Published:Updated:

"எம்.ஜி.ஆர், சிவாஜி தோற்ற இடம்... 'விக்ரம்வேதா'வும், 'ஆரஞ்சுமிட்டாயு'ம் வேற வேற... இதை உணரணும்!" கந்துவட்டி... தமிழ்சினிமாவின் ஹீரோவா, வில்லனா? தொடர் - அத்தியாயம்-4

கே.ஜி.மணிகண்டன்
"எம்.ஜி.ஆர், சிவாஜி தோற்ற இடம்... 'விக்ரம்வேதா'வும், 'ஆரஞ்சுமிட்டாயு'ம் வேற வேற... இதை உணரணும்!" கந்துவட்டி... தமிழ்சினிமாவின் ஹீரோவா, வில்லனா? தொடர் - அத்தியாயம்-4
"எம்.ஜி.ஆர், சிவாஜி தோற்ற இடம்... 'விக்ரம்வேதா'வும், 'ஆரஞ்சுமிட்டாயு'ம் வேற வேற... இதை உணரணும்!" கந்துவட்டி... தமிழ்சினிமாவின் ஹீரோவா, வில்லனா? தொடர் - அத்தியாயம்-4

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே'னு ஒரு பழமொழி இருக்கு. உணவு விஷயத்தில் மட்டுமல்ல, கலைப்படைப்புக்கும் இது கச்சிதமாகப் பொருந்தும்.

"ஹீரோக்களுக்குக் கொடுக்கும் சம்பளமும், அவர்களுடைய படங்களுக்கு ஒரு தயாரிப்பாளர் செய்யவேண்டிய செலவுகளுக்கும் நிச்சயம் கடன் வாங்க முடியாமல் காய் நகர்த்த முடியாது என்பதுதான் தமிழ் சினிமாவின் நிலை. ஆனால், எவ்வளவு அதிக முதலீட்டில் படம் எடுத்தாலும், கதையும், காட்சி அமைப்பும் ரசிகர்கள் மனதில் ஒட்டவில்லையெனில், படம் ஓடாது. கடன் வாங்கிய தயாரிப்பாளர், கடனாளியாகவே தொடர்வார்கள். இங்கே, ஹீரோக்கள் தான் நடிக்கும் படங்களில் தங்களுக்கான 'ஹீரோயிஸ'த்தைக் காட்டிகொள்ள மெனக்கெடுவதில் செலவிடும் கவனத்தைக் கொஞ்சமாவது, ரசிகர்களுக்குப் பிடித்தமாதிரியான கதைகளைத் தேர்தெடுத்து நடிக்கும்போது, இந்த நிலை கொஞ்சம் மாறலாம். ஆனால், ஹீரோக்கள் அதற்குத் தயாராக இருக்கவேண்டுமே?!" - ஒருவரோ இருவரோ அல்ல... பெரும்பாலான தயாரிப்பாளர்களும், இளம் தலைமுறை இயக்குநர்களும் இந்தப் புலம்புலை முக்கியமான ஒன்றாக முன்வைக்கிறார்கள். விஷயத்திற்கு வருவோம்... தமிழ்சினிமாவைப் பொறுத்தவரை 'கந்துவட்டி ஹீரோவா, வில்லனா?' என்ற கேள்விக்கு, 'வில்லனா, ஹீரோவா என்பது முக்கியமில்லை. கந்துவட்டி வாங்கித்தான் படம் எடுக்கமுடியும் என்ற நிலை தமிழ்சினிமாவில் இல்லை' என ஆணித்தரமாகச் சொல்கிறார், இயக்குநர் தாமிரா. 'ரெட்டச்சுழி'க்குப் பிறகு இவர் இயக்கியிருக்கும் 'ஆண் தேவதை' திரைப்படத்திற்கு 'கந்துவட்டிக்குக் கடன் வாங்காமல் எடுக்கப்பட்ட சினிமா' என கேப்ஷன் கொடுக்கிறார்.

