Published:Updated:

''என் வாழ்க்கையில் நிக்காஹ் பேச்சுக்கே இடமில்லை'' - இசையருவி சுமையா கெளசர்!

வே.கிருஷ்ணவேணி
''என் வாழ்க்கையில் நிக்காஹ் பேச்சுக்கே இடமில்லை'' - இசையருவி சுமையா கெளசர்!
''என் வாழ்க்கையில் நிக்காஹ் பேச்சுக்கே இடமில்லை'' - இசையருவி சுமையா கெளசர்!

இசையருவி சேனலில் அசத்திவரும் தொகுப்பாளினி, சுமையா கெளசர். 'இசைத் தென்றல்', 'காதலுக்காக', 'துள்ளிசை', கலைஞர் டிவியின் 'சினிமா செய்திகள்' என பிஸியாக இருப்பவரை ஒரு மதிய வேளையில் பிடித்துப் பேசினோம்... 

''கெளசர் என்கிற பெயருக்கு என்ன அர்த்தம்?'' 

''ஓர் அண்ணா, இரண்டு அக்கா, ஒரு தம்பி என என்னோடு பிறந்தவங்க ஐந்து பேர். மூணு பொண்ணுங்க பெயர்களும் ஒரே மாதிரி இருக்கணும்னு 'கெளசர்' என்கிற பெயரை சேர்த்துக்கிட்டாங்க. அதற்கு அர்த்தம் எல்லாம் தெரியாது.'' 

''வேற வேலைக்குப் போகும் ஆசை வரலையா?'' 

''எங்க குடும்பம் ரொம்பவே கலாச்சாரம் பார்க்கறவங்க. அதனால், இன்ஜீனியரிங் படிச்சு முடிச்சபோதும் வெளியூரில் வேலைப் பார்க்க அனுமதிக்கலை. வீட்டுக்குப் பக்கத்திலேயே இருக்கிற ஒரு கம்பெனியில் வேலை செஞ்சேன். அங்கேயும் ஆறு மாசத்திலேயே வெளியில் வந்துட்டேன். அப்புறம்தான் சேனலில் சேர்ந்தேன்.'' 

''ஐ.டி கம்பெனி வேலைக்கே வீட்டில் ஒத்துக்காதபோது எப்படி சேனலுக்கு வந்தீங்க?'' 

''சின்ன வயசிலிருந்தே பாட்டு, டான்ஸ் பைத்தியம் நான். காலேஜ் படிக்கும்போதே டான்ஸ் போட்டிகளில் அதிகம் கலந்துக்குவேன். டான்ஸ் மாஸ்டர் ராம்ஜிகிட்டே டான்ஸ் கத்துக்கிட்டேன். காலேஜ் முடிச்சதும் டான்ஸ் டச் விட்டுப்போச்சு. ஐ.டி வேலையை விட்டுட்டு வீட்டில் இருக்கும்போதுதான் இந்த விஷயம் ஸ்ட்ரைக் ஆச்சு. யாரைப் பற்றியும் யோசிக்காமல், சில சேனல்களுக்கு அப்ளை பண்ணினேன். அதில், முதலில் டிக் ஆனது மக்கள் டி.வியில்தான். நான் பேசும் தமிழ் நல்லா இருக்குனு தேர்ந்தெடுத்தாங்க. ரொம்ப சந்தோஷமா வேலைப் பார்த்தேன்.'' 

''பிறகு எப்படி வெளியில் வந்தீங்க?'' 

''உங்களுக்கே தெரியும்... மக்கள் டி.வியில் புடவை, பூ, பொட்டு என பக்கா டிரெடிஷனலாக இருக்கணும். இதைப் பார்த்துட்டு, இனிமே ஆங்கரின் பண்ணப் போகாதே'னு வீட்டில் கண்டிஷன் போட்டாங்க. அதனால், மூன் டி.வியில் சேர்ந்தேன். அங்கே புர்கா போட்டுக்கிட்டு ஷோ பண்ணினேன். ஜெயா, ஜெயா பிளஸ் எனத் தொடர்ந்துச்சு. எல்லாத்தையும் புதுப் புது அனுபங்களா எடுத்துக்கிட்டு செய்ய ஆரம்பிச்சேன்.'' 

''மற்ற சேனல்களுக்குப் போனதை உங்கள் வீட்டில் ஒத்துக்கிட்டாங்களா?'' 

