Published:Updated:

“பிக்பாஸ்ல என்னலாம் நடந்துச்சு..?” ஓவியா முதல் சிம்பு வரை... ஆரவ் ஷேரிங்ஸ்!

சனா
“பிக்பாஸ்ல என்னலாம் நடந்துச்சு..?” ஓவியா முதல் சிம்பு வரை... ஆரவ் ஷேரிங்ஸ்!
“பிக்பாஸ்ல என்னலாம் நடந்துச்சு..?” ஓவியா முதல் சிம்பு வரை... ஆரவ் ஷேரிங்ஸ்!

“நாகர்கோவில் பையன் நான். சின்ன வயதிலேயே வேலையின் காரணமாக அப்பா, அம்மா திருச்சிக்கு வந்து விட்டனர். நான் ஸ்கூல் படிச்சது எல்லாம் திருச்சியில்தான். அப்போதிலிருந்தே பள்ளியில் நடக்கும் எல்லாக் கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வேன். சின்ன வயதிலிருந்தே சினிமா ஆசையும் இருந்தது. ஆனால், வீட்டில் யாரும் சினிமாவுக்கு முதலில் அனுமதிக்கவில்லை” தன்னைப் பற்றிய முழு அறிமுகத்தோடு பேச ஆரம்பிக்கிறார் 'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆரவ்

“சென்னையில்தான் காலேஜ் படித்தேன். அப்போதுதான் எனக்குப் போட்டோகிராஃபி நாட்டம் வந்தது. சினிமா போட்டோகிராஃபர் ஆகணும்னு ஆசை இருந்தது. அப்போது ஒரு பெரிய போட்டோகிராஃபரிடம் உதவியாளராகச் சேர அனுமதி கேட்டியிருந்தேன். அவர் என் போட்டோவை பேஸ்புக்கில் பார்த்து விட்டு 'உன்கிட்ட பேசணும், ஆபீஸ் வா'னு கூப்பிட்டார். 'நமக்கு வேலைக் கண்டிப்பாக போட்டு கொடுத்துருவாருனு' நினைச்சுட்டு ஆபிஸ் போனால், என்னை வைத்துப் போட்டோ எடுத்தார். அதன் பிறகு 'நீ பெரிய மாடல் பீஸ். எதுக்கு போட்டோகிராஃபர்  ஆகணும்னு சுத்திக்கிட்டு இருக்க'னு கேட்டார். 'எனக்கு போட்டோகிராஃபிதான் விருப்பம்னு' சொன்னேன். 'ஓகே, ரெண்டையும் முயற்சி பண்ணு. முக்கியமா மாடலிங்கைக் கை விட்டுடாத'னு சொன்னார். அப்படித்தாங்க மாடல் ஆனேன். மாடலிங்ல முயற்சி பண்ண ஆரம்பிச்ச முதல் வாரத்துலேயே துபாயில் இருக்கும் டெக்ஸ்டைல் ஷாப் விளம்பரத்துக்கு மாடலிங் பண்ற சான்ஸ் தேடி வந்தது. என் கேரியரும் ஸ்டார்ட் ஆச்சு."  

“சைத்தான் பட வாய்ப்பு எப்படி வந்தது?”

