Published:Updated:

''எங்கள் காதல் நினைவுச் சின்னமே பரோட்டாதான்!" - சிங்கப்பூர் தீபன்

''எங்கள் காதல் நினைவுச் சின்னமே பரோட்டாதான்!" - சிங்கப்பூர் தீபன்
''எங்கள் காதல் நினைவுச் சின்னமே பரோட்டாதான்!" - சிங்கப்பூர் தீபன்

விஜய் டி.வியில் ஒளிபரப்பான 'அது இது எது' நிகழ்ச்சியில் பலரையும் சிரிக்கவைத்தவர், தீபன். அவருடைய நாட்டாமை கெட்டப் பலரையும் கவர்ந்தது. அதன்பிறகு சில திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். 'இதுவரை ஒருமுறைகூட சிங்கப்பூர் போனதில்லே. ஆனால், எனக்கு சிங்கப்பூர் தீபன்னு பேரு. இந்தப் பெயர் எப்படி வந்ததுச்சுன்னு எனக்கே தெரியலே' என்று சிரிக்கிறார். இப்போது விஷயம் அதுவல்ல; சிங்கப்பூர் தீபனுக்கு அடுத்த மாதம் காதல் திருமணம். காதல் மலர்ந்தது எப்படி என்று கேட்டால், மனிதர் அவ்வளவு வெட்கப்படுகிறார். தன் ஜோடியோடு சேர்ந்து அவர் கொடுத்த டூயட் பேட்டி...

''நீங்கள் காதலில் விழுந்தது எப்போது?'' 

''என் நண்பன் ஒருத்தன் ஒரு பெண்ணை காதலிச்சுட்டிருந்தான். அவங்களை அறிமுகப்படுத்தறதுக்காக என்னை கூட்டிட்டுப் போனான். அவன் லவ்வரோடு இவங்க வந்திருந்தாங்க. நாங்க மீட் பண்ணின இடம், அண்ணா யுனிவர்சிட்டி. பிளஸ் டூ முடிச்சுட்டு, அண்ணா யுனிவர்சிட்டியில் அப்ளிகேஷன் கொடுக்கிறதுக்காக வந்திருந்தாங்க. அங்கே அறிமுகமாகி பேச ஆரம்பிச்சோம். முதல் சந்திப்பிலேயே அவங்களுக்கு என்னைப் பிடிச்சுடிச்சுபோல.'' 

''எப்போ காதலைச் சொன்னீங்க?'' 

''முதல்ல மீட்டிங்கில் பக்கத்திலிருந்த ஹோட்டல்ல ஃபிரெண்ட்ஸோடு சாப்பிடப் போனோம். பரோட்டா ஆர்டர் செய்திருந்தோம். ஃபிரெண்ட் என்கிற அடிப்படையில், எதையும் யோசிக்காம அவங்களுக்குப் பரோட்டாவை ஊட்டிவிட்டேன். அது அவங்களுக்கு ஒரு பெரிய ஃபீலிங்கை ஏற்படுத்திடுச்சுபோல. இப்போ கேட்டாலும், 'அப்பா, அம்மாவுக்கு அப்புறம் எனக்கு ஊட்டிவிட்டது நீங்கதான். அதனால்தான் உங்களை பிடிச்சுப்போச்சு'னு சொல்வாங்க. இப்போ, எத்தனையோ கிஃப்ட்ஸை கொடுத்துக்கிட்டாலும், எங்க காதலின் நினைவுச் சின்னம் பரோட்டாதான்.'' 

''பல வருஷங்கள் பார்க்காம இருந்தீங்களாமே...'' 

''ஆமாங்க! அது ஒரு பெரிய கதை. இத்தனை வயசாகுதே நாமும் ஒரு பொண்ணை லவ் பண்றதா சொல்லி சும்மா சீன் போடலாம்னுதான் அவங்களைக் காதலிக்கிறதா சொன்னேன். ஆனால், அவங்க அதை சீரியஸா எடுத்துக்கிட்டாங்க. முதல்முறையா அவங்க பிறந்தநாளுக்கு லவ் பேர்ட்ஸ் கொடுத்து புரபோஸ் பண்ணினேன். உங்களுக்கே தெரியுமே உடனே பொண்ணுங்க பதில் சொல்ல மாட்டாங்க. அவங்க ஓ.கே சொல்லணுமேனு 'என் கனவில் நீ ஏஞ்சல் மாதிரி டிரெஸ் போட்டுட்டு வந்தே'னு ஓவரா பில்டப் பண்ணினேன். அவங்களுக்கு இன்னும் அஃபெக்‌ஷன் ஆகிடுச்சு. ஒரு கட்டத்துல கல்யாணம் வரைக்கும் அவங்க பேசவும், நான் பின்வாங்க ஆரம்பிச்சுட்டேன். 'எனக்கு வீட்டில் பொண்ணுப் பார்த்துட்டிருக்காங்க. லவ்வுக்கு வீட்ல ஒத்துக்க மாட்டாங்க'னு என்னென்னவோ சொல்லி கழட்டிவிடப் பார்த்தேன். ஆனால், எனக்கு அவங்க போன் பண்ணிட்டே இருந்தாங்க. ஒரு கட்டத்துக்கு அப்புறம் என்னை மீட் பண்ணி, 'இதுக்கப்புறம் நாம பார்க்க வேண்டாம்'னு சொல்லிட்டாங்க. நான்கு வருஷங்கள் கழிச்சு திடீர்னு ஒருநாள் ரோட்ல நடந்து வரும்போது மீட் பண்ணினோம்'' என்றவரை இடைமறித்துப் பேசுகிறார், தீபனின் காதலி சுகன்யா. 

