்கள் கூட கலங்கி விடுவார்கள். அங்கும் அதுதான் நடந்தது. பிக்பாஸ் வீட்டில் உள்ள அனைவருமே அழுது தீர்த்து விட்டார்கள். “யாரும் அழாதீங்க” என்றார் முதியவர்.

கண்கள் பாதிக்கப்பட்டதால் ஒய்வாகப் படுத்திருந்த கணேஷூம் உடனே ஓடி வந்து விட்டார். “உங்களைப் பற்றி ஊரைப் பற்றி சிநேகன் நிறைய சொல்லியிருக்காரு” என்றார். தன் மகனுக்கு இன்னமும் திருமணமாகவில்லையே என்கிற ஏக்கம் பெரியவரின் மனதில் ஆழமானதொன்றாக இருக்கிறது. தகப்பனின் மனது. எனவே அது சார்ந்த விருப்பத்தை பல முறை சொல்லிக்கொண்டிருந்தார். “நாங்களே பொண்ணுப் பார்த்து நிச்சயம் கல்யாணம் பண்ணி வெச்சிடுவோம்” என்று பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் உறுதியளித்தனர். 

“எனக்கு 6 பையங்க.. ஒரு பொண்ணு’ என்றார் பெரியவர். கூடுதலாக குழந்தை பிறந்தால் அதை வளர்க்கச் செலவாகுமே என்று யோசிக்கிற சமகால தலைமுறையைப் போல் அல்லாமல் வீட்டு உறுப்பினர்களின எண்ணிக்கை தன்னிச்சையாகப் பெருகும் முந்தைய காலகட்டம். வாரிசுகளை மட்டுமல்ல வீட்டில் உள்ள மாடுகளையும் கூட தங்களின் செல்வமாகப் பார்க்கும் கிராமத்து மனிதர்கள். ஓர் ஆலமரம் பல்வேறு விழுதுகளுடன் கிளைத்து வளர்வதைப் போலவே தங்களின் குடும்பம் உறவுகளால் இணைக்கப்பட்ட நீண்டதொரு தொடர் சங்கிலியாக நீடிக்க வேண்டும் என்று முந்தைய தலைமுறையினர் விரும்பினார்கள். வறுமை நிறைந்திருந்தாலும் கூட்டுக்குடித்தன முறையின் சந்தோஷம் பிரத்யேகமானது. அத்தனையையும் ‘நாகரிகம்’ என்ற பெயரில் இப்போது மெள்ள மெள்ள இழந்து கொண்டிருக்கிறோம். 

விடாமல் குமுறிக் கொண்டிருக்கும் சிநேகனை இதர உறுப்பினர்கள் ஆற்றுப்படுத்தினர். ‘உங்களைப் பார்க்கத்தானே அவ்ள தூரத்துல இருந்து வந்திருக்காரு. நீங்க அழுதிட்டே இருந்தா எப்படி?” என்ற அவர்கள் “அவங்க பேசட்டும்..” என்று தந்தைக்கும் மகனுக்கும் சற்று தனிமையை ஏற்படுத்திக்கொடுத்தனர். ‘எப்ப வந்தீங்க.. சாப்பிட்டீங்களா?’ என்று விசாரித்தார் சிநேகன். முதியவர் மையமாகத் தலையாட்ட உணவு எடுத்து வரப்பட்டு இருவரும் பரஸ்பரம் ஊட்டிக் கொண்ட காட்சி நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது.

இந்தச் சூழலைத் தாங்க முடியாத கணேஷ் தனியாக சென்று அழுதார். மற்றவர்கள் சென்று ஆறுதல் சொன்னார்கள். கணேஷ் உள்ளிட்ட மற்றவர்களின் உருக்கத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. அனைவருக்குமே அவரவர்களின் தந்தையின் நெகிழ்ச்சியான நினைவுகள் வந்திருக்கும். அதுபோலவே பார்வையாளர்களுக்கும். எனக்கும் என்னுடைய இறந்து போன தந்தையின் நினைவு வர சற்று கலங்கினேன். இருக்கும் போது ஒருவரின் அருமையை நாம் உணர்வதில்லை. தோல்வியடைந்த மதிப்பெண் வந்த பிறகு தேர்வு எழுதும் துரதிர்ஷ்டமான நிலைமை மனிதர்களுக்கு ஏற்படுகிறது. 

