Published:Updated:

தனியறையில் சுஜா... ஸ்ரிப்ஜி ஹரீஷ்... ஆம்... போர் போர்! 77-ம் நாள் - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

தனியறையில் சுஜா... ஸ்ரிப்ஜி ஹரீஷ்... ஆம்... போர் போர்! 77-ம் நாள் - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

தனியறையில் சுஜா... ஸ்ரிப்ஜி ஹரீஷ்... ஆம்... போர் போர்! 77-ம் நாள் - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

தனியறையில் சுஜா... ஸ்ரிப்ஜி ஹரீஷ்... ஆம்... போர் போர்! 77-ம் நாள் - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

தனியறையில் சுஜா... ஸ்ரிப்ஜி ஹரீஷ்... ஆம்... போர் போர்! 77-ம் நாள் - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

Published:Updated:
தனியறையில் சுஜா... ஸ்ரிப்ஜி ஹரீஷ்... ஆம்... போர் போர்! 77-ம் நாள் - பிக்பாஸ் வீட்டில் நடந்தது என்ன? #BiggBossTamilUpdate

பிக் பாஸ் - தமிழகத்தின் வம்புக்குரலுக்கான தேடல்.


76-ம் நாளின் தொடர்ச்சியான நிகழ்வுகள் காண்பிக்கப்பட்டன. தனது தந்தை மற்றும் கமல் தந்த நெகிழ்ச்சியான வாக்குறுதி குறித்து சுஜா இன்னமும் நெகிழ்வு நிலையில் இருக்கிறார். ‘சுஜா சிஸ்டர், ப்ளீஸ். அழாதீங்க.. கமல் சார் என்ன சொன்னார்னு கவனிச்சீங்களா.. நான் உங்களை சம்பிரதாயத்திற்கு சகோதரி என்று அழைக்கவில்லை’ என்று ஆறுதல் சொன்னார் ஆரவ். (பிரதர் கலாசாரமெல்லாம் இப்போது தமிழ் சினிமாவில் வேறு பொருளாகி விட்டதே, ஆரவ் பிரதர்). 

நீண்ட காலம் கழித்து அரசியல் கூட்டணி உடன்பாடு ஏற்பட்ட தலைவர்கள் போல சக்தியும் சிநேகனும் நெகிழ்ச்சியுடன் கட்டியணைத்துக் கொண்டார்கள். சக்திக்குள் இருந்த டிரிக்கர், மக்கர் ஆகி நின்று விட்டது நல்லதே. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

**

எவராவது ஒருவர் நெகிழ்ச்சியடைந்து பேசினால் அது குறித்து ரத்தம் வர கிளறுவது ஆர்த்திக்கு கொடுக்கப்பட்ட task போலிருக்கிறது. திறமையாக செய்கிறார். சுஜா கதறியழுததைக் குறித்து எதையோ சொல்லி விவாதத்தை ஆரம்பித்து விட்டார் போலிருக்கிறது. 

“நான் அழறது ஒப்பாரி இல்லைங்க. உணர்வு. என்னோட வலி இது. நான் பள்ளியில் சேரும் போது அப்பா இனிஷியல் இல்லாமல் எங்க அம்மா அசிங்கப்பட்ட விஷயம் எல்லாம் எனக்குத்தான் தெரியும். “இல்லை சுஜா.. நீங்க Bold-ஆ இருக்கணும். அவர் ஏன் தேடி வரணும்னு நெனக்கறீங்க?” என்று கேள்விகளைத் தொடர்ந்தார் ஆர்த்தி. “அவருக்கு நான் யாருன்னு காட்டணும்… எவ்ள வளர்ந்திருக்கணும்னு காட்டணும். என் கூட வெச்சுக்கறதுக்காக இல்ல.. ஒருவேளை சோறு போட முடியணும்னு காட்டணும்” என்று சற்று ஆவேசமானார் சுஜா. தொடர்ந்து ஆர்த்தி இதை நோண்டவே.. “ஏங்க.. உங்க அப்பா என்ன செய்வாரோ –ன்னு நீங்க நெறய யோசிக்கறீங்க இல்ல.. அதைப் போல என் அப்பாவை நான் பார்க்கணும்னு ஆசை இருக்காதா?” என்று பொங்கினார் சுஜா.

‘It is none of your business’ என்று கூட சுஜா ஒரே வார்த்தையில் ஆர்த்தியை கட் செய்யலாம். ஆனால் அது சர்ச்சையாகி விடும். காமிரா முன் அப்படிச் செய்ய முடியாது. இன்னொரு பக்கம், ஆர்த்தியும் தன் தாய் நினைவு நாளன்று அழும் காட்சியையும் நாம் பார்த்தோம். ஒருவர் எதற்கும் நெகிழவோ அழவோ கூடாது என்பதெல்லாம் தேவையற்ற பிடிவாதம். அதுதான் வீரம், உறுதி என்று நினைத்துக் கொள்வதெல்லாம் அபத்தம். எப்பவும் அழுது கொண்டிருப்பதுதான் பலவீனம். அழும் சூழலைக் கூட அடக்கி தவிர்ப்பது முட்டாள்தனம். ஆண்களுக்கு அப்படித்தான் முட்டாள்தனமாக கற்றுத்தரப்பட்டிருக்கிறது. 

**

‘தகுதியில்லாத நபர்’ வரிசையில் இணைந்து விட்டதால், தான் வெளியேற்றப்படுவது உறுதி என்று பிந்து நினைத்து விட்டார் போல. “நான் போனா அழுவீங்களா?” என்று மற்றவர்களை விசாரித்தார். “ஏன் அழணும்… சிரிக்கணும். வீட்டுக்குப் போய் கதவைச் சாத்திக்கிட்டு வேணா ‘பே’ன்னு அழலாம்” என்றார் வையாபுரி. காமிரா முன் போய் அப்பப்ப அழுத ஆசாமி கிட்ட எவ்வளவு மாற்றம்!

