Published:Updated:

“சேனல்ல ஒரு கல்யாணம், சங்கத்துல ஒரு கல்யாணம்!” - ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ ஆர்யா ஜாலி

அய்யனார் ராஜன்
“சேனல்ல ஒரு கல்யாணம், சங்கத்துல ஒரு கல்யாணம்!” - ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ ஆர்யா ஜாலி
“சேனல்ல ஒரு கல்யாணம், சங்கத்துல ஒரு கல்யாணம்!” - ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ ஆர்யா ஜாலி

நாட்டின் முன்னணி பொழுதுபோக்கு நிறுவனங்களில் ஒன்று கலர்ஸ் குழுமம். வட இந்தியாவில் பிரபலமான இந்த நிறுவனம், இந்தியாவில் எம்.டிவி உள்ளிட்ட 30, வெளிநாடுகளில் 13 என மொத்தம் 43 சேனல்களை எட்டு மொழிகளில் நடத்தி வருகிறது. தமிழகத்தில் பெரிதும் வரவேற்பு பெற்ற 'நாகினி' தொடர் இவர்களின் தயாரிப்பே. தமிழின் பல சேனல்கள், இவர்களின் இந்தி சீரியல்களை வாங்கி தமிழில் டப்பிங் செய்து வெளியிட்டு வருகின்றன என்பது குறிப்ப்பிடத்தக்கது. 'கலர்ஸ் மராத்தி', 'கலர்ஸ் ஒடியா', ‘கலர்ஸ் கன்னடா’ என பிராந்திய மொழிகளிலும் சேனல்களை நடத்தி வரும் இந்த நிறுவனம் தற்போது ‘கலர்ஸ் தமிழ்’ என்ற பெயரில் தமிழில் வந்துள்ளது.

பிப்ரவரி 19ம் தேதி, ‘கலர்ஸ் தமிழ்’ சேனல் முறைப்படி தன் ஒளிபரப்பை தொடங்க உள்ளது. இதில், வயாகாம் 18 குழும தலைமை செயல் அலுவலர் சுதான்ஷு வாட்ஸ், அதன் ரிஜீனல் ஹெட் ரவீஷ் குமார், ‘கலர்ஸ் தமிழ்’ சேனலின் பிசினஸ் ஹெட் அனுப் சந்திரசேகரன், நடிகர் ஆர்யா உள்பட பலர் கலந்துகொண்டனர். 

அனுப் சந்திரசேகரன் பேசுகையில், '' ரேட்டிங்கை மனதில் வைத்தே நாங்கள் இயங்கப்போவது இல்லை. எங்களுக்கான பாலிசியில் சமரசம் என்கிற பேச்சுக்கே இடம் கிடையாது. இந்தச் சேனலின் தொடக்க வேலைகள் ஆரம்பித்ததும் தமிழ்நாடு முழுக்க ஆய்வு செய்தோம். ரேட்டிங்கை மனதில் வைத்து நகர்கிற கதையை மட்டுமே கையில் எடுக்கக் கூடாது என்பது அந்த ஆய்வில் தெரிந்தது. இதை மனதில் வைத்தே எங்கள் நிகழ்ச்சிகளை தயாரிப்போம்'' என்றார். 

ஆர்யா பேசுகையில், 'எப்ப மச்சி கல்யாணம்'ங்கிற கேள்வியை இருபது வருஷமா எங்கிட்ட கேட்டுக்கிட்டே இருக்காங்க. இந்த வருஷமாவது இந்தக் கேள்விக்கான பதில் கிடைக்குமான்னு பார்க்கலாம்' என்றவரிடம், 'இந்த் ஷோவுல கல்யாணம் நடந்திடுச்சுன்னா, நடிகர் சங்க கட்டடம் கட்டினதும் விஷால் தலைமையில நடக்கறதா சொன்னீங்களே, அது என்ன ஆகும்' என்றார் ஒரு நிருபர். 'அங்கயும் ஒரு மேரேஜ் வச்சுக்கலாமா' என எதிர்க் கேள்வி கேட்டவர், ‘வேணும்னா, இந்த ஷோவுல கல்யாணம் முடிச்சிட்டு, அதே பொண்ணை அங்கப்போய் விஷால் தலைமையில மறுபடியும் கல்யாணம் பண்ண வேண்டியதுதான்” என்றார். 

