Published:Updated:

"ப்ச்... அஜித்துக்கு ஸ்வெட்டர் கொடுக்கிற வாய்ப்பை மிஸ் பண்ணிட்டேன்!" - அஞ்சு அரவிந்த்

"ப்ச்... அஜித்துக்கு ஸ்வெட்டர் கொடுக்கிற வாய்ப்பை மிஸ் பண்ணிட்டேன்!" - அஞ்சு அரவிந்த்
"ப்ச்... அஜித்துக்கு ஸ்வெட்டர் கொடுக்கிற வாய்ப்பை மிஸ் பண்ணிட்டேன்!" - அஞ்சு அரவிந்த்

"தமிழ் சினிமாவில் நடிச்சு 15 வருஷத்துக்கும் மேலாச்சு. மீண்டும் ஒரு நல்ல கம்பேக் கொடுக்க வெயிட்டிங்!'' - உற்சாகமாகப் பேசுகிறார், நடிகை அஞ்சு அரவிந்த்.'பூவே உனக்காக' திரைப்படத்தில் நந்தினி ரோலில் நடித்தவர். தற்போது, ஜீ தமிழ் 'அழகிய தமிழ் மகள்' சீரியலில் நடித்துவருகிறார்.

"எதனால் 15 வருட இடைவெளி ஏற்பட்டுச்சு?" 

"கல்யாணமானதுக்குப் பிறகு ஹீரோயின்களுக்கு வாய்ப்பு குறைஞ்சுடும். அக்கா, அண்ணி கேரக்டர்கள்தான் வரும். நான் கல்யாணமாகி கேரளாவில் செட்டில்டு ஆனேன். இனி நடிக்க மாட்டேன்னு பலரும் அவங்களா நினைச்சுட்டாங்க. அது உண்மையில்லை. இப்போவரை எனக்குப் பிடிச்ச தமிழ் வாய்ப்புகள் வரலை. 'பூவே உனக்காக', 'வானத்தைப் போல' மாதிரி ரசிகர்கள் மனசுல இடம்பிடிக்கும் ரோல்களுக்காக வெயிட்டிங்." 

"முதல் சினிமா வாய்ப்பு எப்படி வந்தது?" 

"என் பூர்வீகம் கேரளா. ஒரு மலையாளப் படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சியில் கலந்துக்கிற வாய்ப்புக் கிடைச்சுது. அங்கே இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என்னைப் பார்த்திருக்காங்க. அடுத்த சில நாள்களில் ஆக்டிங் வாய்ப்பு வர ஆரம்பிச்சுது. 'அக்‌ஷரம்' மலையாளப் படத்தின் மூலமா என் ஆக்டிங் கரியரைத் தொடங்கினேன். அப்போ காலேஜில் சேர்ந்த புதுசு. படிச்சுக்கிட்டே மலையாளம், தமிழ், கன்னடப் படங்களில் ஹீரோயினா நடிக்க ஆரம்பிச்சேன்." 

" 'பூவே உனக்காக' படத்தில் நடித்த அனுபவம்..." 

"ஒரு மலையாளப் படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடந்துச்சு. அப்போ டைரக்டர் விக்ரமன் சாரின் புதுப்பட ஹீரோயின் தேடலுக்காக என்னையும் போட்டோஸ் எடுத்தாங்க. 'பூவே உனக்காக' நந்தினி கேரக்டருக்குத் தேர்வானேன். எனக்குத் தமிழும் தெரியும். அதனால், டயலாக் பேசறதில் சிரமமில்லை. விக்ரமன் சார் படத்தில் ஒவ்வொரு ஆர்ட்டிஸ்டுக்கும் நிறைவான ரோல் இருக்கும். ஆர்டிஸ்ட் ஃபீலிங் இல்லாம, பக்கா ஃபேமிலி பாண்டிங் உணர்வு கிடைக்கும். அந்தப் படத்தில் நடிச்சு முடிச்சதும், இன்னும் கொஞ்ச நாள் ஷூட்டிங் இருந்திருக்கலாமே என்கிற ஃபீலிங் வந்துச்சு. படத்தில் நானும் சங்கீதாவும் ஹீரோயின்ஸ். என் முதல் தமிழ்ப் படமே பேசும்படியா வெயிட்டான ரோலா அமைஞ்சது." 

"அடுத்தடுத்து நிறைய வாய்ப்புகள் வந்திருக்குமே..." 

"ஆமாம்! 'பூவே உனக்காக' படத்தில் நடிச்சு முடிச்சபோது, என் தாத்தாவுக்கு உடம்பு சரியில்லைனு ஊருக்குப் போயிட்டேன். ஃபேமிலி விஷயங்கள், அல்ரெடி கமிட்டான பல மலையாளப் படங்கள் என இருந்துட்டேன். அப்போ நிறைய தமிழ் வாய்ப்புகள் வந்தன. செலக்டிவாதான் வொர்க் பண்ணினேன். 'காதல் கோட்டை' படத்தின் கமலி கேரக்டர் வாய்ப்பு முதல்ல எனக்குத்தான் வந்துச்சு. கால்ஷீட் பிரச்னையால் நடிக்க முடியலை. அஜித்துடன் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு மிஸ் ஆகிடுச்சு. அப்புறம், 'அருணாச்சலம்' படத்தில் ரஜினிகாந்த் சாரின் தங்கச்சியா நடிச்சேன். 'ஒன்ஸ் மோர்', 'ஆசைதம்பி', 'வானத்தைபோல', 'வாஞ்சிநாதன்' உள்ளிட்ட 12 தமிழ்ப் படங்களில் நடிச்சேன். அதில், 10 படங்கள் சூப்பர் ஹிட்.'' 

"இடைப்பட்ட காலங்களில் நடிகர் விஜய்யை சந்திச்சிருக்கீங்களா?" 

" 'பூவே உனக்காக', 'ஒன்ஸ் மோர்' படங்களில் விஜய்யுடன் சேர்ந்து நடிச்சேன். இப்போ அவர் மாஸ் ஹீரோ. பல வருஷத்துக்கு முன்னாடி ஒரு பேட்டியில், என்னைப் பற்றிக் குறிப்பிட்டது சந்தோஷமா இருந்துச்சு. விஜய்யை மீட் பண்ணணும்னு ரொம்ப நாளா ஆசை. இன்னும் அதற்கான சூழலும் வாய்ப்பும் அமையலை. அந்த நாளுக்காக வெயிட்டிங். ஒருமுறை அவரின் அப்பா சந்திரசேகர் சாரை மீட் பண்ணி நிறைய பேசினேன்." 

"சீரியல் என்ட்ரி பற்றி..." 

"கல்யாணமான தொடக்கத்தில், தமிழில் தேவர் ஃபிலிம்ஸின் ஒரு சீரியலிலும், அடுத்து ராஜ் டிவி சீரியலிலும் நடிச்சேன். ரெண்டுமே ஹிட். இப்போ, ஜீ தமிழ் 'அழகிய தமிழ் மகள்' சீரியலில் நடிக்கிறேன். நிறைய மலையாள சீரியல்களில் இப்போவரை நடிச்சுட்டிருக்கேன்." 

"மலையாளத்தில் தொடர்ந்து நல்ல ரோல்களில் நடிச்சுகிட்டிருக்கீங்கபோல..." 

"ஆமாம். நான் சினிமாவுக்கு வந்து 20 வருஷத்துக்கு மேலாயிடுச்சு. மலையாளத்தில் தொடர்ந்து நல்ல நல்ல ரோல்கள் வருது. மம்முட்டி, மோகன்லால் என மெயின் ஹீரோக்களுடன் நடிச்சுட்டேன். ஐம்பது படங்களுக்கும் மேலே நடிச்சாச்சு. சினிமாவில் எனக்குன்னு யாரும் சப்போர்ட் கிடையாது. என்னைத் தேடி வரும் நல்ல கதைகளில் மட்டும் நடிக்கிறேன். ஆரம்பத்திலிருந்து மேனேஜர் இல்லாமல் நானேதான் எனக்கான சினிமாக்களைத் தேர்வுசெய்கிறேன்.'' 

"ஆக்டிங் தவிர உங்க மற்ற செயல்பாடுகள் பற்றி..." 

"நான் கிளாஸிகல் டான்ஸர். பரதநாட்டியத்தில் எம்.ஏ., முடிச்சிருக்கேன். பெங்களூரில் 'அஞ்சு அர்விந்த் டான்ஸ் அகாடமி' என ஸ்கூல் வெச்சிருக்கேன். நிறைய குழந்தைகளும் யங்ஸ்டர்ஸூம் டான்ஸ் கத்துக்கிறாங்க. ஒரு புரொடக்‌ஷன் கம்பெனி ஆரம்பிச்சு, ரெண்டு ஷார்ட் ஃபிலிம் பண்ணியிருக்கோம். அதுக்கு நிறைய பாராட்டுகள் கிடைச்சிருக்கு. திரைப்படம் எடுக்கும் முயற்சியிலும் கவனம் செலுத்தறேன். என் பொண்ணு பெயர், அன்வி. நான்காம் வகுப்பு படிக்கிறாள். ஒரு அம்மாவுக்கான பொறுப்பையும் நிறைவா செஞ்சுட்டிருக்கேன்.''