“இங்க வரும் போது என் சொந்த ஃபேமிலியை மிஸ் பண்ணினேன். வெளியே போயிட்ட பிறகு இந்த பிக்பாஸ் ஃபேமிலியை மிஸ் பண்ணுவேன்” என்றார் பிந்து. அது என்னமோ பிக்பாஸ் வீட்டில் சில காலம் கழித்தால் கூட, அருமையான தத்துவம், ரைமிங்கான பஞ்ச் டயலாக் போன்றவையெல்லாம் தானாக வந்து விடுகிறது. நம் தமிழ் சினிமாவின் வசனகர்த்தாக்களை இப்படி சில காலம் அடைத்துப் பார்க்கலாம். 

**

கமல் வந்தார். “நாட்கள் குறைந்து கொண்டே வருகின்றன. ஆனால் பாசம் அதிகமாகிக் கொண்டே போகிறது. இவங்க இன்னமும் மாறினா மாதிரி தெரியலை. எனவே கொஞ்சம் அறிவுரை சொல்ல வேண்டியிருக்கிறது” என்று அகம் டிவி வழியாக உள்ளே சென்றார்.

“பாருங்க.. பாசம் கீசம்லாம் போதும். அதுக்காக அதை வேணாம்னு சொல்லலை. உள்ளே வெச்சுக்கங்க.. குதிரைப்பந்தயத்தை பார்த்தீங்கன்னா.. எல்லா குதிரையும் வேகமாக ஓடணும்னுதான் எல்லோரும் எதிர்பார்ப்பாங்க.. திடீர்னு நாலைந்து குதிரைங்க புல் மேய ஆரம்பிச்சிடுச்சின்னா, நமக்கு எப்படித் தோன்றும்? பார்க்கறவங்களும் அமைதியாக புல் மேய மாட்டாங்க இல்லையா?” என்றார் கமல். (ஆனால் இது தவறான உதாரணம்).

தன் தவறை உணர்ந்தோ என்னமோ, ஓட்டப்பந்தயத்தை உதாரணமாக சொன்னார். உசேன் போல்ட்டை தாண்டிச் சென்று தங்கப்பதக்கம் வென்றாலும் காட்லின் மண்டியிட்டு போல்ட்டிற்கு குருவணக்கம் வைத்த சம்பவத்தை மேற்கோள் காட்டினார். குத்துச்சண்டைப் போட்டியின் போது முகம்மது அலி ‘ஸாரிண்ணே.. தெரியாம மூக்குல குத்திட்டேன்’-ன்னு சொன்னா நன்றாக இருக்குமா? கணேஷூம் ஆர்த்தியும் அன்னிக்கு மழைல பிடிவாதமா நின்ன போது ‘வந்துடுங்க’ன்னு கூப்பிட்டது உத்தின்னு நினைச்சேன். அதுவும் இல்லையா? என்றெல்லாம்  அவர் சுற்றிச் சுற்றி சொல்ல வருவது என்னவென்றால், பாச உணர்வுகள் ஒருபக்கம் இருந்தாலும் போட்டி என்று வந்து விட்டால் அது சார்ந்த முனைப்பை மட்டுமே முன்நிறுத்த வேண்டும் என்பது. 

“உங்க கிட்ட ஆர்வம் இருக்கு, ஆனா முனைப்பு இல்லை. ஒவ்வொருவருக்கும் தனித்தன்மை-ன்னு ஒண்ணு இருக்கணும். எல்லோருக்கும் நல்லவங்களா இருக்க முடியாது. தனித்தனி அபிப்ராயம் இருக்கணும். அதைச் சொல்லணும்… இப்ப நான் சொல்ல ஆரம்பிச்சுட்டேன்…”  என்று சொன்ன கமல் ‘கைத்தட்டுங்கப்பா” என்ற பாவனையில் சபையோரைப் பார்க்க ‘சரி கைத்தட்டறோம். பொழச்சுப் போங்க” என்று ஆதரவாக சபை கைத்தட்டியது. “ஒவ்வொரு மனுஷனுக்கும் தனித்தனி குரல், முகம் இருக்கணும். Every person is unique’ என்று உத்வேகமும் ஆவேசமும் தரும் உரையை ஆற்றினார் கமல்.

அதைக் கேட்ட வையாபுரி, ‘சார்.. எதுவாக இருந்தாலும் இனிமே நான் முன்னாடி நின்னு ஓடுவேன்’ என்றார் உடனடி உற்சாகமாக. “இல்லைங்க. வையாபுரி… task மட்டுமே நான் சொல்லல. இது வாழ்க்கையோட ஒரு பகுதி. உங்களோட உடல் வலிமை, மனவலிமை, கருணை, கோபம், பொறுமை.. என்று எல்லாமே சோதிக்கப்படும் விளையாட்டு. ‘வெளிய இருக்கறவங்க.. எத்தனை உணர்ச்சிவசப்படறாங்கன்னு பாருங்க.... ‘இவங்களைத் திட்டுங்க.. இவங்களை அடிங்க’ன்னு ஆவேசப்படறாங்க.. எனக்குத் தெரியும் இது விளையாட்டு’ன்னு… சரி… நான் சொன்னது புரிஞ்சிருக்கும்-ன்னு நெனக்கிறேன். புரிஞ்சுடுச்சின்னு அடையாளமா நம்பிக்கையா ஒரு வார்த்தை சொல்லுங்க பார்க்கலாம் என்றார்.