"மாடலிங் செய்துகொண்டிருக்கும்போது, ஆட்டோ மொபைலிலும் வேலை செய்துகொண்டிருந்தேன். அந்த நேரத்தில் நிறையப் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. எல்லாம் சின்ன கேரக்டர்தான். ஹீரோ ப்ரெண்ட், அமெரிக்கா மாப்பிள்ளை மாதிரி ரோலில் நிறைய வாய்ப்பு வந்தது. சரி, ஓகே படத்தில் நடிக்கலாம்னு வேலையை விட்டுட்டு மாடலிங் மற்றும் சினிமாவில் மட்டும் முழு கவனத்தையும் கொண்டு வந்தேன். அந்த நேரத்தில் 'சைத்தான்' டைரக்டர் ப்ரதீப் கிருஷ்ணமூர்த்தி என் போட்டோவை பார்த்துவிட்டு என்னை பார்க்கணும்னு சொன்னார். போய்ப் பார்த்தேன். என்னை அப்படியே முறைச்சு முறைச்சுப் பார்த்துக்கிட்டு இருந்தார். 'என்னடா இவரு இப்படி முறைக்கிறாரே'னு மனசுக்குள்ளே நினைச்சுக்கிட்டேன். உடனே அவர், 'நீதான் அந்த ரோலுக்கு கரெக்டா இருப்ப'னு' சொன்னார். பிறகு ஆடிஷன்கூட வைக்கலை. நேரடியா நடிக்க வெச்சுட்டார். பிறகுதான் விஜய் ஆண்டனி சாரைப் பார்த்தேன். அவருக்கும் நான் 'நடராஜன்' கேரக்டருக்கு சரியாக இருப்பேன்னு தோணுச்சு. புதிய நபர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு கொடுக்க நினைக்கிற நல்ல மனுசன் விஜய் ஆண்டனி சார். 'சைத்தான்' எனக்கு ஒரு சினிமாவில் நல்ல அறிமுகமா இருந்தது." 

“சைத்தான் படத்துக்கு பிறகு, வேறெந்த வாய்ப்புகளும் கிடைக்கலையா?"

"அதுக்குப் பிறகு 'மீண்டும் வா அருகில் வா' படத்தில் நடித்தேன். இந்தப் படம் டூயல் ஹீரோ சப்ஜெக்ட். நானும் சந்தோஷ் பிரதாப்பும் சேர்ந்து நடித்திருப்போம். இது ஒரு பேய் படம். அடுத்த மாதம் படம் ரிலீஸாகப் போகிறது. அதற்குப் பிறகு நிறையப் படங்களின் கதையைக் கேட்டுக்கொண்டிருந்த சமயத்தில்தான் 'பிக் பாஸ்' வாய்ப்பு வந்தது." 

“எப்படிக் கிடைச்சது 'பிக் பாஸ்' வாய்ப்பு?"

"விஜய் டி.வி-யிலிருந்து பிரதீப் சார் என்னைக் கூப்பிட்டார். 'பிக் பாஸ்’ நிகழ்ச்சி தெரியுமா?'னு கேட்டார். 'தெரியும் சார். ரெண்டு மூணு விளம்பரம் மூலமா பார்த்தேன். கமல் சார்தான் நடத்துறாராமே, 14 பிரபலங்கள் கலந்துக்கிறதா கேள்விப்பட்டேன்'னு அவர்கிட்ட சொன்னேன். 'அந்தப் 14 பேர்ல நீயும் ஒரு ஆள்'னு அதிர்ச்சி கொடுத்தார். 'நாம பிரபலம் இல்லையே'னு தோணுச்சு. ஆனா, கமல் சார் நடத்துற நிகழ்ச்சியாச்சே... உடனே சரினு சொன்னேன். சரியா சொன்னா, நிகழ்ச்சி ஆரம்பிக்கிறதுக்கு மூணுநாள் முன்னாடிதான் நான் அதுக்கு செலெக்ட் ஆனேன். எல்லோரையும் மாதிரி நானும் அதைப் பத்தி எந்த ஐடியாவும் இல்லாமதான் உள்ளே போனேன்." 

“பிக் பாஸ் வீட்டில் யார் உங்கள் போட்டியாளர் என்பது அப்போது தெரியுமா?"

"இல்லை, எனக்குத் தெரியாது. அந்த விஷயத்தை ரொம்ப சீக்ரெட்டாக விஜய் டி.வி வைத்திருந்தது. யார் போட்டியாளராக வீட்டுக்குள்ளே வர போறாங்கனு யூகிக்கக்கூட முடியவில்லை."

