Published:Updated:

``அப்படித்தான் நாங்க சம்பாதிக்கணும்னு எங்களுக்கு அவசியமில்லை!’’ - கிரேஸ் கருணாஸ்

``அப்படித்தான் நாங்க சம்பாதிக்கணும்னு எங்களுக்கு அவசியமில்லை!’’ - கிரேஸ் கருணாஸ்
``அப்படித்தான் நாங்க சம்பாதிக்கணும்னு எங்களுக்கு அவசியமில்லை!’’ - கிரேஸ் கருணாஸ்

``அப்படித்தான் நாங்க சம்பாதிக்கணும்னு எங்களுக்கு அவசியமில்லை!’’ - கிரேஸ் கருணாஸ்

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகிவரும் 'கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ்' காமெடி நிகழ்ச்சியின் நடுவர், கிரேஸ் கருணாஸ். பாடகியாகத் தன் பயணத்தைத் தொடர்ந்தவர், இன்று ஒரு நிகழ்ச்சியின் நடுவராக அமர்ந்திருக்கிறார். அவரது கலைப் பயணம் மற்றும் கணவரின் அரசியல் செயல்பாடுகள் எனப் பல கேள்விகளை முன்வைத்தோம், 

'' 'கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ்' நிகழ்ச்சியின் நடுவராக வாய்ப்பு எப்படிக் கிடைத்தது?'' 

''விஜய் டிவி-யின் 'சிரிப்புடா' புரோகிராமுக்கு மகாலிங்கம் என்கிற பாடகரைக் கூட்டிட்டுப் போயிருந்தேன். அந்த நிகழ்ச்சியின் இடைவேளைகளில், ஈரோடு மகேஷ், பாலாஜி எல்லாம் பேசிட்டிருந்தோம். அப்போ, 'கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ்' புரோகிராமுக்கு யாரை நடுவராகப் போடலாம்னு இயக்குநர் தாம்சன் யோசிச்சுட்டிருந்தார். 'சிரிப்புடா' நிகழ்ச்சியில் நான் கலகலனு இருந்ததைப் பார்த்துட்டு, என்னை நடுவராக்கிட்டார். பொதுவாகவே, நான் ரொம்ப ஜாலியான கேரக்டர். எவ்வளவு அழுத்தத்தில் இருந்தாலும், ஃப்ரெண்ட்ஸ்கூட பேசினா, 'டக்'குனு நார்மல் மூடுக்கு வந்துடுவேன். அதேமாதிரி கோபம் வந்துட்டால், அதை வெளிப்படுத்திட்டா மட்டும்தான் நார்மல் நிலைக்கே வருவேன்.'' 

'' 'ஒத்தக்கல்லு...' பாட்டுக்குப் பிறகு என்ன பாடல் பாடியிருக்கீங்க? 

'' 'திண்டுக்கல்லு திண்டுக்கல்லு...', 'ஒத்தக்கல்லு ஒத்தக்கல்லு மூக்குத்தியாம்...' பாடலுக்குப் பிறகும் நிறைய பாடினேன். பெருசா ரீச் ஆகலை. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட சினிமா பாடல்களைப் பாடிட்டேன். முக்கால்வாசி குத்துப் பாடல்கள்தான். ஆனால், என் ஃபேவரைட் மெலடி சாங்க்ஸ். 'அன்புள்ள மான்விழியே...', 'கண்ணும் கண்ணும் கலந்து...' போன்ற பழையப் பாடல்களை பிரமாண்டமான ஸ்டேஜ்ல பாடணும்னு ஆசை. இதை அடிக்கடி கருணாஸ்கிட்ட சொல்வேன். பார்ப்போம் எப்போ நிறைவேறுதுனு.'' 

''உங்கள் கணவர் அரசியலில் இருக்கார். நீங்கள் ஏன் அரசியலுக்கு வரலை?'' 

