Published:Updated:

" 'பாகுபலி' சிவகாமி அக்கா... மிஸ் யூ!" 'வம்சம்' சந்தியா

கு.ஆனந்தராஜ்
" 'பாகுபலி' சிவகாமி அக்கா... மிஸ் யூ!" 'வம்சம்' சந்தியா
" 'பாகுபலி' சிவகாமி அக்கா... மிஸ் யூ!" 'வம்சம்' சந்தியா

"நேற்றுதான் 'வம்சம்' சீரியல் ஃபைனல் ஷூட் முடிஞ்சுது. ஆடியன்ஸ்போல நானும் பூமிகாவை ரொம்பவே மிஸ் பண்றேன். அவள் தாக்கத்திலிருந்து முழுமையா வெளிவர நிச்சயமா நாளாகும்" - நெகிழ்ச்சியுடன் பேசுகிறார் சந்தியா. சன் டிவி 'வம்சம்' சீரியலில் பூமிகாவாக நம் மனங்களை மயக்கியவர். முடியவிருக்கும் அந்த சீரியல் குறித்த சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்கிறார். 

" 'வம்சம்' சீரியல் நடிக்கும்போது ஏற்பட்ட மறக்கமுடியாத அனுபவம் எது?'' 

"அது நிறைய இருக்குங்க. எனக்கான கதாபாத்திரத்துக்கு நிறைய ஹோம்வொர்க் பண்ணிட்டுதான், 'வம்சம்' சீரியலில் நடிக்க ஆரம்பிச்சேன். நாலு வருஷம் ஆகுது. நேற்று நடந்த ஃபைனல் ஷூட் வரை எல்லாத்திலும் அந்த ஹோம்வொர்க் இருக்கு. அதனால்தான் சிறப்பாக நடிக்க முடிஞ்சுது. மலையில் குதிக்கிறது, கடலில் பாயறதுனு பல ரிஸ்க் போர்ஷனும் இருந்துச்சு. பூமிகா கேரக்டரைத் தவிர, மைனா மற்றும் அம்மா என மூணு ரோல்களில் நடிச்சேன். ஓர் ஆர்டிஸ்டா என் முழுத் திறமையை வெளிப்படுத்த கிடைச்ச அற்புதமான களம்தான் 'வம்சம்'. நாலு வருஷமா போகிற இடங்களில் எல்லாம் மக்கள் கொடுத்த பாராட்டு மறக்க முடியாது." 

''உங்களோடு நடித்த ஆர்டிஸ்ட் மற்றும் டெக்னீஷியன்ஸ் என்ன சொல்றாங்க?'' 

"அவங்களை ரொம்பவே மிஸ் பண்றேன். பெயரைப்போல எங்க சீரியல் ஃபேமிலியும் பெரிய வம்சம்தான். ஆர்டிஸ்ட் பட்டாளம் எல்லோரும் நெருங்கிய சொந்தக்காரங்க மாதிரி பழகிட்டோம். 'வம்சம்' சீரியல் முடியப்போகுதுனு மாசக்கணக்கில் சொல்லிட்டிருக்காங்க. அதனால், ஆரம்பத்தில் வருத்தப்பட்டு, எங்களை நாங்களே சமாதானப்படுத்திக்கிட்டோம். என் முந்தைய 'அத்திப்பூக்கள்' சீரியலின் ஃபைனல் ஷூட்டிங் சமயத்தில் பயங்கரமா அழுதுட்டேன். இப்போ, எல்லோரும் மெச்சூர்டா ஃபீல் பண்ணினோம். 'நாம பிரியப்போறதில்லை. அடுத்த சீரியல்ல ஒண்ணா நடிக்கும் வாய்ப்பு வரலாம்; அடிக்கடி சந்திச்சு பேசிக்கலாம்'னு சொல்லிக்கிட்டோம். நேத்து சீரியலின் ஃபைனல் ஷூட் முடிஞ்சதும் எல்லோரும் சந்தோஷமா விடைபெற்றோம்." 

"சீரியலின் மெயின் ஹீரோயினான ரம்யா கிருஷ்ணனுடன் நடிச்ச அனுபவம் எப்படி இருந்துச்சு?" 

