Published:Updated:

"அம்மா சத்தியமா நாங்க கூடப் பிறந்த சிஸ்டர்ஸ் இல்லைங்க!" வி.ஜே. மணிமேகலை

"அம்மா சத்தியமா நாங்க கூடப் பிறந்த சிஸ்டர்ஸ் இல்லைங்க!" வி.ஜே. மணிமேகலை
"அம்மா சத்தியமா நாங்க கூடப் பிறந்த சிஸ்டர்ஸ் இல்லைங்க!" வி.ஜே. மணிமேகலை

"அம்மா சத்தியமா நாங்க கூடப் பிறந்த சிஸ்டர்ஸ் இல்லைங்க!" வி.ஜே. மணிமேகலை

"தினமும் சில மணி நேர ஆங்கர் வேலையை முடிச்சுட்டு, வீட்டுக்கு வந்து வெட்டியா பொழுதை கழிச்சுட்டிருந்தேன். இப்போதான் புதுப் புது முயற்சிகளில் இறங்கியிருக்கேன். சீக்கிரமே என்னைப் பல பரிமாணங்களில் பார்க்கலாம்" - உற்சாகமாகப் பேசுகிறார், சன் மியூசிக் தொகுப்பாளினி மணிமேகலை. 

"உங்க 'ஆங்கர்' பயணம் எப்படி ஆரம்பிச்சது?'' 

''வீட்டிலிருந்து முதல் எதிர்ப்பு குரலோடு ஆரம்பிச்சது. எனக்குச் சொந்த ஊர் கோயம்புத்தூராக இருந்தாலும், வளர்ந்ததெல்லாம் சென்னைதான். விஸ்காம் படிக்க ஆசைப்பட்டேன். 'அந்த கோர்ஸ் படிச்சு என்ன பண்ணப் போறேன்'னு பெற்றோர் சிகப்புக் கொடி காட்டினாங்க. அந்தக் கோபத்தில் வீட்டிலேயே ஒரு மாசம் உட்கார்ந்திருந்தேன். கழுத்தைப் பிடிச்சு தள்ளாத குறையா ஒரு காலேஜிக்கு இழுத்துட்டுப் போனாங்க. அங்கே பி.எஸ்ஸி மேத்ஸ் குரூப் மட்டுமே காலியாக இருந்துச்சு. சரி போகட்டும்னு சேர்ந்துட்டேன். முதல் வருஷம் படிக்கிறப்போ, சன் மியூசிக் சேனலின் ஆங்கர் வாய்ப்புக்கு நானும் ஃப்ரெண்ட்ஸ் பலரும் அப்ளை பண்ணினோம். எனக்கு மட்டும் ஆடிஷன் அழைப்பு வர, கெத்தாகப் போய் செலக்ட் ஆகிட்டேன். 'ஏற்கெனவே படிப்புல சுமார். இந்த லட்சணத்துல ஆங்கரா?' வீட்டுல திட்டினாங்க. அதையெல்லாம் சமாளிச்சுதான் என் ஆங்கர் பயணத்தை ஆரம்பிச்சேன்.'' 

"படிச்சுகிட்டே ஆங்கராக இருக்கிறது கஷ்டமா இல்லியா?'' 

"ம்ஹூம். பி.எஸ்ஸி முடிச்சதும், 'எம்.பி.ஏ படிச்சா உன் எதிர்காலம் நல்லா இருக்கும்'னு ஆசை வார்த்தையைச் சொல்லி, மாஸ்டர் டிகிரியில் சேர்த்துவிட்டாங்க. விருப்பம் இல்லைன்னாலும், காலேஜ் படிச்சுக்கிட்டே மீடியாவிலும் பிஸியா இருக்கேனு சீன் போடறதுக்காகவே சந்தோஷமா சேர்ந்தேன். தினமும் காலேஜ் முடிஞ்சு வீட்டுக்கு வந்ததும், அரக்கப்பறக்க ரெடியாகி சேனலுக்கு ஓடுவேன். சரியாப் படிக்கிறேனோ இல்லையோ, எப்பவும் செம கெத்தாவே சுத்திட்டிருப்பேன். 'நீ நிறைய செலிப்ரிட்டியை பேட்டி எடுக்கிறே சூப்பர்'னு ஃப்ரெண்ட்ஸ் பாராட்டுவாங்க. 'ஆங்கருக்கு போட்ட மேக்கப்லயே காலேஜூக்கு வந்திருக்கா பார்'னு நிறைய கிண்டல் அடிப்பாங்க. எதையும் கண்டுக்க மாட்டேன்.'' 

