Election bannerElection banner
Published:Updated:

த்ரிஷா, ராம்கி, கங்கை அமரன்... பிக்பாஸ் - 2ல இவங்கள்லாம் கலந்துக்கலாமா மக்களே!?

தார்மிக் லீ
த்ரிஷா, ராம்கி, கங்கை அமரன்... பிக்பாஸ் - 2ல இவங்கள்லாம் கலந்துக்கலாமா மக்களே!?
த்ரிஷா, ராம்கி, கங்கை அமரன்... பிக்பாஸ் - 2ல இவங்கள்லாம் கலந்துக்கலாமா மக்களே!?

த்ரிஷா, ராம்கி, கங்கை அமரன்... பிக்பாஸ் - 2ல இவங்கள்லாம் கலந்துக்கலாமா மக்களே!?

‘துப்புச்சிக்கு துபுச்சிக்கு பிக் பாஸ்' இந்த சவுண்டுதான் தமிழ்நாட்டில் பலருக்கும் சில நாள்களாக ஹம்மிங் வாய்ஸாக இருந்துவந்தது. ஒருவேளை `பிக் பாஸ் சீசன் 2'-வில் இவங்க எல்லோரும் இருந்தால் எப்படி இருக்கும்னு சிலரைக் குந்தாங்குறையா யோசிச்சுப்பார்த்தோம்... சிரிப்பு வந்துச்சு சிரிப்பு!

இயக்குநர் சிவா : 

இவர் `பிக் பாஸ் 2'க்கு செலெக்ட்டானால், விஜய் ரசிகர்களைவிட அஜித் ரசிகர்கள்தான் செம ஹேப்பி ஆவார்கள். ஹாட்ரிக் கூட்டணியின் ‘விவேகம்' சில ரசிகர்களின் பொறுமையை சோதித்துவிட்டதுதான் காரணம். ஒவ்வொரு முறையும் `அடுத்த படத்துக்காவது தல, வேற டைரக்டரை டிக் செய்ய மாட்டாரா?' என ஏங்கித் தவிக்கும்படிவைத்துவிட்டார் நம்ம சிவா. அடுத்ததாக விண்வெளியை மையாக வைத்து ஒரு `ஸ்பேஸ் த்ரில்லர்' எடுக்கப்போவதாகக் காற்றுவாக்கில் தகவல் வந்து காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊத்திவிட்டுப் போக... இன்னும் காண்டாகிக்கிடக்கிறார்கள் தலயின் கொலவெறி ரசிகர்கள். `நாங்களும் எவ்வளவு நாள்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது தல?' என்றும், `இதுக்குமேல தாங்க முடியாது குருநாதா' என்றும் சரண்டர் ஆகிவிட்டார்கள் பலர். ஆக, சிவாவைத் தேர்வுசெய்து பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பினால், அஜித் தப்பித்துக்கொள்வார். அதன்மூலம் நாமும் தப்பித்துக்கொள்ளலாம் என மனப்பால் குடித்துவருகிறார்கள் தல ரசிகர்கள். 

அசோக் செல்வன் :

`பிக் பாஸ்' நிகழ்ச்சியில் மந்திரித்துவிட்ட கோழிபோல இருந்து எஸ்கேப் ஆன ஶ்ரீக்கு, செம மாற்றாக இவர் இருப்பார். ஏனென்றால், இவருக்கும் அவருக்கும் எக்கச்கக்க பொருத்தங்கள். இருக்கும் இடம் தெரியாமல் இருந்துவிட்டுபோகும் அளவுக்கு `அப்பா'விகள்!  `மிஷ்கின் புராடெக்ட்'டாகக் குனிந்தபடி எதையோ பிக் பாஸ் வீட்டின் தரையில் தேடிக்கொண்டிருந்தவர் ஶ்ரீ என்றால், கூட்டத்தில் ஒருத்தனாக எதை எதையோ பார்த்து எதை எதையோ தேடிக்கொண்டிருப்பவர் அசோக் செல்வன். சில படங்களில் நடித்திருந்தாலும் தங்களுடைய பெஸ்ட்டைக் கொடுத்திருப்பவர்கள். ஶ்ரீயைப்போல இவரை பாதியில் விடாமல் `பிக் பாஸ்' வீட்டுக்குள்ளே அடைகாத்துவைத்தால் உள்ளே இருக்கும் சில நாள்களிலாவது `எப்படிப்பட்ட படங்கள் இனி நடிக்கலாம்?' என யோசிக்கவாவது வாய்ப்பு இருக்கும். அது அவரது சினிமா கரியருக்கு நிச்சயம் உதவும். 

