Published:Updated:

‘விஜய், அஜித்துக்கு ஒரு ஸாரி...!’ ஒஃபீலியா ஃபிலீங்ஸ்

‘விஜய், அஜித்துக்கு ஒரு ஸாரி...!’ ஒஃபீலியா ஃபிலீங்ஸ்
‘விஜய், அஜித்துக்கு ஒரு ஸாரி...!’ ஒஃபீலியா ஃபிலீங்ஸ்

‘விஜய், அஜித்துக்கு ஒரு ஸாரி...!’ ஒஃபீலியா ஃபிலீங்ஸ்

பிக் எஃப்.எம் 'இம்சை அரசி' என்ற பெயர் பெற்றவர், ஆர்ஜே  ஒஃபீலியா. 10 வருடங்களுக்கும் மேலாக பிக் எஃப்.எம், ஆர்ஜேவாக இருந்து இரண்டு வருடத்துக்கு முன்பு வெளியேறினார். தற்போது, ஃபேஸ்புக், யூடியூப் என இணையதளத்தில் கலக்கிக்கொண்டிருக்கிறார். அவரிடம் பேசினோம்... 

“எதனால் பிக் எஃப்.எம் ஆர்.ஜே வேலையை விட்டீங்க?” 

“பிரச்னை எதுவும் இல்லை. ரொம்ப வருஷம் அதே வேலையில் இருந்தாச்சு. ஏதாவது வித்தியாசமாப் பண்ணலாம்னு தோணுச்சு. டெக்னீஷியன், ஸ்கிரிப்ட் ரைட்டர் என வெவ்வேறு துறைகளில் இருந்த நான்கு நண்பர்கள் ஒருசேர வேலையை விட்டோம். ஒவ்வொருத்தருக்கும் உடனடியா வேற வேலை கிடைச்சு அதைப் பார்க்கப் போயிட்டாங்க. யூடியூபில் டாக் ஷோ மாதிரி பண்ணலாம் என்கிற ஆர்வத்தில்தான் வேலையை விட்டோம். கடைசியில் நான்தான் அதில் நுழைஞ்சிருக்கேன்.'' 

''இவ்வளவு வாய்ப் பேசுறீங்களே, வீட்டில் எப்படிச் சமாளிக்கறாங்க?'' 

''நீங்க வேற... எங்க அப்பா, அம்மா, தாத்தானு எல்லாருமே அப்படித்தான். சத்தம் போட்டுத்தான் சிரிப்போம், பேசுவோம். அந்தப் பழக்கம்தான் எனக்கு வந்துடுச்சு. இறந்த வீட்டுக்குபோன என் தாத்தா ஏதோ பேசி சிரிச்சுட்டார். செம்ம பிரச்னையாகிடுச்சு. அதனால், வீட்ல யாரும் எதுவும் கேட்க முடியாது. ஆனா, என் கணவர்தான் என்கிட்ட மாட்டிட்டு கஷ்டப்படுறார்.'' 

''இப்படி நீங்க அதிகம் பேசுறதால்தான் ஆர்ஜே துறையைத் தேர்ந்தெடுத்தீங்களா?'' 

''நான் ஸ்கூல்ல படிக்கும்போதே ஃப்ரெண்ட்ஸ்கூட அரட்டை அடிச்சுட்டே இருப்பேன். என்னைச் சுற்றி ஒரு கூட்டம் இருந்துட்டே இருக்கும். நான் பேசும் தமிழ் வித்தியாசமாக இருந்தது எனக்கே தெரியலை. எதைப் பற்றி கேட்டாலும், லொடலொடனு பேசிட்டே இருக்கோமே... பேசுற மதிரி வேலை கிடைச்சா நல்லா இருக்கும்னு யோசிச்சேன். பிக்.எஃப்.எம் ஆடிசனில் செலக்ட் ஆனேன். அங்கே சேர்ந்த கொஞ்ச நாளுக்கு அப்புறம்தான் என் தமிழ் வித்தியாசமாக இருக்கிறதையே உணர்ந்தேன். அதுக்கு நிறைய ஃபாலோயர்ஸ் இருந்தது தெரிஞ்சதும் குஷியாகிட்டேன்.'' 

''டிரெஸ்ஸிங் சென்ஸில் சமீபமாக கவனம் அதிகம் செலுத்தறீங்களோ...'' 

''ஐய்யய்யோ நீங்க வேற. எனக்கு என்ன கலர் செட் ஆகும். அதுக்கு என்ன மேக்கப் பண்ணலாம் என எதுவுமே தெரியாது. பிக் எஃப்.எம்ல சேர்ந்த பிறகு, ஆர்ஜேக்கள் எல்லாரையும் ஒரு பியூட்டி பார்லருக்கு கூட்டிட்டுப்போய் த்ரெட்னிங், மேக் ஓவர் பண்ணிவிட்டாங்க. நான் முதன்முதல்ல த்ரெட்னிங் பண்ணதே அப்போதான். அப்புறம், கொஞ்சம் கொஞ்சமா நானே செல்ஃப் மேக்கப் பண்ணிக்க ஆரம்பிச்சேன். அதற்கேற்ப டிரெஸ்ஸையும் தேர்ந்தெடுத்தேன். கல்யாணத்துக்குப் பிறகு, என் கணவர் ஐடியா கொடுக்கிறார். ஃபேஷன் விஷயத்தில் அவரை அடிச்சுக்கவே முடியாது.'' 