“பிக் பாஸ் வீட்டுக்குள்ளே போகப் போறன்னு யாருக்கிட்ட எல்லாம் சொன்னீங்க?"

"யாரிடமும் சொல்லக்கூடாதுனு சொல்லிட்டாங்க. ஆனா, ரொம்ப நெருக்கமான சிலரிடம் மட்டுமே சொன்னேன். என் வீட்டில் அப்புறம் நண்பர்கள் சிலரிடம் சொன்னேன். என்னுடைய வழிகாட்டி ஆனந்த கிருஷ்ணன் சார் இருக்கார் அவரிடமும் சொன்னேன். 'கண்டிப்பா கலந்துக்கோ, பாஸிட்டிங் நெகட்டிவ் எதுவா இருந்தாலும் பரவாயில்லை. உனக்கான ரீச் இதுமூலமா நிச்சயம் கிடைக்கும்'னு சொன்னார். 

“பிக் பாஸ் வீட்டில் நுழைந்தவுடன் என்ன ஃபீல் பண்ணீங்க?"

"அங்கேயிருந்த எல்லோரும் மக்களுக்குத் தெரிந்த முகங்கள். நான், ரைசா மட்டும்தான் தெரியாத முகங்கள். ஒரு வித்தியாசமான அனுபவமாகியிருந்தது. அங்கே இருக்குறவங்ககூட எப்படி பழகப் போறோம், எப்படி போட்டியாளராக இருக்கப் போறோம்னு தோணுச்சு. மக்களும் ஏற்கெனவே பிரபலமா இருக்கிற அவங்களுக்குத்தான் சப்போர்ட் பண்ணுவாங்கனு நினைச்சேன். அந்த வீட்டில் இருந்த எங்க லைஃப் ரொம்ப நல்லாயிருந்துச்சு. நாங்க எல்லோரும் சகஜமாக எதார்த்தமாக இருந்தோம். யாருக்குமே சினிமாவிலிருந்து வந்திருக்கிறோம். இத்தனை படங்கள் பண்ணியிருக்கிறோம் என்கிற எண்ணம் இல்லை. இரண்டு வாரங்கள் போனதுக்கு அப்புறம் நாங்கள் எல்லோரும் ஒரே குடும்பமாக வாழ ஆரம்பித்துவிட்டோம்." 

“பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏதாவது பாகுபாடு காட்டப்பட்டதாக நினைக்கிறீர்களா?"

"எந்தப் பாகுபாடும் கண்டிப்பாக காட்டப்படவில்லை. மக்களுடைய ஆதரவுடன் மட்டும்தான் போட்டியாளார்கள் வீட்டுக்குள்ளே இருந்தோம். ஒரு ஜனநாயக முறையில் நடந்த ஒரு ரியாலிட்டி ஷோதான் பிக் பாஸ். ஆனால், உள்ளே போகும்போது பாகுபாடு இருக்குன்னு நினைத்தோம். ஆனா, அந்த மாதிரி விஜய் டி.வி, கமல் சார் என யாருமே பண்ணவில்லை." 

“ ‘ஜனநாயக முறை'ங்கிற வார்த்தையெல்லாம் பயன்படுத்துறீங்க. கமல் சார் கட்சி ஆரம்பித்தால் சேருவீர்களா?"

"கமல் சார்  அரசியலுக்கு வர்றது ரொம்ப சந்தோஷம். மக்களுக்கு இந்த நேரத்தில் அவரைப் போன்றவர்கள் தேவை. ஆனா, எனக்கு அரசியல் ஆசையெல்லாம் கிடையாது. என் ஆசையெல்லாம் சினிமாவுல சாதிக்கிறது மட்டும்தான்." 

“பிக் பாஸில் கத்துக்கிட்ட விஷயம்?"