இந்த உணர்ச்சிகரமான தருணத்தைப் பதிவு செய்வதற்காக புகைப்படம் எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டது. “எங்கப்பாவிற்கு எழுதப் படிக்கத் தெரியாது. சின்ன வயசுல என்னை கீழயே விடமாட்டார். தூக்கிச் சுமந்து கொண்டே அலைவார். துண்டில் முடிபோட்டு அவர் வாங்கி வரும் தின்பண்டங்களுக்காக இரவில் காத்துக் கிடப்போம். நான் சென்னைக்கு வந்து 20 வருஷம் ஆச்சு. இடையில் நடந்த ஒரு சந்திப்பைத் தவிர அதற்குப் பிறகு இப்பத்தான் அவரைப் பார்க்கிறேன்.  இப்ப செத்துப் போனா கூட எனக்கு சந்தோஷமாக இருக்கும். பிக்பாஸ் டீம் உள்ளிட்ட  உலகத்தில் உள்ள தமிழர்களுக்கும் இதற்காக நன்றி. ஊர்ல கம்பீரமா நடந்த மனுஷன். ரொம்ப கோவக்காரரு. இப்பக் குழந்தை மாதிரி உட்கார்ந்திருக்காரு” என்று நீண்ட உருக்கமான உரையை நிகழ்த்தினார் சிநேகன்.

ரத்தம் சூடாக இருக்கும் இளமைப்பருவத்தில் அதுதரும் தன்னம்பிக்கையில் எத்தனையோ ஆட்டங்களை ஆடுகிறோம். ஆனால், காலம் எனும் ஆசிரியன் வயோதிகம் எனும் மருந்தின் மூலம் நம்மை ஒடுக்கி வைத்து பல விஷயங்களை உணரச் செய்கிறான். நம் கடந்த கால தவறுகள் பலவற்றை சரியாக்கியிருக்கலாமோ என்று அப்போது தோன்றும். ஆனால், அதற்குள் காலம் கடந்து விட்டதே என்கிற நிதர்சனமும் தோன்றும். வாழும் போதே குறைந்த தவறுகளுடன் வாழ்வது இந்தக் குற்றவுணர்வைப் போக்கும் விஷயமாக இருக்கக்கூடும். 

சிநேகனின் தந்தையை தம் தந்தையாக பாவித்து ஒவ்வொருவரும் வந்து வணங்கி ஆசி பெற்றது நெகிழ்ச்சியானதாக இருந்தது. ‘உங்க பையனுக்கு நிச்சயம் கல்யாணம் செஞ்சி வெச்சிடுவொம். அதுக்கு நாங்க கியாரண்டி’ என்று உறுதியளித்தனர். ரயில் சிநேகம் மாதிரி பிக்பாஸ் task முடிந்தவுடன் அவரவர்களின் வழியைப் பார்க்காமல் நிச்சயம் அதை செய்வார்கள் என்கிற உறுதியும் உணர்ச்சியும் அவர்களிடம் தெரிந்தது. அப்படியே ஆகட்டும். 

“எனக்கு அப்பா இல்ல.. பிறந்தவுடனே என்னை விட்டுட்டுப் போயிட்டார். உங்க ஆசி வேணும்’ என்று உருக்கமுடன் சொல்லி சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார் சுஜா. அவரின் கன்னத்தை சிநேகனின் தந்தை பிரியமாக வருடிக் கொடுத்தது உணர்ச்சிகரமான காட்சி. 

