Published:Updated:

“நாடு கடந்துவந்து ஆங்கரிங் பண்றதுக்கு காரணம் காதல் கணவர்!” வீஜே தியா மேனன்

கு.ஆனந்தராஜ்
“நாடு கடந்துவந்து ஆங்கரிங் பண்றதுக்கு காரணம் காதல் கணவர்!” வீஜே தியா மேனன்
“நாடு கடந்துவந்து ஆங்கரிங் பண்றதுக்கு காரணம் காதல் கணவர்!” வீஜே தியா மேனன்

“காதல்  கணவரின் அன்பினால் முன்பைவிட ரொம்பவே உற்சாகமாக ஆங்கரிங் பண்ணிட்டிருக்கேன். சிங்கப்பூர் ரசிகர்களின் அன்பினால் நிறைஞ்சு இருக்கேன்" - உற்சாகமாகப் பேசுகிறார் தொகுப்பாளினி தியா மேனன். சன் டிவி 'சூப்பர் சேலஞ்ச்' நிகழ்ச்சிக்குப் பிறகு, 'சவாலே சமாளி' வழியே ஈர்த்துவருபவர். 

"சூப்பர் சேலஞ்ச்' அனுபவம் எப்படி இருந்துச்சு?" 

"எனக்குப் பெரிய ரீச் கொடுத்த நிகழ்ச்சி அது. ரெண்டு வருஷமா சூப்பர் அனுபவங்கள் கிடைச்சது. சினிமா செலிப்ரிட்டீஸை பேட்டி எடுத்துட்டிருந்த எனக்கு சின்னத்திரை பிரபலங்களோடு பழகவும் புரிஞ்சுக்கவும் நல்ல வாய்ப்பாக அமைஞ்சது. நிறைய சின்னத்திரை நண்பர்கள் கிடைச்சிருக்காங்க. சன் மியூசிக் ஆங்கரா இருந்தபோது, ஸ்பெஷல் நிகழ்ச்சிகளில் மட்டும் சன் டிவி காம்பியரிங் பண்ணிட்டிருந்தேன். முதன்முதலா 'சூப்பர் சேலஞ்ச்' மூலம் சன் டிவியில் முழு நேரமா ஆங்கரிங் பண்ணினேன்." 

"இப்போ 'சவாலே சமாளி' அனுபவம் எப்படி இருக்கு?" 

" 'சூப்பர் சேலஞ்ச்' முடிஞ்சதும், 'நட்சத்திரக் கபடி' நிகழ்ச்சியின் ஒரு சீசனில் ஆங்கரிங் பண்ணினேன். சின்ன பிரேக் விட்டு, 'சவாலே சமாளி' தொடங்கியிருக்கு. இப்போ மூணு எபிசோட் முடிஞ்சிருக்கு. வித்தியாசமான கேம்ஸ், வித்தியாசமான செட்னு கலர்ஃபுல்லா இருக்குது. மறுபடியும் பெரிய நிகழ்ச்சியில் காம்பியரிங் பண்றதில் வெரி ஹேப்பி.'' 

"உங்க கோ-ஆங்கர் ஆதவன் ரொம்பவே கலாய்ப்பாராமே..." 

"ஆமாம். அவரும் நானும் 'சூப்பர் சேலஞ்ச்' நிகழ்ச்சிக்கு அடுத்து இதில் ஒண்ணா ஆங்கரிங் பண்றோம். அவர் ரொம்பவே ஜாலியான டைப். நிகழ்ச்சிக்கு மட்டுமில்லாமல், பிரேக் டைமிலும் பாகுபாடு பார்க்காமல் எல்லோரையும் செமையா கலாப்பார். அவர் இருக்கும் இடம் கலகலப்பா இருக்கும். நானும் அவருக்குப் பதில் கவுன்ட்டர் கொடுத்துக் கலாய்ப்பேன்."

“இப்போ சன் மியூசிக்ல எந்த நிகழ்ச்சியையும் பண்றதில்லையே ஏன்?" 

