Published:Updated:

“காம்பியரா இருக்கிறது பயமா இருக்கு..!” வீ.ஜே மகேஸ்வரி

“காம்பியரா இருக்கிறது பயமா இருக்கு..!” வீ.ஜே மகேஸ்வரி
“காம்பியரா இருக்கிறது பயமா இருக்கு..!” வீ.ஜே மகேஸ்வரி

“ஆங்கரா என் மீடியா பயணத்தில் நிறைய அப்ஸ் அண்டு டவுன்ஸ் பார்த்திருந்தாலும், 12 வருஷங்களாக எனக்குன்னு ஒரு பெயரை தக்கவெச்சுட்டிருக்கேன்" - உற்சாகமாகப் பேசுகிறார் ஜீ தமிழ் சேனல் வீஜே மகேஸ்வரி. 

"முதல் மீடியா வாய்ப்பு கிடைச்சது எப்படி?" 

"சன் மியூசிக் சேனல் தொடங்கின நேரம். 'ஆங்கர் தேவை'ங்கிற விளம்பரத்தைப் பார்த்துட்டு, 'நீ ட்ரைப் பண்ணு'னு அப்பா சொன்னார். அப்போ பிளஸ் ஒன் படிச்சுட்டிருந்தேன். ஆடிசன்ல செலக்டாகி என் மீடியாப் பயணத்தை ஆரம்பிச்சேன். சீரியஸ் திங்கிங் இல்லாம, ஜாலியா ஆங்கரிங் பண்ணுவேன். என் விளையாட்டுத்தனமான குணத்தை ஆடியன்ஸ் ரொம்பவே ரசிச்சாங்க. பி.காம்., முடிச்சதும் வேற ஃபீல்டுக்கு மாறிட நினைச்சேன். ஆனால், மீடியாவை விட்டு விலக முடியலை. அது என்னைக் கெட்டியாப் பிடிச்சுக்கிச்சு.'' 

"உங்களுக்கான அடையாளம் சுலபமாக கிடைச்சதா?"

"இல்லை. பல கஷ்டங்களைத் தாண்டிதான் வந்திருக்கேன். ஆரம்பத்தில் அடிக்கடி வாய்ப்பு இல்லாம இருந்திருக்கேன். அது மாசக் கணக்கில்கூட நீடிக்கும். மீடியாவில் ரீச் ஆனவங்க, கொஞ்ச நாள் முகம் காட்டாமல் இருந்தால், வதந்திகள் றெக்கை கட்டிப் பறக்கும். 'எப்போ வேலை வரும்? நம்மை எப்போ நிரூபிப்போம்'னு ஒரு பதற்றம் இருந்துட்டே இருக்கும். அப்படி நிறைய கேள்விகளும் பயமும் எனக்கும் இருந்துச்சு. சூழல் சீக்கிரமே சரியாச்சு. ஆனாலும், முன்னாடி ஏற்பட்ட பயம் இப்பவும் இருக்கு.'' (பலமாகச் சிரிக்கிறார்). 

"ஜீ தமிழ் கம்பேக் பற்றி...'' 

"கல்யாணமாகி பையன் பிறந்ததும் ஒன்றரை வருஷம் ரெஸ்ட்ல இருந்தேன். பிறகு, விஜய் டிவி-யில் என் பயணத்தைத் தொடங்கினேன். அப்போதான் சீரியலிலும் நடிக்க ஆரம்பிச்சேன். அப்புறம் ஜீ தமிழ் சேனல். 'அதிர்ஷ்டலட்சுமி' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினது பெரிய ரீச் கொடுத்துச்சு. ரெண்டு வருஷம் தொகுத்து வழங்கினேன். இப்போ, நிறைய மாற்றங்களோடு தொடருது. என் கோ-ஆங்கர் கமலுக்கும் எனக்கும் ஆரம்பத்தில் நிறைய மிஸ் அண்டர்ஸ்டாண்டிங் இருந்துச்சு, இப்போ, பெஸ்ட் ஃப்ரெண்ட் ஆகிட்டோம்." 

"டான்ஸ், ஸ்கிட் எனவும் கலக்கறீங்களே...'' 

"நான் முறையா டான்ஸ் கத்துக்கலை. ஜீ ஃபேமிலி என்பதால், 'ஜீ டான்ஸ் லீக்' போட்டியில அப்பப்போ ஆடறேன். வெரைட்டியான ஸ்கிட்டும் பண்ணுறேன். அதுக்காக, சிறப்பு பயிற்சிகள் எதுவும் எடுத்ததில்லை. இப்படி மாறுபட்டு செய்யும்போது புத்துணர்ச்சி கிடைக்குது.'' 

"நடிப்பில் பெரிய ஆர்வம் உண்டா?" 

“ 'பாணா காத்தாடி' படத்தில் ஒரு சின்ன ரோல்ல நடிச்சதுதான் என் முதல் சினிமா அனுபவம். 'கந்தசாமி', 'மந்திரப் புன்னகை' என சில படங்களில் நடிச்சேன். 'சென்னை 28' இரண்டாம் பாகத்தில் நடிச்சது, நல்ல ரீச் கொடுத்துச்சு. பிறகு, நல்ல கதைக்காக வெயிட்டிங்." 

"ஆங்கரே இப்போ என்டர்டெயினராகவும் மாறிட்டாங்க. இதை எப்படிப் பார்க்கறீங்க?" 

"நான் ஆங்கரா பயணத்தைத் தொடங்கின சமயம், நேயர்களிடம் கேள்வி கேட்கிறது, சினிமா தகவல்களைச் சொல்றதுனு சிம்பிளான, க்யூட் ரியாக்‌ஷன்ஸ் கொடுக்கிறவங்களா இருந்தோம். இப்போ, என்டர்டெயினர்ஸா மாறவேண்டியச் சூழல். இதுக்காக, நிறைய விஷயங்களைக் கத்துக்கறோம். அப்டேட் பண்ணிக்கறோம். இதனால், முன்பைவிட சீக்கிரமே ஆடியன்ஸ் மனசில் இடம் பிடிக்க முடியுது. 'இந்த நிகழ்ச்சியை இந்த ஆங்கர் பண்ணினால் சரியா வரும்'னு சொல்ற அளவுக்கு முக்கியத்துவம் உண்டாகி இருக்கு. கூடவே, சினிமா வாய்ப்புகளும் கிடைக்குது. அதனால், இந்த மாற்றங்களை ஆரோக்கியமாகவே பார்க்கிறேன்.'' 

"ஆங்கரிங், நடிப்புத் தாண்டி வேறு என்ன பண்றீங்க?" 

"திரைக்கு முன்னாடி பயணிக்கும் வாய்ப்பு இன்னும் எத்தனை நாளைக்கு இருக்கும்னு தெரியலை. அதனால், காஸ்டியூம் டிசைனிங்கிலும் இறங்கியிருக்கேன். இப்போதைக்கு சின்னத்திரை பிரபலங்களுக்கு டிசைனரா வொர்க் பண்றேன். சீக்கிரமே சினிமா பிரபலங்களுக்கும் டிசைனராகவும் வொர்க் பண்ணுவேன். ஸோ, மீடியா பயணம் த்ரில்லிங்காவும், சுவாரஸ்யமாகவும் போயிட்டிருக்கு" எனப் புன்னகைக்கிறார் மகேஸ்வரி.