த்ரிஷா :

தமிழ் சினிமா ஹீரோயின்களில் இன்றைய தேதியில் சீனியர் சிட்டிசன் அம்மணிதான். யார் கண் பட்டதோ சினிமா கரியரில் பெரிதாக பிரேக் விழுந்துவிட்டது. மார்க்கெட் டல்லடித்தாலும் `பிக் பாஸ்' சீஸனைக் கெட்டியாகப் பிடித்து மேலே வந்த ஆரவ், ஓவியா, ஜூலி போன்றோருக்குத் தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குவிந்தவண்ணம் இருக்கின்றன. இதைக் கருத்தில்கொண்டு த்ரிஷாவே வான்டடாகப் போய் `பிக் பாஸ் சீஸன் 2' வண்டியில் ஏறிக்கொள்ளலாம். `சாமி 3'ல் நிச்சயம் ஹரி, நம்ம விக்ரமுக்கு ஜோடியாக த்ரிஷாவை செலெக்ட் செய்யவும் வாய்ப்பிருக்கிறது. அட்வான்ஸ் வாழ்த்துகள் த்ரிஷ்!

ராம்கி :

இவர் ஹேர் ஸ்டைல் ஞாபகத்தில் இருக்கும் அளவுக்கு இவர் நடித்த படங்கள் நம் ஞாபகத்திலே இல்லை. `இணைந்த கைகள்' படத்தில் தண்ணி லாரிக்குள் குதித்தவர் அதன் பிறகு மேலே எழவே இல்லை. உருண்டு புரண்டு காமெடி ஆக்‌ஷன் என எல்லாமும் ட்ரை பண்ணிவிட்டு, இப்போது `மாசாணி', `பிரியாணி' என ரொம்பவே நொந்துபோய்க் கிடக்கிறார். `ஐ யம் பேக்' எனச் சொல்ல, `பிக் பாஸ் 2'வை வாய்ப்பாக இவர் பயன்படுத்திக்கொள்ளலாம். அதன்மூலம் `இணைந்த கைகள் பார்ட் 2'கூட எடுக்கலாம். ஏனென்றால், அருண்பாண்டியனும் இப்போது சும்மாதான் இருக்கிறார். செய்வாரா ராம்கி?

பிரசாந்த் :

நமக்கு அனுப்பும் பிறந்த நாள் வாழ்த்தில் அவர் படத்தையும் பேரையும் பெரிதாகப் போட்டு வெறுப்பேற்றும் பிரசாந்த், ஒருகாலத்தில் உலக அழகிக்கே உம்மா கொடுத்தவர். மணிரத்னம், பாலுமகேந்திரா, ஷங்கர் என  உச்ச இயக்குநர்களின் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்தவர். `காதல் மன்னன்' அஜித்துக்குப் போட்டியாக காதல் இளவரசனாக ஜொலித்தவரை நீங்கள் மறந்தாலும் கே டிவி வழியே `கண்ணெதிரே தோன்றினாள்', `ஜோடி', `குட்லக்', `மஜ்னு'  என நம்மை `எங்கேயா இவரு?' எனக் கேட்கவைப்பவர். ஃபேஸ்புக்கில் மட்டும் ஆக்டிவாக இருக்கும் பிரசாந்துக்கு, பிக் பாஸின் அடுத்த சீஸனில் வாய்ப்பு கொடுத்து ஒரு குட்லக் சொல்லி மறுபடியும் சினிமாவுக்குள் வரவைத்தால் நமக்கு ஒன்பது கிரகங்களைச் சுற்றி வந்த பலனாவது கிடைக்கும். 

கங்கை அமரன் :

`ராம்' படத்தில் `ஆராரிராரோ', `பாண்டவர் பூமி' படத்தில் `அவரவர் வாழ்க்கையில் ஆயிரமாயிரம் மாற்றங்கள்', `மௌனம் பேசியதே' படத்தில் `ஆடாத ஆட்டமெல்லாம்', `தவமாய் தவமிருந்து' படத்தில் `ஒரே ஒரு ஊருக்குள்ளே ஒரே ஒரு அம்மா அப்பா' என பிரமிக்கவைக்கும் பல பாடல் வரிகளை எழுதி கலக்கியிருப்பவர் சினேகன். `பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குப் பிறகுதான் ஒருசிலருக்கு இந்த உண்மையே தெரியவந்தது. இதைக் கருத்தில்கொண்டு ஆய்வு செய்ததில்தான் சிக்கினார் கங்கை அமரன். 1990-களில் இவர் வரிகளில் அந்த எல்லா பாடல்களுமே அதிரிபுதிரி ஹிட். `ஜானி' படத்தில் `ஆசைய காத்துல தூது விட்டு', அதே படத்தில் `காற்றில் எந்தன் கீதம்', `சின்ன கவுண்டர்' படத்தில் `முத்துமணி மாலை', `கேளடி கண்மணி' படத்தில் `நீ பாதி நான் பாதி' என பல எவர்கிரீன் பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரர் கங்கை அமரன். செம ஜாலி பார்ட்டி வேறு. நீண்ட முடி வைத்தால் அப்படியே சினேகன்போலவே இருப்பார். இவரை `பிக் பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்கவைத்தால் செம ரகளையாக இருக்கும். 

