Published:Updated:

“எஸ்.ஜே.சூர்யாவுக்கு எழுதின லெட்டர் இன்னும் அப்படியே இருக்கு!” - ‘ரெடி ஸ்டெடி போ’ ஆண்ட்ரூஸ்

“எஸ்.ஜே.சூர்யாவுக்கு எழுதின லெட்டர் இன்னும் அப்படியே இருக்கு!” - ‘ரெடி ஸ்டெடி போ’ ஆண்ட்ரூஸ்
“எஸ்.ஜே.சூர்யாவுக்கு எழுதின லெட்டர் இன்னும் அப்படியே இருக்கு!” - ‘ரெடி ஸ்டெடி போ’ ஆண்ட்ரூஸ்

“எஸ்.ஜே.சூர்யாவுக்கு எழுதின லெட்டர் இன்னும் அப்படியே இருக்கு!” - ‘ரெடி ஸ்டெடி போ’ ஆண்ட்ரூஸ்

ந்தி டிவியில் அரசியல் செய்திகளை நையாண்டியுடன் தொகுத்துவழகிய ஆண்ட்ரூஸ், தற்போது ரியோவுடன் சேர்ந்து கலகலப்பாகவும் கலர்ஃபுல்லாகவும் 'ரெடி ஸ்டெடி போ' நிகழ்ச்சியில் அதகளம் செய்து வருகிறார். 'நானும் மதுரைக்காரன் தான்டா' ஆண்ட்ரூஸிடம் பேசியதிலிருந்து... 
 

“ஆண்ட்ரூஸ் யாரு பாஸ்? எங்கிருந்து வந்தீங்க?”

"நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே மதுரைதான். அப்பா, ஓய்வு பெற்ற தாசில்தார். அம்மா ஸ்கூல் டீச்சர். படிப்பைத் தவிர மத்த விஷயங்கள்லதான் ஆர்வம் அதிகம். ஸ்கூல் பிரேயர்ல பேசுறதிலிருந்து டான்ஸ், நாடகம்னு எல்லாத்துலேயும் என் பேர் இருக்கும். எப்படியும் க்ளாஸ்ல பாதி நேரம் வெளியே முட்டிபோட்டுதான் நிப்பேன். அப்போல்லாம் ஃபாதர் சிகாமணிதான் எனக்காகப் பேசுவார். அப்படியே ஸ்கூல் முடிஞ்சு காலேஜும் முடிஞ்சுது."

 “எப்படி ஆர்ஜேவா ஆனீங்க?”

“ஆர்ஜேயிங்ல ஆர்வம்னு சொல்ல முடியாது. ஆனா, பேசச்சொன்னா 'ஒய் ப்ளட் சேம் ப்ளட்' ஆகுற வரைக்கும் பேசிட்டே இருப்பேன். ஒரு முறை, வீட்ல எப்போ பார்த்தாலும் பேசிட்டே இருக்கேன்னு எங்க அப்பா, ‘ஒரு மணி நேரம் பேசாம இருக்கணும்’னு 10,000 ரூபாயை பந்தயம் கட்டினார். நானும் எவ்வளவோ முயற்சி பண்ணி பார்த்தேன். 10 நிமிஷம்கூட பேசாம இருக்கமுடியலை. ‘பேச்சுதான் நம்ம பலம்’னு அப்பயே எனக்குத் தோணுச்சு. என் ஃப்ரெண்ட்ஸ்தான் ஒரு விளம்பரத்தை பார்த்துட்டு ஆடிஷனுக்குப் போகச் சொன்னாங்க. அப்படி தான் மிர்ச்சியில் ஆர்ஜே ஆனேன். அங்க நிறைய மறக்கமுடியாத சம்பவங்கள் நடந்துச்சு. அதெல்லாம் ஒரு காலம்."

“எப்படி இருக்கு இந்த மீடியா பயணம்?”

“நான் பிபிஏ முடிச்சிட்டு என்ன பண்றதுனு தெரியாம வேலைதேடி களைச்சுப்போய், ஒருவழியா ஒரு டீக்கடை வெச்சேன். யாராவது ஏன்னு கேட்டா, ‘இது பிசினஸ். நான் அட்மினிஸ்ட்ரேட் பண்றேன். படிச்ச வேலையைத்தான் செய்யறேன்’னு சொல்லிட்டு ஊரைச் சுத்திட்டு இருந்தேன். அப்புறம், இன்னும் சில இடங்கள்ல வேலைக்குப் போனேன்.

