Published:Updated:

கேபிள் கலாட்டா!: தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்

கேபிள் கலாட்டா!: தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்

ரிமோட் ரீட்டா

ன் டி.வியில ஆரம்பிச்சு, புதுயுகம் வழியாக தற்போது நியூஸ் செவனில் லேண்டாகி இருக்கும் பனிமலரைப் பார்க்கப் போனா, பொண்ணு பனி பொழிந்த மலர் போல ஃப்ரெஷ்ஷா இருக்கு!

'நான் சிறுவாணி ஆத்து தண்ணி குடிச்சு வளர்ந்த பொண்ணு ரீட்டா. அதனால அப்படித்தான் இருப்பேன்!'

- குரலும் ஃப்ரெஷ்!

'அப்ப நீங்க கோயம்புத்தூருங்களா?! அம்மணி எப்டிங்க சென்னைக்கு?'

'கோவையில எம்.பி.ஏ படிச்சேன். ஆனா, ஃபேஷன் டிசைனிங் ஆர்வத்துல சென்னைக்கு வந்து கோர்ஸ்ல சேர்ந்துட்டேன். கூடப் படிக்கிற ஃப்ரெண்ட்ஸோட ஷாப்பிங் மால் பக்கம் ஒதுங்கும்போது, சேனல் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் பலர் கண்ணுல படுவாங்க. அப்போ என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம், 'நீயும்கூட காம்பியரிங் பண்ணலாமே? நிச்சயமா செலக்ட் ஆவப்பா!’னு  உசுப்பேத்திவிட, சன் நியூஸ் ஆங்கர் ஆடிஷன்ல கலந்துகிட்டேன். என்னோட தமிழ் உச்சரிப்பு, என் பெயரை டிக் பண்ண வெச்சது. இதான் என் ஹிஸ்டரி ரீட்டா!'

கேபிள் கலாட்டா!: தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்

'அட, தமிழ் சேனல்ல தமிழ் உச்சரிப்பு நல்லாயிருந்தா செலக்ட் பண்றாங்களா? வாட் எ மெடிக்கல் மிராக்கிள்?!'

'என்ன ரீட்டா கிண்டலா? நான் செலக்ட் ஆனது நியூஸ் சேனலுக்கு. எங்க குடும்பத்தோட தமிழ் ஆர்வம்தான் என் வேலைக்கு அடிப்படை. எங்க வீட்டுல மூணு தலைமுறையா எல்லோருக்கும் தமிழ் பெயர்தான் ரீட்டா. அப்படித்தான் நான் 'பனிமலர்’. இயல்பிலேயே எனக்கு தமிழ் ரொம்ப பிடிக்கும். அந்தத் தமிழாலதான் எனக்கு வேலை கிடைச்சது.

நியூஸ், சினிமா நியூஸ், 'வண்ணத்திரை’, 'நிஜம்’னு கிட்டத்தட்ட ஒன்றரை வருஷம் சன் டி.வியில் வேலை பார்த்தேன். 'புதுயுகம்’ வாய்ப்பு வந்தது. அப்புறம் புரோகிராம் புரொட்யூசர் ஆஃபரோட 'நியூஸ் செவன்’ சேனல்ல வாய்ப்பு வந்துச்சு. ’சரி, நாம வளர்றதுக்கான நேரம் இது’ன்னு இங்க வந்துட்டேன். இங்க 'ஜீரோ ஏர்’, 'வியப்பூட்டும் விஞ்ஞானம்’, 'ஃபீனிக்ஸ் பெண்கள்’னு மூணு நிகழ்ச்சிகள் பண்ணிட்டு இருக்கேன். முதல் ரெண்டு நிகழ்ச்சிகளும் நான் தொகுத்து வழங்குறேன். ஆனா, ஃபீனிக்ஸ் பெண்கள் நிகழ்ச்சிக்கு புரொகிராம் புரொட்யூசர் நான்தான். பணபலம், படைபலம், பக்கபலம் இப்படி எதுவும் இல்லாம தனித்துப் போராடி நிமிர்ந்திருக்கும் பெண்களை, ஊர் ஊரா தேடிப் போய் பேட்டி எடுப்போம்.'

'நல்ல விஷயம். சீரியல், சினிமா வாய்ப்புகள், ரசிகர்கள் இப்படி எதாச்சும் இன்ட்ரஸ்டிங்கா சொல்லேன்...'

கேபிள் கலாட்டா!: தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்

'சீரியல், சினிமா வாய்ப்புகள் வந்துட்டுதான் இருக்கு. எனக்கு அதில் ஆர்வம் இல்லை ரீட்டா. அப்புறம்... எனக்கு ஒரு ரசிகர் ஃபேஸ்புக்ல ஃபேன் பேஜ் ஆரம்பிச்சு, 15,000 ஃபாலோயர்ஸ் வந்ததும், என்னை அதுக்கு அட்மினாக்கி, அதை எனக்கு கிஃப்ட்டா கொடுத்தார். நான் அட்மின் ஆனதும் 60,000 ஃபாலோயர்ஸ் தாண்டி போயிட்டிருந்தது. ஒரு கட்டத்துல சமாளிக்க முடியாதுனு அந்த பேஜை க்ளோஸ் பண்ணிட்டேன். அந்த 60,000 பேருக்கும் என் ஸாரியும், நன்றியும்!''