‘Freeze’ விளையாட்டு எல்லாம்  இப்போது விளையாடினால் சரியாக இருக்காது என்பதை உணர்ந்த பிக்பாஸ், ‘பெரியவரை அழைச்சிக்கிட்டு எல்லோரும் மெயின் டோருக்கு வாங்க” என்றார். அனைவரும் கூடி முதியவரை வழியனுப்பினர். ‘இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் நிச்சயமா ஊருக்கு வருவேன். பார்த்துப் போயிட்டு வாங்க” என்று விடைதந்தார் சிநேகன். 

பொதுவாக அவரவர்களின் உறவினர் சந்திப்பிற்கு சம்பந்தப்பட்டவர் மட்டுமே நன்றி சொல்வார்கள். ஆனால், சிநேகன் தந்தையின் வருகைக்காக அனைவருமே பிக்பாஸிற்கு நன்றி சொன்னது சிறப்பு. 


**

‘கவிஞரே.. எப்ப கல்யாணம்?” என்று ஆளாளுக்கு சிநேகனை கலாய்க்க ஆரம்பித்து விட்டனர். ‘இத்தனை தேவதைகள் இருக்காங்களே” என்று கிண்டலடித்தார் ஆர்த்தி. ‘நாங்க நிச்சயமா ஒன்று சேர்ந்து உங்களுக்குக் கல்யாணம் செஞ்சு வைப்போம்’ என்றார்கள். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் திருமணம் செய்து குடும்பத்தை விருத்தி செய்ய வேண்டும் என்பது முந்தைய தலைமுறைகளின் ஆதாரமான விருப்பமும். அடிப்படையில் இயற்கையின் நோக்கமும் அதுதான். ஆனால், திருமணம் எனும் நிறுவனத்திற்குள் சென்று சிக்கிக் கொள்ளக் கூடாது என்கிற மாற்றுத் தரப்பும் இளைய தலைமுறையிடம் உருவாகிக் கொண்டுவருகிறது. இது அவரவர்களின் முடிவு. 

“இப்ப சந்தோஷமா?” என்றார் சுஜா. ‘இனியும் புரியாத புதிர் மாதிரி இருக்காம இயல்பா இருங்க” என்று உபதேசம் செய்தார். காமிராவை நோக்கிய சிநேகன் பிக்பாஸிற்கு மறுபடியும் நன்றி சொன்னார். “என்ன நடக்குதுன்னே தெரியலை. கனவு மாதிரி இருக்கு. .. இன்ப அதிர்ச்சி… இந்த அரைமணி நேரம் என் வாழ்க்கையிலேயே மறக்க முடியாததாக இருக்கும். நான் சென்னைக்கு வந்து இருபது வருஷம் ஆச்சு. ஒரேயோரு முறைதான் எங்க அப்பா சென்னைக்கு வந்திருக்கார். அப்பக்கூட கொஞ்ச நேரம்தான் பேசினேன். அதற்கு அப்புறம் இப்பதான். கிராமத்து மனுஷன்.. ஊர்ல ஆடு, மாடு இதையெல்லாம் விட்டுட்டு வந்திருக்காரு.. ரொம்ப நன்றி” 

“கவிஞரோட அப்பா வந்தவுடனே எல்லோரும் எழுந்து வந்துட்டோம். அவங்களுக்காக நாம சிந்திய கண்ணீர் உண்மையானது” என்று மற்றவர்கள் பேசிக் கொண்டனர். உண்மைதான். உங்களின் உணர்வு பாராட்டத்தக்கது. 

