Published:Updated:

“புகுந்த வீடும் பொறந்த வீடும் இப்படி இருக்கணும்!” - நெகிழும் தொகுப்பாளினி கிருத்திகா

“புகுந்த வீடும் பொறந்த வீடும் இப்படி இருக்கணும்!” - நெகிழும் தொகுப்பாளினி கிருத்திகா
“புகுந்த வீடும் பொறந்த வீடும் இப்படி இருக்கணும்!” - நெகிழும் தொகுப்பாளினி கிருத்திகா

"அம்மாதான் என் நடன குரு. என்னுடைய எல்லாப் பயணங்களிலும் அவங்க பங்களிப்பு இருக்கு. என் வாழ்க்கையின் மிகப்பெரிய பலமும் அவங்கதான்" - நெகிழ்கிறார் ஜெயா டிவி தொகுப்பாளினியும், நடனக் கலைஞருமான கிருத்திகா சுரஜித். பேச்சில் இரண்டு வரிகளுக்கு ஒருமுறை அம்மா வந்துவிடுகிறார். 

"நடன ஆர்வம் எப்போது ஏற்பட்டுச்சு?" 

"என் அம்மா, பிரபல நடனக் கலைஞரான ராதிகா சுர்ஜித். அதனால், டான்ஸ் ரத்தத்தில் வந்துடுச்சு. குழந்தையிலிருந்தே அம்மா எடுக்கும் டான்ஸ் கிளாஸை பக்கத்திலிருந்து கவனிப்பேன். ஜதி சப்தம் கேட்டே வளர்ந்தேன். அம்மாவிடம் டான்ஸ் கற்கும் பெண்கள் மேக்கப் போட்டுக்கறப்போ, 'எனக்கும் மேக்கப் போட்டு விடுங்க'னு அடம்பிடிப்பேன். அம்மா மற்றும் ரெண்டு சித்திகள்தான் என் குருநாதர்கள். ஆறு வயசில் பரதநாட்டியம் கற்க ஆரம்பிச்சேன்." 

"ஆங்கரிங் பக்கம் வந்தது எப்படி?'' 

"டான்ஸ் கற்க ஆரம்பிச்சதிலிருந்தே மேடை நிகழ்ச்சிகளை செய்துட்டிருக்கேன். ஜெயா டிவியில் 'தகதிமிதா' என்ற நிகழ்ச்சியை அம்மா டைரக்ட் பண்ணினாங்க. பரதநாட்டியத்துக்கான அந்த நிகழ்ச்சி மிகப்பெரிய ஹிட். ஃப்ரீ டைம்ல நானும் செட்டுக்குப் போவேன். அதனால், வீட்டுக்கு அடுத்து நான் அதிகம் இருந்தது ஜெயா டிவி ஆபீஸ்லதான். அதனால அந்த சேனல்ல எல்லோரும் என்னை சொந்த குழந்தை மாதிரி பார்த்துப்பாங்க. 2007-ம் வருஷம் பி.எஸ்ஸி படிச்சுட்டிருந்தபோதே டான்ஸ், மியூசிக் என பிஸி. ஜெயா டிவியில் சிங்கர் ஹரிஹரன் சாரின் 'ஹரியுடன் நான்' நிகழ்ச்சி தொடங்கிச்சு. ஒரு ரசிகையாக நிகழ்ச்சியின் போட்டோஷூட்டில் கலந்துகிட்டேன். அந்த நிகழ்ச்சி பற்றி ப்ரோமோ வீடியோ எடுத்தாங்க. ஒரே டேக்ல என் போர்ஷனைப் பேசினேன். 'நல்லா பேசுறீங்களே! ஆங்கரிங் பண்ணலாமே'னு சொன்னாங்க. அப்படிதான் ஜெயா டிவியின் 'காலை மலர்' நிகழ்ச்சியில் ஆங்கர் ஆனேன். அந்த நிகழ்ச்சியில் தினமும் ஒரு பிரபலத்தை பேட்டி எடுத்தது புதுப் புது அனுபவங்களை கொடுத்துச்சு. அம்மாவும் நிறைய ஆலோசனை கொடுத்தாங்க. அடுத்த சில வருஷத்தில் என் வாழ்க்கையையே பெரிய அளவில் மாறிடுச்சு."

"அம்மாவின் நிகழ்ச்சியிலேயே ஆங்கரா வொர்க் பண்ணின அனுபவம் எப்படி இருந்துச்சு?" 

