Published:Updated:

''ஆர்யாவுக்கு முடிஞ்சதும் விஷால்?' - 'கலர்ஸ்' கல்யாண ஸ்பெஷல்

''ஆர்யாவுக்கு முடிஞ்சதும் விஷால்?' - 'கலர்ஸ்' கல்யாண ஸ்பெஷல்
''ஆர்யாவுக்கு முடிஞ்சதும் விஷால்?' - 'கலர்ஸ்' கல்யாண ஸ்பெஷல்

'கலர் தூக்கலா இருக்கு' என்பார்கள், அணிந்திருக்கும்  ஆடை கொஞ்சம் அடர்த்தியான நிறத்தில் இருந்தால். தமிழ் தூக்கலாக இருந்தது, 'கலர்ஸ் தமிழ்' சேனலின் துவக்க விழாவில். இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு ஊடக நிறுவனமான 'கலர்ஸ்' குழுமத்தின் தமிழ் ஒளிபரப்பு 'கலர்ஸ் தமிழ்' பிப்ரவரி 19 அன்று உங்கள் வீட்டு வரவேற்பறைக்கு வரத் தயாராகிவிட்டது.

அதற்கான தொடக்க விழா நிகழ்வு சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள கோகுலம் ஸ்டுடியோவில் நடந்தது. 'இது நம்ம ஊரு கலரு' என்கிற முழக்கத்துடன் கலர்கட்டிய விழாக் கொண்டாட்டத்தின் ஹைலைட்ஸ் இங்கே..

* தமிழ்த்தாய் வாழ்த்து' ஒலிக்க இருக்கிறது; மேடையில் வசதியாக செட் ஆகிவிட்ட கச்சேரிக் குழுவினர் உட்பட‌..' என மைக் அறிவிப்பு கேட்க, ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டவர்கள் நிறைய‌.

* ராஜேஷ் வைத்யா குழுவினரின் தமிழ் சிம்பொனிக்குத் தலையாட்டாதவர்களை எண்ணி விடலாம். 'இரண்டுமணி நேரம் இதை மட்டுமே கேட்கணும்போல இருக்கு' என்றார், முன்வரிசையில் அமர்ந்திருந்த மதன் கார்க்கி.

* 'கலகலப்பு 2' ரிலீஸாகி இருக்கிற பிஸியான நேரத்திலும் இங்க எப்படி' என ஆங்கர் விஜய் மிர்ச்சி சிவாவைக்  கேட்க, (சிவாவும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்) 'என்னை அறிமுகப்படுத்தும்போது தந்தியே பில்டப், 'டெடிகேடிவான ஆளு... அது இது.. ன்னு. .அதுக்காகத்தான். ப்ளஸ் சேனலோட பேமென்ட் இருக்கில்லையா' எனச் சிரித்தார் சிவா. (ஆன் ஏர் வந்தா ஐ.டி ரெய்டுதான்)

* தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் நாட்டுப்புறக் கலைஞர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். பள்ளி மாணவிகளின் பரதநாட்டியத்தையடுத்து, பாரம்பரியக் கலைகளான கரகாட்டம், சிலம்பாட்டம், மயிலாட்டம், புலியாட்டம், பொய்க்கால் குதிரை உள்ளிட்டவை மேள தாளங்களுடன் அரங்கேறின. புத்தன் கலைக்குழுவின் பறை அதிரவைக்க, சின்னப்பொண்ணு பாடல் தாளம் போடச் சொன்னது. தொடர்ந்து இந்தக் கலைஞர்களின் முன்னிலையிலேயே சேனலின் லோகோ வெளியிடப்பட, முறைப்படி ஒளிபரப்புத் தொடங்கியது.

''ஆர்யாவுக்கு முடிஞ்சதும் விஷால்?' - 'கலர்ஸ்' கல்யாண ஸ்பெஷல்

*' 'ஜல்லிக்கட்டு' எனத் தொடங்கும் சேனலின் தீம் பாடலுக்கு கலைஞர்கள் நடனமாடினர். தமிழர்களின் பண்பாடு, கலாசாரத்தைப் பிரதிபலிக்கிற பாட‌லை மதன் கார்க்கி எழுதியிருக்கிறார். 'மழைனாலும் புயல்னாலும் ஒண்னா நிற்போம்' என்கிற வார்த்தைகள் சென்னை கண்ட வர்தாவையும், வரலாறு காணாத மழையையும் நினைவு கூர்கின்றன. 

* கலர்ஸ் குழுமத்தின் ரீஜினல் ஹெட் ரவீஷ் குமார் பேசியபோது, 'நாங்க லேட்டா வந்ததா நினைக்காதீங்க; எப்ப வர்றோம்கிறதைவிட எப்படி வர்றோம்கிறது முக்கியம்' என்றார். 'கலர்ஸ் தமிழ்' பிசினஸ் ஹெட் அனுப் சந்திரசேகரன் 'பொறுப்புள்ள பொழுதுபோக்கு' என்பதே எங்கள் பாலிசி' என்றார். தொடர்ந்து சேனலில் ஒளிபரப்பாக இருக்கிற சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்களின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டன.

