Published:Updated:

"சீக்கிரமே கலெக்டரம்மா ஆகிருவேன்!" - 'வம்சம்' பிரியங்கா

கு.ஆனந்தராஜ்
"சீக்கிரமே கலெக்டரம்மா ஆகிருவேன்!" - 'வம்சம்'  பிரியங்கா
"சீக்கிரமே கலெக்டரம்மா ஆகிருவேன்!" - 'வம்சம்' பிரியங்கா

"மீடியா, சினிமான்னா என்னன்னே தெரியாமல், நடிக்க வந்தவள் நான். இப்போ பல சேனல்களில் ஆக்டிங், ஆங்கரிங்னு வொர்க் பண்ணிட்டிருக்கேன். நிறைய அனுபவங்கள் கிடைச்சுட்டே இருக்கு" என உற்சாகமாகப் பேசத் தொடங்குகிறார், நடிகை பிரியங்கா. சன் டிவியின் 'வம்சம்' சீரியலில் ஜோதிகா ரோலில் நடித்துவருபவர். 

"சின்ன வயசு பிரியங்கா டு மீடியா பிரியங்கா பற்றி..." 

"பிறந்து வளர்ந்ததெல்லாம் மதுரை. எப்பவும் புத்தகமும் கையுமாகத்தான் இருப்பேன். அதனால், படிப்பாளின்னுதான் கூப்பிடுவாங்க. ஸ்டேட் லெவல்ல நிறைய மேடைகளில் பேசி, பரிசுகள் வாங்கியிருக்கேன். ஆனால், மீடியான்னா என்னங்கறதே தெரியாது. சினிமாவும் டிவியுமே அதிகம் பார்க்க மாட்டேன். இப்படி மீடியாவுக்கும் எனக்கும் பெரிய இடைவெளி. இந்நிலையில் ஒரு பிரபல பண்பலை, எங்க மதுரை மாவட்டத்தில் மூணு மாணவிகளை செலக்ட் செஞ்சு, ஒரு மாசம் நேரலை நிகழ்ச்சியில் தொகுப்பாளரா வொர்க் பண்ணவெச்சாங்க. அதில் நானும் ஒருத்தி. அப்போ, நான் பி.எஸ்ஸி முதலாம் வருஷம் படிச்சுட்டிருந்தேன். 'கலர்ஃபுல் கனவுகள்' என்ற பெயரில் எஃப்.எம் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினேன். இப்படித்தான் என் மீடியா பயணம் இன்ப அதிர்ச்சியுடன் தொடங்குச்சு." 

"சேனல் ஆங்கரிங் அனுபவம்..." 

"என் காலேஜ் ஃப்ரெண்ட் ஒருத்திக்கு ஆங்கர் ஆகணும்னு ஆசை. நான் எஃப்.எம் நிகழ்ச்சி செய்ததால், என்னையும் 'ட்ரைப் பண்ணிப் பாரேன்'னு சொல்லி, ஒரு லோக்கல் சேனலின் ஆடிஷனுக்குக் கூட்டிட்டுப்போனா. அதில் நான் செலக்ட் ஆனேன். ரெண்டே நாளில் நவராத்திரி வந்துச்சு. அன்னிலேர்ந்து ஆங்கராவும் வொர்க் பண்ண ஆரம்பிச்சேன். அடுத்தடுத்து மேலும் ரெண்டு லோக்கல் சேனல்கள்ல வாய்ப்பு வந்துச்சு.'' 

"பாரதிராஜா டைரக்‌ஷனில் நடிச்சு இருக்கீங்களாமே..." 

