Published:Updated:

“நான் பெண் வேஷம் போடுறது என் மனைவிக்குப் பிடிக்கலை!” - ‘சிரிச்சா போச்சு’ ராமர் சீரியஸ்

“நான் பெண் வேஷம் போடுறது என் மனைவிக்குப்  பிடிக்கலை!” - ‘சிரிச்சா போச்சு’ ராமர் சீரியஸ்
“நான் பெண் வேஷம் போடுறது என் மனைவிக்குப் பிடிக்கலை!” - ‘சிரிச்சா போச்சு’ ராமர் சீரியஸ்

விஜய் டிவி-யின் `அது இது எது?’, `கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர்கள் பலர். சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர் உள்பட பலரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அந்த வரிசையில் `என்னம்மா... இப்படிப் பண்றீங்களேம்மா’ ராமர் முக்கியமானவர். அந்த கேரக்டராகவே மாறி சிரிக்கவைக்கும் இவர், இப்போது திரைப்படங்களிலும் நடித்துவருகிறார். அவருடன் பேசியதிலிருந்து...

“சொந்த ஊர் மதுரை மேலூர் பக்கம் அரிட்டாப்பட்டி கிராமம். பி.பி.ஏ வரை படிச்சுட்டு, எங்க மாமாகூட ஆர்.டி.ஓ ஆபீஸ்ல தற்காலிகமா அஞ்சு வருஷம் வேலைபார்த்தேன். சின்ன வயசுல இருந்தே மிமிக்ரி செய்வேன். பள்ளிக்கூடத்துல படிக்கும்போதே பசங்கக்கிட்ட குரலை மாற்றிப் பேசுவேன். அப்ப ஆரம்பிச்சதுதான் இந்த மிமிக்ரி ஆர்வம். ஊர்ல இசைக் கச்சேரி நடக்கும்போது வீட்ல `போகக் கூடாது'னு சொன்னாலும் சுவர் ஏறிக் குதிச்சுலாம் போய்ப் பார்த்திருக்கேன்.

பிறகு மதுரையில் `நியூ காமெடி பாய்ஸ்'னு நகைச்சுவை மன்றம் ஒண்ணு வெச்சிருந்தோம். அது, பட்டிமன்ற நடுவர் ஞானசம்பந்தம் சார் தலைமையில் இயங்கிட்டிருந்த மன்றம். அதுலதான் நான், ரோபோ சங்கர்னு பலர் இருந்தோம். அப்புறம்தான்  விஜய் டிவிக்கு வந்தேன்.”

“எப்படி இருக்கு இந்த டிவிப் பயண அனுபவம்?”

“2006-ம் வருஷம் `கலக்கப்போவது யாரு?’ முதல் சீஸன். அதில் கலந்துக்க ரோபோ சங்கர் முன்னாடியே சென்னைக்கு வந்துட்டார். அவர்தான், `வாங்க, சேர்ந்து கலந்துக்கலாம்’னு என்னைக் கூப்பிட்டார். ஆனா, என்னால் சென்னைக்கு வர முடியலை. அப்ப எனக்குப் பதிலாத்தான் அரவிந்த் பண்ணினார். அந்த ஷோவின் ரெண்டாவது சீஸன்ல நான் கலந்துக்கிட்டேன். அதுல செலெக்ட் ஆகலை. மூணாவது சீஸன்லதான் செலெக்ட் ஆனேன். அதுலதான் சிவகார்த்திகேயனும் செலெக்ட் ஆகியிருந்தார். அப்ப ஆரம்பிச்ச பயணம், `சாம்பியன்ஸ்', `கிங்ஸ் ஆஃப் காமெடி', `அது இது எது?'னு போயிட்டிருக்கு.”

“உங்க ஷோ முதன்முறை ஒளிபரப்பானப்போ வந்தப்ப வீட்ல என்ன ரெஸ்பான்ஸ்?”

“நான் நடிச்ச முதல் எபிசோட் பார்த்ததும், எங்க ஊர்க்காரங்க செம குஷியாகிட்டாங்க. மைக் செட் கட்டி, பக்கத்து கிராமங்கள் வரை போய் போஸ்டர் ஒட்டி, பேனர் வைச்சுனு அதை திருவிழா மாதிரி கொண்டாடினாங்க. எனக்கு ஊர்க்காரங்க எல்லாருமே சொந்தக்காரங்க மாதிரிதான். அவங்கதான் எனக்கு முக்கியமான சப்போர்ட். அந்த நாளை மறக்கவே முடியாது.”

