Published:Updated:

''முருகனாக நடிக்கிறது பொண்ணா, பையனானு கேப்பாங்க!'' - தாய் சுஜாதா

''முருகனாக நடிக்கிறது பொண்ணா, பையனானு கேப்பாங்க!'' - தாய் சுஜாதா
''முருகனாக நடிக்கிறது பொண்ணா, பையனானு கேப்பாங்க!'' - தாய் சுஜாதா

''முருகனாக நடிக்கிறது பொண்ணா, பையனானு கேப்பாங்க!'' - தாய் சுஜாதா

விஜய் டி.வியில் ஒளிபரப்பாகிவரும் 'தமிழ்க் கடவுள் முருகன்' தொடரில் முருகனாக நடித்திருப்பது பெண் குழந்தையா, ஆண் குழந்தையா என்பதுதான் பலரின் சந்தேகம். 'இவ்வளவு அழகாக இருக்கு. கண்டிப்பாகப் பெண் குழந்தைதான்' என்கிறார்கள். முருகனாக நடிக்கும் குழந்தை பற்றி தெரிந்துகொள்ள அவருடைய அம்மா சுஜாதாவைத் தொடர்புகொண்டோம். 

''முருகனா நடிக்கிறது ஆண் குழந்தையா பெண் குழந்தையா?'' 

'' (பலமாகச் சிரிக்கிறார்) ஆண் குழந்தைதான். அவன் பெயர் அனிருத். ஒன்பது வயசு ஆகுது. மடிப்பாக்கத்தில் இருக்கும் சாய்ராம் வித்யாலயா பள்ளிக் கூடத்தில், நான்காம் வகுப்புப் படிக்கிறான். அவனுக்கு ஓர் அக்கா இருக்கிறாள். அவள் பெயர் கிருதி. அவளும் அதே பள்ளியில் பத்தாம் வகுப்புப் படிக்கிறாள். எல்லா வீடுகள் மாதிரிதான்... அக்காவும் தம்பியும் எப்பவும் சண்டைப் போட்டுட்டே இருப்பாங்க. எனக்கும் அவங்க அப்பா சத்தியநாராயணமூர்த்திக்கும் பஞ்சாயத்து செய்யறதுதான் பெரிய வேலையே.'' 

''அனிருத் என்ற பெயருக்குப் பின்னால் ஏதாவது காரணம் இருக்கா?'' 

''அவன் ஶ்ரீரங்கத்தில் பிறந்தான். அவன் பிறந்ததும் எங்க விருப்பத்துக்கு ஒரு பெயரைத் தேர்ந்தெடுத்தோம். ஆன்மிகத்துல தேர்ந்த ஒருவரான எங்க சொந்தக்காரர்கிட்ட நாங்க தேர்ந்தெடுத்த பெயரைச் சொல்லி ஆலோசனை கேட்டோம். அவரோ, கண்ணை மூடி தியானம் பண்ணிட்டு 'அனிருத்னு வைங்க'னு சொன்னார். அப்படியே வெச்சுட்டோம். பெருமாளின் பெயர் அது. பெருமாள் இப்போ சீரியலுக்காக முருகன் ஆகிட்டார். சந்தோஷம்!'' 

'' 'தமிழ்க் கடவுள் முருகன்' சீரியலில் நடிக்க எப்படி வாய்ப்பு கிடைச்சது?'' 

''ஆடிஷன் மூலமாகத்தான் போனோம். இதுதான் அனிருத்துக்கு முதல் சீரியல். தூய தமிழ் வசனங்களை எப்படி பேசி நடிக்கப்போறானோனு யோசிச்சேன். தூயதமிழ் உச்சரிப்புகளை நிறைய சொல்லிக்கொடுத்தேன். பல தமிழ் வார்த்தைகள் அவனுக்குப் புரியாமல் இருந்துச்சு. விளக்கம் சொல்லி புரியவைப்பேன். அப்புறம் நானே எதிர்பார்க்காத அளவுக்கு அழகா டயலாக் பேச ஆரம்பிச்சுட்டான். இயக்குநர், ஒளிப்பதிவாளர்னு எல்லோருக்கும் செல்லப் பிள்ளை ஆகிட்டான். பல விஷயங்களைச் சொல்லிக்கொடுக்கிறாங்க.''  

''உங்கள் மகனுக்குப் பிடிச்ச விஷயங்கள்...'' 

''அவனுக்கு புக்ஸ் படிக்க ரொம்பப் பிடிக்கும். 'ஹாரி பாட்டர்' அவனுடைய ஃபேவரைட். கிட்ஸ் மகாபாரதம், கிட்ஸ் ராமாயணம், கணேஷா ஸ்டோரீஸ், லட்சுமி ஸ்டோரீஸ் என நிறைய படிப்பான். வீட்டில் பல சமயம் புத்தகத்தோடு பார்க்கலாம். கிரிக்கெட் பற்றி கூகுளில் தேடிப் பல விஷயங்களைப் படிப்பான். எதையாவது கத்துக்கிட்டே இருக்கும் ஆர்வம் அவனுக்கு இயல்பாகவே இருக்கு.'' 

''உங்களிடம் யாராவது 'பார்க்கிறதுக்குப் பொண்ணு மாதிரியே இருக்கான்'னு சொல்லியிருக்காங்களா?'' 

''நிறைய பேர் நேரிடையா கேட்டிருக்காங்க. 'தமிழ்க் கடவுள் முருகன்' செட்லேயே 'தப்பா எடுத்துக்காதீங்க... இஸிட் பாய் ஆர் கேர்ள்(is it boy or girl)'னு கேட்பாங்க. நான் சிரிச்சுக்கிட்டே பதில் சொல்லுவேன். பொதுவாக, பெண் குழந்தைகளுக்கு மேக்கப் போட்டு, ஆண் கடவுள் வேடத்தில் நடிக்கவைப்பாங்க. ஐந்து, பத்து நிமிஷத்திலேயே மேக்கப் முடிஞ்சிடுது. விக்கு வைக்கிறதுக்குத்தான் டைம் எடுக்கும்.'' 

''அனிருத்தின் போர்ஷன் எப்போ ஒளிபரப்பாகுது?'' 

''அடுத்த வாரம் வரும்னு நினைக்கிறேன். எந்த மாதிரி எடிட் பண்ணியிருக்காங்கனு தெரியலை. முதலில், பச்சிளம் முருகனை காண்பிப்பாங்க. அப்புறம்தான் கொஞ்சம் வளர்ந்த முருகன் வருவான். ஆறுமுகனாக வரப்போகும் என் பையனைப் பார்க்க நானும் ஆவலோடு காத்திருக்கேன்.'' 

அடுத்த கட்டுரைக்கு