Published:Updated:

''நான் ஏன் இன்னமும் திருமணம் செஞ்சுக்கல தெரியுமா..!'' 'தமிழ் கடவுள் முருகன்' அம்மு பர்சனல்

''நான் ஏன் இன்னமும் திருமணம் செஞ்சுக்கல தெரியுமா..!''  'தமிழ் கடவுள் முருகன்' அம்மு பர்சனல்
''நான் ஏன் இன்னமும் திருமணம் செஞ்சுக்கல தெரியுமா..!'' 'தமிழ் கடவுள் முருகன்' அம்மு பர்சனல்

விஜய் தொலைக்காட்சி 'தமிழ்க் கடவுள் முருகன்' சீரியலில் சரஸ்வதியாக நடித்துவருகிறார் அம்மு. பல வருடங்களாக சின்னத்திரையிலும், வெள்ளித்திரையிலும் நடித்துவருபவரை, அவருடைய வீட்டில் சந்தித்தோம். கிச்சனில் காய்களை நறுக்கிக்கொண்டே பேச ஆரம்பித்தார். 

''இத்தனை வருஷமா ஃபீல்டில் இருக்கீங்க... முன்னர் பார்த்த மாதிரி அப்படியே இருக்கீங்களே?"
 
''கிட்டத்தட்ட 10 வருஷமா நடிச்சிட்டிருக்கேன். நல்லா சாப்பிடுவேன், நல்லா தூங்குவேன். அதுமட்டுமில்லாம, நான் பரதநாட்டிய டான்ஸர் என்பதால், உடம்பு அப்படியே மெயின்டெயின் ஆயிட்டிருக்கு. எல்லாத்துக்கும் மேல, என் அப்பா, அம்மா, அண்ணன், தங்கச்சி என்னோட ஹேப்பி ஃபேமிலி எனக்கு பெரிய சப்போர்ட்.'' 

''இப்பவும் டான்ஸ் ஆடிட்டு இருக்கீங்களா?"

''பரதத்தைப் பொறுத்தவரைக்கும் கற்றலுக்கு எல்லையே இல்லை. தொடர்ந்து கத்துக்கிட்டேதான் இருக்கேன். வரவிருக்கிற மார்கழி உத்சவத்துல பரதம் ஆடயிருக்கிறேன்.'' 

"திருமணம் செய்வதை தள்ளிப்போடுவதற்கு என்ன காரணம்?"

எனக்குத் திருமணம் பண்ணிக்கணும்னு இப்போ வரைக்கும் தோணவே இல்ல. அதுமட்டுமில்லாம ஒருத்தரைப் பார்க்கும் போது, நம்மளுடைய மனசுல ஏதாவது ஒரு மூலையில ஒரு பல்பு எரியணும். எனக்கு அப்படி எதுவும் நடக்கல. அதுக்காக லவ் மேரேஜ்தான் பண்ணிப்பீங்களானு கேட்காதீங்க. அப்படியெல்லாம் எந்தக் கொள்கையும் கிடையாது. எனக்கு நிரந்தர உறவு வேணும். எல்லோரும் சொல்றதுக்காகக் கல்யாணம் பண்ணிகிட்டு பிடிக்கலைனு விவாகரத்துப் பண்றதுல எனக்கு உடன்பாடு இல்ல. என்னைப் புரிஞ்சிகிட்டு என்னுடைய சுக, துக்கங்களைப் பங்கிட்டுகொள்கிற மாதிரி ஒரு நல்ல மனிதருக்காகத்தான் காத்துட்டு இருக்கேன்.

"நடிப்பைத் தவிர, வேற என்னென்ன விஷயங்களில் ஆர்வம்?"

"நான் பி.ஏ சைக்காலஜி படிச்சிருக்கேன். வருங்காலத்துல கவுன்சலிங் சென்டர் ஆரம்பிக்கணும்னு ஒரு ஐடியா இருக்கு. அதனால இப்போ பி.எஸ்.சி சைக்காலஜி படிச்சிட்டு இருக்கேன்.

"பல காரணங்களுக்காக, சின்னத்திரை நடிகர்களில் சிலர் தற்கொலை செய்யுமளவுக்குப் போய்விடுகிறார்களே?"

"கொஞ்ச நாள் என்னை டிவியில பார்க்காததால, நடிப்புக்கு நான் பிரேக் விட்டதாத்தான் எல்லோரும் நினைச்சாங்க. ஆனா, நான், ஆர்.ஜே வேலை பண்ணிகிட்டு இருந்தேன். அதே மாதிரி ஒருசில படங்களில் நடிச்சிட்டு இருந்தேன். சீரியல் மட்டும்தான் எல்லாமேனு நினைக்கக் கூடாது. அதைத் தவிர வேற என்ன பண்ணலாங்கிற பிளானும் இருக்கணும். எனக்கு சீரியல் இல்லனா, வீஜே பண்ற வாய்ப்பு இருக்கு அதுவுமில்லனா கவுன்சலிங் சென்டர் வைக்குற ஒரு ஆப்ஷனும் இருக்கு. இப்படி ஒவ்வொருவருத்தரும் தன்னை பிஸியாகவும் சம்பாதிப்பதற்கானதாகவும் மாற்றி அமைச்சிக்கிட்டா, தற்கொலை முடிவுக்குப் போக வேண்டியதில்லை. ஏன்னா, சின்னத்திரையில் பலரின் தற்கொலைக்கு, வாய்ப்பு இல்லாததது முக்கியமான காரணமாக இருக்கு. 

"மந்திரப் புன்னகையில் சந்தானத்துக்கு ஜோடியாக நடிச்சீங்க. இப்போ அவர் ஹீரோவா கலக்குறாரே..?"

" 'மந்திரப் புன்னகை' படத்துல நடிக்கும்போது, என் கூட எப்படிப் பழகுனாரோ அப்படித்தான் இப்பவும் இருக்கார். ஹீரோவா மாறினாலும் அவருடைய இயல்பு கொஞ்சம் கூட மாறல. இப்போவும் நாங்க ரெண்டு பேரும் ஃபெஸ்ட் ப்ரண்ட்ஸாக இருக்கோம்."

"சமீபத்தில் கிடைத்த மறக்கமுடியாத பாராட்டு..?"

"தமிழ்க் கடவுள் முருகன் சீரியலை ஹிந்தி டைரக்டர் தீபக் இயக்குகிறார். அவர் என்னை வித்யா பாலனோடு ஒப்பிட்டுப் பாராட்டினார். அதை என்னால மறக்கவே முடியாது. வேற மொழிப்படங்களை இயக்குற இயக்குநரிடமிருந்து இப்படி ஒரு பாராட்டு கிடைச்சது உண்மையாவே பெருமையா இருக்கு."


 

"உங்க வாழ்க்கையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்..?"

செல்லபிராணிகள் வளர்ப்பது எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம். எங்க வீட்ல நிறைய பெட்ஸ் இருக்காங்க. என்னுடைய செல்லமான நாய் இறந்தப்ப என்னால தாங்கிகொள்ளவே முடியல. அந்த வாரம் முழுக்க என்னால நார்மலான மனநிலைக்கு வர முடியல.


"எதிர்காலத் திட்டம்..?"

"பெரிய திட்டம் எல்லாம் எதுவும் இல்ல. கடவுள் கொடுத்த வாழ்க்கையை எந்த எதிர்பார்ப்பும் இல்லாம சந்தோசமா வாழ்ந்துட்டு போய்டணும்."

அடுத்த கட்டுரைக்கு