“பெண் கேரக்டர்கள்தான் உங்க ஸ்பெஷல். அதை நீங்க எப்படிப் பார்க்கிறீங்க?”

“முதல்முறையா `பருத்திவீரன்’ படப் பாட்டி வேஷம் போட்டேன். அப்புறம், `கிங்ஸ் ஆஃப் காமெடி'யில் ரோபோ சங்கர்கூட சேர்ந்து கலா மாஸ்டர் கெட்டப்போட்டது நல்லா ரீச். தொடர்ந்து `என்னமா... இப்படிப் பண்றீங்களேம்மா’ புரோகிராம் செம வைரல். அதுதான் என்னை எல்லா பக்கங்களுக்கும் கொண்டுபோய் சேர்த்திருக்கு. அந்தச் சமயம் சிவகார்த்திகேயன் போன் பண்ணி, `ஷோ பயங்கரமா இருந்துச்சுண்ணே’னு பாராட்டினார். லாரன்ஸ் மாஸ்டர் கூப்பிட்டு தன் `காஞ்சனா' படத்துல நடிக்கச் சொன்னார். இப்ப சமீபத்துல, கரகாட்டம் ஆடும் பெண்ணா வேஷம் போட்டிருந்தேன். அதைப் பார்த்துட்டு `பிக் பாஸ்’ பரணி போன் பண்ணி பாராட்டினார். `நாம சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம்ணே’னு சொல்லியிருக்கார். நான் பெண் வேஷம் போட்டால், அப்படியே எங்க அம்மா மாதிரியே இருப்பேன்.”

``பெண் வேடம் போடுவது பற்றி உங்க வீட்ல என்ன சொல்றாங்க?”

``பெண் வேஷம் போடுறது என் மனைவிக்குப் பிடிகக்கலை. எனக்குமே ஒரே மாதிரி பண்றோமேனு ஒரு யோசனை. என் குழந்தைகளும், `ஏன், அப்பா பெண் வேஷமே போடுறார்?’னு கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. நானும் டைரக்டர்கிட்ட சொல்லி பெண் வேஷம் போடுறதைக் குறைச்சுக்கிட்டிருக்கேன். என்னை எல்லாருக்கும் தெரியவைச்சது இந்தப் பெண் கெட்டப்புகள்தான். ஆனாலும், அடுத்தடுத்த லெவலுக்குப் போகணும்ல பாஸ். `இவனுக்கு இதுதான்’னு செட் ஆகிடக் கூடாதில்லையா, அதனாலதான்.”' 

``நிறையபேர் பாராட்டியிருப்பாங்க. அதில் மறக்க முடியாத பாராட்டுனா எதைச் சொல்வீங்க?”

``அது நிறைய இருக்கு. குறிப்பிட்டுச் சொல்லணும்னா, நேற்று தெருவுல போகும்போது `இந்தப் பையன்கூடதான் என் பேரன் போட்டோ எடுத்துட்டு வந்தான்டி. தம்பி... எப்படி இருக்கே?'னு ஒரு பாட்டி கேட்டது ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. அடுத்து ரோட்டுல போகும்போது பக்கத்துல வந்து, `போலீஸைக் கூப்பிடுவேன்’னு சொல்லி கலாய்ப்பாங்க. இப்படி சின்னப் பையன்கள்ல இருந்து வயசான பாட்டி வரை எல்லார் மனசுலயும் நான் ரீச் ஆகியிருக்கேன்னு நினைக்கும்போது, `நாம இன்னும் நிறைய சாதிக்கணும்'னு உற்சாகமா இருக்கு.

என் ஷோவை லாரன்ஸ் மாஸ்டர் பார்த்துட்டு, அவர் வீட்டுக்கு என்னை வரச்சொல்லி பக்கத்துல உட்காரவெச்சு பேசினார். சேர்ந்து சாப்பிட்டோம். அது மறக்கவே முடியாத தருணம். அப்புறம் நிறைய டைரக்டர்கள் போன் பண்ணி வாழ்த்துவாங்க. இப்படி, வாழ்க்கையில மறக்க முடியாத பாராட்டுகள் ஏகப்பட்டது இருக்கு.”

``உங்ககூட பெர்ஃபாம் பண்ணின சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர் எல்லாரும் விறுவிறுனு மேல வந்துட்டாங்க. அது ரொம்ப நல்ல விஷயம். அவங்களோடு டச்ல இருக்கீங்களா? 