"சினிமா எடுக்கிறதுக்கு ஒரு தீர்மானம் இங்கே தேவையா இருக்கு. அது, 'பிஸ்னஸா, பேஷனா?' என்ற கேள்விக்கான பதிலைத் தெளிவா வெச்சிருக்கிறது. ஒரு படைப்பை வியாபார நோக்கத்தோட மட்டுமே அணுகும்போதுதான் எல்லாவிதமான பிரச்னைகளும் வரும். வாங்குற கடனுக்கும், கட்டுற கந்துவட்டிக்கும் சேர்த்து ரசிகர்கள் தலையில கட்டுவாங்க. யூதர்கள் ஆரம்பிச்சு வெச்சதா சொல்ற இந்த வட்டிமுறை, இப்போ முக்கியமான வியாபாரமா மாறி நிற்குது. படத்துக்காக வாங்குற கடனுக்கான வட்டியையும் சேர்த்து 'படத்துக்கான லாப நஷ்டக் கணக்கு' பார்க்கிற முறை இங்கே இருக்கு. அது தவறு. இங்கே பெரும்பாலான தயாரிப்பாளர்கள்கிட்ட தெளிவான திட்டமிடல் இல்லை. ஒரு படத்தை 90 நாள் ஷூட்டிங்கை முடிக்கணும்னு திட்டமிட்டா, படபூஜைக்கு 5 லட்சம் செலவு ஆகும். படத்தோட பட்ஜெட்ல மூன்றில் ஒரு பங்குதான், படப்பிடிப்புக்கு செலவு ஆகும். ஆக, இந்த குறைந்தபட்ச தொகை இருந்தாப் படத்தை எடுத்து முடிச்சிடலாம். 

பிரச்னை எங்கே ஆரம்பிக்குதுன்னா, எல்லா நடிகர்களுக்கும், டெக்னீஷியன்களுக்கு பணத்தை செட்டில் பண்ண பிறகுதான், ஷூட்டிங் போறதுலதான். உதாரணத்துக்கு, 3 கோடி பட்ஜெட்ல பிளான் பண்ண படத்தை எடுக்க ஒரு கோடி போதும். டெக்னீஷியன்களுக்கும், நடிகர்களுக்கும் கொடுக்கிற சம்பளத்தை, அந்தப் படம் முடியும் தருவாயில் கொடுக்கிறோம்னு அக்ரிமென்ட் போடும்போது, தயாரிப்பாளர் வட்டிக்குப் பணம் வாங்கவேண்டிய பிரச்னை இருக்காது. ஒருவேளை, அவர் வட்டிக்கு வாங்கித்தான் நடிகர்கள், டெக்னீஷயன்களுக்கு சம்பளம் கொடுக்கணும்னாலும், வட்டி கட்டுற காலம் குறையும். தவிர, இந்த முறையை ஃபாலோ பண்ணும்போது, ஷூட்டிங் முடிஞ்சு ஒரு படம் ரெடியா இருக்கும்போது, அந்தப் படத்துக்கான ஃபாரீன் ரைட்ஸ், டெலிவிஷன், ஆடியோ ரைட்ஸ் இதுமூலமா கிடைக்கிற பணத்தை வெச்சு சம்பளம் கொடுக்கலாம். இந்த முறையை ஃபாலோ பண்ணா, சினிமா வாழ்வாங்கு வாழும்!" எனச் சொல்லும் தாமிரா, அதை சாத்தியப்படுத்தும் முயற்சிகளையும் முன்வைக்கிறார்.

"இதை நடைமுறைப்படுத்துறதுக்கு ஒரே வழி, சினிமா பெயரளவுக்கு 'கூட்டுத்தொழில்'ங்கிற அடையாளத்தோட இல்லாம, உண்மையிலேயே கூட்டுத்தொழிலா மாறணும். அதுவரை கந்துவட்டிப் பிரச்னை, கடன் பிரச்னை எல்லாம் சிக்கலைக் கொடுத்துக்கிட்டேதான் இருக்கும். 'தயாரிப்பாளர் சம்பளம் கொடுக்கிறார், நாம நடிச்சிட்டுப் போய்க்கிட்டே இருப்போம்'ங்கிற மனநிலை மாறி, படத்துக்காக உழைக்கிற அத்தனை நடிகர்கள், டெக்னீஷியன்களும் அதைத் தங்களுடைய படைப்பாகப் பார்க்கும்போது பிரச்னை இருக்காது. தவிர, இங்கே வட்டிக்குப் பணம் வாங்குற பிரச்னையைவிட, எப்படிப் படம் எடுக்கிறதுனு தெரியாம இருக்கிறது வேறொரு பிரச்னை.

