Published:Updated:

''எதுக்கு கல்யாணம்..? இப்பவே பிரிஞ்சுடலாம்னு தோணுச்சு!'' - 'சுமங்கலி' திவ்யா

வெ.வித்யா காயத்ரி
''எதுக்கு கல்யாணம்..? இப்பவே பிரிஞ்சுடலாம்னு தோணுச்சு!'' - 'சுமங்கலி' திவ்யா
''எதுக்கு கல்யாணம்..? இப்பவே பிரிஞ்சுடலாம்னு தோணுச்சு!'' - 'சுமங்கலி' திவ்யா

'சுமங்கலி' சீரியலில் அடக்கமான மருமகளாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர், திவ்யா. மாறாத புன்னகையுடன் தன்னைப் பற்றிய விஷயங்களைப் பகிர்கிறார். 

''உங்க மீடியா பயணம் ஆரம்பிச்சது எப்படி..?'' 

''என் சொந்த ஊர் ராமநாதபுரம். அப்பா வழக்கறிஞர். அவரை மாதிரி வழக்கறிஞர் ஆகணும்னு சின்ன வயசிலிருந்து ஆசை. பி.ஏ முடிச்சதும், பி.எல்., படிக்கிறதுக்காகச் சென்னைக்கு வந்தேன். என் அக்கா வீட்ல தங்கியிருந்த சமயம், அவங்க ஃப்ரெண்ட் ஒருத்தர் குறும்படத்தில் நடிக்கக் கூப்பிட்டாங்க. அந்தக் குறும்படத்தைப் பார்த்துட்டு வீஜே வாய்ப்புக் கிடைச்சது. அடுத்து, சீரியலுக்குள் என்ட்ரி கொடுத்தேன்.'' 

''வக்கீலுக்குப் படிக்க வந்துட்டு திடீர்னு நடிக்க முடிவெடுத்ததுக்கு வீட்டில் என்ன சொன்னாங்க?'' 

''நான் நடிக்க போகக் கூடாதுனு அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்டா சொல்லிட்டார். அவங்களுக்கு என் எதிர்காலத்தை நினைச்சு பயம். நான் எப்பவும் நேர்மையா இருப்பேன்னு நம்பிக்கை கொடுத்து புரிய வெச்சேன். என் விருப்பத்துக்கு மரியாதை கொடுத்து சம்மதிச்சாங்க. இப்போ, எங்க ஊர்ல உள்ளவங்க என் நடிப்பைப் பாராட்டும்போது ரொம்பப் பெருமையா இருக்குனு அவங்களே சொல்றாங்க.'' 

''மறக்க முடியாத விஷயம்...'' 

''ஓர் ஆர்வத்தில் உள்ளே வந்துட்டாலும் எனக்கு நடிப்புன்னா என்னன்னே தெரியாது. அதேநேரம் சினிமா ஆர்வம் அதிகமாச்சு. ஒரு கட்டத்தில், எனக்கும் நடிப்புக்கும் செட் ஆகாதுன்னு திரும்பி ஊருக்கே போயிருக்கேன். அங்கே நான் தயங்கி நின்றபோது, என் அப்பாதான் பக்கபலமா இருந்தர். அவர் கொடுத்த ஊக்கத்தால்தான் மறுபடியும் வந்து, இந்த இடத்தை அடைஞ்சிருக்கேன். அந்தத் தருணங்கள் என் வாழ்நாளின் பொக்கிஷம்.'' 

'' 'லட்சுமி வந்தாச்சு' சீரியலில் நெகட்டிவ் ரோலில் கலக்கினீர்களே...'' 

''எஸ்! எனக்கு நெகட்டிவ் ரோலில் நடிக்கிறது ரொம்பவே பிடிச்சிருக்கு. ஒவ்வொரு சீனையும் ஜாலியா என்ஜாய் பண்ணி நடிச்சேன். இப்போவெல்லாம் நெகட்டிவ் ரோல்தான் மக்களிடம் மாஸா ரீச் ஆகுது பாஸ்!'' 

''ஆனால், 'சுமங்கலி' சீரியலில் அமைதியான மருமகளாவும் அசத்துறீங்களே நிஜத்தில் திவ்யா எப்படி?'' 