"நிஜ அக்காவுடன் பழகின உணர்வு. நடிப்பைத் தாண்டி பர்ஷனல் விஷயங்களை ஷேர் பண்ணுவேன். அவங்க நடிப்புடன் போட்டிப்போட்டு நடிக்கணும்னு எனக்குள் சவால் விட்டுப்பேன். 'பாகுபலி'க்குப் பிறகு அவங்க சினிமாவில் பிஸியாகிட்டாங்க. அப்பவே, அவங்களோடு பழகும் நேரம் குறைஞ்சுடுச்சேனு வருத்தப்பட்டேன். இப்போ சீரியலே முடிஞ்சுடுச்சு. இனி 'பாகுபலி' சிவகாமி அக்காவை எப்போ பார்ப்போம்னு நினைச்சு வருத்தம் அதிகமா இருக்கு.'' 

"சமீபத்தில் வம்சத்தில் இணைந்த புது உறுப்பினர் ஊர்வசியோடு பழகினீங்களா?'' 

"ஊர்வசி மேம் சில மாசத்துக்கு முன்னாடிதான் சீரியல்ல கமிட் ஆனாங்க, அதனால ரம்யா மேம் அளவுக்கு ஊர்வசி மேம்கூடப் பழகும் வாய்ப்பு கிடைக்கலை. ஆனாலும், குறுகிய நாளிலேயே அவங்களின் நடிப்புத் திறமையைப் பார்த்து நிறைய கத்துக்கிட்டேன். ரொம்ப ஸ்வீட்டா பேசுவாங்க. பல விஷயங்களைக் கத்துக்கொடுத்தாங்க. இன்னும் கொஞ்ச நாள் அவங்களோடு நடிச்சிருக்கலாம்னு ஃபீல் உண்டாகுது.'' 

"சீக்கிரமே உங்களை வேற சீரியலில் பார்க்கலாமா?" 

"நிறைய சீரியல்ல நடிக்கணும் என்பதைவிட ஒண்ணுல நடிச்சாலும் அது நல்ல அங்கீகாரத்தைக் கொடுக்கணும் என்பதில் உறுதியா இருக்கேன். சன் டிவி 'அத்திப்பூக்கள்' சீரியலில் 2007 முதல் 2012 வரை நடிச்சேன். அடுத்து நாலு வருஷமா 'வம்சம்' சீரியல். ஸோ, பத்து வருஷத்தில் தமிழில் ரெண்டு சீரியல்தான் நடிச்சிருக்கேன். ஆனாலும், ரெண்டுமே பெரிய புகழைக் கொடுத்திருக்கு. அதனால்தான், 'ஹாய் பூமிகா'னு சொல்லும் நேரத்திலும், 'அத்திப்பூக்கள்' கற்பகம் பெயரையும் ஞாபகம் வெச்சுக் கூப்பிடுறாங்க. இதுதானே என் நடிப்புக்கான அங்கீகாரம். அடுத்த சீரியல் இன்னும் பெஸ்டா அமையணும். அதுக்காகக் கொஞ்சம் பொறுமையா இருந்து கமிட் ஆகலாம்னு இருக்கேன். கற்பகத்தை, பூமிகாவை பீட் பண்ற மாதிரி, இன்னொருத்தி சீக்கிரமே வருவாள்." (பலமாகச் சிரிக்கிறார்) 

"சினிமாவிலும் கவனம் செலுத்துட்டிருக்கீங்களா?" 

"என் பூர்வீகமான தெலுங்கு தேசத்தில் நிறைய சீரியல்களில் நடிச்சிருக்கேன். 'வம்சம்' சீரியலில் நடிக்க மாசத்துக்கு 15 நாள் ஒதுக்கினபோதும் சினிமா, விளம்பரப் படங்களில் கவனம் செலுத்தினேன். சில படங்களில் நடிச்சு முடிச்சிருக்கேன். இப்போ சில படங்களில் நடிச்சுட்டிருக்கேன். அதெல்லாம் சீக்கிரமே ரிலீஸாகும். சினிமாவில் நடிச்சாலும், சீரியல்தான் எனக்கான அடையாளமா நினைக்கிறேன்" என்கிறார் புன்னகையுடன்.