''நான்கு வருஷத்தில் சந்திக்காமலேயே காலேஜ் முடிச்சுட்டேன். ஆனாலும், ஒருநாள் என்னைப் புரிஞ்சுக்குவார்னு ஒரு நம்பிக்கை இருந்துச்சு. இடையில், வேற யாரையாவது திருமணம் செய்துப்பாரோ என்கிற மெல்லிய பதற்றமும் இருந்துச்சு. அவருடைய நினைவுகளை எல்லாம் ஃபேஸ்புக்ல ஸ்டேட்டஸ் போடறதும், தனிமையில் உட்கார்ந்து அழுவறதுமா இருந்தேன். நாங்க மறுபடியும் பேச ஆரம்பிச்ச பிறகுதான் இவர் என்னை சின்சியரா லவ் பண்ண ஆரம்பிச்சார். நாங்க சொன்னதெல்லாம் சினிமாவுல வர மாதிரியே இருக்கும். ஆனா, உண்மையில் நடந்தது இதுதான். நான் அவருக்குக் கொடுத்த முதல் கிஃப்ட்டே வித்தியாசமா இருக்கும். எங்கே மீட் பண்ணினோம். எங்கெல்லாம் போனோம், என்ன சாப்பிட்டோம் என ஒவ்வொரு நிகழ்வையும், பேப்பர் க்வில்லிங்காக தயார்பண்ணி பரிசா கொடுத்தேன். அதுக்கப்புறமும் எந்த பசங்கதான் நடிக்க முடியும். சரண்டர் ஆகிட்டார்'' என வெகுளியாக சிரிக்கிறார். 

''அதுக்கு அப்புறம் என்ன நடந்துச்சு?'' 

தீபன் தொடர்கிறார்... ''பொதுவாகவே சுகன்யா கோபப்படமாட்டாங்க. தெளிவாக, நிதானமாகப் பேசுவாங்க. அவசரப்பட மாட்டாங்க. அவங்க என் மேலே கேர் எடுக்க ஆரம்பிச்சதும் என் கண்ணுக்கு ரொம்ப ரொம்ப அழகாகத் தெரிஞ்சாங்க. பி.டெக் பரிட்சை எழுதி, ரூரல் டிப்பார்ட்மென்ட் வேலைக்கு செலக்ட் ஆகிட்டாங்க. ஒரு செலிபிரிட்டியா என்னை ஒருபோதும் அவங்க பார்த்ததே இல்லே. அவங்களோடு ஷாப்பிங் போகும்போது யாராவது என்னோடு செஃல்பி எடுத்துக்கும்போதுதான், நான் ஒரு செலிபிரிட்டி என்பதே ஞாபகத்துக்கு வருமாம். லவ் சக்ஸஸ் ஆனதும், அடுத்து கல்யாணத்துக்குப் போராட வேண்டியிருந்தது. எங்க வீட்டில் எந்தப் பிரச்னையும் இல்லே. அவங்க வீட்டில்தான் சினிமாக்காரனுக்கு பொண்ணு தரமாட்டேனு பிடிவாதமாக இருந்தாங்க. பல வருஷங்கள் காத்திருந்து கொஞ்சம் கொஞ்சமா புரியவெச்சு ஓ.கே வாங்கினோம். இதோ, இப்போ நிச்சயதார்த்தம்கூட இல்லாமல், கல்யாணத்துக்கே நேரடியா வந்துட்டோம். நவம்பர் மூன்றாம் தேதி தாம்பரத்தில் கல்யாணம்.'' என்கிறார். 

மீண்டும் இடைமறிக்கும் சுகன்யா, ''இன்னொரு சுவாரஸ்யமான விஷயத்தைச் சொல்லணும். என்னை இம்ப்ரஸ் பண்றதுக்காக ஆரம்பத்தில் பாட்டுப் பாடி காண்பிப்பார். அந்தக் குரல் பிடிச்சுப் போயிடுச்சு. அவர் போன் பண்ணும்போதெல்லாம் பாட்டுப் பாடச் சொல்வேன். 'கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே..', 'நானும் நீயும் நாளைதான்...' போன்ற பாடல்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். இவங்களைப் பிடிச்சதுக்கு காரணமே கேரக்டர்தான். ஆரம்பத்தில் நாங்க மீட் பண்ணினப்போ இவர் எந்த டி.வி நிகழ்ச்சியிலும் எந்த புரோகிராமும் பண்ணினதில்லே. ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் கலகலனு பேசிட்டிருக்கும்போது, இவங்க மட்டும் சைலன்டா இருப்பாங்க. ரொம்ப டீசன்டா நடந்துப்பாங்க. நானே தேடிப்போய் பேசினாலும் கூச்சத்தோடு சில வார்த்தைகளே பேசுவாங்க. இவங்க ஃபேமிலியும் ரொம்ப பாசக்காரக்காரங்க. அவங்க வீட்டுக்கு மருமகளாகப் போறதுக்கு கொடுத்து வெச்சிருக்கணும்னு அடிக்கடி நினைப்பேன். இப்போ அது நிறைவேறப்போகுது'' என்கிறார் சந்தோஷத்தில் கன்னங்கள் சிவக்க.