Published:Updated:

“வீடு வாங்க உதவி பண்ணினவர் இன்னைக்கு லைஃப் பார்ட்னர்” - ‘தலையணைப் பூக்கள்’ ஆனந்தி!

வே.கிருஷ்ணவேணி
“வீடு வாங்க உதவி பண்ணினவர் இன்னைக்கு லைஃப் பார்ட்னர்” - ‘தலையணைப் பூக்கள்’ ஆனந்தி!
“வீடு வாங்க உதவி பண்ணினவர் இன்னைக்கு லைஃப் பார்ட்னர்” - ‘தலையணைப் பூக்கள்’ ஆனந்தி!

விஜய் டி.வி 'கனாக் காணும் காலங்கள்' வாயிலாக நடிப்புக்குள் நுழைந்தவர், ஆனந்தி. பிறகு, 'கார்த்திகைப் பெண்கள்' சீரியலிலும் கவர்ந்தார். 'ரெளத்ரம்', 'மீகாமன்' 'தாரை தப்பட்டை' போன்ற படங்களிலும் ஹீரோயின் தோழியாக வலம் வந்தார். 'தலையணைப் பூக்கள்' சீரியலில் படு பிஸியாக இருந்தவர், திடீரென விலகிவிட்டார். ஏன், என்ன செய்கிறார்? 

“ ‘தலையணைப் பூக்கள்' சீரியலிலிருந்து ஏன் திடீரென பிரேக் எடுத்திருக்கீங்க?'' 

“மார்ச் மாசம்தான் எனக்குக் கல்யாணம் ஆச்சு. அதுக்கப்புறமும் நடிச்சுட்டுத்தான் இருந்தேன். பர்சனலாக ஃபீல்டிலிருந்து பிரேக் எடுத்திருக்கேன். அதுக்காக கல்யாணம் ஆகிடுச்சு; இனிமே நடிக்க மாட்டேன் என அர்த்தம் இல்லை. எனக்கு நடிக்க ரொம்பப் பிடிக்கும். நடிப்புத் துறையைவிட்டு நிச்சயம் வெளியேற மாட்டேன்.'' 

''உங்கள் கல்யாணம் ரொம்ப கிராண்டாக நடந்திருக்கே... அதைப் பற்றியும் உங்கள் கணவர் பற்றியும் சொல்லுங்க''

“நாங்க கோயம்புத்தூர்ல ஒரு வீடு வாங்க முடிவுபண்ணி, தெரிந்த நண்பர்கள்மூலம் விசாரிக்க ஆரம்பிச்சோம். அப்படி நட்புரீதியாக அவர் அறிமுகமானார். அவருடைய நம்பரை என் அம்மாகிட்ட கொடுத்து, 'நீயே பேசி முடிவுபண்ணு'னு சொல்லிட்டேன். அப்படி அவங்க பேச ஆரம்பிச்சாங்க. ஒரு கட்டத்தில் 'நாங்க மாப்பிள்ளை பார்த்துட்டிருக்கோம்'னு என் அம்மா சொல்ல, 'நாங்க பெண் தேடிட்டு இருக்கோம்'னு அவங்க சொல்லியிருக்காங்க. என் கவனமெல்லாம் மீடியா, ஆக்டிங் என இருந்ததால், கல்யாணம் பற்றி யோசிக்கவே இல்லே. அஜய்குமார் எனக்கு நல்ல ஃப்ரண்ட், வெல்விஷர். அதைத்தாண்டி யோசிச்சதில்லே. அவர் முழுக்க பிசினஸ் பக்கம் இருந்தார். அவருக்கும் எனக்கும் செட் ஆகாதுனு நினைச்சோம். ஆனா, நாங்க ஃப்ரெண்டா இருந்தப்பவே நிறைய கேர் எடுத்துப்பார். இந்த மாதிரி நல்ல கேரக்டர் உள்ள ஒருத்தரை நான் பார்த்ததே இல்லே. மீடியாவைப் பற்றியும் புரிஞ்சுக்கணும், என்னைப் பற்றியும் தெரிந்திருக்கணும். அப்படி ஒருத்தர் லைஃப் பார்ட்னரா அமைந்தால்தான் வாழ்க்கை நல்லா இருக்கும். இப்படி நிறைய யோசிச்சேன். 'என் பொண்ணை கல்யாணம் பண்ணிக்க சம்பந்தமா'னு அம்மா கேட்டதும், அவங்களுக்கும் சந்தோஷமா இருந்தது. அப்போதான், அவரும் என்கிட்ட புரபோஸ் பண்ணினார். டெடி பியர் அது இதுனு நிறைய கிஃப்ட் பண்ணினார்.''

