Published:Updated:

``நடிக்கிறவங்களுக்கு அரசியலைப் பத்தி என்ன தெரியும்னு பொத்தாம் பொதுவா சொல்லாதீங்க!" `ஊர்வம்பு' லட்சுமி

``நடிக்கிறவங்களுக்கு அரசியலைப் பத்தி என்ன தெரியும்னு பொத்தாம் பொதுவா சொல்லாதீங்க!" `ஊர்வம்பு' லட்சுமி
``நடிக்கிறவங்களுக்கு அரசியலைப் பத்தி என்ன தெரியும்னு பொத்தாம் பொதுவா சொல்லாதீங்க!" `ஊர்வம்பு' லட்சுமி

"19 வருஷமா சின்னத்திரையில வொர்க் பண்ணிட்டிருக்கேன். நிறைய சீரியல்கள்ல நடிச்சாச்சு. ஆனாலும், 'ஊர்வம்பு'ங்கிற என் முந்தைய நிகழ்ச்சியின் தாக்கம் இன்னும் எனக்கு அடைமொழிப் பெயரா நிலைச்சுடுச்சு. அதோடு, தொடர்ந்து என் ஆர்வப்படியே சமூக ஊர்வம்பு நிகழ்வுகளைப் பற்றியும் பேசிட்டிருக்கேன்" - உற்சாகமாகப் பேசுகிறார் லட்சுமி. ஜீ தமிழ் 'செம்பருத்தி' சீரியலில் வனஜா ரோலில் நடித்துவருபவர். சமூக மற்றும் அரசியல் நிகழ்வுகளைப் பற்றி தன் கருத்தைப் பேசி சமூக வலைதளத்தில் வீடியோவாகவும் வெளியிட்டுவருகிறார். 

"மீடியா பயணம் எப்போது தொடங்கியது " 

"1999-ல் ராஜ் டிவி ஆங்கர் ஆடிஷன்ல செலக்டானேன். என்னோட தமிழ் உச்சரிப்பு நல்லாயிருந்ததால, 'ஊர்வம்பு' நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் வாய்ப்புக் கிடைச்சுது. சின்ன வயசுலேருந்தே அரசியல் நிகழ்வுகள் மேல ஆர்வம் அதிகம். நிறையப் புத்தகங்களும் வாசிப்பேன். அதனால் அந்நிகழ்ச்சியை என்னால் சிறப்பா பண்ண முடிஞ்சுது. நடப்பு அரசியல் நிகழ்வுகளைச் சுவாரஸ்யமான கோணத்துல மக்களுக்குக் கொண்டுபோகிற அந்த நிகழ்ச்சி செம ஹிட். அப்போதைய அரசியல் பிரபலங்களே அந்நிகழ்ச்சியைப் பற்றி பெரிசா பேசுவாங்க. ஏழு வருஷம் அந்நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்கினதால், 'ஊர்வம்பு' எனக்கு அடைமொழிப் பெயராகிடுச்சு. அச்சமயத்துல நிறைய வெளிநிகழ்ச்சிகளும் பண்ணினேன்." 

"தொடர்ந்து சீரியல்களில் நடிச்ச அனுபவம்..." 

"கே.பாலசந்தர் சாரிடமிருந்து ஒருநாள் அழைப்பு வந்துச்சு. அப்போ, கே.பி. சார் 'பார்த்தாலே பரவசம்' படத்தை இயக்கிட்டிருந்தார். அப்படத்தில் நடிக்கக் கேட்டார். 'சினிமாவில் நடிக்க ஆர்வமில்லை'னு நான் சொன்னேன். அப்புறம் அவர் வலியுறுத்திச் சொன்னதால், வரதராஜன் சாரோடு சேர்ந்து நானும் ஒரு ரிப்போர்டர் கேரக்டர்ல நடிச்சேன். தொடர்ந்து கே.பி. சாரோட 'மைக்ரோ மேக்ரோ' சீரியல்ல தொடங்கி பல சீரியல்கள்ல நடிச்சேன். குறிப்பா, சாரோட 'வீட்டுக்கு வீடு லூட்டி' உள்ளிட்ட பல சீரியல்கள் நல்ல ரீச் கொடுத்துச்சு. 

"அடுத்தடுத்து நெகட்டிவ் ரோல்களில் அதிகமா நடிச்சீங்களே..." 

"ஆமாம். 'ஊர்வம்பு' நிகழ்ச்சி தாக்கத்தினால் அடுத்தடுத்து நடிச்ச சீரியல்கள்ல பெரும்பாலும் அதிகமா வாய்பேசுற, நெகட்டிவ் ரோல்களே வந்துச்சு. அதிலெல்லாம் நானும் சிறப்பா நடிச்சேன். ஒருகட்டத்துல ஒரே மாதிரியான நெகட்டிவ் ரோல்ல நடிச்சு சலிப்பு ஏற்பட்டதால, 2011-ல் நடிப்பிலிருந்து பிரேக் எடுத்தேன். தொடர்ந்து மார்க்கெட்டிங் ஏஜென்ஸியில வேலைக்குச் சேர்ந்தேன். தினமும் புதுப் புது மனிதர்களைச் சந்திக்கிறது, பேச்சுத்திறமையால் புது விளம்பரங்களை ஆர்டர் எடுக்கிறதுனு அந்த வேலையும் மனசுக்கு நிறைவா இருந்துச்சு." 