‘100 நாட்களைக் கடந்து உறுதியாக வெற்றி பெறுவேன்’ என்கிற வாக்குகுறுதியை ஒவ்வொருவரும் தந்தனர். ‘எனக்கென்று ஒரு குரல், மொழி, அடையாளம் இருக்கிறது. அதை நெறிக்காதீர்கள் என்று சொல்லும் தைரியம் ஒவ்வொருவருக்கும் வரவேண்டும்’ என்று தன் பேச்சின் இடையில் அரசியல் பொடியை கமல் தூவினார். வெளியில் நடக்கும் அரசியல் நிகழ்வுகளைப் பற்றி போட்டியாளர்கள் அறியாததால் அவர்களுக்கு இது புரியாமல் இருக்கலாம். பார்வையாளர்களுக்கு புரியும். 

“சரி.. கணேஷ் காப்பாற்றப்பட்டு விட்டார். நாமினேஷன் பட்டியலில் இருக்கும் மூவருக்கும் ஒரு சிறிய போட்டி. நான் இத்தனை நேரம் சொன்னதை நீங்க எந்த அளவிற்கு புரிஞ்சுக்கிட்டீங்கன்னு பார்க்கணும். நான் ஒரு வார்த்தை சொல்வேன். அதைச் சொன்னவுடனே உங்களுக்கு என்ன தோணுதோ அதை நேர்மையா சொல்லணும்” என்றார் கமல். 

(உளவியல் கல்வியில் இது அடிப்படையான பாடம். ஒரு குறிப்பிட்ட வார்த்தைக்கு எதிர்வினையாக சட்டென்று ஒரு வார்த்தையை சோதனைக்கு உள்ளாகும் subject சொல்ல வேண்டும். இப்படி உடனடியாக பல வார்த்தைகளை அவரிடமிருந்து பெறுவதன் மூலம் அவருடைய ஆழ்மனதை சற்று நெருங்கிப் பார்க்க முடியும்).

இப்படியாக ஒவ்வொருவரும் எதிர்வினையாற்றினர். யோசிக்காமல் சட்டென்று சொல்ல வேண்டும் என்பதுதான் இதன் ஐடியா. சிலர் யோசித்தார்கள். சட்டென்றும் சொன்னார்கள். ‘உலகம்’ என்கிற வார்த்தைக்கு ‘நீங்கள்’ என்று ஐஸ் வைத்தார் ஹரீஷ். ‘அத்தனை சின்ன உலகமா உங்களுடையது?” என்று கிண்டலடித்தார் கமல். இதன் அடிப்படை, யார் கமலை அதிகமாக புகழ்கிறார்கள் என்பதல்ல. பாராட்டு விழா மேடைகளைப் பார்த்து மக்களும் கெட்டுப் போயிருக்கிறார்கள் போல. அசந்தர்ப்பமான நேரத்தில் தனக்கு வந்த புகழை ஏற்காமல் கமல் தடுத்துக் கொண்டது சிறப்பு. 

நாமினேஷன் ஆகியிருந்த பிந்துவை நோக்கி கமல் கேட்ட கேள்வி இவ்வாறாக இருந்தது. ‘ஒருவேளை நீங்கள் வெளியேறுவதாக மக்கள் தீர்மானித்திருந்தால் அதன் காரணம் என்னவாக இருக்கும்?”. “ஒருவேளை நான் சீரியஸா இங்க இல்லாம இருந்தது காரணமாக இருக்கலாம்” என்றார் பிந்து. அடுத்த கேள்வி சுஜாவிடம். “மக்களுக்கு உங்க கிட்ட பிடிச்ச விஷயம், பிடிக்காத விஷயம் என்னவா இருக்கும்னு நெனக்கறீங்க?”  “நான் நானா இருக்கேன்” என்று இரண்டிற்கும் அதே பதிலைச் சொன்னார் சுஜா. “ஏன் என்னை வெளியே அனுப்பணும்னு நெனச்சிருப்பாங்கன்னா.. “நான்.. இன்னமும் உள்ளே இறங்கி சில விஷயங்களை பெட்டரா பண்ணியிருக்கலாம்”னு நெனச்சிருப்பாங்க’ என்றார் ஹரீஷ். 

“ஓகே… ஜூலி…. நேர்மையான பதிலாக இருக்கணும். வெளியே போறதுக்கு முன்னாடி, சுஜாவிற்கு நீங்க ஏதாவது அட்வைஸ் தரணும்னு விரும்பினா என்ன சொல்வீங்க?” என்று கேட்டார் கமல். “அவங்க அப்பா விஷயத்துல ரொம்பவும் அழறது ஒரு மாதிரியா இருக்கு. இது அனுதாபத்துல கிடைச்ச வெற்றியா ஆகிடக்கூடாது. இது போட்டிக்கான களம். கடுமையா உழைச்சு ஜெயிச்ச வெற்றியா இருக்கணும்” என்றார் ஜூலி. அவரின் இந்த அபிப்ராயம் சரியானது. முதலில் முகத்தைச் சுளித்த சுஜா, பின்பு ஜூலியின் கருத்தை ஏற்றுக் கொண்ட முகபாவத்தை வெளிப்படுத்தினார். 