“அவர் கொடுத்த மறக்கமுடியாத கிஃப்ட்?'' 

''நிச்சயதார்த்தம் நடக்க இருந்த சமயம், என் ஐபோன் உடைஞ்சுடுச்சு. ஒரு சாதாரண போனை பயன்படுத்திட்டிருந்தேன். 'நீ இனிமே மொக்கை போனை யூஸ் பண்ணக் கூடாது'னு சொன்னவர், நிச்சயதார்த்தம் அன்னிக்கு ஐபோன் பிரசன்ட் பண்ணார். எங்க பெயர்களைப் பதிச்ச மோதிரத்தை மாத்திக்கிட்டோம். அதுக்கப்புறம் அதே டிசைனை டாட்டுவாகவும் போட்டுக்கிட்டோம். இப்படி நிறைய பரிசுகளைச் சொல்லலாம்.'' 

''புகுந்த வீட்டில் உங்களை எப்படிப் பார்த்துக்கறாங்க?'' 

''எனக்கு மாமியார் கிடையாது. அவங்க கேன்சரால் இரண்டு வருஷத்துக்கு முன்னாடி இறந்துட்டாங்க. அவங்க இருந்திருந்தா ரொம்ப நல்லா இருந்திருக்கும். ரொம்ப கேரிங்கானவங்க. அதேமாதிரி, என் கணவருக்குப் பொறுமை ஜாஸ்தி. பொறுமை, நிதானம்னா என்னன்னு அவர்கிட்ட கத்துக்கிட்டேன். ஏன்னா, எனக்கு முன்னாடியெல்லாம் அவ்வளவு பொறுமை கிடையாது.” 

“நீங்க நடிக்க வந்ததே பெரிய கதைனு சொல்றாங்களே...” 

“என் அம்மா டான்ஸ் டீச்சர். அதனால், எனக்கு டான்ஸ் ஆடக் கத்துக்கொடுத்தாங்க. ‘டான்ஸ் புரோகிராம்ல கலந்துக்கலாம், நடிக்கப்போலாம்'னு பலரும் சொன்னாங்க. ஆனால், நடிப்பு பக்கமெல்லாம் போகக் கூடாதுனு அப்பா 'தடா' போட்டுட்டார். எனக்கோ நடிக்கணும்னு ஆசை. அப்போதான் 'கனா காணும் காலங்கள்' ஆடிஷன் நடந்தது. அப்பாவுக்குத் தெரியாம அம்மாவோடு போனேன். அவ்வளவு கூட்டத்தில், போட்டியில் பல ரவுண்ட்ஸ் தாண்டி செலக்ட் ஆனேன். அப்புறம்தான் அப்பாகிட்ட சொன்னோம். 'சரி, திறமை இல்லாமல் இவ்வளவு தூரம் நீ வந்திருக்க முடியாது. ஓ.கே'னு கிரீன் சிக்னல் காண்பிச்சுட்டார். அப்புறம் என்ன... 'மானாட மயிலாட', ஜோடி நம்பர் 1' போன்ற டான்ஸ் புரோகிராமிலும் கலந்துக்கிட்டு அசத்தினேன்.'' 

''சரி, எப்போ ரீஎன்ட்ரி கொடுக்கப்போறீங்க?'' 

''வரும் ஏப்ரல் மாதத்தில் ரீஎன்ட்ரி கொடுக்கலாம்னு இருக்கேன். அதுக்கப்புறம் தொடர்ந்து நடிப்பேன். டான்ஸ், நடிப்பு என எல்லாத்திலும் மறுபடியும் என்னைப் பார்க்கலாம்.''