Published:Updated:

``சின்னத் தம்பிக்கு அம்மான்னு சொன்னதும் மனோரமா ஆச்சிதான் ஞாபகத்துக்கு வந்தாங்க” சிலிர்க்கிறார் அனிலா ஸ்ரீகுமார்!

``சின்னத் தம்பிக்கு அம்மான்னு சொன்னதும் மனோரமா ஆச்சிதான் ஞாபகத்துக்கு வந்தாங்க” சிலிர்க்கிறார் அனிலா ஸ்ரீகுமார்!
``சின்னத் தம்பிக்கு அம்மான்னு சொன்னதும் மனோரமா ஆச்சிதான் ஞாபகத்துக்கு வந்தாங்க” சிலிர்க்கிறார் அனிலா ஸ்ரீகுமார்!

'சின்னதம்பீஈஈஈஈ...' - கணீர் குரல், மிரட்டும் கண்கள், கெத்து நடை எனச் 'சின்னத்தம்பி' சீரியலில் கலக்கிவருகிறார், அனிலா ஸ்ரீகுமார். ஒரு கூட்டுக்குடும்பத்தை தன் கண்ணசைவில் கொண்டுசெல்லும் அன்னலெட்சுமியாக தமிழ்ப் பெண்களின் மனங்களில் ஒன்றியிருக்கிறார். அவருடன் சில நிமிடங்கள்... 

''உங்களைப் பற்றி சில வரிகள்...'' 

''என் நிஜ பேரு அனிலா ஸ்ரீகுமார். இப்போ 'அன்னலெட்சுமி'னு சொன்னாத்தான் எல்லாருக்கும் தெரியுது. 'சின்னத்தம்பி' சீரியலுக்கு முன்னாடி, 'களத்து வீடு' என்கிற சீரியல் பண்ணினேன். அது சரியா ஓடாததால் நிறுத்திட்டாங்க. 'சின்னத்தம்பி' மூலமா தமிழ் மக்கள் மனசைப் பிடிச்சிருக்கேன்.'' 

''மீடியாவுக்குள் வந்தது எப்போது?'' 

''14 வயசுலயே நடிக்க ஆரம்பிச்சுட்டேன். மலையாள சினிமாவில் முதல் என்ட்ரி. சில சினிமாக்களைத் தொடர்ந்து சீரியலுக்குள் போயிட்டேன். 1996-ம் வருஷம் சீரியலுக்கான 'க்ரிட்டிக்ஸ்' விருது, 1999-ல் கேரள மாநில விருது எனப் பல விருதுகள் வாங்கியிருக்கேன்.'' 

'' 'சின்னத்தம்பி' வாய்ப்பு எப்படி வந்துச்சு?'' 

'' 'களத்து வீடு' சீரியலுக்காக டைரக்டர் அருள், தமிழில் என்னை அறிமுகப்படுத்தினார். அடுத்து, 'சின்னத்தம்பி' ஆரம்பிச்சப்போ, அதுல நான் நடிக்கணும்னு கேட்டாங்க. நான் கேரளாவைச் சேர்ந்தவளா இருந்தாலும் தமிழ்ப் படங்கள் விரும்பிப் பார்ப்பேன். 'சின்னதம்பி'னு டைட்டில் சொன்னதுமே, ஆச்சி மனோரமா ஞாபகம்தான் வந்துச்சு. அவங்க பெரிய லெஜண்ட். அவங்களை மாதிரியே அப்பாவித்தனமான பையனுக்கு அம்மாவா நடிக்கணும்னு சொன்னதுமே சந்தோஷமா ஒத்துக்கிட்டேன்.'' 

''ஷூட்டிங் ஸ்பாட்ல மறக்கமுடியாத அனுபவம்...'' 

''ஷூட்டிங் ஆரம்பிச்ச ரெண்டு நாளைக்குள்ளேயே எனக்கு ஒரு பெரிய சீன் கொடுத்தாங்க. அதில் நான் கோபமா மூட்டையையும், காய்கறிகளையும் தூக்கி எறியணும். அந்த சீனை எடுக்கும்போது ஒட்டுமொத்த யூனிட்டே சைலன்ட்டா இருந்துச்சு. நான் கோபத்துல சத்தம் போட்டு கத்தி முடிச்சதும், எல்லோரும் விசிலடிச்சு கைதட்டினாங்க. எனக்கு சிலிர்த்துடுச்சு. அது மறக்கமுடியாத அனுபவம்.'' 

''மலையாள சீரியலுக்கும் தமிழ் சீரியலுக்கும் என்ன வித்தியாசம் பார்க்கறீங்க?'' 