"நிறைய இருக்கு. கூட்டுக் குடும்பமா எப்படிச் வாழ்றதுனு கத்துக்கிட்டேன். எல்லோரையும் அணுசரித்து, வாழ்க்கையை எப்படி வாழணும்னு விஷயத்தை நூறு நாள் அந்த வீட்டுக்குள்ள கத்துக்கிட்டோம். சுய தேடல், நமக்குள்ளே என்ன பாஸிட்டிவ் இருக்கு, நெகட்டிவ் இருக்குனு கத்துக்கிட்டோம். நமக்கான சுய தேடலை தெரிஞ்சுக்கிறதுக்குப் 'பிக் பாஸ்' பெரிய வாய்ப்பாக இருந்தது." 

"உங்களுக்கு வந்த நெகட்டிவ் கமெண்ட்ஸை எல்லாம் எப்படி எடுத்துக்குறீங்க?"

"பாஸிட்டிவ், நெகட்டிவ் இரண்டையும் ரொம்ப சந்தோஷமா ஏத்துக்குறேன். ஏன்னா, பிக் பாஸ் வீட்டுக்குள்ள போனதே எனக்குப் பெரிய வெற்றி மாதிரி. 100 நாள் இருந்ததும் ஒரு பெரிய வெற்றி. மக்கள் 80 சதவீதம் பாஸிட்டிவான விஷயங்கள் பற்றி மட்டுமே பேசும்போது ஹாப்பியாக இருக்கோம். அதேமாதிரி,  நம்மளைப் பற்றி நெகட்டிவான விஷயங்கள் சொல்லும்போதும் ஏத்துக்கணும். அப்படிப்பட்ட ஒரு மனநிலையில்தான் வீட்டுக்குள்ளே இருந்தேன். அதனால்தான், 100 நாள் என்னால பிக் பாஸ் வீட்டுக்குள்ளே இருக்க முடிந்தது." 

“நூறு நாட்களும் 'மைக்' மாட்டிக்கிட்டே இருந்த உங்களுக்கு, 'மைக்' இல்லாத இந்த எதார்த்த வாழ்க்கை எப்படி இருக்கு?" 

"100 நாளும் மைக் எங்க உடம்பில் ஒரு உறுப்பு மாதிரியே இருந்தது. கண்டிப்பா அதை மிஸ் பண்றேன். சில நேரங்களில் எங்கே அதை காணோம்னுகூட தேடுறேன். அதேமாதிரி கேமராவையும் மிஸ் பண்றேன். சுத்தி கேமரா இருக்குமோனு பார்க்குறேன்." 

“பிக் பாஸ் ஜெயித்தவுடன் பாராட்டிய பிரபலம் யார்?"

"சுஹாசினி மேடம் போன் பண்ணி, 'ஆரவ் நீ ஜெயிச்சுட்டடா'னு உற்சாகமாப் பேசுனாங்க. அவங்களுக்கு எப்படி நான் ஜெயிச்சது தெரியும்னு ரொம்ப ஆச்சரியமா இருந்தது. அடுத்த போன் சிம்புகிட்டயிருந்து வந்துச்சு. 'ஆரவ், நான் தொடர்ந்து பார்த்துக்கிட்டே இருக்கேன். நீங்கதான் ஜெயிக்கணும்னு ஆசைப்பட்டேன், ஜெயிச்சுட்டீங்க... சூப்பர்'னு சொன்னார்.  இதுமாதிரி நிறைய போன் கால் வந்துக்கிட்டே இருந்தது. நான் எடுத்துப் பேசமுடியாத அளவுக்கு!"

"பிக் பாஸ் வீட்டில் நடந்தது எல்லாம் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட ஸ்கிரிப்ட்னு ஒரு பேச்சு இருக்கே?" 