அந்த டைம்லதான் எங்க வீடு என் அண்ணன், அக்காவை இழந்துச்சு. வீட்ல எல்லோரும் மீளமுடியாத கஷ்டத்துல இருந்தாங்க. அவங்களை திசை திருப்பதான் மீடியாக்குள் நுழைஞ்சேன். ஒரு லோக்கல் சேனல்ல வேலைக்குச் சேர்ந்து 'நையாண்டி செய்திகள்'னு ஒரு ஷோ பண்ணிட்டு இருந்தேன். அப்புறம்தான் ஆர்ஜே என்ட்ரி. பிறகு, பொதிகையில ஷோபனா ரவி மேடம்கிட்ட ட்ரெய்னிங் எடுத்துட்டு அங்கயே கொஞ்சநாள் செய்தி வாசிப்பாளரா இருந்தேன். ஆனா, அங்க தாடி, பெரிய மீசை இதெல்லாம் கூடவே கூடாது. முடியை படிய சீவி டை கட்டிட்டுதான் நியூஸ் வாசிக்கணும். நமக்கு அப்படி எல்லாம் இருக்க செட்டாகலை. அப்புறம் வெளியவந்து தந்தி டிவியில் சேர்ந்து, இப்போ ரியோகூட ஷோ பண்ணிட்டு இருக்கேன்."
 

“மீடியாவில் மறக்கமுடியாத சம்பவங்கள் சொல்லுங்க?”

“ஆர்ஜே பண்ணிட்டு இருந்தபோது, மதுரையில நடக்கும் சமூகப் பிரச்னைகளை ரேடியோ மூலமா அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தி அந்தப் பிரச்னை சரிசெய்யப்படும்போது அம்புட்டு சந்தோசமா இருக்கும். மவுலிவாக்கம் கட்டடம் இடிஞ்சபோது, ஊருக்குப் புறப்பட்ட என்னை நியூஸ் வாசிக்க கன்டென்டே இல்லாம லைவ்ல உட்கார வெச்சுட்டாங்க. நானும் எம்புட்டு நேரம்தான் கன்டென்ட் இருக்கமாதிரியே நடிக்கிறது. அப்படியே ஒரு நாலு மணி நேரம் சுச்சாகூட போகாம பேசிட்டே இருந்தேன். கடைசியில அங்கபோய் எடுத்த விஷுவலை போட்டு மேட்ச் பண்ணாங்க. அதுவரைக்கும் நான்பட்ட பாடு இருக்கே... அப்போ கேமரா முன்னாடி பேசிட்டு இருக்கும்போது பாண்டே அண்ணனே, ‘டீயா காபியா’னு கேட்டுக் கொண்டுவந்து கொடுத்தார். அது மறக்கவே முடியாது."

“7 1/2 ஷோ நல்ல ரீச் ஆச்சே... அந்த அனுபவம் பற்றி சொல்லுங்க?”

"வாட்ஸ் அப்பில் வந்த ஒரு ஐடியாதான் அது. செய்தியாவே வேற மாதிரி ட்ரை பண்ணச் சொன்னாங்க. ‘இதைத்தான் நான் லோக்கல் சேனல்ல பண்ணினேன்’னு உற்சாகமா ஆரம்பிச்சேன். எல்லோரும் பாராட்டினாங்க. ஒருமுறை சீமான் அண்ணன்  ஸ்டுடியோவுக்கு வந்தப்ப, ‘நல்லாயிருக்கு’னு பாராட்டினார். ‘ரொம்ப நல்லா பண்றீங்க’னு நாஞ்சில் சம்பத் அண்ணன் சொன்னார். இந்த ஷோவுலதான் 'போற போக்கப்பாத்தா 500,1000 நோட்டுகள் செல்லாதுனு அறிவிச்சாலும் அறிவிப்பாங்க'னு முதல் நாள் சும்மா சொன்னேன். அடுத்தநாள் மோடி அதை அறிவிச்சுட்டார். பட்டிமன்றம் ராஜா சார் உடனே போன் பண்ணி வாழ்த்துச் சொன்னார். மோடிக்கு முன்னாடியே மக்களுக்குச் சொன்னது இந்த மதுரைக்காரன் ஆண்ட்ருஸ்தானே."