"மலையாள சினிமாவுல நட்பு ரீதியா செயல்பட்டுக்கிட்டு இருக்காங்க. ஒரு இயக்குநர், தன்னோட நண்பரோட படத்துக்கு வசனம் மட்டும் எழுதுறார், இன்னொரு படத்தோட கதை விவாதத்துல கலந்துக்கிறார். படைப்பாளிகளுக்குள்ள ஈகோ இல்லாம வொர்க் பண்ற மனநிலை இருக்குல்ல, அது இங்கே கிடையாது. தவிர, அங்கே வியாபாரத் தன்மை எப்படி இருக்குன்னா, ஒரு நடிகரோட் படம் நல்லா ஓடுதுன்னா, அடுத்த படத்துக்கான சாட்டிலைட் ரைட்ஸை விற்று, அடுத்த படத்தைத் தொடங்கிடுறாங்க. 'சாட்டிலைட் ரைட்ஸ்ல அவ்வளவு பணம் கிடைக்குமா'னு கேட்கலாம். ஆனா, கிடைக்கும்ங்கிறதுதான் உண்மை. சேட்டிலைட், எஃப்.எம்.எஸ் ரைட்ஸை அடிப்படையா வெச்சுத்தான் படத்தோட பட்ஜெட்டைத் தீர்மானிக்கிறாங்க. அதாவது, உற்பத்தியும் வியாபாரமும் அங்கே ஒரே சமயத்துல நடக்குது. கலெக்‌ஷனைப் பொருத்துதான் நடிகர்களுக்குச் சம்பளம் கொடுக்குறாங்க. தியேட்டர் மூலமா கிடைக்கிற வருமானம், தயாரிப்பாளர்களுக்குக் கிடைக்கிற போனஸ். இதுதான் மலையாள சினிமாவின் தற்போதைய நடைமுறை. ஏன் மலையாளத்துல தொடர்ந்து நல்ல படங்கள் வருதுனு தெரியுதா?

அங்கே சேட்டிலைட் ரைட்ஸை வெச்சு பட்ஜெட் போடுறாங்க. இங்கே சேட்டிலைட் ரைட்ஸ்லகூட தயாரிப்பாளர்களை ஏமாத்திக்கிட்டு இருக்காங்க. இங்கே சேட்டிலைட் ரைட்ஸை 'மோனோபோலி' அதாவது, தனியுரிமையா விற்கிற நிலை இருக்கிறதுனால, விலையை வாங்குறவங்க தீர்மானிக்கிறாங்க. இந்த நடைமுறைக்கு இடையில நிறைய இடைத்தரகர்கள் பண்ற பிரச்னைகள் இருக்கும். எந்த ஒரு வியாபாரமும் இடைத்தரகர்கள் மூலமா நடந்தா, உற்பத்தியாளருக்கும், பயனாளிகளுக்கும் நல்லது இல்லை. ஆனா, இதுதான் தமிழ்சினிமாவுல தொடர்ந்து நடந்துக்கிட்டு இருக்கு. கும்பகோணத்துல இருக்கிற ஒரு தியேட்டருக்கு, '130 ரூபாய் டிக்கெட் ரேட் போட்டா, படம் பார்ப்பாங்களா?'னு இடைத்தரகர்கள்தான் வியாபாரம் பேசிக்கிட்டு இருக்காங்க. இது எவ்வளவு தப்பான விஷயம்?" என்றவரிடம், சமகால நடிகர்களான விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் இருவரையும் முன்வைத்துச் சொல்லும் உதாரணம், மிக முக்கியமான ஒன்று. 

"படம் எடுக்கும் தயாரிப்பாளர்களோட நடைமுறை சரியில்லை. ஏ.வி.எம், வாசன், ஜெமினி போன்ற பெரு நிறுவனங்கள் படம் எடுத்துக்கிட்டிருந்து காலத்துல அதாவது, தயாரிப்பாளர்கள் முதலாளிகளாக இருந்த சமயத்துல 'கதைக்கு' பட்ஜெட் தீர்மானிப்பாங்க. ஒரு கதைக்கு சிவாஜி நடிச்சா இவ்ளோ பட்ஜெட், எம்.ஜி.ஆர் நடிச்சா இவ்ளோ பட்ஜெட்... என்பதுதான் அன்றையை நடைமுறை. ஆனா, இன்னைக்கு சிவகார்த்திகேயன் படத்துக்கும், விஜய்சேதுபதி படத்துக்கும் ஒரே பட்ஜெட் போடுறாங்க. அதாவது, 'கதைக்கு, பட்ஜெட்' என்ற நிலை மாறி, 'நடிகர்களைப் பொருத்து' பட்ஜெட் தீர்மானம் ஆகுது. பிறகு, படத்தோட மொத்த வியாபார பாரமும் அந்த நடிகரின் தலையில் வந்து இறங்குது. ஏன் இந்தப் பிரச்னை... தயாரிப்பாளர், அந்த நடிகருக்கு இருக்கும் 'இமேஜ்' படத்தை எப்படியாவது காப்பாத்திடும்னு நம்புறார். ஆனா, 'இமேஜ்' என்பது மாயத்தன்மைதானே?

