Published:Updated:

“நடிக்கிறதை நிறுத்திடலாம்னு நினைச்சிருக்கேன்!” ‘அழகு’ ஸ்ருதி ராஜ்

“நடிக்கிறதை நிறுத்திடலாம்னு நினைச்சிருக்கேன்!” ‘அழகு’ ஸ்ருதி ராஜ்
“நடிக்கிறதை நிறுத்திடலாம்னு நினைச்சிருக்கேன்!” ‘அழகு’ ஸ்ருதி ராஜ்

“நான் நினைச்சதை விட மக்கள் என் மேல் நிறைய அன்பு வெச்சிருக்காங்க. அதனால அவங்களுக்குப் பிடிச்ச மாதிரி தொடர்ந்து எட்டு வருஷமா சீரியல்கள்ல நடிச்சிட்டிருக்கேன்” - உற்சாகமாகப் பேசுகிறார், நடிகை ஸ்ருதி ராஜ். சன் டிவி 'அழகு' சீரியலில் சுதா கேரக்டரில் நடித்துவருபவர்.

“அழகு சீரியலில் நடிக்கும் அனுபவம் எப்படியிருக்குது?”

“ ‘அழகு’ சீரியல் ஒளிபரப்பாக ஆரம்பிச்சு மூணு வாரங்கள்தாம் ஆகியிருக்கு. இப்போதைக்குக் கதையில என்னோட போர்ஷன், அப்பப்போ வந்துபோற மாதிரிதான் இருக்கும். 'சூப்பர்!'னு சொல்லிக்கிற அளவுக்கு என்னோட பங்களிப்பு இன்னும் ஸ்டார்ட் ஆகலை. இந்த சீரியல்ல என்னோட கதாபாத்திரம் முக்கியமான தருணத்துல பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். வெயிட் பண்ணுங்க ரசிகர்களே...”

“ ‘அபூர்வராகங்கள்’ சீரியலில் ஹீரோயினாக நடிக்கும் அனுபவம்...”

'தென்றல்' என் ஆக்டிங் கரியர்ல பெரிய பிரேக் கொடுத்த சீரியல். அதுக்குப் பிறகு மற்ற சேனல்கள்ல சில சீரியல் பண்ணினேன். மறுபடியும் சன் டிவியில ‘அபூர்வராகங்கள்’ சீரியல் ஹீரோயினா நடிக்கிறேன். ‘தென்றல்’ சீரியல் துளசி, யார் எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கிற அப்பாவி. ஆனா, அபூர்வ ராகங்கள் பவித்ரா அப்பாவியா இருப்பா... அதே சமயம் போல்டா எகிறிக் குதிப்பா." 

“எல்லா சீரியல்கள்லேயும் சாஃப்டான ரோல்லயே நடிக்கிறீங்களே. ஏன்?”

“ 'தென்றல்' சீரியல் துளசி கேரக்டர் தாக்கமா இருக்கலாம். அதனாலதான் அடுத்தடுத்து பாசிட்டிவான கதாபாத்திரங்களே வருதுன்னு நினைக்கிறேன். என்னை நம்பி வரும் ரோல்ல பெஸ்டைக் கொடுக்கிறேன். நிஜ லைஃப்லயும் நான் அமைதிதான். பிடிக்காதவங்ககூட எந்தப் பிரச்னையும் பண்ணாம அமைதியா விலகிடுவேன். ஆனா, துளசி கேரக்டர் அளவுக்கு அப்பாவி இல்லை. அப்படியிருந்தா லைஃப்ல நம்மளை எல்லாரும் கும்மிடுவாங்க (பலமாகச் சிரிக்கிறார்)."

“இப்போ சினிமாவில் நடிக்கும் ஆசைகள் இல்லையா?"

"ஏழாவது படிக்கிறப்போவே ஒரு மலையாளப் படம் மூலமாக சினிமாவுக்கு வந்துட்டேன். அடுத்தடுத்து மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடப் படங்கள்ல ஹீரோயினா நடிச்சேன். அப்போ கேரளாவிலிருக்கும் எங்கக் கிராமத்துலேருந்து அப்பாவோடு சென்னைக்கு வந்து நடிச்சுட்டுப்போவேன். சினிமா பின்புலம் இல்லாததால நல்லது கெட்டது சொல்லக்கூட எனக்கு உடன் யாருமில்லை. அதனால நல்லா படிச்சுட்டிருந்த என்னால படிப்பில் சரியா கவனம் செலுத்த முடியலை. மற்ற மொழிப் படங்களால்கூட எனக்கு ஓரளவுக்குப் புகழ் கிடைச்சுது. ஆனா, தமிழ்ப் படங்களால் பெருசா ரீச் எனக்குக் கிடைக்கலை. ஒருகட்டத்துல ஆக்டிங்கை நிறுத்திடலாம்னு நினைச்ச சமயத்துலதான் 'தென்றல்' வாய்ப்புக் கிடைச்சுது. அதுக்குப் பிறகு எங்க போனாலும் 'துளசி'னு கூப்பிட ஆரம்பிச்சாங்க. சீரியல் எனக்கு அம்சமா செட் ஆகிட்டதால, சினிமாவுல பெருசா கவனம் செலுத்துறதில்லை. ஆனா, நல்ல கேரக்டர் வந்தா சினிமாவிலும் நடிப்பேன்."

“ ‘ஒருவேளை படிப்பிலேயே கவனம் செலுத்தியிருக்கலாமே’னு ஃபீல் பண்ணியிருக்கீங்களா?”

(சிரிப்பவர்) “சினிமாவுல நடிச்சிட்டிருந்தப்போ, அப்படி நினைச்சிருக்கேன். ஆனா, சீரியல்ல நடிக்க ஆரம்பிச்சப்பிறகு அந்த எண்ணம் வரலை. ஏன்னா, தொடர்ந்து எட்டு வருஷமா சீரியல்ல எனக்குப் பிடிச்ச கேரக்டர்ஸ் வந்திட்டிருக்குது. மக்களோட அன்பும் தொடர்ந்து எனக்குக் கிடைச்சிட்டிருக்குது. அதனால சந்தோஷமா நடிச்சிட்டிருக்கேன்."

“சமீபத்துல ஃபேஸ்புக் லைவில் ரொம்பவே நெகிழ்ச்சியாகப் பேசினீங்களே...”

“மூணு மாசத்துக்கு முன்னாடிதான் ஃபேஸ்புக்ல அக்கவுன்ட் தொடங்கினேன். ஃபேஸ்புக்ல கடைசியா வந்த ஆள் நானாகதான் இருப்பேன். 'ஆடியன்ஸ்கிட்ட ஃபேஸ்புக் லைவ்ல பேசலாமே'னு ஒருநாள் முடிவெடுத்துப் பேசினேன். ஆனா, நான் நினைச்சதுக்கு மேல எக்கச்சக்க ஃபேன்ஸ் என் நடிப்பைப் பாராட்டினாங்க. பாசிட்டிவான நிறைய கமென்ட்ஸ் சொன்னாங்க. அதனால கொஞ்சம் எமோஷனலாகிட்டேன். இனி அடிக்கடி ஃபேஸ்புக் லைவ் வரலாம்னு இருக்கேன்" எனப் புன்னகைக்கிறார் ஸ்ருதி ராஜ்.