''எப்பவுமே சிரிச்சிட்டு இருக்கீங்களே, கோபப்பட்டதே கிடையாதா?'' 

''நான் செம்ம கோபக்காரி. மனசில் பட்டதைச் சட்டுனு சொல்லிடுவேன். கல்யாணத்துக்குப் பிறகு, என் கணவருக்கே கஷ்டமா இருந்துச்சு. 'முகத்துக்கு நேராப் பேசுறது வேற, முகத்தில் அடிக்கிற மாதிரி பேசுறது வேற'னு சொல்வார். படிப்படியா என் கோபத்தைக் கட்டுப்படுத்த ஆரம்பிச்சேன். இப்போ கொஞ்சம் பரவாயில்லனு தோணுது. நான் கோபப்பட்டா பொருள் சேதாரம் அதிகமா இருக்கும். எந்தப் பொருள் கையில் கிடைச்சாலும் தூக்கி அடிச்சிடுவேன். அப்படி எங்க வீட்டில் அதிகம் உடையறது ஃபோன்தான். இதுவரை நான்கு போன்கள் உடைஞ்சிருக்கு.'' 

''உங்கள் திருமணம், கணவர் பற்றி...'' 

''எங்களுக்குக் கல்யாணமாகி ஏழு வருஷம் ஆச்சு. அரேஞ்சுடு மேரேஜ். கணவர் பெயர், கிறிஸ்டப்பர் பால். மீடியா பிளானிங், விளம்பரம் என இயங்கிட்டிருக்கார்.'' 

''இப்போ நீங்க செய்யும் வேலைதான் என்ன?'' 

''ஆர்ஜே வேலையை விட்டுட்டு வந்தாலும், எப்பவும் அப்டேட்டா, லைவ்வாக இருக்கணும்னு நினைச்சேன். அடிக்கடி மக்களைச் சந்திக்கிற தளமான ஃபேஸ்புக், யூடியூப் பக்கம் கவனம் போச்சு. புதுப் படங்களின் புரமோஷன், படத்தின் டீமை பேட்டி எடுக்கிறது, லைவ் ஷோ, யூடியூப் சேனலில் வாய்ஸ் கொடுக்கிறது, பேட்டி எடுக்கிறது எனப் பல விஷயங்களை செய்துட்டிருக்கேன். தீபம் மியூசிக் சேனலிலும் வாய்ஸ் கொடுக்கிறேன். நிறைய பேருக்கு என்னைப் பற்றி தெரியாத ஒரு விஷயம் இருக்கு. என் முழு பேர்,  ஒஃபீலியா சாந்த செல்வி. இதில், சாந்த செல்வி எனக்கே ஓவரா இருந்ததால், அதை கட் பண்ணிட்டு ஒஃபீலியா ஆகிட்டேன். ஷேக்ஸ்பியர் டிராமாவில் வரும் ஒரு பெயர்தான்  ஒஃபீலியா. இதுக்கு, கிரேக்க மொழியில் 'உதவி' என்று அர்த்தம்.'' 

''சமீபத்தில் நீங்கள் பார்த்து ரசித்த, கொந்தளித்த படங்கள் பற்றி...' 

''கடைசியா நான் தியேட்டரில் பார்த்த படங்கள் 'ஜில்லா' மற்றும், 'வீரம்'. தல, தளபதி இரண்டு பேரின் அந்தப் படங்களைப் பார்த்து பயங்கர அப்செட் ஆகிட்டேன். இனிமே தியேட்டர் பக்கமே போகக்கூடாதுனு முடிவுப் பண்ணிட்டேன். முன்னாடியெல்லாம் என் கணவரை வலுக்கட்டாயமாக கூட்டிட்டுப்போய் மாசத்துக்கு இரண்டு படமாவது பார்த்துட்டிருந்தேன். இப்போ தியேட்டருக்குப் போகவே பிடிக்கலை. ஃபேமிலி, ஃபிரண்ட்ஸ் எனச் சேர்ந்து படத்துக்குப் போனால் ஆகும் செலவை கூட்டிப் பார்த்தால், வருஷத்துக்கு ஐம்பதாயிரம் ரூபாயைத் தாண்டுது. கஷ்டப்பட்டு உழைக்கும் காசை ஏன் வீணாக்கணும்னு நினைச்சு தியேட்டர் பக்கம் போறதை விட்டுட்டேன். எப்படியும் ரெண்டு மாசத்தில் டி.வியில் போட்டுடுவாங்க. அப்போ பார்த்துக்கலாமே. மற்றபடி ஓய்வு நேரத்தை புத்தகம் படிக்கிறதில் செலவிடறேன். 'மெர்சல்' படம் நல்லா இருக்கிறதா சொல்றாங்க. அதனால், அந்தப் படத்துக்குப் போலாமானு யோசனையில் இருக்கேன்'' என்றார் ஒஃபீலியா.

அடுத்த கட்டுரைக்கு