**

“எங்க வீட்ல வந்துட்டு போனப்புறம் இன்னமும் கஷ்டமா இருக்கு. வீட்டுக்குக் கிளம்பிடலாமான்னு இருக்கு. எங்க பெற்றோர் வந்த போது ஷாக்ல இருந்தேன். சரியா பேச முடியலை. நல்லா பேசியிருக்கலாம்னு இப்பத் தோணுது. எங்க அம்மாவோட அம்மா சின்ன வயசுல இறந்துட்டாங்க. எனவே எங்க அம்மாவிற்கு என்மேல ரொம்ப உசுரு. நான்தான் அவங்களுக்கு பையனும் அம்மாவும். ரொம்ப பிரியமா இருப்பாங்க.. அவங்களுக்கு நான்தான் எல்லாமே. அவங்களுக்காக இதுவரைக்கும் உருப்படியா எதுவும் பண்ணதில்லை’ என்றெல்லாம் நெகிழ்ச்சியடைந்தார் ஹரீஷ். “நான் அப்பவே சொன்னேன் இல்லை. உங்க பேரன்ட்ஸ் க்யூட்… நீங்க ஆசிர்வதிக்கப்பட்டவர் ஹரீஷ். இனிமேலாச்சும் அவங்களுக்காக ஏதாவது பண்ணுங்க” என்றார் சுஜா. 

மனிதர்களுக்கு விதம்விதமான தருணங்களில் விதம் விதமான பாடங்கள் கிடைக்கின்றன.

‘நான் வெளில வீடியோல பார்த்து உணர்ந்த விஷயம் வேற. இங்க வீட்டுக்குள்ள வந்தப்புறம் உணர்வது வேற. இப்பத்தான் நல்லா பழகிட்டு வரோம். இந்த வாரம் ஏன் நாமினேஷன் ஆனோம்-னு வருத்தமா இருக்கு. அடுத்தவாரம் கூட ஆகியிருக்கலாம்” என்று வருத்தப்பட்டார் சுஜா. ‘ஆமாம். அந்த விஷயம் கஷ்டமா இருக்கு. இந்த வாரம் யாரும் வெளியேற்றப்படவில்லை’ என்று அறிவித்தால் கூட நல்லாயிருக்கும்” என்று சுஜாவை வழிமொழிந்தார் ஹரீஷ். பிக்பாஸ் காதில் இது நிச்சயம் விழுந்திருக்கும். நல்லது நடக்கும் என நம்புவோம். 

**

நீண்ட நேரம் கழித்து ‘freeze’ விளையாட்டைத் தொடர்ந்தார் பிக்பாஸ். உறைந்த நிலையில் நின்றிருந்த சுஜாவின் மீது ஜூலி தண்ணீர் ஊற்ற முயல.. ‘மகளே.. என் கையில் மாட்டினே.. நீ செத்தே’.. என்று வாய்க்குள் முனகினார் சுஜா. மிகையான எதிர்வினை. 

தண்ணீர் பாட்டிலை உயர்த்திக் குடிக்கும் போது அந்த நிலையில் உறைந்து நின்றிருந்தார் ஆரவ். பிந்து அவர் கையிலிருந்த பாட்டிலைப் பிடுங்க முயன்றார். சற்று எரிச்சலானார் ஆரவ். சுஜா உறைந்த நிலையில் இருந்து விலகியதும் பிந்துவின் முதுகில் தண்ணீர் ஊற்றி பழிதீர்த்துக் கொண்டார். ஜூலி freeze ஆனதும் அவரை நிறைய பேர் பழி தீர்த்துக் கொண்டனர். Bean Bag-ஐ அவர் தலையின் மீது கவிழ்த்து ஆளாளுக்கு தர்மஅடி போட்டனர். அடி சற்று பலம்தான் போலிருக்கிறது. ஜூலி வலியால் சற்று முகம் சுளித்தார். பிறகு ஜூலிக்கு விநோதமான அலங்காரமும் நடந்தது. 

பெரியவர்களுக்குள் உள்ள சிறுவர்கள் வெளிப்படும் தருணங்கள் இவை. இவையும் சேர்ந்ததுதான் வாழ்க்கை. பெரியவர்களாகவே முறைத்துக் கொண்டு இருப்பதுதான் கொடுமையான வாழ்க்கை. 

