Published:Updated:

''ஆன் ஸ்கிரீன் வந்து என் உறவுகளை தொலைச்சுட்டேன்!'' - கலங்கும் 'கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ்' நிஷா

''ஆன் ஸ்கிரீன் வந்து என் உறவுகளை தொலைச்சுட்டேன்!'' - கலங்கும் 'கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ்' நிஷா
''ஆன் ஸ்கிரீன் வந்து என் உறவுகளை தொலைச்சுட்டேன்!'' - கலங்கும் 'கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ்' நிஷா

''ஆன் ஸ்கிரீன் வந்து என் உறவுகளை தொலைச்சுட்டேன்!'' - கலங்கும் 'கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ்' நிஷா

விஜய் டி.வியில் காமெடியில் கலக்கிக் கொண்டிருந்த மூன்று காமெடி டீம் பட்டாளங்களும் இணைந்து 'கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ்' காமெடி ஷோவில் அசத்திக் கொண்டிருக்கிறார்கள். அதில் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவர் அறந்தாங்கி நிஷா. மக்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர், தற்போது நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஒரு படத்தில் காமெடியில் கலக்கியிருக்கிறாராம். நிஷாவை பேச வைத்தோம். 


'''கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சிக்கும், 'கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ்' நிகழ்ச்சிக்கும் உள்ள வித்தியாசம்?''


''இரண்டுமே காமெடி கலந்தது என்றாலும், 'கலக்கப் போவது யாரு சாம்பியன்ஸ்' நிகழ்ச்சி பண்றப்ப ஒரு பயம் இருக்கவே செய்யுது. ஒவ்வொரு முறை செட்டுக்குப் போகும்போதும், பெஸ்டா பண்ணனும்ங்கிற அக்கறையும் இருக்கு. மத்தவங்களவிட பெஸ்டான இருக்கும் சப்ஜெக்டை கையில எடுக்கணும்னு தோணிட்டே இருக்கும். கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் நானும், பழனி அண்ணாவும் அதிகமாக ஃபேமிலி சப்ஜெக்டை எடுக்கமாட்டோம். ஆனால், இந்த நிகழ்ச்சியில் ஃபேமிலி சப்ஜெக்ட் எடுத்த பிறகு பல பேர்கிட்ட இருந்து நல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு.  இன்னும் சொல்லபோனா.. 'கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ்' நிகழ்ச்சிக்கு வந்த பிறகுதான் நடிக்கவும் கத்துக்கிட்டேன். அதுக்கு முன்னாடி வரைக்கும் காமெடியில்தான் என் திறமையை காட்டிட்டு இருந்தேன்''. 


''அப்படியா.. அப்போ படத்தில் நடிச்சிருக்கீங்களா?''


''சிவகார்த்திகேயன் சார் நடிச்ச 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படத்தை இயக்கின டைரக்டர் பொன்ராம் சிவகார்த்திகேயனை வைச்சு அடுத்த படம் பண்றார். அதுல ஒரு கேரக்டர்ல நடிக்கிறேன். விஜய் டி.வியில என் பெர்பார்மென்ஸைப் பார்த்துட்டுதான் பொன்ராம் சார் எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்ததா சொன்னார்.

கேட்டதுமே சந்தோஷம் தாங்கலை. இன்னும் படத்துக்கு பேர் வைக்கலை. அந்தப் படத்துல ரெண்டு ஊரு மக்களுக்கும் சண்டை வரும். அந்த சண்டையை நான் ஏத்தி விடுற மாதிரியான ரோல் என்னோடது. 'இப்படி ஒரு ரோலை கொடுக்கிறாங்களே.. நமக்கு வராதே'னு யோசிச்சேன். இருந்தாலும், நடிப்புத்தானே..! இந்த மாதம் 21ம் தேதி வரை என்னுடைய கால்ஷீட் இருக்கு''. 


''இப்படி காமெடியாகவே பேசி நடிச்சிட்டு இருக்கீங்க.. திடீர்னு சென்டிமென்ட் ரோல் கொடுத்தால்?''