“ஆர்த்தி… நீங்க பிந்துவிற்கு என்ன சொல்வீங்க?” என்று கமல் கேட்க … “நாங்க நிறைய பெண்கள் வெளியே வந்துட்டோம். இருக்கறது கம்மி. எனவே சுஜாவும் பிந்துவும் பெண்கள் ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல –ன்னு நிருபிச்சு.. போட்டி போட்டு வெற்றி பெறணும்” என்றார் ஆர்த்தி “இனிமேதான் நிரூபிக்கணுமா? பெண்கள் ஆண்களுக்கு நிகரானவர்கள் என்று?” என்று ஆரத்தியை மடக்கினார் கமல். “வையாபுரியை கேட்டுப் பாருங்க.. குடும்பத் தலைவர் யாருன்னு சொல்வாரு..”என்று கமல் கூற, ‘மனைவிதான் சார்’ என்றார் வையாபுரி. பார்த்துக் கொண்டிருக்கும் வீட்டம்மணி உச்சி குளிர்ந்திருப்பார்.

“இன்னமும் dedicated-ஆ இருக்கணும்” என்பது சக்தி ஹரீஷிற்கு கூறிய அறிவுரை. தோற்றவர்கள் போட்டியில் இருப்பவர்களுக்கு அறிவுரை கூறுவதா என்று சிலருக்குத் தோன்றலாம். ஒரு நோக்கில்,  தோற்றவர்கள்தான் சரியான அறிவுரையைத் தர முடியும்.

**

பார்வையாளர்களை நோக்கிய பேசிய கமல், “இந்த வாரம் எவிக்ஷன் வேண்டாமேன்னு உங்க தரப்பில் இருந்தும் நிறைய வேண்டுகோள்கள் வந்திருக்கின்றன. நாங்கள் அதற்கு செவிசாய்க்கிறோம். இருந்தாலும் ஒரு சர்ப்ரைஸ் இருக்கு.. என்னன்னு பார்ப்போம்.. 

பொதுவாக அகம் டிவிக்குள்ள முறையா அறிவிச்சிட்டுதான் போவோம். இப்ப திடீர்னு போகப் போறேன்” என்றவர், வீட்டில் இயல்பாக உலவிக் கொண்டிருந்தவர்களை நோக்கி, சுஜா, பிந்து, ஹரீஷ் தவிர மற்றவர்கள் அனைவரும் freeze என்றார். (லக்ஸரி பட்ஜெட்டிற்கான இந்த task முடிந்து விட்டது என்றாரே பிக்பாஸ்). 

எவரும் இந்த அதிரடி நுழைவை எதிர்பார்க்காததால் உண்மையாகவே திகைத்து நின்றனர். ஆர்த்தி திறந்த வாயை மூடவில்லை. ஹரீஷ் உற்சாகமாக நடனமாட ஆரம்பித்தார்.. ‘Freeze சொன்னது நான்.. யாரும் அசையக்கூடாது” என்று எச்சரித்தார் கமல். “எவர் காப்பாற்றப்பட்டாரோ, அவரை freeze என்பேன்” என்ற கமல், பிந்து மற்றும் ஹரீஷை அவ்வாறு உறையச் சொன்னார். எனில் எளிதில் விளங்கிற்று. சுஜா வெளியேற்றப்படவிருக்கிறார் என்று. (எவிக்ஷன் இல்லை யென்பது பார்வையாளர்களுக்கு மட்டும் தெரிந்த ரகசியம் என்பதால் இந்த விளையாட்டு சுவாரசியமாக இருந்தது).

“சுஜா… யாரையும் டிஸ்டர்ப் பண்ணாம விடைபெற்றுட்டு வெளியே வாங்க” என்றார் கமல். தான் உண்மையிலேயே வெளியேற்றப்பட்டு விட்டோம் போல என்கிற கலக்கம் சுஜாவின் முகத்தில் தெரிந்தது. உறைந்து நிற்கும் ஒவ்வொருவரிடமும் உருக்கமாக விடைபெற்றுக் கொண்டார் சுஜா. பதிலுக்கு அவர்கள் ஏதும் சொல்ல முடியாது. கமலின் (அல்லது பிக்பாஸின்) திருவிளையாடல். 

“ஆரவ் போறதுக்குள்ள உண்மையைச் சொல்லு.. நிச்சயம் நீ ஜெயிப்பே. மற்றவர்களை சார்ந்திருக்காதே. நீயா முடிவு எடு” என்று ஆரவ்விடம் சொன்னார். (எந்த உண்மை?) சிநேகனிடம் கவிதை மாதிரி எதையோ சுஜா சொன்ன போது..  ‘நாட்ல..  இந்த கவிஞர்கள் தொல்லை தாங்கலைப்பா.. ரெண்டு வரி ரைமிங்கா… சொல்றவன்லாம் கவிஞர்னு சொல்லக்கிறான்” என்று கதற வேண்டும் போல் இருந்தது. சிநேகனின் மைண்ட் வாய்ஸூம் அதையே நினைத்திருக்கக்கூடும். 

“ஜூலி.. மனச்சாட்சிக்கு கட்டுப்பட்டு உண்மையா இரு.. உன் வாழ்க்கை அதுலதான் இருக்கு” என்று ஜூலிக்கு உபதேசம் செய்தார் சுஜா. ஜூலியின் மைண்ட் வாய்ஸை இங்கு மொழிபெயர்த்தால் நிச்சயம் தணிக்கை செய்யப்பட்டு விடும். .. இப்படியாக ஒவ்வொருவரிடமும் எதையோ சொல்லி விடைபெற்றார் சுஜா. இயல்பாகவே விடைபெற்றிருக்கலாம். 

