Published:Updated:

''தமிழ் கடவுள் முருகன் தொடருக்காக உடல் எடையைக் குறைச்சேன்'' - பார்வதியாக நடிக்கும் பிரியா!

வே.கிருஷ்ணவேணி
''தமிழ் கடவுள் முருகன் தொடருக்காக உடல் எடையைக் குறைச்சேன்'' - பார்வதியாக நடிக்கும் பிரியா!
''தமிழ் கடவுள் முருகன் தொடருக்காக உடல் எடையைக் குறைச்சேன்'' - பார்வதியாக நடிக்கும் பிரியா!

விஜய் தொலைக்காட்சியில் அக்டோபர் 2 முதல் ஒளிபரப்பாகிவரும் 'தமிழ் கடவுள் முருகன்' தொடரில் பார்வதியாக நடித்துவருகிறார் செய்திவாசிப்பாளர் பிரியா. இந்த தொடர் குறித்துக் கேட்டால் பல விஷங்களைப் பகிர்கிறார், 

''எப்படி உங்களுக்கு இந்த வாய்ப்புக் கிடைச்சுது?''

''எனக்குத் தெரிந்த நண்பர்கள் சில பேர் இந்தத் தொடரில் இருக்காங்க. அவங்க மூலமாகத்தான் எனக்கு இந்த சான்ஸ் கிடைச்சுது. நியூஸ் ரீடராக இருந்திருக்கோம் என்பதால தமிழ் உச்சரிப்பெல்லாம் சரியா இருக்குமேனு ஒத்துக்கிட்டேன். ஆனால், அங்கே டயலாக் டெலிவரி முதல் உச்சரிப்பு முதல் இன்னும் கூர்மையாகப் பார்த்து பேச வேண்டியிருந்தது. முதல் ஆடிசன் முடிந்ததும் இரண்டு, மூன்று தடவை கூப்பிட்டாங்க. முதல் ஆளாக செலக்ட் ஆகிட்டேன். செம்ம ஹேப்பி''.

''உங்களுக்கு பார்வதி கெட்டப் எப்படி செட் ஆகும்னு நினைச்சீங்க?''

''அப்பா என்ன நினைத்து சொன்னாரோ தெரியல. தமிழ் கடவுள் முருகன் சீரியல்ல நடிக்க ஓ.கே ஆகியிருக்குனு சொன்னதுமே.. 'பார்வதி கெட்டப் கிடைச்சா நல்லாயிருக்கும்னு சொன்னார். எனக்கு கிளாசிக்கல் டான்ஸ் தெரியும் என்பதால முகப் பாவனைகள் எல்லாம் சரியாக இருக்கும்னு நினைத்து சொன்னாரோ என்னவோ.. அவர் சொன்ன மாதிரியே எனக்குப் பார்வதி கெட்டப் கிடைச்சிடுச்சு. உடனே அப்பா கிட்டத்தான் சொன்னேன். அப்பா பெருசா சந்தோஷத்தை வெளிப்படுத்தற ஆள் கிடையாது. சொன்னதும், 'நல்லதும்மா'னு சொன்னார்''. 

''இதுக்கு முன்னாடி ஆன்மீக கதைகள் சார்ந்த தொடர்களில் நடிச்சிருக்கீங்களா?''

''ஸ்கூல்ல படிக்கும்போது இந்த மாதிரி கெட்டப் போட்டு நடிச்சிருக்கேன். ஃபேன்ஸி டிரெஸ் போட்டுட்டு டிராமாவுக்காக நடிச்சிருக்கேன். அதற்குப் பிறகு அந்த வாய்ப்புக் கிடைக்கல. நியூஸ் ரீடர், சீரியல் நடிகை என என் பாதை மாறிடுச்சு. அதிலும் ஆன்மீகம் சார்ந்த வாய்ப்புகளுக்கு சாத்தியமே இல்லாமல் போயிடுச்சு. இந்த வாய்ப்பு எனக்கு பெரிய ஷாக்னுதான் சொல்லணும். பார்வதியாகவே வாழ்ந்தா மட்டும்தான் இந்த கேரக்டருக்குள் போக முடியும். அதற்காக நடை, உடை, பாவனை என அத்தனையையும் மாத்த வேண்டியிருந்தது. ஐ லைக் இட்''. 

''தமிழ் கடவுள் முருகன் தொடருக்காக நீங்கள் மாற்றிக் கொண்டது?''

''நிறைய இருக்கு. பொதுவாக சாதாரண சீரியல்னா வேகமாக நடக்கலாம், வேகமாகப் பேசலாம், எக்ஸ்பிரஷனும் அதிகப்படியாகக்கூட கொடுக்கலாம். ஆனால், கடவுள் சார்ந்த கதைகளில் அப்படி மாற்றிக்கொள்ள முடியாது. மெதுவாக நடக்கணும், ஸ்லோமோஷனில் திரும்பணும். 'சுவாமி' என அழைக்கும்போது அதற்கேத்தமாதிரி முகபாவனை இருக்கணும். இப்படி பல விஷயங்களை ஃபாலோ பண்ண வேண்டியிருக்கும். கூடவே இன்னொரு விஷயமும் இருக்கு. இந்த தொடருக்காக என் உடல் எடையையும்  குறைச்சிருக்கேன்''. 

