Published:Updated:

"தமிழ் தெரியும்...ஆனாலும் தெரியாது!" ஜாலி கேலி நட்சத்திரா

"தமிழ் தெரியும்...ஆனாலும் தெரியாது!"  ஜாலி கேலி நட்சத்திரா
"தமிழ் தெரியும்...ஆனாலும் தெரியாது!" ஜாலி கேலி நட்சத்திரா

ழகுத் தமிழ் உச்சரிப்பு... வார்த்தைக்கு வார்த்தைப் புன்னகை... இதுதான் நட்சத்திராவின் அடையாளம். அவருடன் பேச ஆரம்பித்த சில நொடிகளிலேயே நமக்கும் உற்சாகம் தொற்றிக்கொள்கிறது. சன் டிவி தொகுப்பாளினியான இவர், பல விருது மற்றும் மேடை நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளினியாக கலக்கிவருகிறார். 

" 'சன் சிங்கர்' நிகழ்ச்சியில் மூணு வருஷப் பயணத்தை நிறைவு செய்திருக்கீங்க. எப்படி ஃபீல் பண்றீங்க?" 

" 'சன் சிங்கர்'தான் என் முதல் பெரிய மீடியா மேடை. இந்த நிகழ்ச்சிக்கு வந்த பிறகுதான் ஆங்கரா என் வளர்ச்சி பல தளங்களில் விரிவடைஞ்சது. நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் நான் இணைஞ்சேன். இப்போ ஆறாவது சீசன் முடியப்போகுது. நிறைய அங்கீகாரம், பாராட்டு, சந்தோஷம் கிடைச்சிருக்கு." 

"இந்த நிகழ்ச்சியில் மறக்கமுடியாத தருணங்கள்..." 

"நிறையவே இருக்கு. எங்க நிகழ்ச்சிக்கு பல ஆளுமைகள் கெஸ்டா வந்திருக்காங்க. ஒரு சீசனின் தொடக்க எபிசோடில் பி.சுசீலா அம்மா கலந்துக்கிட்டு குழந்தைப் போட்டியாளர்களை வாழ்த்தினாங்க. அந்த அனுபவம் மறக்கமுடியாதது. நான் இணைஞ்ச மூணாவது சீசனிலிருந்து ஃபைனலை லைவ்வா ஒளிபரப்ப ஆரம்பிச்சோம். அதுவும் எனக்கு ஸ்பெஷல்தான்." 

"குழந்தைகளோடு பழகும் மற்றும் அவங்களின் சேட்டைகளை எதிர்கொள்ளும் அனுபவம் எப்படி இருக்கு?" 

"எவ்வளவு டென்ஷனோடு செட்டுக்குள்ளே நுழைஞ்சாலும் கொஞ்ச நேரத்தில் மறந்து சந்தோஷமான சூழலுக்கு போயிடுவோம். அதுக்குக் காரணம், குழந்தைகள். ஃப்ரீ டைமில் என்னைச் சுற்றி நின்னுட்டு சிரிச்சுப் பேசுறது; பாடறது, டான்ஸ் ஆடறதுன்னு நம்மையும் குழந்தைப் பருவத்துக்கு கடத்திட்டுப்போய்டுவாங்க. ஒவ்வொரு சீசனிலும் ஒரு ஃபேவரைட் குட்டி பாப்பா போட்டியாளரா இருப்பாங்க. இப்போ, அஞ்சு வயசுல அனன்யா என ஒரு பாப்பா இருக்காங்க. அவங்கதான் எங்களின் செல்லப் போட்டியாளர்.'' 

"நிறைய விருது மற்றும் வெளி நிகழ்ச்சிகளிலும் ஆங்கரா பொறுப்புடன் செய்யறதா 'குட் புக்' இமேஜ் வாங்கிட்டீங்கபோல..." 

"அப்படி நல்ல பெயர் எனக்கிருந்தால் சந்தோஷம்தான். டிவி சேனலில் நிறைய அனுபவம் கிடைச்சது. சேனலின் நிகழ்ச்சி தன்மைக்கு ஏற்ப ஒவ்வொரு எபிசோடுலயும் பேசுவேன். தவிர, ஒரு பிரபலத்தைப் பேட்டி எடுக்கிறதுக்கு முன்னாடி அவரைப் பற்றி முழுசா தெரிஞ்சுகிட்டு அவர் இமேஜ் பாதிக்காத வகையில் பேட்டி எடுப்பேன். விருது வழங்கும் நிகழ்ச்சின்னா, அதுக்கான பிரிப்ரேஷன் எடுப்பேன். நூற்றுக்கணக்கான பேர் முகம் காட்டிக்காம இரவுப் பகலா உழைப்பாங்க. ஆனா, மேடையில் தோன்றி மக்களைக் கவரும் வகையில் பேசறது ஆங்கர் மட்டும்தான். அதனால், என் பொறுப்புணர்வை நிச்சயம் உணர்ந்திருக்கேன். மேடையில் பேசறதைத் தாண்டி, நிகழ்ச்சியின் தொடக்கத்தில் ரெட் கார்பெட்ல விருந்தினர்களைப் பேட்டி எடுத்து வரவேற்கணும். இதுக்காக, பல மணி நேரம் நிற்கணும். சில தருணங்களில் திடீர் மாற்றம் ஏற்பட்டு, அதிக நேரம் காத்திருக்கும் சூழலும் உருவாகும். நமக்கு டயர்ட்டானாலும், முகத்தில் அந்த உணர்வு தெரியாமல் வேலை செய்யணும். இப்படி நிகழ்ச்சியின் நோக்கத்தைச் சரியான முறையில் மக்களிடம் கொண்டுபோகிறது ஆங்கரின் கடமை.'' 

