Published:Updated:

``நானும் அவரும் இப்பவும் குட் ஃப்ரெண்ட்ஸ்!” - ராமராஜன் பற்றி நளினி

``நானும் அவரும் இப்பவும் குட் ஃப்ரெண்ட்ஸ்!” - ராமராஜன் பற்றி நளினி
``நானும் அவரும் இப்பவும் குட் ஃப்ரெண்ட்ஸ்!” - ராமராஜன் பற்றி நளினி

‘சின்ன பாப்பா பெரிய பாப்பா' சீரியலின் மூலம் நகைச்சுவை கதாபாத்திரத்தில் தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துகொண்டவர் நடிகை நளினி. அனைவரிடமும் அன்பாகப் பழகும் குணம் இவருடைய ப்ளஸ். தனக்கேயான பாசப் புன்னகையுடன் பேசத் தொடங்கினார். 

“ 'வாணி ராணி' சீரியலில் வில்லியாக களம் இறங்கியிருக்கிறீங்களே...'' 

“நான் சின்னத்திரையில் நுழைந்தபோது, மோசமான மாமியாரா நடிச்சேன். வீட்டுக்குப் போனாலும் அந்தக் கேரக்டரைப் பழக்கப்படுத்த, அப்படியே இருப்பேன். கொஞ்ச நாளில் என் பிள்ளைகள் 'அம்மா நீங்க இப்படி இருக்கிறதே எங்களுக்குப் பிடிக்கலை. தயவுசெய்து இனிமே நெகட்டிவ் ரோல் நடிக்காதீங்க'னு சொன்னாங்க. பசங்க சொல்லைத் தட்ட முடியலை. பிறகுதான் முழுக்க முழுக்க காமெடி கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பிச்சேன். 'வாணி ராணி' சீரியலுக்குக் கூப்பிட்டபோது, 'இதில் சீரியஸான வில்லி கிடையாது'னு சொன்னதால் ஒப்புக்கிட்டேன். ஸோ, மோசமான வில்லியா எப்பவும் நடிக்க மாட்டேன்.'' 

“மாடர்ன் டிரெஸ்ல நடிக்கிறது எப்படி இருக்கு?” 

“ ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா' சீரியலில் காமெடிக்காக மாடர்ன் டிரெஸ் போட்டிருக்கேன். 'வாணி ராணி'யில் ராதிகாவின் பெண் ரேயான் சொன்னதால், மாடர்ன் டிரெஸ்ல நடிக்க சம்மதிச்சேன். என் டிரெஸ்... ஹேர் ஸ்டெய்டனிங் இதுக்கெல்லாம் ரேயான்தான் காரணம். என்னை புதுவித தோற்றத்தில் பார்க்க அந்தக் குழந்தை விரும்புச்சு. நானும் ஓகே சொல்லிட்டேன்.'' 

“ஷூட்டிங் ஸ்பாட்டில் எல்லோருக்கும் சேர்த்து சமைச்சு எடுத்துப்போவீங்களாமே...'' 

“எனக்குச் சமைக்கிறது பிடிச்ச விஷயம். பல நேரம் சமையல் அறையிலேயே இருப்பேன். நான் ஹீரோயினா நடிச்ச காலத்தில், என் அம்மா எல்லோருக்கும் சேர்த்து சமைச்சு எடுத்துட்டு வருவாங்க. அதே பழக்கம் எனக்கும் வந்திருச்சு. ஷூட்டிங் கிளம்பினால், காலைச் சாப்பாட்டிலிருந்து ஈவ்னிங் ஸ்நாக்ஸ் வரை எடுத்துட்டுப்போய் எல்லோருக்கும் பரிமாறுவேன். அதில் ஒரு தனி சந்தோஷம் கிடைக்குது!'' 

“உங்க சமையலுக்கு கிடைச்ச சமீபத்திய பாராட்டு எது?'' 