“ரியோகூட ஹோஸ்ட் பண்ற அனுபவம் எப்படி இருக்கு?”

“ரியோ விஜய் டிவி முக்கியமான நாடகத்துல ஹீரோ. நான் இப்போதான் விஜய் டிவிக்கு வர்றேன். நான் ‘கலக்கப்போவது யாரு’ ரெண்டாவது சீசன்ல பைனல்ஸ் வரை போனேன். அதனால, எனக்கும் விஜய் டிவிக்கும் ஏற்கெனவே ஒரு டச் இருக்கு. 'நீ என்னை அண்ணன்னு கூப்பிட்டா ஷோ நல்லாவே இருக்காது. நம்ம ஃப்ரெண்ட்ஸ். ஜாலியா எப்படிக் கூப்பிட தோணுதோ கூப்பிடு'னு சொல்லிட்டேன். ரியோவும் நானும் ஒரே கேரக்டர்தான். எங்களுக்குள்ள ஒரு வேவ்லெங்த் இருக்கு. நான் ரியோவை ஓட்ட... அவர் என்னை ஓட்ட... நாங்க வர்றவங்களை ஓட்ட... ஒரே கூத்தா இருக்கும். என்னத்த கரைச்சு ஊத்தப்போறாய்ங்கன்னே கடைசிவரை தெரியாது. செம ஜாலியா இருக்கும் ப்ரோ. ஆரம்பத்துலயே ரெண்டு பேரும் ஆண் ஆங்கர்ஸ்தான்னு முடிவு பண்ணிட்டாங்க. இல்லைனா, நான் இங்க இருந்திருக்கமாட்டேன். என் தம்பி ரியோ ஒரு பொண்ணுகூட ஆங்கரிங் பண்ணிட்டு சந்தோசமாக இருந்திருப்பான்'' 
 

“பட வாய்ப்புகள் வந்திருக்குமே?”

“அட ஏன் பாஸ் நீங்க வேற... சினிமாவுல நடிக்கனும்னுதான் ஆரம்பத்துல சுத்திட்டு இருந்தேன். 'வெயில்' படத்துல பரத்தோட ஃப்ரண்டா நடிக்க ஆடிஷன் பண்ணாங்க. நானும் போனேன் ஆனா, இந்தக் கதைக்கு கலரா இருக்குறவங்கவேணாம்னு இன்னொருத்தரை எடுத்துட்டாங்க. 'பருத்திவீரன்' படத்துக்கு ஆடிஷன் நடக்குதுனு தெரியாம, ஏதோ ஒரு படம்னு நினைச்சு நல்ல நீட்டா ட்ரஸ் பண்ணி கலர் கலரா போட்டோ எடுத்துட்டு கொண்டுபோய் கொடுத்தேன்.

'இல்லைப்பா. இந்த படம் மதுரை கிராமத்துல நடக்குற கதை. இதுக்கு இது சரி வராது'னு சொல்லிட்டாங்க. 'ஐயோ... நானும் மதுரைக்காரன் தாங்க. தலை முடியை கலைச்சுவிட்டு கைலி கட்டுனா அப்படியேதாங்க இருப்பேன்'னு சொல்லிப் பார்த்தேன். ஆனா, வாய்ப்பு கிடைக்காம போச்சு. எங்க சர்ச் ஃபாதர் எஸ்.ஜே. சூர்யா சாருக்கு ஒரு லெட்டர் எழுதி என்கிட்ட கொடுத்து, ‘இதை அவர்கிட்ட கொண்டுபோய் கொடு வாய்ப்பு தருவார்’னு சொல்லி அனுப்புனார். நானும் போனேன், போனேன், போனேன்... ஆனா, கடைசிவரை அவரைப் பார்க்கவே முடியலை. அந்த லெட்டர் இன்னும் எங்க வீட்லதான் இருக்கு. இனிமே பட வாய்ப்பு வரும்னு நம்புறேன் பார்ப்போம்.”

அடுத்த கட்டுரைக்கு