Published:Updated:

90 நாட்களில் ‘பிக் பாஸி’ல் என்ன நடந்தது..? ஹிட்/மிஸ் என்ன? #BiggBossRewind

சாரா
90 நாட்களில் ‘பிக் பாஸி’ல் என்ன நடந்தது..? ஹிட்/மிஸ் என்ன? #BiggBossRewind
90 நாட்களில் ‘பிக் பாஸி’ல் என்ன நடந்தது..? ஹிட்/மிஸ் என்ன? #BiggBossRewind

‘அப்பாடா, ஒரு வழியா ‘பிக் பாஸ்’ முடிவடைய நாள்கள் நெருங்கிவிட்டன. இனி அந்த விசேஷ நேரமான 9 மணியை மற்ற சேனல்களின் சீரியல்கள், நிகழ்வுகள் கவர்வது எப்படி எனக் கவனிக்கத் தொடங்கலாம். `பிக் பாஸ்' தொடங்கிய நாளிலிருந்து உள்ளே நுழைந்த 15 + 4 = 19 பேருக்கு மட்டுமா அந்தப் படபடப்பு, டென்ஷன், கோபம், எரிச்சல், அழுகை, சந்தோஷம் எல்லாம்? தமிழ் மக்களுக்கும்தான்! என்ன ஒரு வேகம்! நூறு நாள்கள் என்பது மக்கள் மனதில் அத்தனை பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடுமா? அப்படி என்ன செய்தது இந்த `பிக் பாஸ்'?

`பிக் பாஸி'ன் முதல் ஹீரோ!

மா.கா.பா., பிரியங்கா, டிடி என விஜய் டிவி-யின் பிரத்யேக முகங்களைக் கடந்து, உலக நாயகனை நிகழ்ச்சித் தொகுப்பாளராக களம் இறக்கியபோதே மக்களின் முதல் கவன ஈர்ப்பைப் பெற்றுவிட்டது `பிக் பாஸ்'. இதே உத்தியை இதற்கு முன் `நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' நிகழ்வில் நடத்தியிருந்தாலும் `பிக் பாஸ்' அதையும் கடந்து ரசிகர்களின் அமோக ஆதரவைப் பெற்றது. இதற்கு மற்றொரு காரணம், இப்போது கமல் நடத்திக்கொண்டிருக்கும் அரசியல் யுத்தம். `பிக் பாஸ் நூறு நாள்' நிகழ்வைவிட `கமல் நூறு நாள்' என எழுதும் அளவுக்கு அத்தனை சந்திப்புகள், பேட்டிகள், ட்விட்டர் பதிவுகள் என அவர் கலக்கிக்கொண்டிருக்கிறார். இதற்காக வாரம் இருமுறை மக்களைச் சந்திக்கவும், மக்களிடம் சமூகம் சார்ந்த கருத்துகளை, கோபங்களைப் பகிரவும் எனத் தனக்கான தளமாகவும் இரட்டை ஆயுதமாகவும் `பிக் பாஸ்' மேடையைப் பயன்படுத்திக்கொண்டார்.

`பிக் பாஸ்' 

இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே இதுபோன்ற நிகழ்வை இந்தி, ஆங்கில மொழிகளில் கண்டு ஓரளவுக்கு இப்படித்தான் இருக்கும் என்ற யூகத்தில் இருந்தனர் சிலர். தங்களுக்குத் தெரிந்ததை பிறருக்குத் தெரியப்படுத்தியே ஆகவேண்டிய கடமையோடு வலைதளங்களில் பகிரவும்செய்தனர். ஆனால், அதையெல்லாம் அடித்து நொறுக்கிக்கொண்டு முதல் பத்து நாள்களுக்குள்ளேயே ஒட்டுமொத்த பார்வையாளர்களையும் வென்று கம்பீரமாக அமர்ந்தது `பிக் பாஸ்'. இந்த நிகழ்ச்சியை மக்கள் முண்டியடித்துக்கொண்டு பார்க்கக் காரணம் என்ன, அப்படி அதில் என்னதான் இருக்கிறது?

மொழி... ஆம், நம் தமிழ் மொழியில் நம் மக்கள் பேசிக்கொள்வது, அன்பைப் பரிமாறிக்கொள்வது, செல்லச் சண்டைகள் எனப் பக்கத்து வீட்டுக்குள் நடப்பதைப்போலான ஒன்றை ரசிப்பதும் சுகம்தானே. சாத்வீகமாகத் தொடங்கிய `பிக் பாஸ்' நிகழ்வில் நாள்பட நாள்பட சண்டைகள் தீவிரமாகி, குழுக்கள் அமைந்து, சூழ்ச்சி, சதி, பழிவாங்குதல் என முப்பது நாள்களில் பெரும் கோரத்தாண்டவமே ஆட, வெளியே இருக்கும் ரசிகர்களும் தங்களுடைய கோபத்தைப் பதிவுகளாக, நகைச்சுவைப் படங்களாகப் பதிவிட்டனர்.