“என் சாப்பாட்டை சாப்பிடும் எல்லோருமே, 'அம்மா சூப்பரா இருக்கு'னு பாராட்டுவாங்க. 'வாணி ராணி' ஷூட்டிங்கிலும் சமைச்சு எடுத்துட்டுப் போனேன். அதைச் சாப்பிட்ட ராதிகா அம்மா, 'உங்க சாப்பாட்டின் ருசியைப் பார்த்ததும் என் டயட்டை ஃபாலோ பண்ண முடியலை'னு சொன்னாங்க.'' 

“கல்யாணமாகிவிட்ட உங்க பிள்ளைகளை பிரிந்து இருக்கிற ஃபீலிங் பற்றி...'' 

“வாழ்க்கைன்னா அப்படித்தானே இருக்கும். என் ட்வின்ஸ் குழந்தைகதான் என் உலகம். சிங்கிள் வுமனா அவங்களைப் பார்த்து பார்த்து வளர்த்தேன். இன்னைக்கு அவங்க பொறுப்பாக குடும்பம் நடத்துறதைப் பார்க்கும்போது சந்தோஷமா இருக்கு. அவங்களை முதல்முறை பிரியும்போது, ரொம்பவே கஷ்டமா இருந்துச்சு. இப்போவரை என்னைப் பார்க்க வரும்போதெல்லாம் அழுதுட்டேதான் கிளம்புவாங்க.'' 

“ஃப்ரீ டைம்ல என்ன செய்வீங்க?'' 

“என் பொழுதுபோக்கே சமையல் பண்றதுதான். ஃப்ரீயா இருக்கும்போது பசங்களுக்காக இட்லி பொடி தயார் பண்ணுவேன். அவங்க வீட்டுக்கு போகும்போது, பிடிச்ச உணவை ஆசையோடு சமைச்சு கொடுப்பேன்.'' 

“ராமராஜனுடன் பேசறதுண்டா?'' 

‘நானும் அவரும் இப்பவரைக்கும் குட் ஃப்ரெண்ட்ஸ்தான். கொஞ்ச நாளைக்கு முன்னாடி, என் பேரனுக்கு கிடா வெட்டி மொட்டை போட்டாங்க. நான் ஷூட்டிங்கில் பிஸியா இருந்ததால் அந்த நிகழ்ச்சிக்குப் போகமுடியலை. எனக்குப் பதில் அவருதான் அந்த நிகழ்ச்சியை முன்னாடி இருந்து நடத்திவெச்சார். என் பசங்க என் மேலே எவ்வளவு அன்பா இருக்கிறாங்களோ, அப்படித்தான் அவரிடமும் இருக்காங்க.'' 

“உங்க சேலை கலெக்‌ஷன் எல்லாம் சூப்பரா இருக்கே...'' 

“தேங்க்ஸ். இப்போ டிரெண்ட்டான களம்காரியை, நாலு வருஷத்துக்கு முன்னாடியே கட்டிட்டேன். நான் அணியாத மாடலே கிடையாது. காட்டன், கைத்தறி பட்டில் ஆர்வம் அதிகம். எனக்கான சேலைகளை காஞ்சிபுரத்துலதான் வாங்கறேன்.” 

“சின்னத்திரை நடிகர்கள் பலர் உங்களை அம்மானு கூப்பிடறதை எப்படி உணர்றீங்க?” 

“நாம ஒரு பெரிய நடிகை. புதுசா மீடியாக்கு வரும் பசங்களுக்கு என்ன தெரியும் போன்ற எண்ணமெல்லாம் எனக்குத் துளியும் கிடையாது. எனக்கு எப்பவுமே கலகலனு இருக்கிறதுதான் பிடிக்கும். எல்லோருடனும் ஜாலியா மிங்கிள் ஆகிருவேன். அதனால், அவங்களும் அம்மா மாதிரி நினைச்சு பழகறாங்க. நாம அன்பைப் பரிமாறினால், குழந்தைகளும் அன்பாதானே இருப்பாங்க.”

அடுத்த கட்டுரைக்கு