"பிறந்தது கேரளா. டென்த் வரைக்கும் படிச்சது ஊட்டியில். அப்புறம் காலேஜ் வரை கோவையில். டென்த் படிக்கும்போதே கோயம்புத்தூரிலுள்ள ஒரு சேனலில் பார்ட் டைமா வொர்க் பண்ணினேன். அதுவே என் எதிர்காலமாக, சென்னைக்கு ஷிஃப்ட் ஆனேன். 2013-ம் வருஷம் சன் மியூசிக்ல ஆங்கரா சேர்ந்தேன். 'சுடச்சுட சென்னை', 'கால் மேல காசு', 'லவ் டுடே', 'கிரேஸி கண்மணி' உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நல்ல ரீச் கொடுத்துச்சு. 'கிரேஸி கண்மணி' நிகழ்ச்சிமூலம், ஒவ்வொரு ஊருக்கும் போய் மக்களோடு பழகும் வாய்ப்பும் அவர்களின் அன்பும் நிறைவா இருந்துச்சு. கடந்த வருஷம் கல்யாணமாகி, சிங்கப்பூர் போய்ட்டேன். ரசிகர்களுடன் தொடர்ந்து பேசமுடியாத வருத்தத்தைப் போக்கிக்க சோஷியல் மீடியாவில் அடிக்கடி லைவ் வர்றேன்." 

"காதல் கணவர் உங்க நிகழ்ச்சியைப் பார்த்து கமென்ட்ஸ் சொல்வாரா?" 

"கல்யாணத்துக்கு முன்பைவிட இப்போ ரொம்பவே சந்தோஷமா ஆங்கரிங் பண்றேன். அதுக்குக் காரணம் என் கணவர், கார்த்தி. என் நிகழ்ச்சியைப் பார்த்து, நிறைய பாசிட்டிவ் கமென்ட்ஸ் சொல்லி ஊக்கப்படுத்துவார். அதனால்தான் நாடு கடந்துவந்து ஆங்கரிங் பண்றேன். ஐடி துறையிலிருந்து தனக்குப் பிடிச்ச கிரிக்கெட் பக்கம் போனார். இப்போ, ஒரு கம்பெனியில் ஆபரேஷன் மேனேஜராவும் வொர்க் பண்ணிட்டிருக்கார். நானும் சப்போர்டிவா இருக்கேன்." 

"சிங்கப்பூர் பிடிச்சுப்போச்சா?" 

"கல்யாணத்துக்குப் அப்புறம்தான் சிங்கப்பூருக்கு முதல்முறையா வந்தேன். நிறைய வெளிநாடுகளுக்குப் போயிருந்தாலும் இந்த நாடு ரொம்ப பிடிச்சிருக்கு. நாடு முழுக்கவும் ரொம்பவே சுத்தமா இருக்கும். மக்கள் பொறுப்போடு தூய்மையை நேசிக்கிறாங்க. தமிழ் மொழி, தமிழர் நலன், தமிழ்க் கலாசாரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறாங்க. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட நம் இந்தியப் பாரம்பர்ய நிகழ்ச்சிகளை ஒரு வாரத்துக்கு முன்பும், பின்பும் கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தறாங்க. சிங்கப்பூரிலும் நிறைய கார்ப்பரேட் மற்றும் வெளிநிகழ்ச்சிகளில் ஆங்கரிங் பண்ணிட்டிருக்கேன். இங்கே இருக்கும் மக்கள் பார்த்துப் பாராட்டுறாங்க." 

"சினிமா வாய்ப்புகள் வந்திருக்கிறதா?" 

"சின்ன அளவில் தொடங்கி படிப்படியா என் மீடியா பணியில் பெரிய வளர்ச்சியை நோக்கிப் போயிட்டிருக்கேன். சினிமா வாய்ப்புகளும் வருது. நல்ல கதைகள் அமைஞ்சா நிச்சயம் நடிப்பேன். எதிர்காலம் எப்படி இருக்கும்னு தெரியலை. நல்லபடியா இருக்கும்னு உறுதியா நம்பறேன்.''

"உங்க டிரஸ்ஸிங் ஸ்பெஷலா இருக்குதே... டிசைனிங் ஆர்வம் உண்டா?" 

"நிறைய உண்டு. டிசைனரா இருக்கிற என் அக்காதான் எனக்கான டிரஸ்ஸை டிசைன் பண்ணித் தர்றாங்க. அக்காவின் எக்ஸ்பெரிமென்டுக்கு நான்தான் டெமோ பீஸ். ஃப்ரெண்ட்ஸ் பலரும் டிசைனர் என்பதால், என் டிரஸ் ஸ்பெஷலா இருக்கும். எனக்கு ரொம்ப பிடிச்ச டிரஸை சில சமயங்களில் நானே டிசைன் பண்ணுவேன். எனக்குப் புடவைதான் ரொம்ப பிடிக்கும். வெரைட்டியான சேரீஸ் உடுத்தி, சோஷியல் மீடியாவில் அப்லோடு பண்ணுவேன்."