''எங்கள் விஷயத்தில் தலைமுடி வெளியில் தெரியக்கூடாது. ஷோல்டர் தெரியக்கூடாது எனப் பல கட்டுப்பாடுகள் இருக்கு. யாராவது ஏதாவது சொல்லிடுவாங்களோ என்கிற பயம் குடும்பத்தில் இருந்துச்சு. கட்டுப்பாடு விஷயங்களைச் சின்ன வயசிலிருந்தே பார்த்துப் பழகினதில் நான் கவனமாகவே இருப்பேன். பெரும்பாலும் சேலையே கட்டுவேன். அதே அளவுக்கு குர்த்தி அணிவேன். ஸ்லீவ்லெஸ் டிரெஸ் செலக்ட் பண்றதில்லை.'' 

''வீட்டில் உங்க ஷோவைப் பார்த்து என்ன சொல்வாங்க?'' 

''எங்க வீட்டில் யாருக்குமே நான் ஷோ பண்றது பிடிக்காது. இதுவரை நான் பண்ணின எந்த ஷோவையும் பார்த்ததில்லை. என் அம்மா மட்டும்தான் எனக்கு சப்போர்ட். வீட்ல எல்லாருமே இந்தத் துறைக்குப் போகக்கூடாதுனு எதிர்த்தப்போ, என் அம்மாதான் சப்போர்ட் பண்ணாங்க. 'உன் ஆசைக்காகத்தான் இவ்வளவு தூரம் போராடி அனுப்பறேன். இதைக் காப்பாத்தணும்'னு சொன்னாங்க. ஒரு ஷோவை எப்படியெல்லாம் ஷூட் எடுக்கிறாங்க என்பதை எல்லாம் நாலஞ்சு முறை கூடவே வந்து பார்த்தாங்க. பொண்ணு பாதுகாப்பாக இருக்கிறாள் என்பதை உணர்ந்ததும் தனியா அனுப்ப ஆரம்பிச்சாங்க.'' 

''எங்காவது வெளியில் போறதுக்கெல்லாம் அனுமதிப்பாங்களா?'' 

''எனக்கு இரண்டு ஃபிரெண்ட்ஸ்தான் குளோஸ். அவங்க வீடுகளுக்குப் போவேன். ஃபிரண்ட்ஸ்கூட சேர்ந்து சினிமாவுக்குப் போவேன். மற்றபடி, ஆங்கரிங் முடிச்சுட்டு நேரே வீட்டுக்குத்தான் வருவேன். 'நீ ஏன் ஸ்லீவ்லெஸ் போடுறது இல்லே'னு ஃபிரெண்ட்ஸ் கேட்பாங்க. கடந்த ஒரு வருஷமாகத்தான் லெகின்ஸே போட ஆரம்பிச்சிருக்கேன்.'' 

''லெகின்ஸ் பற்றி சமீபத்தில்கூட சில பேச்சு வந்துச்சே...'' 

''நானும் கவனிச்சேன். எந்த உடையாக இருந்தாலும் நமக்கும் மத்தவங்களுக்கும் உறுத்தாமல் இருக்கிற மாதிரி பார்த்துக்கணும். ஒருமுறை வீட்டில் போட்டுப் பார்த்து, நமக்கு செட் ஆகுமான்னு யோசிக்கணும். சிலர் லெகின்ஸ் போட்டுட்டு இருக்கிறதைப் பார்க்கும்போது கஷ்டமா இருக்கும். நாம அட்வைஸ் பண்றதால் டிரெஸ்ஸிங் சென்ஸ் மாறிடாதே.'' 

''சரி, எப்போ கல்யாணம்?'' 

''என் அக்காக்கள் நிக்காஹ் பண்ணிட்டு என்ன சந்தோஷத்தை அனுபவிக்கிறாங்கனு தோணும். நிக்காஹ் ஆன பெண்களைப் பார்க்கும்போது, நிறைய விஷயங்களை யோசிப்பேன். எனக்கு அதில் உடன்பாடில்லை. என் அக்காக்கள், 'நிக்காஹ் பண்ணிக்கோ, அதுதான் சரி'னு சொல்றாங்க. அவங்களுக்கு அதுதான் சந்தோஷமாக இருக்கு. ஆனால், எனக்கு இப்படியே இருக்கலாம்னு தோணுது. ஒருத்தரை கல்யாணம் செஞ்சுக்கிட்டு அவர் விருப்பத்துக்கு மாறணும். வீட்டில் கட்டாயப்படுத்தி நிக்காஹ் பண்ணிவெச்சாலும், ஒருத்தரின் மனம் கோணாமல் என்னால் வாழ முடியும். ஆனால், அப்படி சிக்கிக்கணுமானு பார்க்கிறேன். எனக்குப் பிடிச்ச இந்த விஜே வேலையைப் பார்த்துக்கிட்டு சந்தோஷமா இருந்துடலாம், நிக்காஹ் வேண்டாம்னு உறுதியாக இருக்கேன்'' என்கிறார் சுமையா.