Published:Updated:

“6 கிலோ காலி... சூப்பர் சிங்கர் சீக்ரெட்... சீக்கிரமே சினிமா!” - பாவனா

“6 கிலோ காலி... சூப்பர் சிங்கர் சீக்ரெட்... சீக்கிரமே சினிமா!” - பாவனா
“6 கிலோ காலி... சூப்பர் சிங்கர் சீக்ரெட்... சீக்கிரமே சினிமா!” - பாவனா

பிப்ரவரி முதல் தேதி. சென்னையில் நடந்த ஒரு கார்ப்பரேட் ஈவென்ட். நிகழ்ச்சி முடிந்ததும் ஆடியன்ஸ் அத்தனைபேரும் ஆங்கருடன் சேர்ந்து செம ஆட்டம். தமிழ், ஆங்கில இந்திப் பாடல்களைப் பாடியபடி ஸ்டெப் போட்டு ஆட்டத்தைத் தொடங்கிவைத்த அந்த ஆங்கர், 'சூப்பர் சிங்கர்'  பாவனா. கொஞ்சம் மெலிந்து வெஸ்டர்ன் லுக்கில் ஆளே மாறியிருக்கிறார்.

என்னது பாவனாவுக்குப் பாட வருமா? இத்தனை வருட 'சூப்பர் சிங்கர்' பயணத்துல பாடிக் கேட்டதே இல்லையே?

“யார் சொன்னது பாடலைன்னு. நிறைய தடவை பாடியிருக்கேன். பாடிட்டு அந்த டெலிகாஸ்ட் பார்க்கறதுக்காக குடும்பத்தோட வெயிட்  பண்ணிட்டிருந்திருக்கேன். கடைசியில பார்த்தீங்கன்னா, அந்த அரிய காட்சி வராது. கரெக்டா கட் ஆகியிருக்கும். காரணத்தையும் பலமுறை கேட்டுப்பார்த்துட்டேன். ஏதேதோ சொன்னாங்க. அவங்களைச் சொல்லியும் தப்பில்லை, விடுங்க ஜி. 2018 எனக்கு நிறைய தைரியத்தைத் தந்திருக்கு. பர்ஃபார்மன்ஸ்ல‌ இருந்த கொஞ்ச நஞ்ச கூச்சமும் பயமும் போயிடுச்சு. இனி, இறங்கி அடிக்க வேண்டியதுதான். ஈவென்ட்ல தொடங்கியாச்சு. சேனல்ல எந்தளவுக்கு முடியும்னு தெரியலை. முயற்சி பண்ணிப் பார்க்கலாம்.

“பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள்ல இருந்து 'ஸ்போர்ட்ஸ் ஆங்கரா' போனீங்க. திரும்பவும் இந்தப் பக்கமே வந்துட்டீங்களே..."

“கூழுக்கும் ஆசை; மீசைக்கும் ஆசைதான். இதுதானே எனக்கு அடையாளம் தந்தது. 'சூப்பர் சிங்கர்' ஆங்கரிங் தொடங்கின நாள்களை இப்போ நினைச்சாலும் சிலிர்ப்பா இருக்கு. சிலர் 'மியூசிக் பத்தி என்ன தெரியும்; எப்படி இந்த ஷோவை ஹேண்டில் பண்ணப்போற'னு நேரடியாவே கேட்டாங்க. அந்த மாதிரிக் கேள்விகள் எனக்கு நடுக்கத்தைத் தந்திச்சு. இசையை ரசிக்க மட்டுமே தெரியும். அதுவும் அத்தனை விஷயமும் தெரிஞ்சு ரசிச்சவகூட கிடையாது. ஆனா, சேனல் என்னை நம்பிப் பொறுப்பைக் கொடுத்திச்சு. அனுபவம் மாதிரி பெரிய ஆசான் யார் சொல்லுங்க? அந்த அனுபவமே என்னை தைரியமானவளா நிற்க வெச்சது. இன்னைக்கு டி.வி தவிர ஈவென்ட், அதுவும் மும்பை, பெங்களூரு, டெல்லின்னு எல்லா இடங்கள்லயும் பெரிய பெரிய கார்ப்பரேட் நிகழ்ச்சிகள் எல்லாம் என்னால பன்ண முடியுதுன்னா, காரணம் இந்த பேஸ்தான்.