''பழனி அண்னாவும் நானும் ஒரு படம் பண்ணியிருந்தோம். இன்னும் அந்தப் படம் வெளியாகல. ஹீரோவுடைய அக்காவாக நடிச்சிருப்பேன். ஹீரோவுக்கு வட்டிக்கு விடுற கதாபாத்திரம். வட்டிக்கு விடுறப்ப ஏற்படுற தகராறுல ஹீரோ இறக்கிற மாதிரி நடிக்க, நான் அவர் பக்கத்துல உட்கார்ந்து நெஞ்சுல அடிச்சுகிட்டு அழணும். கதைப்படி எல்லாரும் அழ.. நான் மட்டும் ஒரு ஓரமா உட்கார்ந்திருக்கேன். எனக்கு சுத்தமா அழுகையே வரல. பொதுவாகவே, நான் 'சட்'னு அழ மாட்டேன். டைரக்டர் கெஞ்சாத குறையா கேட்டுப் பார்த்துட்டு, கடைசியா 'கிளிசரின் ஊத்திடலாம்மா'னு சொல்லி ஊத்தினார். கண்ல நீர் வழியுது, ஆனா என் முகத்தில் எந்த எக்ஸ்பிரஷனும் இல்ல. வேறுவழியில்லாம, என்னை கேமராவுக்கு தூரத்துல என் சேலை மட்டும் தெரியுற மாதிரி உட்கார வச்சுட்டாங்க. இப்படி ஒரு அழுகை சீன்ல கூட என்னால நடிக்க முடியல. நடிப்பெல்லாம் எனக்கு எனக்கு சுத்தமா வராது. 'நீங்க அந்த சீனுக்கு மட்டும் அழுதிருந்தீங்கனா  குணச்சித்திர நடிகையா மாறியிருப்பீங்க'னு அந்தப் படத்துக்கான டப்பிங் பேசப்போகும்போதெல்லாம் சொல்லுவாங்க. இது ஒரு பிஞ்சி மூஞ்சிங்க.. எப்படி அழுகை வரும்''. 


''உங்களின் வளர்ச்சியை உங்கள் கணவர் எப்படி பார்க்கிறார்?''

''அதை ஏன் கேட்குறீங்க.. அவருக்கு நடிக்க ஆசை வந்திருச்சு. 'பேசாம நானே ஹீரோவாகிடவா?'னு கேட்கிறார். அவருடைய ஆசைக்காக நாங்க இரண்டு பேரும் சேர்ந்து ஒரு ஷார்ட் பிலிம் பண்ணோம். அந்த ஷார்ட் பிலிம்ல ஓப்பனிங் முதல் என்ட் வரைக்கும் செம்ம காமெடியா இருக்கும். கதைப்படி ரம்ஜானுக்கு பிரியாணி சாப்பிட கணவர் தன் ஃப்ரெண்டை கூட்டிட்டு வருவார். வீட்டுக்கு வந்துட்டு அவர் போனதுக்குப் பிறகு கணவரை வெளுத்து வாங்குவேன். கதையிலக்கூடப் பாருங்க எப்படி அமையுதுனு''. 


''நீங்க மிஸ் பண்ற விஷயம்?''

''நூறு சதவிகிதம் என்னுடைய பையன் முகமது ஹர்ஷத்தைதான்.இப்போ இரண்டாவது படிக்கிறான். இந்த  உலகமே என்னை பாராட்டினாலும், அவனுக்கு நான் பக்கத்துல இருந்தாதான் பிடிக்கும். அவனுக்கு நான் பண்ற எந்த விஷயமும் இப்போ புரியல''. 


''உங்கள் மாமியார் பிரச்னை தீர்ந்துவிட்டதா?''

''ஐயய்யோ நீங்கவேற.. கொளுத்திப் போடாதீங்க. எனக்கும், அவங்களுக்கும் பிரச்னை எதுவுமே இல்லைங்க. ஷோவுக்காக அப்படி சொல்றதுதான். நீங்க கேட்கிற மாதிரியே புரோகிராம் பார்த்துட்டு, 'உங்க மருமகளை இப்படியெல்லாம் பேசுவீங்களா'னு கேட்கிறாங்களாம். 'நான் எது பேசினாலும் அதை போய் டி.வியில சொல்லிடறா' என்கிற வருத்தம் அவங்களுக்கு இருக்கு. அதனால, 'நீயே எல்லாத்தையும் பார்த்துக்கோமா'னு சிரிச்சுட்டே சொல்லிடுறாங்க.'' 