" 'காலை மலர்' நிகழ்ச்சி சமயத்தில்தான் 'தகதிமிதா' நிகழ்ச்சியை டைரக்ட் பண்ணிட்டிருந்தாங்க. அதில் ஆங்கரிங் பண்ணும் வாய்ப்பையும் கொடுத்தாங்க. ஒன்றரை வருஷம் அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினேன். அம்மா, பொண்ணு சென்டிமென்ட் வீட்டுலதான். ஷூட்ல நான் தப்பு செஞ்சா திட்டுவாங்க. நிறைய அனுபவங்கள் கிடைச்சது. அதே சேனலில் 'தேன்கிண்ணம்', குக்கரி உள்ளிட்ட நிறைய நிகழ்ச்சிகளுக்கு ஆங்கரிங் பண்ணினேன்.'' 

"சினிமாவில் டான்ஸ் மாஸ்டராக ஆர்வம் இல்லையா?" 

" 'நிலா காய்கிறது (இந்திரா)', 'பாட்டுச் சொல்லி பாடச்சொல்லி (அழகி)', 'மயில்போல பொண்ணு ஒண்ணு (பாரதி)', 'இந்த நிமிடம் (பள்ளிக்கூடம்)', 'என்னை என்ன செய்தாய் (இவன்)', 'குண்டுமல்லி (சொல்ல மறந்த கதை)', 'ரா ரா (சந்திரமுகி)'... இப்படி செலக்டிவா சில படங்களில் டான்ஸ் மாஸ்டரா அம்மா வொர்க் பண்ணியிருக்காங்க. நான் டிவியில் பிஸியா இருந்ததால், சினிமா பற்றி யோசிக்கவே நேரமில்லாமல் போயிடுச்சு. இனி முயற்சிக்கலாம்னு இருக்கேன்.'' 

"உங்க வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்து அம்மா முக்கிய அங்கமா இருக்காங்க. இதுக்கு ஸ்பெஷல் காரணங்கள் இருக்கா?" 

"நிச்சயமா இருக்கு. அப்பா சுர்ஜித் வெளிநாட்டில் பேராசிரியரா இருக்கிறதால் அம்மாவோடுதான் அதிகம் இருக்கேன். என் கணவர் விக்ரம் ரவி சோஷியல் மீடியா கம்பெனியில் வொர்க் பண்றார். என் எல்லா முயற்சிகளுக்கும் துணையாக இருக்கும் கணவர், மாமனார், மாமியார் என் பலம். 'இப்படித்தான் ஒரு பெண்ணின் பிறந்த மற்றும் புகுந்த வீடு இருக்கணும்' என்பது மாதிரியான வாழ்க்கை அமையப் பெற்றிருக்கேன். புகுந்த வீடும், அம்மா வீடும் பக்கத்து பக்கத்துலதான். எந்த வீட்டுல ஸ்பெஷல் சமையல் செய்தாலும் அது இன்னொரு வீட்டுக்கு வந்துடும். தினமும் நேரில் பார்த்துக்கிட்டாலும் போனிலும் அம்மாகிட்ட0 பல முறை பேசுவேன். அவங்களோடு கனெக்டடா இல்லைன்னா அந்த நாள் எனக்கு என்னமோ மாதிரி ஆகிடும். நான் மட்டும்தான் இப்போ மேடையில் டான்ஸ் ஆடுறேன். அம்மா நிறுத்திட்டாங்க. அம்மாவும் நானும் இதுவரை ஒரே மேடையில் டான்ஸ் ஆடினதில்லே. அந்த வாய்ப்பு கிடைச்சா பெருமையா நினைப்பேன்.'' 

"இப்போ என்னென்ன நிகழ்ச்சிகளில் வொர்க் பண்றீங்க?" 

"நிறைய சினிமா பாடல்களுக்கு ஜிங்கிள்ஸ் பாடிட்டிருக்கேன். உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் டான்ஸ் நிகழ்ச்சிகள் செய்யறேன். அம்மாவின் டான்ஸ் இன்ஸ்டிட்யூட்ல நானும் ஒரு டீச்சரா இருக்கேன். ஜெயா டிவியில் 'தேன்கிண்ணம்' மற்றும் செலிப்ரிட்டி பேட்டிகள் எடுத்திட்டிருக்கேன். வாழ்க்கை சிறப்பா போயிட்டு இருக்கு" எனப் புன்னகைக்கிறார் கிருத்திகா சுரஜித். 

அடுத்த கட்டுரைக்கு