''நிஜமாவே எனக்கு ஐடியா இல்லைங்க. வாழ்க்கையை ஜாலியா ரசிச்சு வாழ்ந்து பார்க்க ஆசை. என் ஃபேமிலிதான் என் உலகமே. என் கணவர், மகள், மகன், அக்கா, மாமனார், மாமியார் என அன்பு புடைசூழ இருக்கேன். '15 வருஷங்களாக ஆர்கெஸ்ட்ரா மற்றும் ஃபேமிலிதான் உங்களுக்குப் பெருசா இருக்கு'னு பலரும் சொல்வாங்க. எனக்கு அப்படியே பழகிடுச்சு. வீட்டு வேலையாள்கூட மாறினதில்லே. 19 வருஷமாக மல்லிகா என்பவர்தான் இருக்காங்க.'' 

''உங்கள் மகன், மகள் பற்றி...'' 

''என் மகள் பெயர், டயானா. பிடிஎஸ் முடிச்சுட்டு, சத்யபாமாவில் இன்டன்ஷிப் பண்றாங்க. மகன் கென், ப்ளஸ் ஒன் படிக்கிறார். இரண்டு பேரும் அப்பாவைவிட்டுகூட இருந்துடுவாங்க. அம்மாவைவிட்டுட்டு இருக்கவே மாட்டாங்க.'' 

''இடையில் உங்களுக்கு நிறைய கடன் பிரச்னை இருப்பதாகச் செய்தி வந்ததே...'' 

''ஆமாம்! அவர் நிறையப் படங்களுக்கு விநியோகஸ்தராகவும் தயாரிப்பாளராகவும் இருந்தார். அதற்கான பணத்தை எல்லாம் கடன் வாங்கித்தான் செய்தார். பல படங்கள் நஷ்டமாகி ஆறு கோடிக்கும் மேலே கடனாகிடுச்சு. அவர் டிப்ரெஸ் ஆகும்போதெல்லாம் ஆறுதல் சொல்வேன். நான் டிப்ரெஸ் ஆகும்போது எனக்கு ஆறுதல் சொல்வார்.'' 

''உங்களுக்கான அடையாளமாக எதை நினைக்கிறீங்க?'' 

''சில நேரத்தில் நான் பாட்டுப் பாடும்போது என்னையே அறியாம டான்ஸ் ஆடுவேன். அதைவைத்து என்னை அடையாளப்படுத்துவாங்க. அதற்குப் பிறகு கருணாஸ் வொய்ஃப்னு சொல்வாங்க. இப்போது வரை 'நீங்க சிங்கர் கிரேஸ்தானே'னு யாரும் கேட்டதில்லை. இப்போ, 'கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ்'ல டான்ஸ் ஆடுறாங்களே அவங்கதானே'னு சொல்றாங்க. எனக்கும் 'நீங்க நல்லாப் பாடறீங்க' எனப் பாராட்டு எதிர்பார்க்கிறேன். அதுதான் என் அடையாளமாக இருக்கணும் ஆசை.'' 

''காதலித்தபோது இருந்த அதே அன்பு இப்பவும் தொடருதா?'' 

''நாங்க இரண்டு பேரும் ஆர்கெஸ்ட்ராவிலிருந்து நிகழ்ச்சி பண்ணும்போதே பிரிந்ததில்லை. மாதத்தில் 20 நாள்களுக்கும் மேலாக ஒன்றாகவே இருப்போம். அவர் நடிக்க ஆரம்பிச்சதும் இடைவெளி வந்துச்சு. நடிப்பு, தயாரிப்பு இதோடு சேர்த்து அரசியலிலும் நுழைஞ்சுட்டார். இப்போ பெரும்பாலும் வெளியில்தான் இருக்கார். நான் போன் பண்ணும்போது மீட்டிங் அது இதுனு பிஸியாக இருப்பார். இப்போ இருக்கிற நிலைப்படி, என் மிஸ்டுகாலைப் பார்த்துட்டு அவராகக் கூப்பிட்டால்தான் உண்டு. மத்தபடி லவ், அஃபெக்‌ஷன் எப்பவுமே இருக்கு.'' 