ஒரு நல்ல உதாரணம் சொல்றேன். 'விக்ரம்வேதா'வுக்குப் பிறகு விஜய்சேதுபதியோட இமேஜ் மாறிடுச்சு, அவருக்கான மார்க்கெட் அதிகம் ஆயிடுச்சுனு சொல்லி, அடுத்த படத்துக்கும் அதே பட்ஜெட், அதே மார்க்கெட்டைக் குறி வைக்கிறாங்க. இப்போ, விஜய்சேதுபதி 'ஆரஞ்சு மிட்டாய்' மாதிரி ஒரு படம் எடுக்கும்போது, 'விக்ரம்வேதா'வுக்குக் கிடைச்ச வசூலும், வரவேற்பும் நிச்சயம் இந்தப் படத்துக்குக் கிடைக்காது. ஆனால், தயாரிப்பாளர்கள் 'ஆரஞ்சு மிட்டா'யை 'விக்ரம்வேதா'வோட மார்க்கெட்டை நம்பி எடுப்பாங்க. இதுதான், இங்கே பெரிய பிரச்னை. 'விக்ரம்வேதா'வுக்கான ரசிகர்கள், மார்க்கெட், பட்ஜெட் வேற... 'ஆரஞ்சு மிட்டாய்'க்கான ரசிகர்கள், மார்க்கெட், பட்ஜெட் வேற! 'விக்ரம்வேதா' வெற்றிக்குப் பிறகு ஒருவர் 'ஆரஞ்சு மிட்டாய்' மாதிரியான கதையை விஜய்சேதுபதிகிட்ட சொன்னா, அவரோட சம்பளம், படத்தோட பட்ஜெட் எல்லாம் மாறியிருக்கும். அப்போ சில கோடிகள்ல எடுக்கலாம்னு நினைச்ச 'ஆரஞ்சு மிட்டாய்' படத்தை, பல கோடி பட்ஜெட்டுக்கு மாத்தணும். அப்படி மாத்தும்போது, படத்தோட ஒட்டுமொத்த தன்மையும் உருக்குலைஞ்சு போகும். இங்கே ஒரு படம் ஹிட் ஆகி, நல்ல வசூல் கொடுத்தா, அடுத்த படத்துக்கும் அது நிச்சயம் கிடைக்கும்னு நினைக்கிறதுகூட பரவாயில்லை. 'அதைவிட அதிகம் கிடைக்கும்'னு நினைச்சு, படத்தோட பட்ஜெட்டை அதிகப்படுத்துற நிலை இருக்கே... அதை மாத்திக்கிட்டாலே பாதிப் பிரச்னைகள் காணாம போயிடும்!

நடிகர்கள்கிட்ட இருக்கிற இன்னொரு முக்கியமான பிரச்னை, ஒரு படம் நல்லா ஓடி... தனக்கான ஒரு மார்க்கெட் உருவாயிடுச்சுனா, அது குறையும்போது, 'எனக்கான மார்க்கெட் குறைஞ்சிருக்கு'னு ஒப்புக்கவே மாட்டாங்க. எம்.ஜி.ஆரும் சிவாஜியும் தோற்ற இடம் இது. ஆனா, ரஜினி, கமல், விஜய், அஜித் தோற்றதை வெளிக்காட்டிக்கமாட்டாங்க. ஆனா, அதை எத்தனை நாளைக்கு மறைச்சுவைப்பீங்க? 'தங்கமுட்டை' போடுற வாத்து எப்பவுமே முட்டையை மட்டுமே போட்டுக்கிட்டு இருக்காது. ராமராஜனுக்கு இல்லாத ஆடியன்ஸா... இன்னைக்கு அவரோட நிலை என்ன? சமூகம் குற்றங்களைக் கண்டுக்காம இருக்கும்ங்கிறதுக்காக, தப்புப் பண்ணிக்கிட்டே இருக்கக்கூடாது. ஏன்னா, சமூகம் விழிப்படைந்து தண்டிக்கும்போது, அந்த தண்டனை மிகக் கொடூரமா இருக்கும். இதுதான் சமூக அறம். இதை அத்தனை படைப்பாளிகளும் உணரணும்!" என்று முடிக்கிறார், இயக்குநர் தாமிரா.

உண்மைதான், 'சுப்ரமணியபுரம்' எடுத்த சசிகுமார்தான், 'பிரம்மன்', 'பலே வெள்ளயத்தேவா' மாதிரியான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். அந்தப் படங்கள் ஓடும் எனவும் நம்புகிறார். ஆனால், மீண்டும் மீண்டும் செய்த தவறுகளையே தொடர்ந்து செய்யும்போது ரசிகர்கள் திருப்பி அடிப்பார்கள். ஏனெனில், நடிகர்களோட நம்பிக்கையைவிட, ஆடியன்ஸ் ஒரு படத்தின்மேல வைக்கிற நம்பிக்கை மிக மிக முக்கியமான ஒன்று. 

முந்தைய பாகங்களைப் படிக்க : பாகம் 1 பாகம் 2 பாகம் 3