அடுத்த வீட்டு ஜன்னலை எட்டிப்பார்ப்பது அதுவும் அவர்களுடைய அனுமதியோடு எட்டிப்பார்ப்பது எவ்வளவு சுவாரஸ்யமானது! கழிவறையையும் உடை மாற்றும் அறையையும் தவிர, அனைத்து விஷயங்களையும் மக்கள் கண்டு ரசித்தனர். புறம் பேசுவது ஒரு சுகம் என்றால், அதற்கு பலியாகும் ஆடுகளை, ஆடு திருப்பி மறு அடி கொடுப்பதை என எல்லாவற்றையும் விசிலடித்து ரசிக்கும் பார்வையாளர்களின் மனதில் சில நேரம் சாத்தான்களும்; சில நேரம் கடவுள்களும் மாறி மாறி விளையாடினர்.

ஓவியா

`பிக் பாஸ்' நிகழ்வின் மூலம் மக்கள் மனதைக் கொள்ளையடித்த தேவதை ஓவியா. தான் இப்படி ஓர் இடத்தைப் பெறுவோம் என அவரே நினைத்துப்பார்க்காத அளவுக்கு உயரமான ஓர் இடத்தைக் கொடுத்தனர் மக்கள். `பிக் பாஸ்' வீட்டுக்குள் யாரெல்லாம் ஓவியாவைக் காயப்படுத்தினார்களோ, அவர்களே வெளியே வந்ததும் தாங்கள் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்கும் அளவுக்கு மக்களின் கோபத்துக்கும் விரட்டுதலுக்கும் ஆளாகினர். ஓவியாவைப் பொறுத்தவரை தனக்கு இந்த அளவுக்கு மக்கள் கொடுத்த உயரமே போதுமானது என, கிடைத்த புகழையெல்லாம் புத்திசாலித்தனமாக வாய்ப்புகளாக மாற்றிக்கொண்டு இயல்புநிலைக்கு திரும்பிவிட்டார். இனி என்ன, அந்த மலையாளத்துப் பைங்கிளியை சினிமாவிலும் விளம்பரங்களிலும மாறி மாறிக் காணலாம்.

`பிக் பாஸ்' வில்லன்கள்

இந்த நிகழ்ச்சியிலிருந்து ஓவியா வெளியேறியபிறகு, நிகழ்ச்சியில் லேசான தொய்வு ஏற்பட்டது எனலாம். இப்போது நடந்துகொண்டிருப்பது ஒரு தில் தில் தில் `அச்சம் தவிர்' நிகழ்வுக்கு நிகரான ஷோதான். ஓவியாவின் 30 நாள்களுக்குள் இருந்த உற்சாகம், வேகம், பரபரப்பு, இப்போது குறைந்திருக்கிறது. காயத்ரி, ஜூலி, ஷக்தி மூவர் கூட்டணி, அதற்கு உதவிபுரிந்த ரைசா, நமீதா, சப்போர்ட் செய்யவேண்டிய ஆரவ்வின் கை கழுவுதல்... இப்படியான அந்த நாள்களில் பார்வையாளர்களின் இதயத்துடிப்பு பன்மடங்கு வேகமெடுத்தது. ஓவியாவைத் தனிமைப்படுத்தி மற்ற போட்டியாளர்களுக்கு எலுமிச்சைப்பழம் சுற்றி திருஷ்டி கழித்த நாள்களில் ஓவியாவுக்காக அத்தனை அனுதாப அலைகள் வீசின. அதன் வீச்சும் எதிர்வினையும்தான் மீதி இருந்த 70 நாள்களை நகர்த்திச்சென்றன என்றால், அது மிகையல்ல.

இடைச் செருகல்கள்

பிந்து, ஹரீஷ், காஜல், சுஜா என விஜய் டிவி எத்தனையோ இடைச்செருகல்கள் செய்துப்பார்த்தும், முதல் முப்பது  நாள்களின் வேகத்தைத் தொட முடியவில்லை. அதனால் வெளியே சென்றவர்களையே மீண்டும் உள்ளே வரவழைத்தும், மீண்டும் `சொன்னது நீதானா?' என்ற ரேஞ்சில் பழைய சம்பவங்களைப் பேசவைத்தனர். பிந்து, ஆரவ், ஹரீஷ், வையாபுரி, சினேகன், கணேஷ் என பல போட்டியாளர்கள் உயிரைக்கொடுத்து பங்கெடுத்தாலும் ஒரு ரியாலிட்டி ஷோவுக்கான பரபரப்பு மிஸ்ஸானது என்பது உண்மையே. 

இப்படி நடந்திருந்தால்...

ஓவியா - காயத்ரி சம்பவங்களில், `பிக் பாஸ்' தன் விசாரணையைத் தீவிரப்படுத்தியிருக்கலாம். மருத்துவ முத்தத்தை கேமராவில் பார்த்தபோதே அதுகுறித்து தனியாக விசாரித்திருக்கலாம். ஓவியாவின் வெளியேற்றத்துக்குப் பிறகு நடத்திய விசாரணை, மக்கள் கேள்விகளை முன்னரே செய்திருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் பரபரப்பு இன்னும் கூடியிருக்கும். `ஓவியா வெளியேறிய பிறகு, நான் `பிக் பாஸ்' நிகழ்ச்சியைப் பார்க்கவே இல்லை' எனச் சொல்லும் பலருடைய எரிச்சல்களே இதற்குச் சான்று.