“என்னை பிரிஞ்சு நீங்க கஷ்டப்படுவீங்களான்னு எனக்கு தெரியாது. ஆனா நான் ரொம்ப கஷ்டப்படுவேன். கடைசியா நான் யாருன்றதை உங்க கிட்ட நிரூபிச்சிட்டேன். எனக்கு அது போதும்” என்கிற சுஜாவின் விடைகூறல் உண்மையிலேயே பரிதாபமாக இருந்தது. மற்றவர்கள் சுஜாவிற்கு ஆறுதல் கூற துடித்தாலும் கமலின் எச்சரிக்கை காரணமாக, உள்ளுக்குள் ஊறும் துயரத்துடன் சிலையாக நின்றனர். 

இந்தக் காட்சிக் கோர்வையை ஒருவகையில் Dark Humour எனலாம். சுஜா வெளியேற்றப்படவில்லை என்பது நமக்குத் தெரியும். ஆனால் இது சுஜாவிற்கோ இதர போட்டியாளர்களுக்கோ தெரியாது. எனவே இத்தனை சோகமும் துயரமும் வீண் என்கிற நோக்கில் நமக்கு ஒருபக்கம் சிரிப்பும் வரும். அதுதான் இந்த விளையாட்டின் குரூரமான சுவாரசியமே. எல்லோரும் கலங்கினார்கள். கணேஷ் கண்களை மூடிக் கொண்டார். 

ஆனால் ஜூலியால் மற்றவர்களைப் போல் நிற்க முடியவில்லை. கமலின் எச்சரிக்கையையும் மீறி சுஜாவிற்கு உதவ ஓடினார். அவர் இதை உண்மையான அனுதாபத்துடன் செய்திருந்தால் மகிழ்ச்சி. ஆனால் “விளையாட்டில் கடுமையாக இருங்கள்’ என்கிற எச்சரிக்கையை மீறிய நோக்கில் இது பிசிறு. ஆனால் ஜூலியின் உதவியை சுஜா ஏற்கவில்லை. ‘நான் பார்த்துக்கறேன்’ என்கிற மாதிரி பெட்டியுடன் நகர்ந்தார். என்னதான் ஒவியாவை தான் நகலெடுக்கவில்லை என்று சுஜா சொன்னாலும், தன்னிச்சையாக அப்படி நடந்து கொள்கிறாரோ என்று தோன்றுகிறது. ஓவியாவும் அப்படித்தான் வெளியேறினார். அல்லது, அனுதாபம் சார்ந்த எந்தவொரு கிரெட்டிட்டும் ஜூலிக்கு சென்று விடக்கூடாது என்று நினைத்தாரோ..  என்னமோ…  இந்தப் பெண்கள்..

எல்லோரையும் ரிலீஸ் செய்தார் கமல். எனவே சுஜாவை நோக்கி அவர்கள் ஓடியது நெகிழ்ச்சி. சிநேகன் தாங்க முடியாமல் அழுது தீர்த்தார். (நினைக்கும் போதெல்லாம் அழுகை வருவது ஒரு வரம்). ‘விதி வந்தா போய்த்தான் ஆகணும்” என்று தத்துவம் பேசினார் சுஜா.

சுஜாவுடன், சக்தி ஆர்த்தி மற்றும் ஜூலி ஆகியோரும் வெளியேறுவதாக ஒரு பாவனை நிகழ்த்தப்பட்டது. உண்மையாகவே அவர்கள் வெளியேறி விட்டார்களா அல்லது பாதாள அறையில் ஒளிக்கப்பட்டு திரும்பவும் வருவார்களா என்று நமக்குத் தெரியவில்லை. 

இந்த நால்வருக்காகவும் மற்றவர்கள் நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை தந்தனர். ‘ஒருவேளை அவர்கள் மிகையாக எதிர்வினையாற்றுகிறார்களோ’ என்று நமக்குள் சிலருக்குத் தோன்றலாம். இத்தனை குறுகிய நாட்களில் இத்தனை நட்பு தோன்றுமா என்றும். ஒரேயிடத்தில் பல நாட்கள் ஒன்றாகப் புழங்கும் போது பல கசப்புகள், கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அந்த இணக்கமும் நட்பும் தன்னிச்சையாக தோன்றி விடும். அவர்கள் இனி இருக்கப் போவதில்லை என்பதை மனம் உணரும் போது தானாக துயரத்தை அடையும். 

**

சுஜா  திரும்பி வருவார் என்கிற நம்பிக்கையை வையாபுரி மட்டும் வெவ்வேறு விதமாக சொல்லிக் கொண்டிருந்தார். பத்து நபர்களாக இருந்த வீடு எண்ணிக்கையில் ஆறாக சுருங்கி விட்ட திடீர் துயரம் அவர்களிடம் தெரிந்தது. பிந்து மட்டுமே வீட்டின் பெண் உறுப்பினர் என்பதால் ‘எங்கள் பெட்ரூமில் வந்து படுத்துக்கங்க” என்று ஆண் உறுப்பினர்கள் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்தினார்கள். “தொன்னூறு சதவீதம் நான் இல்லைன்னா.. பிந்துதான் போவோம்’னு நெனச்சோம். சுஜா போவாங்கன்னு நெனக்கலை’ என்றார் ஹரீஷ். 