''நிறைய வித்தியாசம் இருக்கு. நான் மலையாளத்துல அறிமுகனாபோது ஓவர் ஆக்ட்டிங் பண்றதா சிலர் சொன்னதால் நடிப்பில் என்னை மாத்திக்கிட்டேன். ஆனால், இங்கே தமிழ்ப் பெண்கள் தாலி, குங்குமம் என நிறைய சென்ட்டிமென்ட் பார்க்கறாங்க. அதனால், அங்கே ஓவர் ஆக்டிங்னு சொன்னதை இங்கே செய்யும்போது சக்சஸ் ஆகுது.'' 

''தமிழ் பேசுவதற்கு எப்படி சமாளிக்கறீங்க?'' 

''சின்னதம்பியில் என்னுடன் நடிக்கும் சாரி, முன்னாடி மலையாளத்தில் ஒண்ணா நடிச்சிருக்காங்க. நாங்க நல்ல தோழிகள். அவங்க நிறைய ஹெல்ப் பண்றாங்க. மொத்த யூனிட்டும் எனக்கு சப்போர்ட்டா இருந்து, ஓரளவுக்குத் தமிழ் பேச வெச்சுட்டாங்க. சீக்கிரமே தமிழ் பேசி கலக்குவேன்.'' 

''தமிழ்நாட்டு மாமியார்கள்?''

''தமிழ்ப் பெண்கள் எப்போதுமே கெத்துதான். ஒரு குடும்பத்தின் பாரம்பர்யத்தைத் தக்கவைக்கிறதில் ஒரு மாமியாரின் பங்கு ரொம்பவே இருக்கு. இங்க எனக்குப் புடிச்ச சினிமா மாமியார் மனோரமா ஆச்சிதான். 'அடியே நான் மட்டும் ஒனக்கு மாமியாளா வாச்சேன்னா அந்த வெடுக்கு வெடுக்குன்னு ஆட்டுற இடுப்பெலும்ப கழட்டி ஒட்டியாணம் பண்ணிப்போட்டுக்குவேன்'னு 'சின்னகவுண்டர்' படத்தில் பேசும் டயலாக் என் மனசுலயே இருக்கு. 'மாமியார் கேரக்டருக்குத் தகுந்த மாதிரி மிடுக்கா வாங்கம்மா'னு டைரக்டர் சொன்னதும், மனசுக்குள்ளே மனோரமா ஆச்சிதான் வந்தாங்க. அவங்க புடைவை கட்டும் ஸ்டைலை ஃபலோ பண்ணினேன். அந்த காஸ்ட்யூம்ல பார்த்ததும் யூனிட்டே வாயடைச்சுப் போச்சு.'' 

''தமிழ் ரசிகர்கள் என்ன சொல்றாங்க?'' 

'' 'சின்னத்தம்பி' தொடருக்காக   திருத்தணி போயிருந்தப்போ, அங்கே என்னை பார்த்த சில பெண்கள், 'ஆசீர்வாதம் பண்ணுங்கம்மா'னு கும்பிட்டு காலில் விழுந்துட்டாங்க. அதுல ஒருத்தர், என் காலடி மண்ணை எடுத்து திருஷ்டி சுத்திப் போட்டாங்க. எத்தனையோ வருஷமா மலையாளப் படங்களில் நடிச்சிருக்கேன். ஆனா, தமிழ் மக்கள் இவ்வளவு குறுகிய காலத்தில் என்னை அவங்களில் ஒருத்தரா ஏத்துக்கிட்டதை இனி வாழ்க்கையில் மறக்கவே மாட்டேன்.'' 

''நடிப்பைத் தாண்டி, உங்க குடும்பம் பற்றிச் சொல்லுங்களேன்'' 

''நான் பிறந்தது, வளர்ந்தது கோழிக்கோடு. திருமணத்துக்குப் பிறகு திருவனந்தபுரத்தில் செட்டில் ஆனேன். கணவர் ஸ்ரீகுமார், புரொடக்‌ஷன் கம்பெனி வெச்சிருக்கார். பையன் அபினவ் ஸ்ரீகுமார், பி.காம் பண்றான். பொண்ணு ஆதிலெட்சுமி ஐந்தாம் வகுப்பு படிக்கிறா. அழகான குடும்பம். நான் 3 வயசிலிருந்து கிளாஸிகல் டான்ஸ் கத்துக்க ஆரம்பிச்சேன். இப்போ, டான்ஸ் மாஸ்டரா 25 ஸ்டூடன்ட்ஸு க்கு கத்துக்கொடுக்கறேன். 

இப்போ, சென்னையிலேயே ஒரு வீடு தேடிட்டிருக்கோம். சீக்கிரமே இங்கே செட்டில் ஆகிடுவோம். தமிழ் மக்களின் அன்பில் நிலைச்சிருப்பேன்.''

பின் செல்ல