**

‘எல்லோரும் லிவ்விங் ஏரியாக்கு வாங்க’ என்று கட்டளையிட்டது இயந்திரக்குரல். ‘எல்லோரும் எழுந்து நில்லுங்க” என்று அடுத்த கட்டளை. (ரொம்ப ஓவராத்தான் இருக்கு) வாக்குமூல அறையில் கணேஷின் மனைவி நிஷா அமர்ந்திருப்பதை காமிரா காட்டியது. கணேஷ் தயாராகி வந்து கொண்டிருப்பதைப் பார்த்த நிஷா கண்கலங்கினார். அதுவும் கணேஷிற்கு கண்பாதிப்பு ஏற்பட்ட நிலையில் பார்ப்பது அவருக்கு உருக்கத்தை அதிகப்படுத்துவது இயல்புதான். காலையில்தான் கணேஷ் அதைப்பற்றி பேசிக் கொண்டிருந்தார். 

எல்லோரும் Freeze என்றார் பிக்பாஸ். வாக்குமூல அறையின் வழியாக உள்ளே வந்தார் நிஷா. ‘பொண்டாட்டி வந்துட்டா” என்று வையாபுரி போல கணேஷ் கத்தவில்லையே தவிர, மனைவியைப் பார்த்தவுடனேயே கணேஷ் கண்கலங்கி விட்டார். ‘போய்யா.. வென்று..’ என்று பிக்பாஸின் உத்தரவை தூக்கி எறிந்து விட்டு மனைவியை நோக்கி ஓடி கட்டியணைத்துக் கொண்டார். திருமணமாகி ஒன்றரை வருடம்தான் ஆகிறது போல. அதற்குள் ஏற்பட்ட இந்தப் பிரிவு துரதிர்ஷ்டமானதுதான். நிஷாவும் கண்கலங்கி தன் அன்புக் கணவரை இறுக்கமாகக் கட்டியணைத்துக் கொண்டார். ஏறத்தாழ சிநேகனின் தந்தை சந்திப்புக்கு ஈடானதாக இதுவும் இருந்தது. ‘பிரிந்தவர்கள் கூடினால் பேசவும் தோன்றுமோ”

“ஏதாவது பாட்டுப் போடுங்க பிக்பாஸ். நீங்க டான்ஸ் ஆடுங்க.. ப்ளீஸ்’ என்றார் ஆரத்தி. கணேஷ் தம்பதி ஒப்புக் கொண்டனர். ‘ஒன்றா ரெண்டா .. ஆசைகள்’ என்கிற பாடலை டைமிங்காக போட்ட ஆசாமிக்குப் பாராட்டும் நன்றியும். இயல்பாகவும் அற்புதமாகவும் நடனமாடினர் கணேஷூம் நிஷாவும். அதைப் பார்த்தபடி ஆரவ்வும் ஹரிஷூம் ஆடியது நல்ல நகைச்சுவை. அதிலும் ஹரீஷ் செய்த குறும்பெல்லாம் ரகளையான கலாட்டா. 

தனியாகச் சென்ற தம்பதியினர் அந்நியோன்யமான வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர். ‘என்ன இளைச்சுட்டீங்க?” என்று மனைவிமார்கள் காலம் காலமாக கேட்கும் அதே கேள்வியைக் கேட்டார் நிஷா. ‘இங்க கோதுமை உணவு அதிகம்’ என்றார் கணேஷ். ‘உங்களைப் பிரிந்திருக்கிறது கஷ்டமா இருக்கு” என்பதுபோல் சொன்னார் நிஷா. “நீயாவது என்னை காமிரால தினமும் பார்க்க முடியும். ஆனா என் நிலைமையை யோசிச்சுப் பாரு. பார்க்கவே முடியாது. உன் குரலை அன்னிக்கு அனுப்பியிருந்தாங்க. கேட்கும் போது அத்தனை சந்தோஷமா இருந்துச்சு” என்றார் கணேஷ். ஒரு புதிய காதலனின் உற்சாகத்தை அவரிடம் பார்க்க முடிந்தது. சங்க காலத்தில் பிரிவுத் துயரில் வாடும் தம்பதியரில் பெண்ணுக்குப் பசலை நோய் பீடித்தது என்பார்கள். கற்பனையோ உண்மையோ....நினைக்கவே வாத்சல்யமாக இருக்கும். அப்படியான பசலை நோயால் இங்கு கணேஷ் வாடிய கணேஷுக்கு சற்றே காதல் வைட்டமின் ஏற்றியது போல இருந்தது கணேஷ் - நிஷா இடையிலான சந்திப்பு! 