"இப்போ முழு நேர ஆங்கர்... வீட்டுல எதுவும் சொல்லலையா?" 

"பார்ட் டைம் ஆங்கர் பயணம் நாலரை வருஷம் ஓடிச்சு. இனி எனக்கு மீடியாதான் செட் ஆகும்னு முடிவெடுத்துட்டேன். ஆரம்பத்தில் வீட்டில் எதிர்த்தாலும், ஒரு கட்டத்துக்கு அப்புறம், 'என்னமோ பண்ணித்தொலை'னு விட்டுடாங்க. 'ஹய்யா... ஹொய்யா'னு நானும் தொடர்ந்து சன் மியூசிக்ல கலக்க ஆரம்பிச்சேன். நிறைய செலிப்ரிட்டி இன்டர்வியூகளும் பண்ண ஆரம்பிச்சேன்.'' 

"பொலிட்டிகல் இன்டர்வியூ எடுக்கும் ஆசை இருக்கா?'' 

"இருக்கு... இருக்கு! பல சினிமா பிரபலங்களைப் பேட்டி எடுத்தாச்சு. 'முதல்வன்' அர்ஜூன் மாதிரி, பொலிடிக்கல் இன்டர்வியூ எடுக்க மனசுல ஆசை இருக்கு. அதுக்கான வாய்ப்பு வரலைனு சொல்றதைவிட, நான் பெருசா முயற்சி எடுக்கலைன்னு இங்கே பதிவுசெய்துக்கறேன். சன் நியூஸூக்கும் பேட்டி எடுக்கிறேன். ஆனால், அதிலும் சினிமா பிரபலங்கள்தான்.'' 

"சேனலுக்குப் புதுசா வர்ற ஆங்கர்ஸை ரேகிங் பண்ணுவீங்களாமே..." 

"பொய்... பொய்! யாரையும் ரேகிங் பண்றதில்லை. ஏழு வருஷங்களாக ஒரே சேனலில் வொர்க் பண்றதால், எனக்கு நல்ல மரியாதை இருக்கு. புதுசா எந்த ஆங்கர் வந்தாலும், அவங்களோடு மிங்கிள் ஆகிடுவேன். எந்த அளவுக்குன்னா, விஜே அஞ்சனாவும் நானும் ஒரு புரோகிராம் பண்ணினோம். எங்க ரெண்டுப் பேரையும் நிஜமான அக்கா தங்கச்சினு பலரும் நினைச்சு விசாரிப்பாங்க. 'அஞ்சனா என் அக்கா இல்லைங்க'னு சொன்னாலும், 'பொய் சொல்லாதீங்க'னு பதில் கவுன்டர் கொடுக்கிறாங்க. 'அம்மா சத்தியமா நாங்க கூடப் பிறந்த சிஸ்டர்ஸ் இல்லை'னு சொல்வேன். ஒரு கட்டத்துக்கு அப்புறம், 'அக்காவோ, தங்கச்சியோ என்னமோ சொல்லிக்கோங்கப்பா'னு விட்டுட்டேன்." 

''மணிமேகலைகிட்ட இருக்கும் பலருக்கும் தெரியாத ஆக்டிவிட்டீஸ்..." 

"ம்... டென்னிஸ், ஸ்குவாஸ். இப்படி பொய்யாக சொல்லவும் மனசில்லை. 'லெமன் ஸ்பூன், மியூசிக் சேர்'னு சொல்லி, எனக்கு குழந்தை மனசுனு சொல்லவும் விரும்பலை. இந்தக் கேள்வியை நீங்க கேட்டதும்தான், 'அச்சச்சோ. நம்மகிட்டே வேற எந்த ஆக்டிவிட்டியும் இல்லை'ங்கிற ஃபீல் வருது. ஆனால், நான் நல்லா டான்ஸ் ஆடுவேன். ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுவேன். முன்னாடியெல்லாம் கூட வொர்க் பண்றவங்ககிட்டேயும் நேயர்கள்கிட்டேயும் பேசவே தயங்குவேன். இப்போ, காலர்ஸே வராட்டியும் மணிக்கணக்கா தனியாகப் பேசிக்கிற அளவுக்கு முன்னேறியிருக்கேன். இதெல்லாம் பெருமையான விஷயம் இல்லியேன்னு முறைக்கறீங்களா? ஓகே... அடுத்தமுறை நீங்க இன்டர்வியூ எடுக்கிறதுக்குள்ளே ஏதாச்சும் புதுசா கத்துக்கிறேன்" எனப் புன்னகைக்கிறார் மணிமேகலை. 

அடுத்த கட்டுரைக்கு