கஸ்தூரி :

காயத்ரி ரகுராமைப்போல் சினிமா, அரசியல் என இரண்டிலும் சக்கைப்போடு போட்டுவந்தவர் கஸ்தூரி. இதுவே சமீபத்தில் அவர் கொடுத்த சில பேட்டிகளின் மூலம்தாம் தெரியவந்தது. `பிக் பாஸ்' நிகழ்ச்சிக்குப் பிறகு பல விமர்சனங்கள் காயத்ரிமீது வைக்கப்பட்டாலும், பலருக்கும் ஃபேவரைட்டான போட்டியாளராக இருந்துவந்தார். அவர் இல்லாமல் ஒரு மீம்கூட இருக்காது. அவரைப்போலவே கஸ்தூரியும் சினிமாவாகட்டும் அரசியலாகட்டும் இரண்டிலுமே காரசாரமாகப் பேசுபவர். எனவே, அவரது இடத்தைப் பூர்த்திசெய்ய கஸ்தூரியை `பிக் பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்கவைக்கலாம். தனது தனிப்பட்ட அரசியல் எண்ணங்கள் மற்றும் சினிமா என்ட்ரியைக் கொடுக்க பிக் பாஸ் நிகழ்ச்சியை இவர் பயன்படுத்திக்கொள்ளலாம். நமக்கும் டைம் பாஸாகும்.

சாந்தனு :

வாசு, தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர். அவரது மகனான சக்தி வாசு, `பிக் பாஸ்'-ல் போட்டியாளராக ட்ரிக்கர் பண்ணினார். அதேபோலதான் பாக்யராஜின் தவப்புதல்வன் சாந்தனு. இரண்டு பேருமே குழந்தை நட்சத்திரங்களாக தங்கள் அப்பாக்களின் படத்தில் நடித்தவர்கள். ஹீரோவாக பெரிய ஹிட்டுக்காகக் காத்துக்கொண்டிருப்பவர்கள்.  வாரிசு கோட்டா  அடிப்படையில், மாபெரும் இயக்குநரான பாக்யராஜின் மகன் சாந்தனுவை, இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராகப் பங்கேற்கவைத்து அவரது சினிமா பயணத்துக்கும் `பிக் பாஸ்' ஒரு நல்ல பிளாட்பாரம் அமைத்துக் கொடுக்கலாம்.

ஹோஸ்ட் - விஜய்

`இந்த நிகழ்ச்சியை ஹோஸ்ட் செய்ய யார் சரியான ஆளாக இருப்பார்?'  என ரூம் போட்டு மண்டையைக் கசக்கி நாம் யோசித்தபோது, கமல் இடத்துக்கு கபால் என நம் மனக்கண்ணில் வந்து போனவர் விஜய் மட்டும்தான். தற்போது நடந்துவரும் எல்லாவிதமான சமூகப் பிரச்னைகளுக்கும் கமல் குரல் கொடுத்துவருகிறார். `பிக் பாஸ்'-ல் கமல் அரசியலைப் பற்றிப் பேசிய கேலி, கிண்டல் ஏராளம். அதுவும் போக விஜய்யும் பல மேடைகளில் நல்ல பேச்சாளர் என்பதை நிரூபித்திருக்கிறார். ஆகையால் இவரையே இந்த ஷோவை ஹோஸ்ட் செய்யவைத்தால் செமயாக இருக்கும். அப்படியே அவர் அரசியலுக்கு வர ஏதுவாக இருக்கும்.   

இப்படி சினிமாத் துறையில் முன்பு கலக்கிய, கலக்க முயற்சிக்கும் நடிகர்களை `பிக் பாஸ்' சீஸன் 2-வில் கலந்துகொள்ளவைக்கலாம். மேலே குறிப்பிட்ட சில நடிகர்கள் போக இன்னும் ஏராளமான நடிகர்கள் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள் அவர்களை வைத்து `பிக் பாஸ் சீஸன் 2'யை ஆரம்பித்தால் நிகழ்ச்சியும் விறுவிறுவென நகரும், அவர்களுக்கும் இதன் மூலம் சினிமா வாய்ப்புகள் கிடைக்கும். ஆல் தி பெஸ்ட் பிக் பாஸ்!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு