Published:Updated:

"என் கிரஷ் இவர்தான்!"-'சரவணன் மீனாட்சி' சுசித்ரா

வெ.வித்யா காயத்ரி
"என் கிரஷ் இவர்தான்!"-'சரவணன் மீனாட்சி' சுசித்ரா
"என் கிரஷ் இவர்தான்!"-'சரவணன் மீனாட்சி' சுசித்ரா

'மை டியர் பூதம்' சீரியலின் மூலம் சின்னத்திரைக்குள் நுழைந்தவர், சுசித்ரா. சினிமா, சீரியல் என இரண்டிலும் தன் திறமையை வெளிப்படுத்தியவர், நடிப்புக்கு பிரேக் எடுத்துப் படித்துக்கொண்டிருக்கிறார். சரவணன் மீனாட்சி சீரியலில் மீனாட்சியின் தங்கையாக நடித்த சுசித்திராவுடன் ஒரு ஜாலி மீட். 

''நான் பிறந்து, வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். இப்போ, எம்.எஸ்.ஸி சைக்காலஜி படிச்சுட்டிருக்கேன். எங்க வீட்டுல நான் ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணு. அதனால், அம்மாவும் அப்பாவும் எனக்கு க்ளோஸ் ஃப்ரண்ட்ஸ். என்னால் எதுவும் முடியும் என்கிற தன்னம்பிக்கையை அவங்ககிட்டேயிருந்துதான் கத்துக்கிட்டேன்'' என்கிற அறிமுகத்துடன் ஆரம்பித்தார். 

''நான் மூன்றாவது படிக்கும்போது ஒரு விளம்பர படத்தில் நடிச்சேன். அதைப் பார்த்துட்டு, விஜய் சாரின் 'ஆதி' படத்தில் திரிஷாவின் சின்ன வயசு கேரக்டருக்கு ஆடிஷன் நடக்கறதா சினிமா நண்பர் ஒருத்தர் அனுப்பிவெச்சார். ஆனால், அங்கே போனதும் அந்த ரோலுக்கு வேற ஒருத்தரை செலக்ட் பண்ணிட்டாங்கனு தெரிஞ்சது. ஆனாலும், டிரை பண்ணி பார்க்கலாம்னு எஸ்.சந்திரசேகர் அங்கிளைச் சந்திச்சோம். என்னை டான்ஸ் ஆடச் சொன்னதும், ஆடினேன். உடனே, 'இந்தப் பொண்ணையே படத்துக்கு புக் பண்ணிடுங்க'னு சொல்லிட்டார். அப்படித்தான் 'ஆதி' படத்தில் வாய்ப்பு கிடைச்சது. அவங்க சொல்லித் தர்றதை அப்படியே நடிச்சுடுவேன். அதனாலேயே எல்லோருக்கும் என்னைப் பிடிக்கும். கொஞ்ச இடைவேளைக்கு அப்புறம் சூர்யா சாரின் 'ஆதவன்', ரஜினி சாரின் 'லிங்கா' படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைச்சது. 'லிங்கா' படத்தில் மாட்டு வண்டியில் வர்ற மாதிரியான காட்சியில், அஸிஸ்டென்ட் யாரும் அவருக்குக் குடைப் பிடிக்க முடியாததால், நான் குடையைப் பிடிச்சுட்டிருந்தேன். நல்ல வெயில். உடனே ரஜினி சார், 'நீயும் குடைக்குள்ளே வாம்மா'னு சொன்னார். ஒரு ஸ்பெஷல் தெரியுமா? 'ஆதவன்' மற்றும் 'லிங்கா' சூட்டிங் ஸ்பார்ட்டில் என் பிறந்தநாளைக் கொண்டாடினேன். 'லிங்கா' படத்தில் நடிச்ச சோனாக்‌ஷி மேமும் நானும் ரொம்ப க்ளோஸ் ஆகிட்டோம். அப்புறம், 'மை டியர் பூதம்' சீரியல் மூலமா சின்னத்திரையில் அறிமுகமானேன். அந்த சீரியல் நல்ல பெயரை வாங்கிக்கொடுத்துச்சு. அதுக்கப்புறம், சன் மியூசிக்கில் குழந்தைகளுக்கான லைவ் ஷோவின் தொகுப்பாளராகவும் இருந்தேன்'' என்கிறார். 

இப்படி ஆல்ரவுண்டரா கலக்கும் சுசித்ரா, இசைத்துறையிலும் இடம்பிடிப்பதற்கான தீவிர முயற்சியில் இருக்கிறார். ''சின்ன வயசிலிருந்தே மியூசிக் மேலே தீராக்காதல். மியூசிக் சிம்பலைக் கையில் டாட்டூ குத்திக்கிற அளவுக்குக் காதல். இப்போ, முறையா கர்நாடக சங்கீதம் கத்துட்டிருக்கேன். பரதநாட்டியமும் பயிற்சி எடுத்துட்டு இருக்கேன். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு பாட்டு பாடணும்னு ஆசை. எனக்கு நம்பிக்கை இருக்கு. அவருடைய இசையில் என்னுடைய குரலைக் கேட்பீங்க. ஒருமுறை நான் பாடிய பாட்டை கே.எஸ்.ரவிக்குமார் சாருக்கு அனுப்பினேன். 'குரல் நல்லா இருக்குமா. தொடர்ந்து பாடு'னு உற்சாகப்படுத்தினார். 'நீ நல்லா நடிக்கிறேம்மா'னு அடிக்கடி சொல்வார். 'ஆதவன்', 'லிங்கா' என வாய்ப்புகள் கொடுத்தார். என் மேல அவருக்கு நம்பிக்கை அதிகம். எனக்கு வரலாற்றுப் படங்களில் நடிக்கும் ஆர்வம் இருக்கு. இப்போ, நடிப்புக்கு பிரேக் விட்டிருந்தாலும் தவிர்க்க முடியாத வாய்ப்பு கிடைச்சா நிச்சயம் நடிப்பேன்'' என்கிற சுசித்ரா, தனக்குப் பிடித்த விஷயங்களைப் பகிர்ந்தார். 

''என்னுடைய கிரஷ் அனிரூத். அவருன்னா எனக்கு அவ்வளவு பிடிக்கும். 'நானும் ரெளடிதான்' படத்தில் வரும் 'நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே' பாடல் என்னுடைய ஆல்டைம் ஃபேவரைட். நடிப்புக்கு பிரேக் விட்டிருக்கும் இப்பவும் என்னைப் பார்க்கும் ஆடியன்ஸ் அடையாளம் கண்டுபிடிச்சு பாராட்டும்போது பெருமையா இருக்கும். எதிர்காலத்தில் ஒரு கவுன்சிலிங் சென்டர் ஆரம்பிக்கும் எண்ணம் இருக்கும். இப்போதைக்கு சிங்கரா புது அவதாரம் எடுக்கும் லட்சியத்தோடு பயணிச்சுட்டிருக்கேன்'' என்ற சுசித்ரா பிடித்த பாடல் ஒன்றை ஹம்மிங் செய்ய ஆரம்பித்தார்.