''உடல் எடையை குறைச்சீங்களா?''

''ஆமாம். பொதுவாகப் பார்க்கும்போது நான் நார்மல வெயிட்டோடுதான் இருக்கிற மாதிரி இருக்கும். ஆனா, பார்வதி கேரக்டருக்கான ஜூவல்லரி, டிரெஸ் என எல்லா ஆடை, ஆபரணங்களையும் அணியும்போது இன்னும் ஃபேட்டாக தெரிய வாய்ப்பிருக்கு. அதனால, 'உங்களால் முடிந்தால் உடல் எடையை  குறைக்க முடியுமா'னு கேட்டாங்க. நானும் ஓ.கே சொல்லிட்டேன். அதற்காக டயட்ல இருந்து சில கிலோக்களை குறைச்சுட்டேன். அதற்குப் பிறகு இப்போ பார்க்கிறப்போ பிரியா மாதிரியே தெரியல. அவ்வளவு மாற்றம்''. 

''பிரியாவின் நடிப்புப் பற்றி வீட்டில் என்ன சொல்றாங்க?''

''அவங்களுக்கு ரொம்ப சந்தோஷம். கிட்டத்தட்ட  இரண்டரை மாதங்களாக ஷூட்டிங் போயிட்டு இருக்கேன். இந்த கேரக்டரை செய்ய ஆரம்பித்த பிறகு, கடவுள் எனக்குள்ளயே இருக்கிற ஒரு  ஃபீலைக் கொண்டு வந்துட்டேன். அதனால பார்வதி கெட்டப் போட்ட பிறகு முழுக்க பார்வதியாக உணருகிறேன்.  செட்ல எல்லாரும் என்னை 'மாதா, தேவி'னுதான் கூப்பிடுவாங்க. பிரியாங்கிற பேரே மறந்து போயிடுச்சு. அப்படியே என்னை கடவுளாக நினைக்க வச்சுட்டாங்க. மனசுல ரிலாக்ஸா இருக்கு. காலைல ஆரம்பிக்கிற ஷூட் இரவு வரைக்கும் போயிட்டே இருக்கும். கலைஞர் டி.வில ஆன்மீகத்தொடரில் நடித்த சசீந்தர் என்பவர்தான் சிவனாக நடிக்கிறார். அவருடைய உயரம் 6.3.  நாங்க பிளைட்ல ஒண்னாதான் வந்தோம். அப்போ, இவ்வளவு உயரமாக இருக்காறே.. ஒருவேளை வில்லன் ரோல் கொடுப்பாங்களோனு நினைச்சேன். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தப் பிறகுதான் தெரியுது. இவர்தான் சிவன் பாத்திரத்தில் நடிக்கிறார். ரொம்ப அமைதியாக இருப்பார். நல்ல பிரண்ட்லி பர்சன்''. 

''மறக்க முடியாத சீன்கள்?''

''எனக்கு டயலாக்கோடு அதிகம் அழற சீன்தான். கோபமாக இருக்கும்போது ஒரு அவதாரமும், அருள்பாளிக்கும்போது ஒரு அவதாரமும் எடுப்பது போல் வரும். அதில் கோபமாக ருத்ரதாண்டவம் ஆடும்போது பத்து கைகளை விரித்து மிரட்டும் காளியாக நடித்திருப்பேன். அப்போலாம் ஒருமாதிரி உடலே சிலிர்த்துப் போச்சு. இப்படி பல சீன்கள் இருக்கு. நீங்களே இந்த தொடரைப் பார்க்கும்போது புரிஞ்சுப்பீங்க.''

''தமிழ் கடவுள் முருகன்' தொடரின் கதை எப்படி நகர்கிறது? ''


''சிவனிடம் சாகாவரம் பெற்ற அசுரர்களை அழிப்பதற்காக தாயின் கர்பத்தில் பிறக்காமல் முருகன், சிவனால் உருவாக்கப்படுகிறார். அதை சிவனின் மனைவி பார்வதி எப்படி எடுத்துக் கொள்வாள் என தயங்கிக் கொண்டிருக்கிறார் சிவன். இப்படி தன் மகனாக பிறக்கவிருக்கும் முருகனைப் பற்றியும், முருகன் பிறந்த பிறகு பார்வதி எப்படி முருகனை போற்றி வளர்க்கிறாள் என்பது பற்றியும், சாகாவரம் பெற்ற அசுரர்கள் முதல் அடுத்தடுத்து வரும் பிரச்னைகளை முருகன் எப்படி கடந்து வருகிறார் என்பதுதான் கதை. இதில் முருகன் தாயார் பார்வதியின் கதாபாத்திரம் சிறப்பம்சம் பெற்றிருக்கும் என்பதால் எனக்கு மகிழ்ச்சி'' என சிரிக்கிறார் பிரியா கன்னத்தில் குழி விழும்படி''.