தம்பதியினர் பிரிய வேண்டிய தருணம் வந்தது. “நீங்க யாரைப் பத்தியும் பேசாம இருந்தது நல்ல குணம். எனக்கு சந்தோஷமாக இருந்தது” என்றார் நிஷா. சிறப்பான விஷயம்தான். ஆனால், இதைக் கேட்டு கணேஷ் பழைய யோகா நிலைக்குச் சென்று விடாமல் இருக்க வேண்டும். அன்பான முத்தங்களுடன் பிரியாவிடை பெற்றனர். பார்க்க பரிதாபமாக இருந்தது. 

**

கணேஷிற்கு நிஷா கொண்டு வந்த பெரிய அளவு சாக்லேட்டுகளைப் பறித்துக் கொண்ட பிந்து, ‘யாருக்கும் தர மாட்டேன்” என்று ஓடிய படியே சாப்பிட அவரைத் துரத்திக் கொண்டு ஓடினார் ஆரவ். பிறகு அந்த சாக்லேட்டுகளை யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்தார் பிந்து. கணேஷிற்கும் தராமல் எவருக்கும் பங்கிடாமல் அம்மணி செய்வது அநியாயம்தான். ஆனால், சாக்லேட் என்றால் அத்தனை பிடிக்கும் போலிருக்கிறது. குறித்து வைத்துக்கொள்ள வேண்டிய விஷயம்தான். 

பிக்பாஸ் வீட்டில் சுஜாவைப் பற்றிய அபிப்ராயம் பெரும்பாலும் மாறியிருக்கிறது போல. ஆரவ்வும் வையாபுரியும் இது பற்றி பேசிக் கொண்டிருந்தனர். ‘வரும் போது குழந்தை மாதிரி நடிக்குதேன்னு நெனச்சோம். ஆனா கடுமையா வேலை செய்யறாங்க. சுத்தமாவும் செய்யறாங்க… “என்று சுஜாவின் உழைப்பிற்கு இருவரும் நற்சான்றிதழ் வழங்கினார்கள். சுஜாவின் முன்னால் அல்லாமல் பின்னால் இதைச் சொல்லிக் கொண்டிருந்ததுதான் நல்ல விஷயம். நல்லவிதமாகவும் புறம் பேசலாம். இதை அவர்கள் சுஜாவிடமும் நேரடியாக சொல்லலாம். அவருக்கும் உற்சாகமாக இருக்கும். ஒருவரைப் பற்றி தெரியாமல் முதல் பார்வையிலேயே வெறுக்கக் கூடாது என்கிற பாடம் இதன் மூலம் நமக்கும் கிடைக்கிறது. 

‘தொட்றா பார்க்கலாம்’ என்றொரு task. நேற்றைய நிகழ்ச்சி போல் அதிக வதை இல்லாதது ஆறுதல் என்றாலும் இதிலும் கண்கள் பாதிக்கிற ஆபத்து இருந்தது. 

இரு அணிகளாகப் பிரிக்கப்பட்டு, அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர், முகம் மட்டுமே வெளியே தெரியும் அளவிற்கான குழிக்குள் புதைக்கப்படுவர். அதற்கான கூண்டு தயாராக இருந்தது. எதிர் அணியினர் அவரின் முகத்தில் வண்ணப் பொடியை பூச வேண்டும். இரண்டு பேர் அவர்கள் செல்லாதவாறு தடுப்பார்கள். 

சக்தி இதற்கு நடுவராம். (ஓவர்). கணேஷின் கண்கள் பாதிக்கப்பட்டிருப்பதால் அவர் பார்வையாளர். 