' 'இத்தனை வருஷத்துல வாழ்க்கை எவ்வளவு மாறியிருக்கு?''

''எட்டு வருஷமா பட்டிமன்றம், டி.வி நிகழ்ச்சிகள்னு இந்த ஃபீல்ட்ல இருந்திருக்கேன். 'நாம கருப்பா இருக்கறதாலயோ என்னவோதான் நிறைய வாய்ப்புகள் வரலனு பல நாட்கள் நினைச்சிருக்கேன். இந்த கலர்க்கூட நமக்குப் பிளஸ்தான்னு எனக்கு அப்போ தெரியல. விஜய் டி.வி 'கலக்கப்போவது யாரு' டைரக்டர் தாம்சன் சார்தான் ஒவ்வொரு இடத்திலும் எனக்கு ஊக்கம் கொடுத்து இந்த உயரத்துக்கு கொண்டு வந்திருக்கார். அவருக்கும், விஜய் டி.விக்கும் எப்பவும் என் நன்றிகளை சொல்லிட்டு இருப்பேன். ''


''உங்க கை நழுவிப் போன விஷயமாக நீங்க நினைப்பது?''


''கண்டிப்பாக என் உறவுகள்தான். ஒவ்வொரு வருஷமும் ரம்ஜானுக்கு என் சித்தி பொண்ணுங்க, பெரியம்மா பொண்ணுங்கனு, எப்பவும் ஒரு கேங்கோட சுத்திட்டு இருப்பேன். ஆனால், இப்போ இந்த மாதிரி புரோகிராமுக்காக வெளியில வர ஆரம்பிச்சு அவங்க கூட பேசறதுக்குக் கூட டைம் இல்லாமப் போயிடுச்சு. என்னைச் சுற்றி குடும்பம், உறவுகள்னு எப்பவும் ஒரு கூட்டம் சுத்தி இருந்துட்டே இருக்கும். ஆனால், இப்போ அவங்களை விட்டுட்டு நான் ரொம்ப தூரத்துக்கு வந்துட்ட மாதிரி இருக்கு. 'நீ எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், குடும்பம்தான் எப்பவும் கூட வரும். நாங்கதான் கடைசி வரைக்கும் உன் கூட இருப்போம்'னு அடிக்கடி என் சித்தி, பெரியம்மா பொண்ணுங்க சொல்லும்போது ரொம்ப கஷ்டமாக இருக்கும்.. யாருமே இப்போ  என்கிட்ட சரியா பேசுறது கிடையாது.இத்தனை வருஷமா ஒண்ணாப் பழகின உறவுகளை என்னால மீட்டெடுக்க முடியல. கல்யாணம், காது குத்துனு எந்த நிகழ்ச்சி வந்தாலும் அந்த நேரத்தில் எதாவது ஒரு புரோகிராம்ல கமிட் ஆகிடுறேன். அதனால குடும்பத்தோட சேர்ந்து சந்தோஷமாக இருக்கிற அந்த தருணமும் குறைஞ்சிடுச்சு. மொத்தத்துல ஆன் ஸ்க்ரீனுக்கு வந்த பிறகு உறவுகளை இழந்துட்டேன். அதை எப்படி மீட்டெடுக்கிறதுனுதான் தெரியல. ''


''கடைசி கேள்வி, 'பிக்பாஸ்' நிகழ்ச்சி இப்போ எப்படியிருக்கு?''


''உண்மைய சொல்லணும்னா 'பிக் பாஸ்' ஓவியா இருந்த வரைக்கும் எனக்குப் பார்க்கப் பிடிச்சிருந்தது. அதுக்கப்புறம் கொஞ்சம் டவுனானேன். என்னதான் 'பிக் பாஸ்' பத்தி அடிக்கடி திட்டிட்டு இருந்தாலும், திட்டிட்டே அந்த நிகழ்ச்சியைப் பார்க்கிறாங்க என்பதே உண்மை''.  

அடுத்த கட்டுரைக்கு