*சினிமா தரத்தில் எடுக்கப்பட்டுள்ள 'பேரழகி', 'சிவகாமி', 'வேலுநாச்சி' ஆகியவை இந்தத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நேரடி தமிழ் சீரியல்கள். 'நாகினி' இரண்டாம் பாகமும் வர இருக்கிறது. சீரியல் பிரியர்களுக்கு சந்தோஷமான செய்திதான். சீனியர் சேனல்கள் அலெர்ட் ஆக ஆரம்பித்திருக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.

* விழா தொடங்கிய சிறிது நேரத்தில் நட்சத்திரங்களின் வருகையும் தொடங்கியது. ஆர்யா முதல் ஆளாக வந்தார். விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக், நந்தா, கிருஷ்ணா என இளம் நடிகர்கள் முன் வரிசையை அலங்கரித்தனர்.

* நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, ஆர்.பார்த்திபன், மனோபாலா, மயில்சாமி, இயக்குநர் சுசீந்திரன், சத்யஜோதி தியாகராஜன், குட்டி பத்மினி, தனஞ்செயன் எனத் திரைப் பிரபலங்களால் திக்குமுக்காடியது அரங்கம். சின்னத்திரை நடிகர்களும் திரளாக வந்திருந்தார்கள்.

* தொகுப்பாளினி அஞ்சனா கணவர் சந்திரனுடன் வந்திருந்தார். 'கலர்னதும் உனக்கு என்ன மச்சி ஞாபகத்துல வருது' எனச் சந்திரனிடம் கண்ணடித்தபடியே கேட்டார் சிவா. 'என் வீட்டுல வில்லங்கம் வரணும்னு உனக்கு அம்புட்டு ஆசை..' எனத் திருப்பிக் கேட்டார் சந்திரன்.

* ஆர்யாவுக்கு வலமும் இடமுமாக‌ ஹன்ஸிகாவும் அஞ்சலியும் அமர்ந்திருந்தனர். ஆர்யாவின் பர்ஃபார்மென்ஸ் முடிந்ததும் கிளம்பிவிட்டார் ஹன்ஸிகா. பறந்து வந்து மேடையில் இறங்கி ஆர்யா ஆடிய ஆட்டம் அசத்தல்.

* மிர்ச்சி சிவா தொகுத்து வழங்க இருக்கும் 'சி.எஸ்.கே' (கலர்ஸ் சூப்பர் கிட்ஸ்) ஷோவில் பங்கேற்கும் யூ-டியூப் புகழ் ப்ரணதி 'அஞ்சலி அஞ்சலியில் தொடங்கி 'செந்தூரா' வரை நிறுத்தாமல் பாடி அப்ளாஸ் அள்ளினார்.

* விழா மேடையிலேயே நலிந்த சினிமாக் கலைஞர்களுக்கு 'கலர்ஸ் தமிழ்' சார்பாக 30 லட்சம் நிதி வழங்கப்பட்டது. பெற்றுக்கொண்ட விஷால், நடிகர் சங்கத்துக்கும் சேனலுக்குமிடையே பரஸ்பர ஒத்துழைப்பை விரும்புவதாகக் கூறினார்.

* 'எங்க வீட்டு மாப்பிள்ளை' ஷோவை வைத்து ஆர்யாவை ஓட்டு ஓட்டு என ஓட்டினார்கள். 'ஆமா, இது ஒரு சீசனோட எண்டுக்கு வந்திடுமா, இல்ல அப்படியே போகுமா?' என்ற‌ சிவா, 'ஒருவேளை அடுத்த சீசனுக்கு ஒருத்தரை ரெகமண்ட் செய்யச் சொன்னா யாரை ரெகமண்ட் பண்ணுவ மச்சி' என்றார் ஆர்யாவிடம். 'வேற யாரு புரட்சித் தளபதி விஷாலுதான்' என்றார் ஆர்யா. 'கான்ட்ராக்டை நல்லா படிச்சுப் பாருங்க 'லைஃப் லாங் அக்ரீமென்ட் போட்டிருக்கப்போறான்' என்ற விஷாலிடம், 'சீசன் - 2 க்கு கூப்பிட்டா ரெடியா' எனக் கேட்கப்பட்டது. வேகமாக மறுத்துத் தலையசைத்தார். 'மச்சி மனசுல வேற ஐடியா இருக்கு; அதான் மாப்ள ஆகிறதெல்லாம் இப்ப எதுக்குங்கிறான்' என்றார், ஆர்யா.

* நண்பன் கல்யாணம் குறித்து ஏதாவது பேசவேண்டுமென விஷாலிடம் கேட்கப்பட்டது. 'ஏதோ பதினாறு பேர்கூடப் பழகிப் பார்த்து கல்யாணம் செஞ்சுக்கப்போறேங்கிறான். அந்தப் பதினாறு பேருக்கும் என்னோட வாழ்த்துக்கள்' என்றார்.

பதினாறும் (பேர் அல்ல பேறு) பெற்றுப் பெருவாழ்வு வாழ ஆர்யாவை நாமும் வாழ்த்துவோம்!..

அடுத்த கட்டுரைக்கு