வண்ணப்பொடி பூச வருபவர்களை இயல்பாக தடுப்பதா, அல்லது ஆவேசமாக தள்ளி விடுவதா என்கிற குழப்பம் நீடித்தது. ஹரீஷ் இந்த விஷயத்திற்காக கத்திக் கொண்டே இருந்தார். எவரும் கேட்பதாக இல்லை. வருபவர்களைத் தடுக்கும் விஷயத்தில் சுஜா ஆக்ரோஷமாக செயல்பட்டார். வண்ணம் பூச வருபவர்கள் அவசரத்தில் கண்களில் போட்டு விடும் ஆபத்து இருந்தது. சிநேகனுக்கு அப்படியாகும் ஆபத்து இருந்தது. நல்ல வேளையாக எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. 

வையாபுரி வருபவர்களைத் தடுக்கும் விஷயத்தில் நிதானம் காட்டினார். வெற்றி பெறுவதை விடவும் மனிதர்களின் பாதுகாப்பு விஷயத்தையே அவர் எப்போதுமே பிரதானமாக கவனத்தில் கொள்கிறார். சிறப்பான விஷயம். 

இப்படி உடல் சார்ந்த மோதல்கள் அல்லாமல் சாதாரண சவால்களைத் தந்தால் நன்றாக இருக்கும் என்கிற வேண்டுகோளை பிக்பாஸிடம் வைத்தார் பிந்து. நமக்காக இல்லையென்றாலும் பிந்துவின் உருக்கமான வேண்டுகோளுக்காவது பிக்பாஸ் செவி சாய்க்கலாம். வதை சார்ந்த சவால்கள் இல்லாமலிருக்கலாம். அப்படிச் செய்தால் ஒளித்து வைத்திருந்த சாக்லேட்டுகளின் பகுதியைப் பிந்து உங்களுக்குத் தரலாம். பார்த்து செய்யுங்கள் பிக்பாஸ்.

“போட்டி இனிமேல் கடுமையாகத்தான் இருக்கும்’ என்று பிந்துவின் கோரிக்கையில் மண்ணள்ளிப் போட்டார் ஹரீஷ். 

நிகழ்ச்சி முடியும் நேரம். எல்லோரும் freeze என்றார் பிக்பாஸ். ‘அய்யோ.. பால் கொதிக்குது” என்று பதற்றப்பட்டார் கிச்சனில் நின்றிருந்த சுஜா. என்னவொரு தர்மசங்கடம். வீட்டின் விளக்குகள் ஒவ்வொன்றாக அணைக்கப்பட்டன. அனைவரும் இருளில் கிசுகிசுப்பாக சிரித்துக் கொண்டனர். ஒவ்வொருவராக விடுவிக்கப்பட, கார்டன் ஏரியாவில் தனியாக உறைந்து நின்றிருந்த பிந்துவை பயமுறுத்த எண்ணி, போர்வையை மூடிக்கொண்டு சென்றனர். பேய் task-லேயே பயப்படாத பிந்து இதற்கா பயப்படுவார்? ‘என்னையா பயமுறுத்த வர்றீங்க?” என்று அவர் துரத்தியது ஜாலியான கலாட்டா.

இந்த நிகழ்ச்சியின் மீது பல விமர்சனங்கள், கசப்புகள் இருந்தாலும் கூடவே sub-text ஆக பல படிப்பினைகளும் நமக்குக் கிடைக்கின்றன. குறிப்பாக உறவுகளைப் பிரிவது எத்தனை கொடுமையானது என்பது இந்த இரண்டு நாள்களில் தெரிந்தது. மிட்டாயைச் சப்புவது போல கேளிக்கைகளை மட்டுமே எடுத்துக் கொள்ளாமல், சறுக்குகிறவர்களை நோக்கி வசை பாடாமல், நம்மைப் பற்றிய சுயபரிசீலனைகளையும் நிகழத்திக் கொள்வது சிறப்பானதாக இருக்கும்.