Published:Updated:

''சபர்ணா ஏன் இறந்தாங்கன்னு தெரியுமா?'' - கலங்கும் உஷா எலிசபெத்

வெ.வித்யா காயத்ரி
''சபர்ணா ஏன்  இறந்தாங்கன்னு தெரியுமா?'' - கலங்கும் உஷா எலிசபெத்
''சபர்ணா ஏன் இறந்தாங்கன்னு தெரியுமா?'' - கலங்கும் உஷா எலிசபெத்

''பிரியமானவள்' சீரியலில் ஈஸ்வரி கதாபாத்திரம்மூலம் அனைவரின் மனதிலும் இடம்பிடித்தவர், உஷா எலிசபெத். தற்போது அந்த சீரியலிலிருந்து விலகி, வெள்ளித்திரையில் நடித்துவருகிறார். ''விலகினாலும் எனக்கும் அந்த சேனலுக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை'' என்றவாறே பேசத் தொடங்கினார். 

''நான், என் கணவர், என் பொண்ணு என அழகான குடும்பம். என் கணவர் ஆசிரியரா இருக்கார். 'உனக்குள் பல திறமைகள் புதைந்திருக்கு. அதை வெளிப்படுத்த தயங்காதே'னு என்னை உற்சாகப்படுத்திட்டே இருப்பார். நான் எப்போதெல்லாம் சோர்ந்து இருக்கேனோ, அப்போதெல்லாம் தாயாக மாறி என்னை அரவணைக்கிறது என் மகள்தான். சேலஞ்சிங்கான கேரக்டர் பண்றதுதான் எனக்குப் பிடிச்ச விஷயம். அதில், அர்ப்பணிப்போடு நடிப்பேன். ஒரு சீரியலில் கமிட் ஆகிட்டால், எந்த நாளிலும் அவங்க சொல்ற டைமுக்குத் தயாரா இருக்கணும். ஆனால், எல்லா நாளும் ஷூட்டிங் நடக்காது. படம் வாய்ப்பு வருதேனு அதுக்கும் போக முடியாது. திடீர்னு சீரியலுக்குக் கூப்பிடுவாங்க. இதனால், பொருளாதார ரீதியா ரொம்பவே கஷ்டப்பட வேண்டியதா இருக்குனுதான் சீரியல் போதும்னு முடிவு  பண்ணினேன். தட்ஸ் ஆல்'' என்கிற உஷா, பாடகியாகவும் அவதாரம் எடுத்துள்ளார். 

''சீரியலைவிட்டு விலகின நான்கு மாதங்கள் என்ன பண்றதுன்னே தெரியலை. சின்ன வயசிலிருந்து பாடுறது எனக்குப் பிடிச்ச விஷயம். முப்பது வருஷங்களுக்கு அப்புறம், மீண்டும் பாட ஆரம்பிப்போம்னு நினைச்சேன். பாட்டு பாடி, யூடியூப்ல அப்லோடு பண்ணினேன். அதைப் பார்த்துட்டு நிறையப் பேர் பாராட்டுறாங்க. வாய்ப்பு கிடைச்சா வெள்ளித்திரையிலும் என் குரலை நீங்க கேட்கலாம்'' என்றவர், அழகாக ஒரு பாடலைப் பாடிவிட்டுத் தொடர்ந்தார். 

''நான் எந்த சீரியலில் நடிச்சாலும் எல்லோருடனும் நெருக்கமாகிவிடுவேன். அது என் பழக்கம். இப்போ நிறையப் பேர் சின்னத்திரையில் என்னை 'அம்மா'னு கூப்பிடறாங்க. அது சந்தோஷமா இருக்கு. சில மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்ட சபர்ணாவும்  நானும் ரொம்ப குளோஸ். சின்னத்திரை நாடகங்களில் நடிக்கறவங்களுக்கு அதைத் தவிர வேற எந்த வேலையும் பார்க்க ஆர்வம் இருக்காது. அப்படித்தான் சபர்ணாவும். ஒரு வருஷமா அவளுக்குச் சின்னத்திரை வாய்ப்பு எதுவும் அமையலனு என்கிட்ட சொல்லி வருத்தப்பட்டுட்டிருந்தா. எல்லாம் சரியாகிடும்னு ஆறுதல் சொன்னேன். ஆனா, இப்படி ஒரு முடிவு எடுப்பானு கொஞ்சமும் நினைச்சுப் பார்க்கலை. தனிப்பட்ட முறையில் அவளுக்கு ஏதாவது பிரச்னை இருந்ததா என்பதைவிட, வாய்ப்பு இல்லாததுதான் இறப்புக்குக் காரணம்'' எனக் கண் கலங்கினார் உஷா. 

'வென்று வருவான்' என்கிற படத்தில் பார்வையற்ற அம்மாவாக நடித்தது சவாலாக இருந்ததாகச் சொல்லும் உஷா, ''அதில் லென்ஸ் எதுவும் பயன்படுத்தாமல் நடிச்சேன். அந்தப் படம் ரிலீஸானபோது பெருசா பேசப்படலை. இப்போ, மக்கள் பார்த்துட்டு பாராட்டறாங்க. ரொம்பவே சந்தோஷமா இருக்கேன். இப்போ, நிறையப் படங்களில் நடிச்சுட்டிருக்கேன். எனக்குப் பிடிச்ச பாடல்களையும் அடிக்கடி பதிவேற்றம் பண்ணிட்டிருக்கேன். 'பிரியமானவள்' சீரியலிலிருந்து வெளியே வந்துட்டாலும், அந்த டீமும் சேனலும் எனக்கு நெருக்கமானவங்களாவே இருக்காங்க. சின்னத்திரைக்கும் எனக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை என்பதை நிரூபிப்பதற்காகவே, 'வாணி ராணி' சீரியலில் நடிச்சேன். அந்த சீரியலில் என் கதாபாத்திரம் பெரிய அளவில் இல்லைன்னாலும், அவர்கள் என்னை அழைத்ததற்காக நடிச்சேன். சின்னத்திரையில் எனக்குக் கொடுத்த கதாபாத்திரத்துக்காக ஆந்திராவிலிருந்து காஸ்டியூம் வரவெச்சு பயன்படுத்தியிருக்கேன். அந்த அளவுக்கு அக்கறை இருக்கு. நல்ல கதாபாத்திரம் வந்தால், மறுபடியும் சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்க யோசிக்கவே மாட்டேன்'' எனப் புன்னகைக்கிறார்.