Published:Updated:

"சினிமா வாய்ப்பு அமையலை... ஆனா அன்பான கணவர் கிடைச்சார்!" நெகிழும் 'மெளன ராகம்' ஷமிதா ஶ்ரீகுமார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
"சினிமா வாய்ப்பு அமையலை... ஆனா அன்பான கணவர் கிடைச்சார்!" நெகிழும் 'மெளன ராகம்' ஷமிதா ஶ்ரீகுமார்
"சினிமா வாய்ப்பு அமையலை... ஆனா அன்பான கணவர் கிடைச்சார்!" நெகிழும் 'மெளன ராகம்' ஷமிதா ஶ்ரீகுமார்

"சினிமா வாய்ப்பு அமையலை... ஆனா அன்பான கணவர் கிடைச்சார்!" நெகிழும் 'மெளன ராகம்' ஷமிதா ஶ்ரீகுமார்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

" 'பாண்டவர் பூமி' படத்துக்குப் பிறகு சினிமா வாய்ப்பு பிரகாசமாகலையேனு வருத்தப்பட்டிருக்கேன். ஆனா, அதுதான் சீரியல் என்ட்ரி கொடுக்கவெச்சது. அதனால்தான் காதல் கணவர் கிடைச்சார். ஸோ, ஐ யம் லக்கி அண்டு ஹேப்பி" - உற்சாகமாகப் பேசுகிறார், ஷமிதா ஶ்ரீகுமார். விஜய் டிவி 'மெளன ராகம்' சீரியலில் காதம்பரி ரோலில் நடித்துவருபவர். 

" 'பாண்டவர் பூமி' வாய்ப்பு எப்படிக் கிடைச்சது?" 

"சென்னைப் பொண்ணு நான். அக்கா ராஜேஸ்வரி, சித்தி ரோஜா ரமணி மற்றும் அவர் பையன் தருண் எனப் பலரும் மீடியா சார்ந்தவங்க. எனக்கு சினிமா ஆர்வம் இருந்ததில்லை. ஃப்ரீ டைம்ல அக்காவோடு ஷூட்டிங் போய்ப் பார்ப்பேன். கிராமத்துக் கதைக்கு என் முகச்சாயல் பொருத்தமா இருக்கும்னு பலரும் சொல்வாங்க. பி.எஸ்ஸி சைக்காலஜி முதலாம் வருஷம் படிச்சுட்டிருந்த சமயம், டைரக்டர் சேரன் சார் கூப்பிட்டார். சும்மா ஒரு மேக்கப் டெஸ்ட்னு சொன்னார். அப்புறம், செலக்ட் பண்ணினார். அப்படித்தான் 'பாண்டவர் பூமி' ஹீரோயின் வாய்ப்பு கிடைச்சது. அந்தப் படத்தில் நடிக்கும்போதே படிப்பை நிறுத்திட்டேன். அந்தப் படத்தின் டீமும் அனுபவமும் சினிமா துறையைப் பற்றி பெரிய மதிப்பை எனக்குள் உருவாக்கிச்சு." 

"ஆனால், அந்தப் படத்துக்குப் பிறகு சினிமாவில் உங்களைப் பார்க்க முடியலையே ஏன்?" 

" 'பாண்டவர் பூமி' பெரிய ஹிட். டூயல் ரோல்ல சிறப்பா நடிச்சிருக்கேனு நிறையப் பாராட்டுகள் கிடைச்சது. அடுத்தடுத்து சினிமா வாய்ப்புகள் வந்தது. நடிகர் பிரசாந்த் ஜோடியா 'விண்ணோடும் முகிழோடும்' உள்ளிட்ட பல படங்களில் நடிச்சேன். ஆனால், எதுவுமே ரிலீஸாகலை. சினிமாவிலிருந்து என் முகமும் தெரியாமல் போயிடுச்சு. எனக்குப் பெரிய வருத்தம்தான். படிப்பையும் விட்டுட்டோமேனு நினைச்சேன். அந்தச் சமயம், சன் டிவியில் 'சிவசக்தி' சீரியலுக்கு ஹீரோயின் வாய்ப்பு வந்துச்சு. 'பாண்டவர் பூமி' மாதிரியே அதுவும் சிறந்த கதாபாத்திரம். ரெண்டு வருஷம் ஒளிபரப்பான அந்த சீரியல் மனசுக்கு நிறைவா இருந்துச்சு. எங்கே போனாலும் என் கேரக்டர் பெயரைச் சொல்லி மக்கள் பாராட்டினாங்க." 

"காதல் கணவரை கரம் பிடிச்சது எப்போது?'' 