"மீண்டும் ஆக்டிங் கம்பேக் எப்படி ஏற்பட்டுச்சு?" 

"மார்க்கெட்டிங் வேலையிலேருந்த சமயத்துல, ரம்யா கிருஷ்ணன் மேடம் தன் 'ராஜகுமாரி' சீரியல்ல நடிக்க வலியுறுத்திக் கேட்டாங்க. அந்தச் சீரியல்ல நடிச்சேன். 'நீங்க தொடர்ந்து நடிக்கணும்'னு பலரும் கேட்டாங்க. அதனால் மறுபடியும் ஆக்டிங்கையே முழுநேர வொர்க்கா பண்ண ஆரம்பிச்சுட்டேன். பின்னர் 'வம்சம்' சீரியல்ல நடிச்சு 'சன் குடும்பம் விருது' வாங்கினேன். அப்புறம் ஒரு வருஷம் இடைவெளி எடுத்திருந்தேன். சில மாசத்துக்கு முன்னாடி, 'செம்பருத்தி' சீரியல் வாய்ப்பு வந்துச்சு. இதிலும் நெகட்டிவ் ரோல்தான். சீக்கிரமே மக்கள் மனசுல இடம்பிடிக்கிற அளவுக்கு வனஜா கேரக்டர் ரீச் கொடுத்திருக்குது. இதுவரை 40 சீரியல்களுக்கும் மேல நடிச்சிருப்பேன். தொடர்ந்து நடிச்சுகிட்டிருக்கேன்." 

"சோஷியல் மீடியாவில் சமூக நிகழ்வுகளைப் பற்றிப் பேசும் ஆர்வம் எதனால் ஏற்பட்டுச்சு?" 

" 'ஊர்வம்பு' நிகழ்ச்சி பண்ணாம இருந்தாலும், எப்போதும் போல சமூக மற்றும் அரசியல் நிகழ்வுகளை அப்டேட் பண்ணிகிட்டேதான் இருக்கிறேன். கடந்த வருஷம் ஜல்லிக்கட்டுப் பிரச்னை வந்தப்போ, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவா ஒரு வீடியோ போட்டேன். அதுக்கு அடுத்த நாளே அப்பிரச்னை பெரிய போராட்டமாக மாறுச்சு. அந்தக் கோ-இன்ஸிடன்ட்டுக்கு அப்புறமா, சசிகலாவின் அரசியல் என்ட்ரி, தமிழக அரசியல் மாற்றங்கள், சின்னத்திரை நடிகர்களின் மரணம் பற்றியெல்லாம் பேசி வீடியோ ரிலீஸ் பண்ணினேன். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளைப் பற்றிப் பேசி வெளியிட்ட வீடியோவுக்கு ரெண்டு மில்லியன் வியூவ்ஸூக்கு மேல கிடைச்சுது. செய்தி சேனல் விவாத நிகழ்ச்சியிலயும் பேசியிருக்கேன்." 

"அரசியல் பேச்சுன்னாலே நிறைய எதிர்ப்புகள் வருமே..." 

"சமீபத்துல ரஜினிகாந்தின் அரசியல் என்ட்ரி அறிவிப்புக்கு நிறைய விமர்சனங்கள், எதிர்ப்புகள் வந்துச்சு. அப்போ, 'குடிமக்களில் யார் வேணாலும் அரசியலுக்கு வரலாம். ரஜினியை மட்டும் ஏன் எதிர்க்கிறீங்க? அவரின் அரசியல் என்ட்ரிக்குப் பிந்தைய செயல்பாடுகளைப் பார்த்த பின் விமர்சிப்பதுதான் சரி'னு நான் வெளியிட்ட வீடியோ செம வைரலாச்சு. அந்த வீடியோவுக்கும், அதுக்கு முன்பு வெளியிட்ட அரசியல் வீடியோக்களுக்கும் நிறைய எதிர்ப்புகள் வந்திருக்குது. அதுலயும் எனக்கு வரும் சில விமர்சனங்களை மத்தவங்ககிட்ட சொல்ல முடியாத அளவுக்கு ரொம்பவே மோசமானதாக இருக்கும். அரசியல் பேசினாலே இப்படி நடக்குமென்பது இயல்புதானே. அதனால் அதையெல்லாம் பெருசா பொருள்படுத்திக்கிறதில்லை. 'சினிமாக்காரங்களுக்கு அரசியல் பத்தி என்ன தெரியும்'னு நிறையப் பேர் பொத்தாம் பொதுவா பேசுறது எனக்குச் சுத்தமா பிடிக்காது. பல ஆர்டிஸ்டுங்களுக்கும் அரசியல் நிகழ்வுகள் தெரியும். குடிமக்களான எங்களுக்கும் அரசியல் நிகழ்வுகளை விமர்சிக்க உரிமையிருக்குது." 

அடுத்த கட்டுரைக்கு