"காலேஜ் செகண்ட் இயர் படிச்சுட்டிருந்தப்போ, டைரக்டர் பாரதிராஜா சாரின் 'அன்னக்கொடி' படத்தில் சித்தோடை என்கிற கேரக்டரில் நடிச்சேன். என் முதல் நடிப்பு பயணமே, பெரிய இயக்குநரின் படத்தில். நிறைய அனுபவங்கள் கிடைச்சுது. அடுத்து, இமயம் சேனலில் ஆங்கரிங் வாய்ப்பு வர, சென்னைக்கு வந்தேன். ஒரு மாசத்திலேயே கேப்டன் டிவியில் வாய்ப்பு. அங்கே ரெண்டரை வருஷம் வொர்க் பண்ணினேன். காலேஜ் படிப்பு பாதிக்காமலிருக்க, வீக் எண்ட் நாள்களில் மட்டும்தான் சென்னைக்கு வந்து ஆங்கரிங் செய்வேன். அந்தச் சமயம் ஜீ தமிழ் சேனலின் 'நெஞ்சத்தைக் கிள்ளாதே' மற்றும் சன் டிவியின் 'அழகி' சீரியல்களீல் நடிக்கும் வாய்ப்பும் வந்துச்சு.'' 

" 'வம்சம்' சீரியலில் டூயல் ரோலில் நடிச்ச அனுபவம் எப்படி இருந்துச்சு?" 

"ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி கமிட் ஆன, 'வம்சம்' சீரியல்தான் என் கெரியரில் பெரிய பிரேக் கொடுத்துச்சு. நான் மீடியா பயணத்தைத் தொடங்கின பிறகு, பழைய படங்களையெல்லாம், புதுப் படங்கள் மாதிரி ரசிச்சுப் பார்க்க ஆரம்பிச்சேன். அப்படி ரம்யாகிருஷ்ணன் மேடத்தின் படங்களைப் பார்த்து, அவங்க ரசிகையானேன். இந்நிலையில், அவங்களோடு நடிக்கப்போன முதல் நாள் ரொம்ப ஆர்வமா இருந்தேன். அவங்க ரொம்பவே ஃப்ரெண்ட்லியா பழகினாங்க. அந்த சீரியல் எனக்கு ரொம்பவே செட்டாகிடுச்சு. ஜோதிகா, வேதிகா என டூயல் ரோல். பாசிட்டிவ் ஜோதிகாவுக்கு கிடைச்ச வரவேற்பைவிடவும், நெகட்டிவ் வேதிகாவுக்கு கிடைச்ச திட்டுகள் ரொம்ப அதிகம்.'' 

"பிசினஸ் செய்றதா கேள்விபட்டோம்..." 

"ஆமாம்! எனக்கு புதுப்புது முயற்சிகளை செய்து பார்க்க ரொம்பவே பிடிக்கும். 'வானவில்' சேனலில் ஆங்கரா வொர்க் பண்றேன். தனியார் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிட்டிருக்கேன். இதோடு, புது முயற்சியா ஆன்லைன் பிசினஸில் இறங்கியிருக்கேன். இருபாலருக்குமான டிரெஸ், அக்சஸரீஸை விற்பனை செய்ய ஆரம்பிச்சிருக்கேன். பிசினஸை பெரிய லெவலுக்கு கொண்டுபோகத் தீவிரமா கவனம் செலுத்திட்டிருக்கேன்." 

"கலெக்டருக்கும் படிச்சுட்டு இருக்கீங்களாமே..." 

"சின்ன வயசிலிருந்தே கலெக்டர் ஆகுறது என் கனவு. என் பயணம் மீடியா, நடிப்பு என மாறிப்போனாலும், சிவில் சர்வீஸ் எக்ஸாமுக்கு படிச்சுட்டிருந்தேன். இப்போ, பிசினஸிலும் இறங்கிட்டதால் படிக்க நேரமில்லாமல் இருக்கு. ஆனாலும், சீக்கிரமே பிசினஸைக் கவனிச்சுக்க ஒருத்தரை நியமிச்சுட்டு, படிக்க பிளான் பண்ணியிருக்கேன். சீக்கிரமே கலெக்டரம்மா ஆகிருவேன்" எனப் புன்னகைக்கிறார் பிரியங்கா.