''அந்த கேரக்டருக்கும் எனக்கும் துளிகூட சம்பந்தமில்லை. நிஜத்தில் நான் ரொம்ப வாய் பேசுவேன். துறுதுறுனு ஏதாவது பண்ணிட்டேதான் இருப்பேன். நான் செம போல்டான பொண்ணு!" 

''சினிமா வாய்ப்பு வந்ததா?'' 

''வருது. நல்ல கதையும் நல்ல டீமும் கிடைச்சா நடிக்கலாம்னு இருக்கேன். தமிழ், தெலுங்கு மொழிகளில் கதை கேட்டுட்டு இருக்கேன். சீக்கிரமே என்னை வெள்ளித்திரையில் பார்க்கலாம்.'' 

''உங்களுக்கும் தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷூக்கும் திருமணம் நடக்கப்போறதா அறிவித்த கொஞ்ச நாளிலேயே பிரிந்தது ஏன்?'' 

''எங்க ரெண்டு பேருக்கும் சில விஷயங்களில் கருத்து வேறுபாடு இருந்துச்சு. கல்யாணம் முடிஞ்சு அந்தக் கருத்து வேறுபாடு அதிகமாகி பிரியறதைவிட, முன்னாடியே பேசிப் பிரிஞ்சுடறது நல்லதுனு தோணுச்சு. அதனால் ரெண்டு பேரின் பெற்றோர்களிடம் சொல்லிப் பிரிஞ்சுட்டோம்.'' 

''இதில் உங்களைப் பற்றி வந்த விமர்சனங்களை எப்படி சந்தீச்சீங்க?'' 

''ஆரம்பத்தில் ரொம்பக் கஷ்டமாதான் இருந்துச்சு. நிறைய பேர் பலவிதமா விமர்சனம் பண்ணாங்க. என் மனசாட்சிக்கும் என் பெற்றோருக்கும் என்னைச் சார்ந்தவங்களுக்கும் என்னைப் பற்றி நல்லாவே தெரியும். அதனால் இதில் நாம வருத்தப்பட எதுவும் இல்லைன்னு உணர்ந்து தெளிஞ்சுட்டேன்.'' 

'' 'ராஜா ராணி' சீரியலின் சஞ்சீவ்கூட நடிச்சிருக்கீங்கபோல...'' 

''ஆமாம். ஒரு டெலி ஃபிலிமில் ஜோடி சேர்ந்திருக்கோம். சீக்கிரமே அந்தப் படம் வெளியாகப்போகுது.'' 

''அடிக்கடி உங்க பெட்ஸோட செல்ஃபி எடுத்துப் போடறீங்களே...'' 

''விலங்குகள் மேலே சின்ன வயசிலிருந்தே தீராக்காதல் இருக்கு. அதிலும், நாய்கள் என் ஃபேவரைட். என்னுடைய எல்லா விஷயங்களையும் நான் பெட்கிட்டேதான் ஷேர் பண்ணிப்பேன். அவங்களும் அதுக்கு ரியாக்ட் பண்ணுவாங்க. என் அம்மாவுடனும் நான் பயங்கர குளோஸ். அவங்ககிட்டேயும், என் பெட்கிட்டயும் நான் எந்த விஷயத்தையும் மறைச்சதில்லே.'' 

''உங்களுக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம்...'' 

''எனக்கு சாப்பாடுன்னா உயிர். நல்லா சாப்பிடுவேன். என் அப்பா சூப்பரா நான்வெஜ் சமைப்பார். அவரைப் பார்த்து நானும் நான்வெஜ் சமைக்கக் கத்துக்கிட்டேன். என் சமையலுக்கு என் ஃப்ரெண்டு ரேவதி அடிமை.'' 

''உங்க எதிர்காலத் திட்டம்...'' 

''தொடர்ந்து சீரியலிலும் சினிமாவிலும் நடிக்கணும். கொஞ்சம் மாடலிங் துறையிலும் ஆர்வம் இருக்கு. இப்போதைக்கு மேரேஜ் பிளான் இல்லை.''