Published:Updated:

“வாங்க... நல்லை அல்லை!” ‘சூப்பர் சிங்கர்’ சத்ய ப்ரகாஷை பாராட்டும் ‘சூப்பர் ஆங்கர்’ சிவகார்த்திகேயன்

“வாங்க... நல்லை அல்லை!” ‘சூப்பர் சிங்கர்’ சத்ய ப்ரகாஷை பாராட்டும் ‘சூப்பர் ஆங்கர்’ சிவகார்த்திகேயன்
“வாங்க... நல்லை அல்லை!” ‘சூப்பர் சிங்கர்’ சத்ய ப்ரகாஷை பாராட்டும் ‘சூப்பர் ஆங்கர்’ சிவகார்த்திகேயன்

``ம்ம்ம்... அவங்க பேரு பார்கவி. இப்பதான் மேரேஜ் ஆச்சு. லவ் மேரேஜ்தான். எம்.எஸ்ஸி பயோடெக் படிச்சிருக்காங்க. `மதராசபட்டினம்' படத்துல வரும் `ஆருயிரே ஆருயிரே...' பாடலைத்தான் என்னை அடிக்கடி பாடச் சொல்வாங்க. அவங்க என் லைஃப்க்கு ரொம்பப் பெரிய சப்போர்ட்” - வெட்கப்பட்டு சிரிக்கிறார் சிங்கர் சத்ய ப்ரகாஷ். `ராசாளி...' `நல்லை அல்லை...', `ஆளப்போறான் தமிழன்...' எனத் தொடர்ந்து ஹிட் பாடல்களாகப் பாடி பரபரப்பாக வலம்வரும் இவரை சந்தித்தேன்.

``என் சொந்த ஊர் மதுரை, சோழவந்தான். எங்க குடும்பத்துலேயே நான்தான் முதல் பாடகர். அதுல இவ்வளவு தூரம் வந்திருக்கேன்னா, ரொம்ப சந்தோஷமா இருக்கு. நான் எல்.கே.ஜி படிக்கும்போதே டி.வி விளம்பரங்களில் வரும் பாடல்களை எல்லாம் கேட்டு அப்படியே பாடுவேனாம். அதைக் கேட்ட என் அம்மாவின் அப்பா ராமையா பிள்ளை, `இந்தப் பையனுக்கு நல்லா பாட்டு வரும்னு நினைக்கிறேன். இவனுக்கு கர்னாடக சங்கீதம் கற்றுக்கொடுங்க'னு சொல்லியிருக்கார். அப்படித்தான் என்னை முதன்முதலில் பாட்டு க்ளாஸ்ல சேர்த்துவிட்டாங்க. நானும் பாடப்பாட எனக்கும் இசை மீதும் பாட்டுமீதும் ஆர்வம் வந்துடுச்சு. ஃபேமிலி சப்போர்ட் இல்லைன்னா, நிச்சயம் நான் இவ்வளவு தூரம் வந்திருக்கவே முடியாது." 

"சூப்பர் சிங்கர்ல கலந்துகொண்ட அனுபவம் பற்றி சொல்லுங்களேன்?" 

``நான் கோயம்புத்தூர்ல இருக்கும் மகாராஜா இன்ஜினீயரிங் காலேஜ்ல மெக்கானிக்கல் படிச்சுட்டிருந்தேன். `சூப்பர் சிங்கர்' ஆடிஷன் கோயம்புத்தூர்ல நடந்தது. இந்த ஆடிஷன்ல நான் கலந்துக்கணும்னு என் அம்மா, ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் விருப்பப்பட்டாங்க. `சரி... என்னதான் நடக்குதுனு பார்க்கலாம்'னு சும்மா முயற்சி பண்ணினேன். அந்தச் சின்ன முயற்சி, என்னை இதுவரைக்கும் கொண்டுவந்து நிறுத்தும்னு நான் நினைச்சுகூடப் பார்க்கலை. 

சூப்பர் சிங்கர் ஷோ, 15 மாதங்களா  நடந்தது. ஒவ்வொரு முறையும் சென்னை வந்துட்டு போறதே எனக்கு பெரிய அனுபவம். இந்த நிகழ்ச்சி மூலமாத்தான் எனக்கு பின்னணிப் பாடகராகும் வாய்ப்பும் கிடைச்சது. இந்த ஷோ ஃபைனல்ஸுக்கு ஜி.வி.பிரகாஷ், தனுஷ் ரெண்டு பேரும் கெஸ்டா வந்தாங்க. நான் ஃபைனல்ல வெற்றிபெறலை. ஆனாலும், தனுஷும் ஜி.வியும், `நீங்க நல்லா பாடினீங்க. நீங்கதான் ஜெயிப்பீங்கனு நினைச்சோம். கவலைப்படாதீங்க. நிச்சயமா என் அடுத்த படத்துல உங்களைப் பாடவைக்கிறேன்'னு சொன்னாங்க. சொன்னது மாதிரியே `3' படத்துல `போ... நீ போ' பாடல் பாட தனுஷ் வாய்ப்பு கொடுத்தார். அதுதான் நான் சினிமாவுல பாடிய முதல் பாடல். ஜி.வி மியூசிக்ல `அன்னக்கொடி' படத்துல பாடினேன்." 