"கணவர் ஶ்ரீகுமாரும் 'சிவசக்தி' சீரியல்ல நடிச்சார். நல்ல நண்பர்களாக ஆரம்பிச்சு, காதலர்களானோம். அந்த சீரியல் போய்ட்டிருக்கும்போதே கல்யாணம் பண்ணிக்கிட்டோம். ஒவ்வொரு நாளும் சுவாரஸ்யமா போச்சு. ஃப்ரெண்டாக இருந்தபோது எப்படி ஒருத்தரை ஒருத்தர் மதிச்சு சுதந்திரமா நடந்துக்கிட்டோமோ, அப்படித்தான் இப்பவும் இருக்கோம். 'சிவசக்தி' சீரியல் முடிஞ்ச சமயம், எங்க பொண்ணு ரேணா பிறந்தாள். கொஞ்ச நாள் நடிப்புக்கு பிரேக் எடுத்தேன். அப்புறம், சன் டிவியில் 'வசந்தம், 'பிள்ளை நிலா, 'பொன்னூஞ்சல்', ஜீ தமிழில் 'புகுந்த வீடு', இப்போ விஜய் டிவியில் 'மெளன ராகம்' எனத் தொடர்ந்து நடிச்சுட்டிருக்கேன்.'' 

" 'மெளன ராகம்' சீரியலில் நெகடிவ் ரோல். அந்த அனுபவம் எப்படி இருக்கு?" 

"என் கணவர் எப்பவும் கலகலனு சிரிச்சு, சத்தம்போட்டுப் பேசும் டைப். நான் அவருக்கு ஆப்போசிட். யாராச்சும் கேள்வி கேட்டால், அதுக்கு மட்டும் சிம்பிளா பதில் சொல்ற கேரக்டர். இப்படியான எனக்கு 'மெளன ராகம்' சீரியல் வாய்ப்பு வந்தபோது, 'நெகடிவ் போர்ஷன் அதிகமா இருக்கே'னு தயங்கினேன். 'உன் நடிப்புக்கு இந்த கேரக்டர் நல்ல ஸ்கோப் கொடுக்கும்'னு கணவர் உற்சாகப்படுத்தினார். பார்த்துடுவோம்னு இறங்கி நடிச்சேன். இது எனக்கே வியப்பாவும் புதுமையாவும் இருக்கு." 

"கணவரும் நீங்களும் பிஸியாக இருக்கிறீங்களே, ஃபேமிலிக்காக நேரத்தைச் செலவிட முடியுதா?" 

"எங்க பொண்ணுதான் எங்க உயிர். ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்டு படிக்கிறா. ஷூட்டிங்னு ஒருத்தர் வெளியூர் போனால், இன்னொருத்தர் நிச்சயமா வீட்டிலிருந்து குழந்தையைப் பார்த்துக்கணும்னு எங்களுக்குள் டைம் செட் பண்ணிப்போம். ரெண்டு பேரும் சேர்ந்து ஃப்ரீயா இருக்கும் சமயத்தில், மகளோடு வெளியூர் ட்ரிப் கிளம்பிடுவோம். குழந்தையின் படிப்பு மற்றும் எதிர்காலம் பற்றி டிஸ்கஸ் பண்ணிட்டே இருப்போம். ஒரு பேரன்ட்டா மகளுக்கான எந்த விஷயத்தையும் மிஸ் பண்ணிடக் கூடாதுனு கவனமா இருக்கோம்.'' 

"கணவருக்கு சினிமா வாய்ப்புகள் பெரிய அளவில் வரலைனு வருத்தபட்டதுண்டா?" 

"நிச்சயம் உண்டு. கணவரின் அப்பா, புகழ்பெற்ற இசையமைப்பாளர், கணேஷ் (சங்கர்-கணேஷ்). தன் வாய்ப்புக்காக என்றைக்குமே அப்பாவின் பெயரை அவர் பயன்படுத்தினதில்லை. ரொம்பக் கஷ்டப்பட்டு படிப்படியா மீடியாவில் வளர்ந்தவர் என் கணவர். சினிமாவில் எதிர்பார்த்த வாய்ப்பு இல்லாதபோது, சீரியலில் தனக்கான தனி அடையாளத்தைப் பதிச்சார். இப்பவும் பல சீரியல்களில் நடிச்சுட்டிருக்கார். ஆனாலும், அவரின் திறமைக்கான அங்கீகாரம் சினிமாவில் கிடைக்கலையேனு எனக்கு வருத்தமுண்டு. என் நடிப்புத் திறமைக்கு 'பாண்டவர் பூமி' மாதிரியான வாய்ப்புகள் வரலையேனு அவருக்கும் வருத்தமுண்டு." 

"ஃபிட்னஸ்ல அதிக ஆர்வம்கொண்ட கணவர், உங்க ஹெல்த் விஷயத்திலும் அக்கறை காட்டுவாரா?" 

"அவருக்கு ஹெல்த் மற்றும் ஃபிட்னஸ்ல ரொம்பவே ஆர்வம் உண்டு. ஃப்ரீ டைமில் ஜிம் வொர்க் அவுட் பண்ண தவறமாட்டார். சாப்பிடும் உணவிலிருந்து காலநிலைக்கு ஏற்ப உடம்பை எப்படிப் பார்த்துக்கணும்னு பல விஷயங்களைச் சொல்லிக்கொடுப்பார். என்னையும் ஒருவாரம் ஜிம்முக்குக் கூட்டிட்டுப்போனார். எனக்கு செட் ஆகலை. வீட்டுலேயே சிம்பிளான உடற்பயிற்சி செய்யறேன். லைஃப் சூப்பரா போயிட்டிருக்கு" எனப் புன்னகைக்கிறார் ஷமிதா.
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு