Published:Updated:

''நல்லாப் பாடுற யங்ஸ்டர்ஸ் வேணும்னு கேட்கிறாங்க... என் குரல் வேண்டாமாம்'' - வேதனையில் 'சூப்பர் சிங்கர்' ஃபரிதா!

''நல்லாப் பாடுற யங்ஸ்டர்ஸ் வேணும்னு கேட்கிறாங்க... என் குரல் வேண்டாமாம்'' - வேதனையில் 'சூப்பர் சிங்கர்' ஃபரிதா!
''நல்லாப் பாடுற யங்ஸ்டர்ஸ் வேணும்னு கேட்கிறாங்க... என் குரல் வேண்டாமாம்'' - வேதனையில் 'சூப்பர் சிங்கர்' ஃபரிதா!

''காதலிச்சுக் கல்யாணம் பண்ணினேன். இரண்டு பெண் குழந்தைகளோடு சந்தோஷமாக வாழவேண்டிய நேரத்தில், என் கணவர் திடீரென இறந்துவிட, அத்தனையையும் இழந்ததுபோல வாழ்க்கையில் வெறுமை. ஒரு கட்டத்தில் தற்கொலை முடிவில் என்னைத் தள்ளியது விதி. அதுவும் ஃபெயிலியராக, என் பிள்ளைகளைக் காப்பாற்றவேண்டிய பொறுப்பை கையில் எடுத்தேன்'' என்கிறார் ஃபரிதா. 'சூப்பர் சிங்கர்' வழியே உலகத் தமிழ் நெஞ்சங்களில் நுழைந்தவர். தனக்குத் தெரிந்த ஒரே விஷயம் பாட்டு என நம்பியிருந்தவர் சந்தித்த, சந்தித்துக்கொண்டிருக்கும் துன்பங்கள் அவரது ஒவ்வொரு வார்த்தையிலும் தெரிகின்றன. 

''இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள்?'' 

''என்னை யாரென்றே தெரியாத பலருக்கும் என்னை அறிமுகப்படுத்தியது விஜய் டி.விதான். அதற்கு எப்போதும் நன்றி தெரிவிப்பேன். இப்போதைக்கு உள்ளூரில் கிடைக்கும் நிகழ்ச்சிகளில் பாடிட்டிருக்கேன். நண்பர்களால் கிடைக்கும் ஷோக்களில் அவ்வப்போது பாடறேன். வீட்டுச் செலவுகளுக்கும் சாப்பாட்டுக்குமே இந்த ஊதியம் போதவில்லை. குழந்தைகளின் படிப்புச் செலவுகளுக்கு ரொம்பவே சிரமப்படறேன்.'' 

''சினிமாக்களில் பாடுவதற்கு வாய்ப்புகள் வருவதில்லையா?'' 

''இதுவரைக்கும் ஐந்து தமிழ் படங்களில் பாடியிருக்கேன். ஒன்று, அந்தப் படங்கள் ரிலீஸாகாமல் இருக்கு; இல்லைன்னா, ரிலீஸான படங்களின் பாடல்கள் பெயர் சொல்லும் அளவுக்கு இல்லை. அதனால், வாய்ப்புகளும் பெருசா வரலை. எனக்குத் தெரிந்தது பாடுவது மட்டும்தான். உழைக்க நான் தயாராக இருக்கேன். ஜூனியர்களோடு போட்டி போடவும் விரும்பலை. ஆனால், எனக்கான இடம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்பதுதான் என் ஏக்கம். சமீபத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஒரு படத்தில் பாடியிருக்கேன். ரிலீஸாகப்போகும் அந்தப் படத்தைத்தான் ரொம்பவே நம்பியிருக்கேன்.'' 

''உங்கள் குடும்பத்தார் உதவி செய்றதில்லையா?'' 

''நண்பர்களின் உதவி அவ்வப்போது கிடைக்கும். என் குடும்பத்தைச் சார்ந்தவங்களைக் கஷ்டப்படுத்த விரும்பலை. யாருக்கும் கஷ்டத்தைக் கொடுத்துடக் கூடாதுனு சமாளிச்சுட்டிருக்கேன்.'' 

''உங்கள் குழந்தைகள் பற்றி...'' 