**

சுஜாவின் வெளியேற்ற விஷயம் தொடர்பாக ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. கமல் அதை விளக்கினார். “இப்ப இந்த வழியா சுஜா வருவாங்கன்னு நெனப்பீங்க.. இல்லை. மற்ற பிக்பாஸ் நிகழ்ச்சிகளில் இதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். தமிழில் இதுவரை இல்லை. எனவே இது உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கும். சுஜா வெளியேற்றப்பட போவதில்லை. இங்கேயே ஒரு ரகசிய அறை இருக்கிறது. எல்லா வசதிகளும் இருக்கும் அறை. திரிசங்கு சொர்க்கம் மாதிரி. அங்க சுஜா இருப்பாங்க.. ஒருவகையில் எவிக்ஷனை விட மோசமான நிலைமை இது –ன்னு சொல்லலாம். வீட்ல நடக்கறதை சுஜா பார்ப்பாங்க.. ஆனா பேச முடியாது. கிட்டத்தட்ட ஆவி மாதிரி வீட்டை சுத்துவாங்க’ என்றார் கமல்.

“தொடர்ந்து அவங்க இங்க இருக்கப் போறதில்லை. சில நாட்கள் இருக்கலாம். சீக்ரெட் ரூமிற்குள் அவங்க வந்தபிறகு அவங்க கூட பேசலாம்” என்று முடித்தார்.

தனிமை அறையில் சுஜா சற்று திகைப்பாக பார்த்துக் கொண்டிருந்தார். தன்னை வெளியேற்றாமல் ஏன் இங்கு வைத்திருக்கிறார்கள் என்று அவருக்கு குழப்பமாக இருந்திருக்கக்கூடும். தண்ணீருக்கு பயந்து நெருப்பில் குதித்த கதையாகி விட்டது சுஜாவின் நிலைமை. 

இந்தப் பக்கம், பிக்பாஸ் வீட்டினுள் சிநேகனும் பிந்துவும், சுஜாவைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். “இந்த வாரம் எவிக்ஷன் இருக்காதுன்னு நெனச்சோம். நான் இல்லைன்னா ஹரீஷ்தான் போவோம்னு நெனச்சேன்’ என்றார் பிந்து. “ஆண்களின் எண்ணிக்கை நிறைய இருந்ததால் ஹரீஷ் போவார் என்று நினைத்தேன்’ என்றார் சிநேகன். (அபத்தம்) “ஆனா சுஜா.. தைரியமான பொண்ணு” என்று சான்றிதழ் தந்தார்.

**

ரகசிய அறையில் இருந்த சுஜாவிற்கு சில விதிமுறைகள் வாசிப்பதற்கு தரப்பட்டது. சிகப்பு நிற பல்பு எரிந்தவுடன் சுஜா பாத்ரூமிற்குள் சென்று பூட்டிக் கொள்ள வேண்டும். பிக்பாஸ் பணியாளர்கள் உணவு மற்றும் இதர ஏற்பாடுகளை செய்வார்கள். பாத்ரூமினுள் உள்ள சிவப்பு விளக்கு அணைந்தவுடன் வெளியே வர வேண்டும். நீல நிற பல்பு எரிந்தால் பிக்பாஸ் பேச விரும்புகிறார் என பொருள். சுஜாவும் பிக்பாஸிடம் பேசலாம். அதற்கான ஹெட்செட் உண்டு. .. 

பழைய கால திரைப்படங்களில் நம்பியார்.. அசோகன் ஆகியோர் உலவும் விநோதமான ரகசிய அறைகளில் என்னென்னவோ நிறங்களில் பல்புகள் எரியும். ஒரு சுவிட்சை அழுத்தியவுடன் கதவு திறக்கும். அது போன்ற பயங்கர ஏற்பாடுகள் அந்த வீட்டில் இருந்தன. 

மறுபடியும் கட் செய்தால் பிக்பாஸ் வீடு. “சிலரிடம் மன்னிப்பு கேட்கணும். எல்லாவற்றையும் இங்கேயே செட்டில் செய்து விட்டு வெளியேறணும்” என்று வையாபுரியிடம் சிநேகன் அனத்திக் கொண்டிருந்தார். 

“ஹலோ சுஜா.. எப்படியிருக்கு புது வீடு?” என்று நக்கலாக விசாரித்தார் கமல். ‘என்ன சார்.. என்னை இப்படி கொண்டு வந்து விட்டுட்டீங்க?” என்று பரிதாபமாக சொன்னார் சுஜா. ஹெட்போன் வழியாக அவர்களின் உரையாடல் நடந்தது. 

அதன் விதிமுறைகளை மீண்டும் சுஜாவிடம் விளக்கினார் கமல். “நீங்க வீட்டுக்குள்ள இருக்கறவங்களைப் பார்க்கலாம். ஆனா பேச முடியாது. ஒரு விஷயம் இங்க பேசும் போது சத்தமா பேசாதீங்க.. நடுவுல ஒரு சுவரு மட்டும்ன்றதால.. அவங்களுக்கு கேட்டுடும்.” என்றார் கமல். உடனே சுஜா.. “சரிங்க.. சார்’ என்று தாழ்ந்த குரலில் பேச.. “அவ்ளோ.. ரகசியமா வேணாம்.. நீங்க மனசுக்குள்ள பேசிக்கிட்டீங்கன்னா எனக்கு கேட்காது” என்று தானும் தாழ்ந்த குரலில் பேசிய கமல். ‘அய்யோ.. நான் சத்தமா பேசலாம். நான் ஒரு லூசு…’ என்று சொன்னது தன்னிச்சையான நகைச்சுவையோ அல்லது பாவனையோ தெரியாது, அவரின் நகைச்சுவை திரைப்படங்களில் பார்த்த காட்சி போல சுவாரசியமாக இருந்தது. 

“வேற யாருக்கும் கிடைக்காத வாய்ப்பு இது” என்று கமல் உற்சாகப்படுத்த, “எனக்கு எல்லாமே அப்படித்தான் சார் நடக்குது” என்று பரிதாபமாக பதில் சொன்னார் சுஜா.  “பாருங்க.. இதுக்காக நீங்க நன்றி சொல்லணும்… அதுக்கு கூடவா சொல்லித்தரணும்” என்று கிண்டலடித்தார் கமல். 