"மீடியா துறை மீதான இந்தத் தெளிவு எப்படி ஏற்பட்டுச்சு?" 

"எனக்கு நல்லா வருதோ... இல்லையோ ஸ்கூல் படிக்கிறப்போ என்னை நிறைய ஆக்டிவிட்டீஸ்ல அம்மா சேர்த்துவிடுவாங்க. எல்லா கல்சுரல் ஈவன்டிலும் பர்ஃபார்ம் பண்ணுவேன். இதனால் ஒரு நிகழ்ச்சியை நடத்துறத்துக்குப் பின்னாடி இருக்கும் வலியைத் தெரிஞ்சுக்கிட்டேன். கூடவே கூச்ச சுபாவமும் சுத்தமா போயிடுச்சு. வேலையைச் சிறப்பாக செய்யும் பொறுப்புணர்வும் வந்துடுச்சு. பல நூறு பேரின் உழைப்பு என்னால் பாதிக்கக்கூடாது என்பதில் கவனமா இருப்பேன். சமீபத்தில், தென்னிந்திய நடிகர் சங்கம் சார்ப்பில் மலேசியாவில் கலை நிகழ்ச்சி நடந்துச்சு. அதில் இடைவிடாமல் 16 மணி நேரம் வொர்க் பண்ணினேன்.'' 

"தமிழில் எழுதப் படிக்கத் தெரியாமலே இப்படி பின்னி எடுக்கறீங்களே...'' 

"என் பூர்வீகம் துபாய். ஸ்கூல், காலேஜ் படிச்சது சென்னை. ஆங்கிலம், பிரெஞ்ச், இந்திதான் மொழிப் பாடங்களா இருந்துச்சு. சென்னையில் வளர்ந்துட்டு தமிழில் பேசத் தெரியாமல் போகுமா? ஆனால், எழுதப் படிக்கத் தெரியாது. மீடியாவுக்கு வந்ததிலிருந்து ஸ்கிரிப்டை வாங்கி எனக்கு மட்டுமே புரியும் ஆங்கிலத்தில் எழுதி, தமிழில் படிப்பேன். இந்த விஷயம் பார்க்கிற ஆடியன்ஸூக்கு தெரியாத அளவுக்கு பர்ஃபார்ம் பண்ணிடுவேன்." 

"உங்க டிரஸ்ஸிங் ரொம்பவே யுனிக்கா இருக்கே..." 

"மீடியாவில் விஷுவலா வொர்க் பண்றவங்களின் பேச்சைவிட, தோற்றம்தானே முதல்ல அடையாளப்படுத்தப்படும். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் மேக்கப் மற்றும் டிரஸ்ஸிங்காக பல மணி நேரம் செலவிடறேன். ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஏற்ற வெரைட்டியான டிரஸ்ஸை பயன்படுத்துறேன். எனக்கான டிரஸ்ஸை செலக்ட் பண்றது என் அம்மாதான். அதுக்காக அவங்க நிறையவே மெனக்கெடுவாங்க." 

"மீடியாவுக்கு வரும்முன் நினைத்த கனவுகள் இப்போது நிறைவேறிடுச்சா?" 

"அப்படி எந்தக் கனவுகளும் எனக்கு இருந்ததில்லை. எந்தத் தெளிவும் இல்லாமல் வந்து, ஒவ்வொரு நாளும் பல பாடங்களையும் அனுபவங்களையும் கத்துக்கிட்டிருக்கேன். நேற்றைவிட இன்னிக்கு சிறப்பா வொர்க் பண்ணணும்னு என்பது மட்டுமே குறிக்கோள். இதுக்கு இடையில்தான் சிறப்பான கதையம்சம்கொண்ட ஷார்ட் ஃபிலிம் மற்றும் வெப் சீரியல்களில் நடிச்சுகிட்டிருக்கேன். நல்ல கதையுடன் சினிமா வாய்ப்பு வந்தாலும் நடிக்கத் தயார்." 

"ஆங்கரிங், நடிப்பு... எது ரொம்பவே பிடிச்சிருக்கு?" 

(சிரிப்பவர்) "ரொம்பவே கஷ்டம். பதிலே சொல்ல முடியாத கேள்வி இதுதான். ரெண்டுமே எனக்கு ரொம்ப பிடிக்கும்." 

"மத்தவங்களுக்குத் தெரியாத உங்களின் சிறப்பான செயல்பாடுகள் ஏதாச்சும் இருக்கா?" 

"நல்லா சமைப்பேன். என் சமையலைச் சாப்பிட்டவங்க பாராட்டியிருக்காங்க. சின்ன வயசுல என் சிஸ்டர் டூ வீலர் ஓட்டி கீழே விழுந்துட்டாங்க. அதைப் பார்த்ததிலிருந்து எனக்கு டூ வீலர்னா ரொம்பவே பயம். அதில் பயணம் செய்யவே மாட்டேன். ஆனால், கார் ஓட்ட ரொம்பப் பிடிக்கு. ஃப்ரீ டைமில் அவுட்டிங் போவேன். புது இடங்களுக்குப் போய் புதிய விஷயங்களைக் கத்துக்கிட்டே இருக்கிறது எனக்கு ரொம்பப் பிடிக்கும்.'' 
 

பின் செல்ல