நிகழ்ச்சி ஆரம்பிக்கும்போது மதன் கார்க்கி எழுதிய சேனலின் தீம் பாடல் ஒளிபரப்பப்பட்டது. ‘சல்லிக்கட்டு...’ என்று தொடங்கும் பாடல். தமிழ், தமிழரின் அடையாளத்தை பிரதிபலிக்கும் வகைளில் அமைந்திருந்தது. தொடரந்து சேனலின் லோகோ வெளியிடப்பட்டது. சேனலில் ‘சிவகாமி’, ‘வேலுநாச்சி’, ‘பேரழகி’ ஆகிய மூன்று நேரடி சீரியல்கள், ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’, ‘கலர்ஸ் சூப்பர் கிட்ஸ்’ ஆகிய இரண்டு ரியாலிட்டி ஷோக்கள், ‘காக்கும் தெய்வம் காளி’, ‘நாகினி-2’ ஆகிய இரண்டு டப்பிங் சீரியல்கள் ஆகிய நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டு தயாரிப்பில் உள்ளன. இந்த நிகழ்ச்சிகளின் குழுவினர் மேடையேற்றப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டனர். 

சிலம்பம் கற்றுக்கொண்டு அப்பாவின் பெயரைக் காப்பாற்ற முன்வரும் மகளின் கதையாக 'வேலுநாச்சி', கறுப்பாய் பிறந்தது குற்றமா என வெகுண்டெழுந்து சாதிக்கும் 'பேரழகி'யின் கதை, மகனை ஐபிஎஸ் ஆக்கும் வைராக்கியத் தாய் 'சிவகாமி'யின் கதை என மூன்று சீரியல்களுமே தேனி, பொள்ளாச்சி பகுதியில் பெரிய பட்ஜெட்டில் சினிமா தரத்துக்கு எடுத்து வருகிறார்கள். ஆங்கர் சித்ரா உள்ளிட்ட சிலரைத் தவிர இந்த சீரியல்களில் நடிக்கும் பெரும்பாலானோர் புதுமுகங்களே. 

ரியாலிட்டி ஷோக்களில் மிர்ச்சி சிவா 'கலர்ஸ் சூப்பர் கிட்ஸ்' நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். அதில் ரவுண்ட்ஸ், எலிமினேஷன் என்றெல்லாம் எதுவும் கிடையாது.

சேனலின் பிராண்ட் அம்பாசிடர் பொறுப்பையும் ஏற்றிருக்கும் ஆர்யா பங்கேற்கும் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சி திங்கள் டூ வெள்ளி இரவு 8.30க்கு ஒளிபரப்பாகிறது. தன்னை திருமணம் செய்துகொள்ள விரும்பும் பெண்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தங்களின் பெயரைப் பதிவு செய்யலாம் என ஆர்யா சில நாட்களுக்கு முன் ட்விட்டரில் அறிவித்ததே இந்த ரியாலிட்டி ஷோவின் தொடக்கப்புள்ளி.

''ஆர்யா கோரிக்கையைக் கேட்டதுல இருந்து சுமார் ஒரு லட்சம் அழைப்புகள் வந்திருக்கும். 7000 பேர் ஆர்யாவைக் கல்யாணம் செய்துக்க விருப்பம் தெரிவித்து பதிவு செய்திருந்தாங்க. அதுல டாக்டர்கள் நிறைய. காரணம் என்னன்னு இப்பவரைக்கும் எங்களால் கண்டுபிடிக்க முடியலை. சீரியஸா எடுத்துக்கிட்டு பதிவு பண்ணினவங்களை ஃபில்டர் பண்றது எங்களுக்குப் பெரிய சவாலா இருந்திச்சு. கடைசியா 16 பேர் தேர்வாகியிருக்காங்க. அவங்ககூட ஒவ்வொரு நாளும் மனம் விட்டுப் பேசப்போறார் ஆர்யா. ஷோ முடியறப்ப ஆர்யா கல்யாணம் முடிஞ்சிருக்கும்னு நாங்க நம்பறோம்' என்கிறார் அனுப்.