``சூப்பர். ஆனால் `படிப்புக்கு ஏற்ற வேலைக்குப் போகலை'னு வீட்டுல எதுவும் சொல்லலையா?" 

``இப்ப யாரு பாஸ் படிச்ச படிப்புக்கு ஏற்ற வேலைபார்க்குறாங்க? மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் முடிச்சுட்டு, ‘பாட்டு பாடுறதை முழுநேர வேலையா எடுத்துக்கப்போறேன்'னு சொன்னேன். வீட்டுல முதல்ல ஏத்துக்கலை. பல போராட்டங்களுக்குப் பிறகு `ஒரு வருஷம் எனக்கு டைம் கொடுங்க. அதுக்குள்ள என்னை நிரூபிச்சுக்காட்டுறேன்'னு சொன்னேன். அவங்களும் `ஓகே'னு அனுப்பிவெச்சாங்க.'' 

``உங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் அறிமுகம் எப்படி கிடைச்சது?”

``அதுக்கும் சூப்பர் சிங்கர்தான்  காரணம். அவர் முன் லைவா பாட ஒரு வாய்ப்பு கிடைச்சது. ஹரிசரண் பாடிய `வாங்க மக்கா வாங்க...' பாடலை பாடினேன். என் ஃபைனல்ஸ்லயும் `ஓமணப் பெண்ணே...' பாடலைத்தான் பாடினேன். அதை எல்லாம் ஞாபகம்வெச்சுதான் `ஓ காதல் கண்மணி' படத்துக்காக `சின்னஞ்சிறு சின்னஞ்சிறு ரகசியமே...' பாடலைப் பாட கூப்பிட்டார். நல்லா பாடினேன். அதைத் தொடர்ந்து `ராசாளி...', `நல்லை அல்லை...' இப்ப `ஆளப்போறான் தமிழன்...' வரைக்கும் அவர் இசையில் பாடியிருக்கேன். ரஹ்மான் சார்கூட இருக்கிற ஒவ்வொரு நிமிஷமும் மிகப்பெரிய அனுபவம்.'' 

``நீங்க பாடி முடிச்சதும் ஏ.ஆர் என்ன சொல்வார்?" 

``அது அவருடைய மூடு பொறுத்தது. அவருக்குப் பிடிச்சிருந்தா `ம்ம்ம்... குட் குட்'னு சொல்வார். அந்த `குட்' என்ற வார்த்தையே எனக்கு அவ்வளவு மகிழ்ச்சியைத் தரும்." 

``முக்கியமா, இளையராஜா இசையிலும் பாடியிருக்கீங்க. அந்த அனுபவம் சொல்லுங்க.''

``அதுக்கு நான் இயக்குநர் பாலா சாருக்குத்தான் நன்றி சொல்லணும். ஒருநாள் அவர் ஆபீஸ்ல இருந்து போன். `நீங்க க்ளாசிக்கல் மியூசிக் நல்லா பாடுவீங்கனு சொன்னாங்க'னு போன்லேயே சில பாடல்களைப் பாடச் சொல்லி கேட்டார் பாலா சார். `சரி... நாளைக்கு காலையில 8 மணிக்கு ராஜா சார் ஆபீஸ் வந்திடுங்க. அங்கே ஒரு வாய்ஸ் டெஸ்ட் இருக்கு. சார் கேட்டுட்டு அவருக்கு உங்க வாய்ஸ் பிடிச்சிருந்தால், நிச்சயம் உங்களைப் பாடவைப்பார்'னு சொன்னார். அடுத்த நாள் ரொம்பப் பயத்தோடு ராஜா சார் முன்னாடி பாடினேன். அவருக்கு என் வாய்ஸ் பிடிச்சிருந்தது. அப்படித்தான் `தாரை தப்பட்டை' படத்தில்  `பாருருவாய பிறப்புற வேண்டும்...' என்ற  பாடலைப் பாட வாய்ப்பு கொடுத்தார். பாடி முடிச்சதும், `சரியா இருக்கு'னு சொன்னார். அதுவே எனக்கு கொண்டாட்டமா இருந்துச்சு. இதெல்லாம் என் வாழ்க்கையில் நடந்த மேஜிக் மொமன்ட்ஸ்." 