அந்த அறையில் இருந்த தொலைக்காட்சியின் வழியாக பிக்பாஸ் வீட்டின் உள்ளே நடக்கும் நிகழ்வுகள் காட்டப்பட்டன. ‘பார்த்தீங்களா.. இப்படி பார்த்துக்கிட்டே இருக்கலாம்” என்றார் கமல்… ‘சார்.. இதுல சன்டிவி வருமா சார்” என்று சுஜா கேட்டிருக்கலாம். 

“நீங்க இங்க எத்தனை தைரியமா இருக்கீங்கன்றதுதான் முக்கியம். சாப்பாடுலாம் வேளா வேளைக்கு வந்துடும். பயந்தீங்கன்னா.. நானே ரெண்டு கரப்பான்பூச்சியை எடுத்துட்டு வந்து போடுவேன். அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம். நீங்க இன்னமும் எவிக்ட் ஆகலை. .. புரியுதா..இங்க கொஞ்ச நாள்தான் இருப்பீங்க.. அப்புறம் உள்ளே போயிடுவீங்க’ என்றதும் சுஜாவின் முகம் மகிழ்ச்சியால் மலர்ந்தது. 

கடுங்காவல் தனிமைச் சிறையில் சுஜா அடைக்கப்பட்டது ஒருபுறம் பரிதாபமானதுதான் என்றாலும், சமைக்க வேண்டாம், நாள் பூராவும் பிக்பாஸ் வீட்டு மனிதர்களை பார்த்துக் கொண்டிருக்கலாம், என்பது சுவாரசியமான விஷயம். தனிமையை விரும்புபவர்களுக்கு இது அற்புதமான ஏற்பாடு. இது தற்காலிகமானது என்பதால் அதிகம் கவலைப்படத் தேவையில்லை. 

தனிமையறையில் அடைக்கப்பட்ட சுஜா அதிகம் பயந்துவிடக்கூடாது என்கிற கவலையுடன் உற்சாகமாக தைரியமூட்டிய கமலின் உரையாடலை நிச்சயம் பாராட்ட வேண்டும். 

**

அகம் டிவிக்குள் மறுபடியும் வந்த கமல், இம்முறை பெட்டியுடன் வந்தார். அதற்குள் ஒரு கோல்டன் டிக்கெட் இருக்கிறது. தினந்தோறும் நிகழப் போகும் task-களில் அதிகம் வென்றவருக்கு அந்த கோல்டன் டிக்கெட்டை கமலே நேரடியாக வழங்குவார். அதன் மூலம் இறுதிப்போட்டிக்கு அவர் நேரடியாக தகுதியடைவார். அவரை எவரும் நாமினேஷனா, எவிக்ஷனோ செய்ய முடியாது. இறுதிப் போட்டியில் நான்கு பேர் இருப்பார்கள்’ என்றெல்லாம் பெட்டியின் சிறப்பை விளக்கினார் கமல்.

அதற்கு முன், “:யாருப்பா.. அது கதவைத் தட்டறது.. பொட்டின்னவுடனே வந்துட்டீங்க.. இது தேர்தல் டிக்கெட் இல்லைங்க” என்று அரசியல்வாதிகளை கிண்டலடித்தது அருமை. மனிதர் அடங்கமாட்டார் போலிருக்கிறது. போட்டியாளர்களுக்கு கோல்டன் டிக்கெட் பற்றிய போதிய ஆசையைக் காட்டி அதன் அருமையையும் விளக்கியபிறகு அவர்களின் முகத்தில் உற்சாக பல்பு எரிந்தது. 

முதல் டாஸ்க், போட்டியாளர்கள் ஜிப்ரீஷ் மொழியில் அதிக நேரத்திற்கு பேச வேண்டும். எவர் அதிக நேரத்திற்கு பேசுகிறாரோ.. அவர் முதல் சவாலின் வெற்றியாளர். 

விக்ரம் திரைப்படத்தில் .. சலாமியா பாஷையில் வரும் பாடலை எழுதியது தான்தான் என்கிற ருசிகரமான தகவலைச் சொன்னார் கமல். “ஒரு பய தப்பு கண்டுபிடிக்க முடியாது.. ஏன்னா அது யாருக்கும் புரியாது” என்றார். நான்தான் அதன் ஆசான். ஆனால் கலைவாணர் இதை முன்பே செய்திருக்கிறார்…. “:தரைல உட்கார்’ என்பதை அப்படியே திருப்பிச் சொல்லி காமெடி செய்திருக்கிறார்” என்கிற தகவலையும் சொன்னார். 

‘காக்க காக்க’ திரைப்படத்தில் ‘உயிரின் உயிரே...’ பாடலுக்கு முன் வரும்… ‘ஒமஹ மீயா… என்று வரும் விநோதமான வாக்கியங்களையும் இந்த வரிசையில் சேர்க்கலாம். இது தொடர்பாக பல விநோதமான சப்தங்களை எழுப்பி தமிழ் திரை இசையமைப்பாளர்கள் பல சாதனைகளை செய்திருக்கிறார்கள். 

இந்த ‘ஜிப்பரீஷ்’ மொழி எவ்வாறு தோன்றியது என்பதற்கு பல்வேறு விதமான தியரிகள் உண்டு. ஆறாம் நூற்றாண்டில் ஓர் இஸ்லாமிய ரசவாதியால் தோன்றியதாக ஒரு தகவலும், ஆங்கிலத்தில் 16-ம் நூற்றாண்டின் தோன்றியதாக இன்னொரு தகவலும் உண்டு. அரசியல்வாதிகள் மேடைகளில் பேசுவதையும் இந்த வகையில் சேர்க்கலாம். 