''ரேஷ்மா, ரெஹானா என இரண்டு பொண்ணுங்க படிச்சுட்டிருக்காங்க. அவங்களுக்கு நான் சிங்காராக இருக்கிறது ரொம்பவே பெருமையாக இருக்கு. ஸ்கூலில் எல்லார்கிட்டயும், 'அம்மா இந்தப் படத்துல பாடியிருக்காங்க.. அந்தப் படத்துலப் பாடியிருக்காங்க'னு சொல்லியிருக்காங்கபோல. அதனால், 'அம்மா, நீ பாடின படம் எப்போ ரிலீஸ் ஆகும்'னு கேட்டுட்டே இருக்காங்க. என் கையில் என்ன இருக்கு. எல்லாம் விதிப்படி நடக்குது. எத்தனையோ கஷ்டத்துக்கும் நடுவில் எனக்குச் சந்தோஷம் கொடுக்கிறது என் இரண்டு கண்களுக்கு கண்ணாக இருக்கும் மகள்கள்தான்.'' 

''உங்கள் மகள்களும் பாடுவாங்களா?'' 

''ரேஷ்மாவுக்கு இப்பவே நல்லாப் பாட வருது. அடிக்கடி என்கிட்ட பாடிக் காட்டுவாள். அவளுடைய லட்சியம் டாக்டராவது. ரெஹானாவுக்கு காஸ்டியூம் டிசைனிங் ஆர்வம். எதிர்காலத்தில் காஸ்டியூம் டிசைனர் ஆவேன்னு சொல்லிட்டிருக்கா. என்னால் முடிந்த வரை கஷ்டப்பட்டு அவங்களைப் படிக்கவெச்சுடுவேன். அதுதான் என் கனவு. இதெல்லாம் இன்னும் இரண்டு, மூன்று வருடங்களுக்குள் நடந்தாகணும்.'' 

''அது என்ன இரண்டு, மூன்று வருடக் கணக்கு?'' 

''எனக்கு 36 வயசு ஆகுது. இப்பவே பலரும் 'ஃபரிதா அக்கா'னு கூப்பிடுறாங்க. என் காலம் ஓடிப்போயிடுச்சோனு தோணுது. எனக்கு அக்கானு கூப்பிடுறது பிடிச்சிருக்குன்னாலும், வயசு ஏறிட்டேப் போறதை உணரமுடியுது. இன்னும் நான்கு வருடத்தில் நாற்பதைத்  தொட்டுருவேன். அதற்குள் குழந்தைகளின் படிப்பு மற்றும் எதிர்காலத்துக்கான சேமிப்பை செய்தே ஆகணும்.'' 

''ஆர்கெஸ்ட்ராவில் ஏற்கெனவே பாடிட்டுதானே இருந்தீங்க. அங்கே வாய்ப்பு இல்லையா?'' 

''கூப்பிடுகிறார்கள். அதுவும் தொடர்ந்து கிடைக்கிறதில்லை. மாசத்துக்கு ஒரு வாய்ப்பு வருது. வருஷத்துக்கே நான்கைந்து வாய்ப்புகள்தான். எப்படிக் குடும்பத்தைச் சமாளிக்க முடியும். பல நேரங்களில் கெஸ்டாகக் கூப்பிடுகிறார்கள். 'இளமையாக இருக்கும் பாடகர்கள் யாரையாவது சொல்லுங்க. நீங்க வேண்டாம்'னு என்கிட்டேயே புது நபரைக் கேட்கறாங்க. அந்த நேரம் அவ்வளவு வேதனையாக இருக்கு. 2016-ம் வருஷம் நடந்த சூப்பர் சிங்கரில் நான் இரண்டாவதாக வந்தேன். கொஞ்சம் வாய்ப்புகள் வந்துச்சு. அப்புறம் குறைய ஆரம்பிச்சுடுச்சு. வயசைப் பார்க்காமல், அவர்களின் குரல் வளத்தைப் பார்த்தால், எங்களைப் போன்றவர்களுக்குப் பெரும் உதவியாக இருக்கும்.'' 

''எதிர்காலத் திட்டம் ஏதாவது வெச்சிருக்கீங்களா?'' 

''இந்த நிமிஷத்தை எப்படிக் கடக்கிறதுனு யோசிக்கும்போதே அவ்வளவு வேதனையா இருக்கு. எதிர்காலத்தில் வாய்ப்புக்காகக் காத்திருக்காமல், இசை ஆசிரியராகவோ, மறுபடியும் மியூசிக் கிளாஸ் வைத்தோ வாழ்க்கைக்கான ஊதியத்தைத் தேடணும். அதற்கான முயற்சியையும் ஆரம்பிக்கப் போறேன். வெளியிலிருந்து பார்க்கிறவர்களுக்கு 'இவங்களுக்கென்ன நிறைய ஷோவில் பாடுறாங்களே'னு தோணும். ஆனால், அதற்குப் பின்னால் உள்ள வலி எனக்கு மட்டும்தான் தெரியும்'' என்கிறார் ஃபரிதா, கம்மியக் குரலில்.