``உங்க எதிர்காலப் பயணம் எதை நோக்கி இருக்கு?" 

``இப்ப நிறையபேர் `மியூசிக் டைரக்டர் ஆகுங்க'னு என்னை உசுப்பேத்திக்கிட்டிருக்காங்க. ஆனா, இப்ப என் ஃபோக்கஸ் அது கிடையாது. நிறைய மியூசிக் டைரக்டர்ஸ்கிட்ட பாடணும். இண்டிபெண்டன்ட் மியூசிக் பண்ணணும். நிறைய பாடல்கள் பாடி, எல்லோருக்கும் சந்தோஷம் கொடுக்கணும். அதுதான் என் ஆசை... என் எதிர்காலப் பயணம் எல்லாமே!" 

``நீங்க பாடினதுலேயே உங்க அம்மா, அப்பாவுக்குப் பிடிச்ச பாடல் எது?" 

சிரிக்கிறார். ``நான் இமான் சாருக்கு எது பாடினாலும் அவங்களுக்கு ரொம்பப் பிடிக்கும். அப்புறம் `ராசாளி...', `நல்லை அல்லை...'னு எல்லா பாடல்களையும் விரும்பி கேட்பாங்க. எங்க அப்பா பேர் தர்மர். இப்பதான் அவங்களுக்கு ஸ்மார்ட்போன் வாங்கி இன்டர்நெட் எல்லாம் போட்டுக் கொடுத்தேன். அவர்  க்யூட்டா ஒரு விஷயம் பண்ணுவார். யூடியூப் போய் `சத்ய பிரகாஷ்'னு டைப் பண்ணி, என்னென்ன பாடல்கள் வருதுன்னு தேடிப் பார்த்து கேட்பார். அதை எல்லாம் பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு. அம்மா பிச்சையம்மாளுக்கும் நான் பாடுறதுல ரொம்ப சந்தோஷம்." 

``பாடகர்களுக்கு பொதுவாக என்னென்ன சவால்கள் இருக்கு?" 

``எல்லா ஃபீல்டு மாதிரி இங்கேயும் ஆரோக்கியமான போட்டிகள் இருக்குது. ஒரு சிங்கர் வருஷத்துக்கு நாலு பாடல்கள் பாடி, அதுல ஒரு பாடல் ஹிட் கொடுப்பதே பெரிய விஷயம். தொடர்ந்து நம்மை அப்பேட் பண்ணிட்டே இருக்கணும். மற்றவங்களுக்கும் உங்களைப் பிடிச்சிருக்கணும். இதையெல்லாம் பொறுத்துதான் வாய்ப்புகள் கிடைக்கும்.'' 

``சூப்பர் சிங்கர் டு சினிமா சிங்கர். எப்படி இருக்கு இந்த டிராவல்?" 

``என் குருமார்களுக்கு நன்றி சொல்லணும். என் குரு கண்ணய்யா நாயுடு, அப்புறம் தஞ்சை செல்வமாரி. அடுத்து இப்ப நான் இவ்வளவு தூரம் பாடுறேன்னா அதுக்கு முக்கியக் காரணம் பந்தநல்லூர் சந்திரசேகர் பாகவதர்தான். இவங்க எல்லாருக்கும் என்னிக்குமே நான் நன்றிக்கடன் பட்டிருக்கேன். 

அடுத்து `நல்லை அல்லை...' பாடலைப் பற்றி சொல்லியே ஆகணும். இந்தப் பாடல் ரிலீஸ் ஆகும்போது நல்ல வரவேற்பு கிடைச்சது. இந்தப் பாடல்ல எந்தவித மியூசிக்கும் இல்லாமல் பின்னாடி காற்று மட்டும்தான் இசையாக வரும். அவ்வளவு பெரிய தியேட்டர்ல என் வாய்ஸ் மட்டும் ஒலிக்கும்போது அவ்வளவு மகிழ்ச்சியா இருந்தது. 

சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியை அப்போது தொகுத்து வழங்கிய என் பெஸ்ட் ஃப்ரெண்ட் சிவகார்த்திகேயன், இந்தப் பாடல் கேட்டதும் எனக்கு போன் பண்ணி, `பிரதர்... செமயா பாடியிருக்கீங்க. திரும்பத் திரும்பக் கேட்டுட்டிருக்கேன். வாழ்த்துகள்'னு சொன்னார். இப்ப மீட் பண்ணும்போதுகூட `வாங்க நல்லை அல்லை'னு சொல்லிச் சிரிப்பார். இந்த மாதிரி ஒரு ரீச் எனக்குக் கிடைச்சிருக்குன்னா, அதுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் சாருக்கும் இயக்குநர் மணிரத்னம் சாருக்கும்தான் நன்றி சொல்லணும்."

அடுத்த கட்டுரைக்கு