Published:Updated:

''ஹனிமூனுக்கு நாத்தனார் ஃபேமிலியோட போனோம்!'' - 'டான்ஸ் ஜோடி டான்ஸ் 2.0' மேக்னா வின்சென்ட்

வெ.வித்யா காயத்ரி
''ஹனிமூனுக்கு நாத்தனார் ஃபேமிலியோட போனோம்!'' - 'டான்ஸ் ஜோடி டான்ஸ் 2.0' மேக்னா வின்சென்ட்
''ஹனிமூனுக்கு நாத்தனார் ஃபேமிலியோட போனோம்!'' - 'டான்ஸ் ஜோடி டான்ஸ் 2.0' மேக்னா வின்சென்ட்

'தெய்வம் தந்த வீடு' சீரியலில் அமைதியான மருமகளாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர் மேக்னா வின்சென்ட். அவரது திருமணத்துக்காக நடிப்புக்கு பிரேக் விட்டு கேரளாவிற்கே சென்றார். திருமணமாகி ஏழு மாதங்கள் ஆன நிலையில் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'டான்ஸ் ஜோடி டான்ஸ் 2.0'- வில் போட்டியாளராகப் பங்கேற்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். சீரியலில் அமைதியாய் வந்து சென்ற சீதாவா இப்படி ஆடுகிறார்..? என்ற கேள்வி அனைவரின் மனத்திலும் தொக்கி நிக்க அவரை தொடர்பு கொண்டு பேசினோம்.

எப்போது சீரியலில் நடிக்க ஆரம்பிச்சீங்க..?

தமிழில் தெய்வம் தந்த வீடுதான் என்னுடைய முதல் சீரியல். எனக்கு ஸ்கிரீன் புதுசு இல்ல. நான்கு வயசாக இருக்குபோதே நடிக்க வந்துட்டேன். ஸ்கிரீனில் அறிமுகமானது, 'பாப்பி' என்கிற குடை விளம்பரத்தில்தான். அதுக்கப்புறம், ஆன்மிக சீரியலான 'ஶ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா' மற்றும் 'ஆட்டோகிராஃப்' போன்ற சீரியல்களில் நடிச்சேன். அதற்குப் பின்னாடி தொடர்ந்து நிறைய மலையாள சீரியல்ல நடிச்சிருக்கேன். நிறைய விளம்பரங்களிலும் நடிச்சிருக்கேன். பத்தாம் வகுப்புக்காக என் நடிப்பை கொஞ்ச நாள்கள் நிப்பாட்டி வெச்சிருந்தேன். படிப்பு முடிச்சதும் கிடைச்ச வாய்ப்புதான் தமிழில் 'தெய்வம் தந்த வீடு' சீரியல்'. அதுக்கப்புறம் இப்போதான் தமிழில் அந்த ரியாலிட்டி ஷோக்குள்ள நுழைஞ்சிருக்கேன்.

சீரியலில் அமைதியான மருமகளா நடிச்ச மேக்னா தானா இது..?

ஆமாங்க.. அதே மேக்னாதான். சொல்லப்போனா உங்களுடைய சீதாதான்.. என்னுடைய திருமணத்திற்காக நடிப்பிற்கு பிரேக் விட்டேன். நான் நிறைய ரியாலிட்டி ஷோவில் டான்ஸ் ஆடியிருக்கேன். அதைப் பார்த்துட்டுதான் ஜீ தமிழ் சேனலில் கூப்டாங்க. சரி, நம்மளுடைய திறமையை நாமலே சோதிச்சுப் பார்க்கலாமேனு ஓகே சொன்னேன்.

டான்ஸ் முறையா கத்துட்டு இருக்கீங்களா..?

நான் பரதநாட்டிய டான்ஸர். அரங்கேற்றம் கூட பண்ணியிருக்கேன். இப்போ வரைக்கும் டான்ஸை விடாம கத்துட்டு இருக்கேன். டான்ஸ்க்கு எல்லையே கிடையாது. கடைசி வரைக்கும் அதுல கத்துக்க நிறைய விஷயங்கள் இருக்கு. இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வின் பண்ணணும்னுலாம் எனக்கு ஆசையில்லை. என்னால முடிஞ்ச அளவுக்கு என்னுடைய திறமையை வெளிப்படுத்தணும் அதுக்காகத்தான் நிறைய ஹார்டுஒர்க் பண்றேன்.

ஃபேமிலி சப்போர்ட்..?

நான் எங்க வீட்டுல எப்படிச் செல்லப் பிள்ளையா இருந்தேனோ அதே மாதிரிதான் என் கணவர் வீட்டுலையும் இருக்கேன். என்னுடைய கணவர்தான் என்னுடைய பலமே.. என் மாமியார் என்னை மகள் மாதிரி பார்த்துக்குறாங்க. திருமணத்துக்கு முன்னாடியே நானும், என் நாத்தனாரும் நல்ல தோழிகள். இப்போ எங்களுக்குள்ள இருக்குற நெருக்கம் இன்னும் அதிகமாகியிருக்கு. அவங்களுடைய சப்போர்ட்னால தான் என்னால இவ்வளவு தூரம் என்னுடைய திறமையை வெளிப்படுத்த முடியுது.

தல கிறிஸ்துமஸ்ல என்ன ஸ்பெஷல்..?

இதுவரைக்கும் நான் கிறிஸ்துமஸை என்னுடைய பெற்றோர்கள் கூடதான் கொண்டாடியிருக்கேன். இப்போ என்னுடைய கணவர், மாமனார், மாமியார்னு கொண்டாடும்போது அது புது அனுபவமா இருக்கு. நான் என் கணவருக்கும், அவர் எனக்கும் டிரெஸ் வாங்கிக் கொடுத்தோம்.

ஹனிமூன் ஸ்பெஷல்..?

தாய்லாந்துல ஆரம்பிச்சு ஜாலியா ரவுண்ட் அடிச்சோம். ஹனிமூனுக்கு நானும், என் கணவரும் மட்டும் தனியாப் போகல.. எங்க கூட என்னுடைய நாத்தனாரும், அவங்களுடைய கணவரும் வந்தாங்க. நாலு பேரும் போனதுனாலதான் செம ஃபன்னா இருந்துச்சு.

மேன்னாவை சீரியலில் மறுபடியும் எதிர்பார்க்கலாமா..?

நிச்சயமா எதிர்பார்க்கலாம். பேசும் கதாபாத்திரமா வந்தா நிச்சயம் நடிப்பேன். ஆனா, இப்போ வரைக்கும் எந்த சீரியலும் கமிட் ஆகல. 

தொடர்ந்து ரியாலிட்டி ஷோவில் உங்களை எதிர்பார்க்கலாமா..?

இதுதான் தமிழில் முதல் ரியாலிட்டி ஷோ. இதுல என்னுடைய பலமும், பலவீனமும் எனக்குத் தெரிஞ்சிடும். அதுக்கு அப்புறம்தான் எதுனாலும் முடிவு பண்ணணும்.