வெல்லப்போவது யார்?

மிச்சம் இருக்கும் ஐந்து பேரில் ஹரிஷ், பிந்துவுக்கு அனுபவ நாள்கள் குறைவு. எனவே, அவர்களுக்கு வாய்ப்பும் குறைவு என்றே கணிக்க வேண்டியுள்ளது. கணேஷ் நல்ல போட்டியாளர்தான். வெற்றிபெற வாய்ப்பிருக்கிறது. ஆனால், அவருக்கும் சில குறைபாடுகள் உள்ளன. போட்டியில் சுயநலம், யார் மீதும் அதீத அன்பு இல்லாமல் வெற்றியை மட்டுமே நோக்கிப் பயணித்தது, `பிக் பாஸ்' வெற்றியாளருக்குத் தேவையான பொதுநலன், பரந்த மனப்பான்மை, அன்புடையவர் என்னும் அடிப்படை விஷயம் மிகக்குறைவு.

ஆரவ், `பிக் பாஸ்' வீட்டில் நுழைந்ததிலிருந்து இரண்டுவிதமாகப் பிரிக்கலாம். ஓவியாவுக்கு முன்; ஓவியாவுக்குப் பின். ஆரவ், முதல் பாதியில் எடுப்பார் கைப்பிள்ளையாக, அழகான பொம்மையாக, சுயசிந்தனையற்றவராக இருந்தார். ஆனால், பின்பாதி நாள்களில் கருத்துகளை துணிந்து பதிவுசெய்வது, கோபப்படுவது, அன்பு, இரக்கம் என `பிக் பாஸ்' ரசிகர்களின் மனதைக் கொள்ளையடிப்பவராக மாறிவிட்டார். முன் பாதியில் அவர் இருந்தது நிஜம் என்றால், நிச்சயமாக அவருக்கு வெற்றி பெரும் தகுதி இல்லை எனலாம். பின்பாதி மட்டுமே நிஜம் என்றால், இப்போதைக்கு அவர் மிக முக்கியமான வெற்றியை நெருங்கும் போட்டியாளர். எது நிஜம், எது பொய் என்பதை மக்கள்தான் சொல்ல வேண்டும்.

சினேகன் முதல் வாரத்தில் தலைமை ஏற்றது குறியீடாக இருக்குமோ? தெரியவில்லை. `பிக் பாஸ்' வீட்டில் தலைமைப் பொறுப்பாகட்டும், வேலைக்காரன் வேடமாகட்டும், எதற்கும் அஞ்சாத பங்கேற்பாளர் எனலாம். கடும் போட்டிகளில் தமக்கு ஒவ்வாது எனத் தெரிந்தும், பங்கேற்ற தைரியமே அவருடைய மனதைரியத்துக்கு நற்சான்று எல்லோரிடமும் அன்பு பாராட்டுதல் தேவைப்படும் நேரத்தில் எல்லோரிடமும் கோபப்படுதல், பெண்களைக் கட்டிப்பிடிப்பது குறித்து குற்றச்சாட்டு எழுந்தபோதும் தன் பெண் தோழமைகளை தேவதைகளாக்கி தேவனாகவே மாறிப்போன சாமானியன் சினேகன். அழுகை, சிரிப்பு, உற்சாகம், சோகம் எதையும் கேமரா முன்னாடி ஓரளவுக்குமேல் மறைக்க முடியாது என போட்டுடைத்து, இதுதான் நான் என்று நெஞ்சு நிமிர்த்தி நிற்கும் சினேகன் என்னும் குதிரையே, தற்போதைக்கு வெற்றிக் கோப்பையை வெல்லும் குதிரையாகத் தெரிகிறார். எது நடக்கும், எவர் ஜெயிப்பார்... பொறுத்திருந்து பார்க்கலாம்.

இன்னும் சில நாள்கள்

`பிக் பாஸ்'  தனது பைனல் எபிசோடை இந்த வார இறுதியில் நிகழ்த்த இருக்கிறது. அதன் பிறகு விஜய் டிவி `பிக் பாஸ் பாகம் 2' தொடரலாம். ஆனால், இனி எத்தனை `பிக் பாஸ்' வந்தாலும் முதல் `பிக் பாஸ்' போல் இருக்காது. அப்படி ஒரு புதுமையான `பிக் பாஸ்' ஷோவை நடத்த வேண்டும் என்றால், பதினைந்து நட்சத்திரங்களை உள்ளே இறக்கினால் மட்டுமே சாத்தியம். விஜய் டிவி, தன் செட் பிராப்பர்ட்டிகளைத் தவிர்த்து, போட்டியாளர்களைத் தேர்வுசெய்ய வேண்டும். அதைவிட முக்கியம், `பிக் பாஸி'ன் கமல்ஹாசன் அடுத்த சீசனிலும் தொடர்வாரா அல்லது அவர் இடத்தை நிரப்ப மகா `பிக் பாஸ்' வேறுயாராவது வருவாரா என்பதே!