'ப்ரோ கபடி' வாய்ப்பும் அதுவா அமைஞ்சது. ஆங்கரிங்ல என்னெல்லாம் பண்ண முடியுமோ அதையெல்லாம் பண்ணலாமேன்னு நினைச்சு ஓ.கே சொன்னேன். அந்த எக்ஸ்பீரியன்ஸும் சூப்பர். தமிழ் தாண்டி வெளியில என்னைக் கொண்டுபோய்ச் சேர்த்தது அந்த ஷோ. இப்போ பழையபடி 'சூப்பர் சிங்க'ருக்குக் கூப்பிட்டாங்க. வந்துட்டேன்''

நடை, உடையெல்லாம்  மாறியிருக்கே...

“நம்மைப் புதுப்பிச்சிட்டே இருக்கணும்னு நினைக்கிற பொண்ணு நான். டி.வி ஷோ போக மத்த நேரங்கள்ல கார்ப்பரேட் நிகழ்ச்சிகள் நிறைய கமிட் ஆகிட்டிருக்கு. அங்க போறப்போ கெட்-அப் சேஞ்ச் அவசியப்படுது. ஏன்னா, ஆடியன்ஸ் அந்த மாதிரி இருக்காங்க. அதனால, என்னை மாத்திக்க வேண்டியிருக்கு. ராக். பாப் எல்லாமேகூட அப்படி வந்ததுதான். சின்ன வயசுலேயே மியூசிக், டான்ஸ் கிளாஸ்னு ஒண்ணுவிடாம  வீட்டுல அனுப்பி வெச்சாங்க. எல்லாத்தையும் முழுசா கத்துக்கிட்டேனான்னு கேட்காதீங்க.ஆனா, ஆர்வம் இருந்திச்சு. பத்து வயசுலேயே வீட்டுக்குள்ள யாரும் இல்லாத நேரங்கள்ல கன்ணாடி முன்னாடி நடந்து, நானே பர்ஃபார்ம், கேட்வாக் எல்லாம் பண்ணிப் பார்த்திருக்கேன். ஆயிரம் பேர் முன்னாடி இருக்கிறதா நினைச்சுக்குவேன். என்ன ஒண்ணு, இவ்ளோ நாளா வெளிக்காட்டாம இருந்தேன்.

இன்னொரு விஷயம், இப்ப ஈவென்ட், ஷோ எதுவா இருந்தாலும் ஆடியன்ஸ் நூறு சதவிகிதம் திருப்தியடைஞ்சு போகணும்கிறதுல ஸ்ட்ரிக்டா இருக்காங்க‌. சிம்பிளா சொல்லணும்னா, ஆடியன்ஸ் உச்சக்கட்ட சந்தோஷத்துக்குப் போகணும். அந்த சந்தோஷத்துல ஃபைனலா, எழுந்து ஆடணும்கூட நினைக்கிறாங்க. ஆட வைக்கவேண்டிய பொறுப்பு, ஆங்கர்கிட்டதான் இருக்கு. நாங்க கோடு போட்டாதானே அவங்க ரோடு போட முடியும்?. உடையைப் பொறுத்தவரை டி.வி, ஈவென்ட் ரெண்டுக்குமே என்னோட கம்ஃபர்ட் ப்ளேஸ் சம்பந்தப்பட்டவங்களோட ஒப்பீனியன் ரெண்டையும் கவனத்துல எடுத்துப் பண்றேன்."

சமீபத்துல சூர்யாவோட உயரம் குறித்து ஆங்கர் இருவரின் கமென்ட் சர்ச்சை ஆச்சே... ஒரு சீனியர் ஆங்கரா, இதுகுறித்த உங்க கருத்து? 

“லைவ் போகும்போது ஆங்கர் பேசுற‌ வார்த்தைகள்ல கவனம் ரொம்பவே இருக்கணும். நாம ஆங்கரிங் நல்லா இல்லாட்டிக்கூட பரவால்லை; நம் வார்த்தைகள் யார் மனதையும் காயப்படுத்தக் கூடாது. தமிழ் ஆங்கர்கள்லயே உயரமானவள்னு என்னைத்தான் இப்பகூட சுட்டிக்காட்டறாங்க சிலர். அதைப்பத்தி நான் அலட்டிக்க மாட்டேன். எடையைக் கூட்டலாம்; குறைக்கலாம். உயரத்தைப் பொறுத்தவரை என்ன வாய்ச்சிருக்கோ அதுதான் வரும்”.

நீங்ககூட எடையைக் குறைச்சிருக்கீங்கபோல.. சினிமாவுல நடிக்கப் போறதாவும் தகவல் வந்துட்டிருக்கே...

“ஆறு கிலோ குறைஞ்சிருக்கேன். சினிமாவுல தலை காட்டப் போறேனா இல்லையாங்கிறதை கொஞ்ச நாள்ல சொல்றேன். பொறுங்க”.