Published:Updated:

''அந்த சீரியலில் நான் எதிர்பார்க்காத சஸ்பென்ஸ் நடந்துச்சு!'' - 'யாரடி நீ மோகினி' வினிதா

வெ.வித்யா காயத்ரி
''அந்த சீரியலில் நான் எதிர்பார்க்காத சஸ்பென்ஸ் நடந்துச்சு!'' - 'யாரடி நீ மோகினி' வினிதா
''அந்த சீரியலில் நான் எதிர்பார்க்காத சஸ்பென்ஸ் நடந்துச்சு!'' - 'யாரடி நீ மோகினி' வினிதா

'யாரடி நீ மோகினி' சீரியலில் கலை கதாபாத்திரத்தில் நம் எல்லோர் மனதையும் கவர்ந்தவர் வினிதா. ஐந்து வயதிலேயே சினிமாவில் அடியெடுத்து வைத்தவர். சின்னத்திரை, வெள்ளித்திரை என வலம்வருபவர். ''எந்த கதாபாத்திரமாக இருந்தாலும், அதில் என் நடிப்பைத் தனித்து வெளிப்படுத்த நினைப்பேன்'' எனப் புன்னகையுடன் பேசத் தொடங்கினார். 

''ஐந்து வயசிலேயே சினிமாவுக்குள் வந்துட்டதால் எப்பவும் நடிப்பு மேலே கவனமும் ஆர்வமும் இருந்துச்சு. வீட்டுல எல்லோருமே எனக்குப் பயங்கர சப்போர்ட். ஃபேமிலிதான் என் பலம். எனக்கு ஒரு தம்பி, ஒரு தங்கச்சி இருக்காங்க. ஷூட் முடிஞ்சு வீட்டுக்குள் நுழைஞ்சுட்டால் அவங்கதான் என்னுடைய உலகம். என் தங்கச்சி கூடதான் அதிகமா சண்டை போடுவேன். நாங்க மூணு பேரும் சேர்ந்தா எங்களுடைய வீடே தலைகீழா மாறிடும். எங்களை ஒரு நாள் கூட அம்மா திட்டாம இருந்ததே இல்ல. வீட்டுல நான் பயங்கர வாலு. நான்  செமையா வாய் பேசுவேன். அமைதி என்றால் என்னனு கூட எனக்குத் தெரியாது'' எனச் சிரிக்கிறார் வினிதா. 

''பல சீரியல்களிலும் , சில படங்களிலும் நடிச்சுட்டேன். சாகும் வரை நடிச்சுட்டே இருக்கிறதுதான் என் ஆசை. எந்த கேரக்டர் கொடுத்தாலும் உடனே உள்வாங்கிட்டுப் பண்ணுவேன். அதனால்தான் வெள்ளித்திரையையும் சின்னத்திரையையும் பேலன்ஸ் பண்ண முடியுது. 'யாரடி நீ மோகினி' சீரியலில் கலை கேரக்டரை வேற ஒருத்தர் பண்ணிட்டிருந்தாங்க. அவங்க விலகிடவே, எனக்கு வாய்ப்பு கிடைச்சது. என் கதாபாத்திரம் பெருசா இருக்கும்னு எதிர்பார்த்தெல்லாம் சம்மதிக்கலை. ஆனால், சீரியலில் நானும் முக்கியமான கேரக்டர் ரோலாகப் பேசப்படறது எதிர்பாராத சர்ப்ரைஸ். 

வாழ்க்கையில் எந்த விஷயத்தையுமே இப்போவரை எதிர்பார்த்து செய்யறதில்லே. எது நடந்தாலும் நன்மைக்கே என ஈஸியா கடந்துடுவேன். அதனால் ஒவ்வொரு நிமிஷமும் சந்தோஷமா வாழறேன். என்னை வெளியில் பாராட்டும் ரசிகர்களைவிட, குடும்பத்தில் பாராட்டும் ரசிகர்கள் அதிகம். அப்படித்தான் என் பாட்டி, ''நீ முன்னாடிவிட இப்போ நல்லா நடிக்கிறே. இப்போ முழு நடிகை ஆகிட்டே'னு பாராட்டினாங்க. அந்தப் பாராட்டை என் லைஃப்ல எப்பவும் மறக்க மாட்டேன். அதை மிகப்பெரிய அவார்டாக நினைக்கிறேன். எத்தனை பேர் பாராட்டினாலும் நம்முடைய குடும்பத்திலிருந்து கிடைக்குற பாராட்டு தனி சுகம் தாங்க'' எனப் பூரிப்படைகிறார் வினிதா. 

''லவ் மேரேஜ், அரெஞ்சுடு மேரேஜ் எதுவா இருந்தாலும் என் குடும்பத்தின் விருப்பத்துடந்தான் நடக்கும். காலையில் சந்திச்சு, சாயங்காலம் காதலிக்கிறதா சொல்லும் காதல்மீது எனக்கு நம்பிக்கை இல்லை. இப்போவரை யார்மீதும் எந்தவொரு ஈர்ப்பும் வந்ததில்லே. எனக்குச் சாப்பிடறது ரொம்ப பிடிச்ச விஷயம். பொதுவாக, எல்லா அம்மாவும் 'புள்ளை ஒழுங்கா சாப்பிட மாட்டேங்குதே'னு திட்டுவாங்க. என் அம்மா, 'ஏன் அதிகமா சாப்பிடறே?'னு திட்டுவாங்கனா பார்த்துக்கோங்க. அந்த அளவுக்கு வெளுத்துக் கட்டுவேன். இன்னொரு முக்கியமான விஷயத்தையும் சொல்லிடறேன். சாப்பிடற மாதிரியே செமையா சமையலும் பண்ணுவேன். சமைக்கிறதுதான் என் பொழுதுபோக்கு. அதிலும், நான் சமைக்கும் அசைவ சாப்பாட்டுக்கு என் குடும்பமே அடிமை. இப்போ ரெண்டு படங்களில் செகண்ட்  ஹீரோயினா நடிச்சுட்டிருக்கேன். தொடர்ந்து நிறைய சீரியல்களில் நடிக்கணும். என் குடும்பத்தை இப்போ மாதிரியே எப்பவும் சந்தோசமா பார்த்துக்கணும். அதுபோதும்'' என்கிறார் வினிதா, சமத்துப் பெண்ணாக.