"கமல் சார் பண்ற ஒரு ரியாலிட்டி ஷோ. அதுவும் ஜனநாயக முறையில் நடக்கிற ஒரு ஷோ. அதில் ஸ்க்ரிப்ட்னு ஒரு விஷயம் இருந்து, அது வெளியே தெரிஞ்சா பெரிய பிரச்னையாகும்னு அவங்களுக்குத் தெரியாம இருக்குமா என்ன... பிக் பாஸ் கண்டிப்பா ஸ்கிப்டட் இல்லை. உள்ளே என்ன நடந்ததோ, அதைத்தான் வெளியே காட்டுனாங்க."

"பிக் பாஸ் வீட்டில் புத்திசாலித்தனமாக விளையாடியதாக யாரை நினைக்குறீங்க?"

"நான் அப்படி யாரையும் நினைக்கவில்லை. கொடுத்த டாஸ்க்கை நான், கவிஞர், கணேஷ் ப்ரோ எல்லோரும் விளையாடியிருக்கிறோம். அதை விட்டுவிட்டு புத்திசாலித்தனமாக இருந்தால்தான் மக்களுக்கு நம்மளைப் பிடிக்கும், அதனால் நாம இப்படி இருப்போம்னு யாரும் நடந்து கொள்ளவில்லை."

“டாஸ்க்குத் தேவையான வேலைகளை வெளியாட்கள் செஞ்சு கொடுக்கும்போது, அவங்களை நீங்க பார்ப்பீங்களா?" 

"இல்லை. திரை போட்டுடுவாங்க. நூறு நாட்களுமே எங்களைத் தவிர ஒரு மனிதரையும் நாங்க பார்த்தது கிடையாது. கொஞ்சம் எத்தி எத்தி பார்க்கக்கூட முயற்சி பண்ணியிருக்கோம். ஆனா, பார்க்கவே முடியாது. ஒரு அறிவிப்பு வரும். 'இது பிக் பாஸ், எல்லோரும் வீட்டுக்குள்ளே போங்க'னு. நாங்க எல்லோரும் வீட்டுக்குள்ளே போயிடுவோம். திரை போட்டுடுவாங்க."

"பிக் பாஸ் குரலுக்குச் சொந்தக்காரர் யார்?"

"தெரியலை. அவரைப் பார்க்க ரொம்ப ஆர்வமா இருந்தது. ஏன்னா, உள்ளே இருந்த நூறு நாளும் அப்பா மாதிரி அவர்தான் எங்களை வழிநடத்தினார். நிறைய விஷயங்களைச் சொல்லிக் கொடுத்தார். அவரைப் பார்க்கணும்னு ஆசை இருந்தது. பார்ப்போம்!" 

“ஓவியா உண்மையிலேயே உங்களைக் காதலித்ததா நினைக்குறீங்களா?”

“எனக்கு தெரியவில்லை. அதை அவர்கள் கிட்டத்தான் கேட்கணும். எனக்கு எதுவும் ஃபீல் ஆகவில்லை.’’

“சப்போஸ் இதற்கு அப்புறம் ஓவியா புரொபோஸ் பண்ணினால்?”

’’இல்லை, ஓவியாவுக்கு அந்த மாதிரியான எண்ணம் இல்லை. நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். ஓவியா அவங்க வேலையில் கவனமாகயிருக்காங்க. நானும் என் வேலையில் கவனமாயிருக்கிறேன். நல்ல ஸ்க்ரிப்ட் வந்தால், இரண்டு பேரும் நடிக்கலாம். அவங்களும் ஒண்ணா என்கூட நடிப்பேன்னு சொல்லியிருக்காங்க. அதனால் கண்டிப்பாக பண்ணுவேன்.’’

“எதிர்காலத் திட்டம் என்ன?"

"நல்ல இயக்குநர்கள், தயாரிப்பாளர்களிடமிருந்து நல்ல ஸ்க்ரிப்ட்ஸ் வருது. இன்னும் முடிவு செய்யவில்லை. விரைவில் அறிவிப்பு வரும்."