அம்மணி சொல்றதை கேட்டுக்கோங்க ரசிகர்ஸ்!

சன் டி.வி 'சூரிய வணக்கம்’ நிஷாவுக்கும், 'அபியும் நானும்’ படத்தின் ஹீரோ கணேஷ் வெங்கட்ராமுக்கும் கூடிய சீக்கிரம் டும் டும் டும்! பொண்ணுக்கு ஒரு போனைப் போட்டு விசாரிச்சேன்.

'நானும் அவரும் ஒரு டி.வி ஷோலதான் மீட் பண்ணினோம் ரீட்டா. முன்னயே ஒருத்தரை ஒருத்தருக்குத் தெரியும். இருந்தாலும் அந்த ஷோவுக்கு அப்புறம்தான் நட்பானோம். ஒரு கட்டத்துல காதலா மாறிடுச்சு. ஒரு நாள் சர்ச்சுல வெச்சு சார் என்னை புரொபோஸ் பண்ணிட்டாரு. அன்னிக்கே ரெண்டு பேர் வீட்டுலயும் சொல்லி சம்மதம் வாங்கியாச்சு!'

'என்னம்மா சீரியல் மாதிரி சொல்லுவேன்னு பார்த்தா ஷார்ட் ஃபிலிம் மாதிரி டக்குன்னு முடிச்சிட்டியே? சரி, எப்போ கல்யாணச் சாப்பாடு?'

'நவம்பர் மாசம் ரீட்டா. நிச்சயமா வந்துடு!'

ஒரு பொக்கே பார்சல்!

பொது அறிவு வளர்க்க..!

கேபிள் கலாட்டா!: தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும்

ள்ளூர் செய்திகளும், தகவல்களும் பார்த்து போராகிப் போனவங்களுக்கும், உலக அறிவு பற்றிய ஆர்வலர்களுக்கும், மாணவர்களுக்கும் ஒரு வரப்பிரசாதம்... சத்யம் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகும் 'உலகம் உங்கள் பார்வைக்கு’ நிகழ்ச்சி. இதுல உலகத்தையே புரட்டிப்போடும் நிகழ்வுகள், புதுப்புது அறிவியல் கண்டுபிடிப்புகள், சுவாரஸ்யத் தகவல்கள்னு கலந்துகட்டி போடுறதால பார்க்கப் பார்க்கப் பிடிக்குது. பொது அறிவை வளர்த்துக்க, இந்த நிகழ்ச்சியையும் லிஸ்ட்ல இணைச்சுக்கலாம்!

வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ.150

பார்க்க வேண்டிய பழமொழி விளக்கம்!

''வேந்தர் தொலைக்காட்சியில் காலை 7 மணி முதல் 8 மணி வரை ஒளிபரப்பாகும் 'புத்தம் புது காலை’ நிகழ்ச்சியில் 'அறிந்ததும் அறியாததும்’ என்ற பகுதி இடம்பெறுகிறது. இதில் பல புதிய தகவல்கள் சொல்லப் படுகின்றன. மேலும், 'குட்டுப்பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டும்...’, 'கோத்திரம் அறிந்து பெண்ணை எடு  பாத்திரம் அறிந்து பிச்சையிடு...’ என்பதுபோன்ற பழமொழிகளுக்கு சரியான விளக்கம் கொடுக்கிறார்கள். பார்க்க வேண்டிய நிகழ்ச்சிகளில் ஒன்று'' என்கிறார் திருவண்ணாமலையில் இருந்து உமாதேவி பலராமன்.

தன்னம்பிக்கை களஞ்சியம்!

''வசந்த் தொலைக்காட்சியில் திங்கள் முதல் ஞாயிறு வரை காலை 7 மணி மற்றும் மாலை 7 மணிக்கு 'வெற்றிப்படிக்கட்டு’ என்னும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. வாழ்க்கையில் ஏற்படும் தடைக்கற்களை படிக்கற்களாக்கி முன்னேறினால் இலக்கை அடைவது உறுதி என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது இந்நிகழ்ச்சி. மேலும் வாழ்க்கையில் புண்பட்டவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் இந்நிகழ்ச்சியை, மிஸ் பண்ணிடாதீங்க... அப்புறம் வருத்தப்படுவீங்க!'' என்று அண்ணாச்சி ஸ்டைலில் கூறுகிறார் சேலம் அம்மாபேட்டையில் இருந்து பி.ரமணி.

இருப்பதைக்கொண்டு சிறப்புடன் வாழ...

ஞாயிறுதோறும் பகல் 11 மணிக்கு மக்கள் டி.வி.யில் ஒளிபரப்பாகும் 'ஆனந்தம் விளையாடும் வீடு’ குடும்பத்துடன் பார்க்க வேண்டிய அருமையான நிகழ்ச்சி. பெரும்போராட்டத்துடன் குழந்தைகளை வளர்ப்பவர்கள், இல்லாததை நினைத்து ஏங்காமல், இருப்பதை நினைத்து மகிழும் மனோபாவம், அறிவுரையாக இல்லாமல் அனுபவமாக சொல்வது என நெஞ்சைத் தொடுகிறது'' என்று மெய்சிலிர்க்கிறார் சென்னை நொளம்பூரில் இருந்து ர.கிருஷ்ணவேணி.