இந்தச் சவாலை எவ்வித தயக்கமும் இல்லாமல் உற்சாகத்துடன் ஆரம்பித்தார் வையாபுரி. பார்ப்பதற்கு எளிதாக இருந்தாலும் தொடர்ந்து பேசுவது சிரமம். நடிப்பு கற்றுத் தரும் பள்ளிகளில் இதையும் ஒரு பயிற்சியாக அளிக்கிறார்கள். சுயமான கற்பனைத் திறனை வெளிக்கொணர்வதற்கு இது நல்ல பயிற்சியாக இருக்கும். 

வையாபுரி அருமையான துவக்கத்தைத் தந்தார். அதை வைத்துக் கொண்டு மற்றவர்கள் தொடர ஓர் அருமையான பாதையை போட்டுத் தந்தார். என்றாலும் ‘நீங்க பேசியதுல.. எந்துகு.. எந்துகு..’ –ன்னு நெறைய முறை வந்துடுச்சு. அது தெலுங்கு.. பிந்துக்கு –ன்னுதான் சொல்லணும். என்றாலும் நல்லாயிருந்தது என்று பாராட்டிய கமல், ஜிப்ரீஷ் மொழியிலேயே பாராட்டைச் சொன்னது நகைச்சுவை. 

வையாபுரி கோடு போட்டால், ஹரீஷ் ரோடே போட்டு விட்டார். பாரில் தண்ணியடித்துக் கொண்டு எவரிடமோ பேசுவது போல திறமையாக சமாளித்தார். அதிக நேரம் பேசியது இவர்தான். ஒவ்வொருவரும் பேசுவதை கமல் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தார். 

சிநேகன் ஓரங்க நாடகம் மாதிரி எதையோ செய்தார். கமல் சற்று திகைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார். ஆரவ், ‘நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை’ பாடலை அப்படியே ஹம் செய்து சொதப்பினார். ஹரீஷ் எடுத்துக் கொடுத்ததை வழிமொழிந்த பிந்து ‘நான் தமிழ்ல பேசினாலே அப்படித்தான் இருக்கும்” என்று சொல்ல கமல் வாய் விட்டுச் சிரித்தார். யோகாவைப் பற்றி பாடம் எடுத்த கணேஷின் முயற்சியும் சுமாராகத்தான் இருந்தது. 

“இந்த விஷயத்தை இன்னொருவரை வைத்துக் கொண்டும் செய்யலாம். அப்படித்தான் எதிர்பார்த்தேன்” என்ற கமல், பார்வையாளர்களிடமிருந்து இரண்டு பெண்களை வைத்துக் கொண்டு ஏதோ ஜோசியம் மாதிரி புரியாத மொழியில் எதையோ சொல்ல முயன்றார்.

அதற்குள் பார்வையாளர்கள் தரப்பிடமிருந்து ஒரு பெண் எழுந்து எதையோ கேட்க, கமலின் பணி திசை திரும்பியது. அந்தப் பெண்ணிற்கு மைக் தரப்பட்டது. ‘நீங்க தமிழ்நாட்டிற்கு ஜோசியம் சொல்லணும். கிளி ஜோசியத்தை விட கமல் ஜோசியத்தை நம்பறோம்” என்று அள்ளிவிட்டார்.

ஆனால் இந்தச் சந்தர்ப்பத்தை கமல் தனக்கு சார்பாக பயன்படுத்திக் கொள்ளாமல் நிதர்சனமான விஷயத்தைச் சொன்னது சிறப்பு. “தமிழ்நாட்டோட எதிர்காலத்தை பத்தி தெரிஞ்சுக்கணும்னா… உங்க கையை உயர்த்துங்க.. சரியான நேரத்தில் உங்கள் விரல்கள் வாக்களிப்பதற்காக பயன்படணும். அதில் மைக்கறையைத் தவிர வேறு எந்தக் கறையும் இருக்க்ககூடாது” என்று சூசகமாக பல விஷயங்களைச் சொன்னார். ‘புத்தியைப் பயன்படுத்தி நேர்மையாக வாக்களியுங்கள்’ என்பது அவர் சொன்னதின் சாராம்சம். 

மறுபடியும் போட்டியாளர்களிடம் வந்த கமல், “பயிற்சி இல்லாமல் திடீரென்று இப்படி பேசுவது கடினம். சிறப்பாக செய்தீர்கள்” என்று பாராட்டினார். யார் வெற்றி பெற்றார்கள் என்கிற தகவல் வந்து சேரும் என்றவர், “இனி தினம் தினம் போட்டிகள் இருக்கும். அதற்கான சமிக்ஞையொலி இப்படி இருக்கும்’ என்று காட்டினார். மன்னர் காலங்களில் போருக்கு முன்னால் ஊதப்படும் தாரையொலியின் சத்தம் வந்தது. “போர் வருகிறது.. தயாராக இருங்கள்” என்று போட்டியாளர்களை தயார்ப்படுத்தினார். 

“போர் வரட்டும்.. அப்ப பார்த்துக்கலாம்:” என்று போட்டியாளர்கள் சோம்பலாக அமர்ந்து விடுவார்களா, அல்லது அதற்கான தயாரான மனநிலையில் இருக்கிறார்களா என்பது வரும் வாரங்களில் தெரிந்து விடும். 

கமல் சொன்னதின் சுருக்கம். “பலமாக அடியுங்கள். தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்கட்டும்.”