“ரோபோ சங்கர் சென்னைக்குக் கூப்பிட்டப்ப, `நாம உடனடியா சென்னைக்கு வரலையே!'னு பல நாள் வருத்தப்பட்டிருக்கேன். அவரும் நானும் மதுரையில வெளியூர் நிகழ்ச்சிக்குப் போயிட்டு லேட்டாத்தான் வருவோம். அதுவரை அவங்க வீட்ல காத்துட்டு இருப்பாங்க. அவர் வீட்லேயேதான் நானும் தங்குவேன். நான் சென்னை வந்த புதுசுல அவர் வீட்டுலதான் இருந்தேன். எங்களுக்குள்ள உள்ள நட்பை `கிங்ஸ் ஆஃப் காமெடி ஜூனியர்ஸ்' நிகழ்ச்சியில் மறக்காம சொன்னார். சிவகார்த்திகேயனும் நானும்தான் `கலக்கப்போவது யாரு?' நிகழ்ச்சிக்கு மதுரையிலிருந்து செலெக்ட் ஆனோம். ரெண்டு பேர் மட்டும் சேர்ந்து ஒரு எபிசோட் பண்ணியிருக்கோம். விடிய விடியலாம் ரிகர்சல் பார்த்திருக்கோம். அவர் இன்னிக்கு இந்த அளவுக்கு உயரத்துக்குப் போனாலும், எங்க நட்பு மாறாது. சிவகார்த்திகேயனும் ரோபோவும் சினிமாவில் நல்ல வாய்ப்பு தருவாங்கனு நம்பிக்கை இருக்கு.”

“நீங்க மத்தவங்க மாதிரி பெர்ஃபாம் பண்ணிட்டிருந்தது போய், இன்று உங்களை மாதிரியே பலர்  பண்றாங்க. அதையெல்லாம் கவனிக்கிறீங்களா?”

“ஆமாம், `கிங்ஸ் ஆஃப் காமெடி ஜூனியர்' ஷோவில் `கதையல்ல கப்சா'னு என்னைய மாதிரியே ஒரு பையன் நடிச்சான். நல்லா பண்ணியிருந்தான். அவனை நேர்ல பார்த்துப் பாராட்டிட்டேன். என்னை மாதிரியும் பண்றாங்கனு ரொம்ப சந்தோஷமா இருக்கு. அவன் குரல், காஸ்ட்யூம் எல்லாமே அப்படியே என்னைய மாதிரியே இருக்கும். இதுக்கெல்லாம் காரணம், எங்க டைரக்டர் தாம்சன் சார்தான். அவருக்கு என்னைக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கேன்.”

“இப்ப என்னென்ன படங்கள் பண்ணிட்டிருக்கீங்க?”

“இதுவரை ஏழு படங்கள்ல நடிச்சிருக்கேன். நாலு படங்கள் ரிலீஸ் ஆகிடுச்சு. இதுதவிர, எட்டு படங்கள்ல கமிட் ஆகியிருக்கேன். நாலு படங்கள்ல நடிச்சு முடிச்சுட்டேன். மீதி நாலு படங்கள் ஷூட்டிங் போயிட்டிருக்கு. படங்கள்லயுமே பெண் வேஷம் போடச் சொல்லிதான் வாய்ப்புகள் வருது. அதனாலேயே, அப்படி வந்த 13 படங்களை வேணாம்னு தவிர்த்துட்டேன். இப்போ கேரக்டர் என்னனு கேட்டுட்டுதான் ஓகே சொல்றேன்.”

“டிவி, சினிமானு அடுத்தடுத்து என்ன ப்ளான் வெச்சிருக்கீங்க?”

“பெரிய ஆசைகள் எல்லாம் இல்லீங்க. நான்லாம் படத்துல நடிப்பேனானு நினைச்சுக்கூடப் பார்த்ததில்லை. இப்போ `உங்களை அந்தப் படத்துல பார்த்தேன்; இந்தப் படத்துல பார்த்தேன்'னு சொல்லும்போது சந்தோஷமா இருக்கு. உள்ளே வந்துட்டோம். நல்ல காமெடி நடிகராகணும், நல்ல இடத்துக்குப் போகணும். நம்மளை சுற்றி இருக்கிறவங்களை சந்தோஷப்படுத்தணும் அவ்வளவுதான்.''