''கணவரைப் பற்றிய நெகட்டிவ் கமென்ட்ஸ் வரும்போது உங்க ரியாக்‌ஷன் என்ன?'' 

''ஓ.பி.எஸ், கூவத்தூர் போன்ற பிரச்னைகள் வந்தபோது, ஃபேஸ்புக், ட்விட்டர்ல பலரும் என்னென்னவோ எழுதினாங்க. அது என்னைக் காயப்படுத்திச்சு. 'கருணாஸ் கூவத்தூர் சுவர் ஏறி குதிச்சு தப்பிச்சுட்டார்' எனச் சொன்னாங்க. மனைவியை விவாகரத்துப் பண்ணிட்டார்னு சொன்னாங்க. ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் பொண்ணுங்களைவெச்சு தொழில் பண்றதை கேள்விப்பட்டு, மனைவிக்கு ஹார்ட் அட்டாக் வந்துடுச்சுனுகூட வதந்திகள். அப்பப்பா... முடியலை. எனக்கு ஹார்ட் அட்டாக் வந்த மாதிரி படங்கள் போட்டு ஒரு வழி பண்ணிட்டாங்க. அப்படி ஒரு கேவலமான விஷயத்தைப் பண்ணி சம்பாதிக்க, நாங்க என்ன பிச்சையா எடுத்துட்டிருந்தோம். கடன் இருக்குனு வெளிப்படையாகவே சொல்லியிருக்கோம். அப்போ எல்லாம் செய்யாத விஷயத்தை நல்லா இருக்கும்போதா செய்வோம்?'' 

''உங்கள் குழந்தைகள் இந்த விஷயத்தை எப்படி எடுத்துக்கறாங்க?'' 

''என் வாழ்க்கையின் கஷ்டமான காலம் அதுதான். பொண்ணையும் பையனையும் அவங்க படிக்கிற ஸ்கூல்ல ஃப்ரெண்ட்ஸ் கேட்க ஆரம்பிச்சுட்டாங்க. ஒருநாள் எங்க பையன் அழுதுட்டே வந்து, 'ஏன் டாடி வாயை மூடிட்டிருக்கார். பிரஸ் மீட்வெச்சு உண்மையைச் சொல்லலாமே'னு கேட்டான். அதுக்கு கருணாஸ், 'நான் சொன்னாலும் அதுக்கும் பெரிய பிரச்னை பண்ணுவாங்க'னு சொன்னார். பிறகு அவரை நாங்கதான் ஃபோர்ஸ் பண்ணி பேட்டி கொடுக்கவெச்சோம். அவர் சொன்ன மாதிரிதான் பேச ஆரம்பிச்சுட்டாங்க. போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்ததுக்கு வாட்ஸ்அப், ஃபேஸ்புக்ல வரும் வதந்திக்கெல்லாம் நடவடிக்கை எடுக்க முடியாது. உங்க குடும்பத்தில் உள்ளவர்களுக்குப் புரியவைங்க'னு அட்வைஸ் பண்ணி அனுப்பிட்டாங்க. அப்புறம்தான் ஃபேஸ்புக்கைவிட்டு வெளியில் வந்துட்டேன். குழந்தைகளிடமும் 'வாட்ஸ்அப் மெசேஜ் எல்லாம் பார்த்துட்டு டாடியையோ, என்னையோ டென்ஷன் ஆக்காதீங்க. அப்படியும் கஷ்டமா இருந்துச்சுனா, கடவுள்கிட்ட பிரே பண்ணுங்க'னு சொல்லிட்டேன். வேற என்னங்க பண்ண முடியும்' என்றார் வேதனையாக. 

அடுத்த கட்டுரைக்கு