Published:Updated:

"தேவதர்ஷினிக்கும் எனக்கும் ஷோ நல்லாதான் செட் ஆகியிருந்துச்சு... ஆனா, பிரிஞ்சுட்டோமே!" - 'மதுரை' முத்து

அய்யனார் ராஜன்
"தேவதர்ஷினிக்கும் எனக்கும் ஷோ நல்லாதான் செட் ஆகியிருந்துச்சு... ஆனா, பிரிஞ்சுட்டோமே!" -  'மதுரை' முத்து
"தேவதர்ஷினிக்கும் எனக்கும் ஷோ நல்லாதான் செட் ஆகியிருந்துச்சு... ஆனா, பிரிஞ்சுட்டோமே!" - 'மதுரை' முத்து

'சினிமாவுல பரபரப்பா இருக்கிற குணச்சித்திர நடிகை, ஒரு டிவி காமெடியனுக்கு ஜோடியா?' - இப்படித்தான் 'சண்டே கலாட்டா' தொடங்கின புதுசுல நிறைய பேர் கேட்டாங்க. 'பார்றா... இவனுக்கு வந்த அதிர்ஷ்டத்தை'னு என் காது படவே பேசினாங்க. இன்னும் கொஞ்சம் பேர் 'அந்தப் பொண்ணு பக்கத்துல ஸ்டூல் போட்டுல்ல நிக்கணும்'னு கேலி பேசினாங்க. எல்லா கேலியையும் காலி பண்ணிட்டு ஜாலியா போயிட்டிருந்திச்சு ஷோ. டிவிக்கும் சினிமாவுக்கும்கூட கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகி, இவ்ளோ எபிசோடு கடந்துட்டோமேனு நானே ஆச்சரியப்பட்டேன். 'யார் கண்ணு பட்டதோ' 300-வது எபிசோடைக் கொண்டாடுற இந்த நேரத்துல தேவதர்ஷினி நிகழ்ச்சியில இல்லை'' என்கிறார், மதுரை முத்து. முத்துவும் தேவதர்ஷினியும் இணைந்து கலகலப்பூட்டிக் கொண்டிருந்த 'சண்டே கலாட்டா' இன்று (பிப்ரவரி 25) 300-வது எபிசோடைத் தொடுகிறது. வாழ்த்து சொல்லி ஆரம்பித்தோம்.

'சிரிக்க வைக்கிற ஷோ பண்ணிகிட்டு ஃபீல் ஆகலாமா, எங்கே அந்த முதல் நாள் ஷூட்டிங்கை ரீ-வைன்ட் பண்ணுங்க பார்க்கலாம்?

''எனக்குக் கொஞ்சம் ஃபேமஸான நடிகையா இருக்காங்களேனு தயக்கம். 'டிவி நடிகர்கூட ஜோடி சேர்த்து விட்டுட்டாங்களே'னு நினைப்பாங்கன்னு நான் நினைச்சேன. உள்ளுக்குள்ளே அப்படி இருந்தாலும் சொல்வாங்களா, இப்போவரைக்கும் 'அப்படில்லாம் நினைக்கலை சார்'னு சொல்லிட்டுதான் இருக்காங்க. நம்புவோம். ஆரம்பத்துல ரெண்டு பேருக்குமிடையில் சின்னச் சின்ன சன்டைகள் வந்திருக்கு. ஆனா ஷோ பிக்அப் ஆகத் தொடங்கினதும் அதெல்லாம் மறைஞ்சிடுச்சு. இந்த நிகழ்ச்சி சன் டிவியின் டாப் நிகழ்ச்சிகள்ல ஒண்ணா இப்போ வரைக்கும் இருக்கு. இதோட வெற்றியில அவங்களுக்கும் முக்கிய பங்கு இருக்கு.

'சின்னத்திரையின் வடிவேலு-கோவை சரளா' என உங்களை அழைத்தார்களாமே?'

''அது மட்டுமா சொன்னாய்ங்க. அந்தம்மாவை என் 'வீட்டுக்காரி'ன்னு கூடத்தான் சொன்னாங்க. மதுரைப் பக்கம் ஒரு கிராமத்து நிகழ்ச்சி பண்ணப் போயிருக்கேன். பல்லு போன ஒரு கிழவி பக்கத்துல வந்து 'ஏன்யா, உன் சம்சாரத்தைக் கூட்டி வர்லையா'னு கேட்டுச்சு. 'இந்த இருக்கா என் சம்சாரம்'னு பக்கத்துல இருந்த என் மனைவியைக் கூப்பிட்டுக் காட்டினேன். 'இவ யாரு, அவ கொக்காட்டம் நெட்டையால்ல இருந்தா'ங்குது பாட்டி. 'ஏது குடும்பத்துல குழப்பத்தை உண்டாக்கிடும்னு 'போய் வெத்தலையை இடி; அப்புறம் பேசுவோம்'னு அனுப்பி வச்சேன். அந்தளவுக்கு ஷோ கிராமங்கள்லேயும் ரீச் ஆகியிருந்திச்சு.''

'ஷூட்டிங்கில் மறக்க முடியாத அனுபவம்?'

'நாங்க என்ன கொடைக்கானலுக்கும் குலுமனாலிக்குமா ஷூட்டிங் போனோம். 15-க்கு 15-ரூம்ல ஷூட்டிங் நடந்தது. ஆனா, அந்த அனுபவம் எல்லாமே மறக்க முடியாததுதான். நானோ, தேவதர்ஷினியோ அல்லது மொத்த யூனிட்டுமோ சரி, வேலை செய்ற இடமா நினைச்சு வரமாட்டோம். ஒரு ஸ்கூல், காலேஜ்ல நடக்கற அத்தனை கலாட்டாவும் அங்கே இருந்திச்சு. அதாவது, நீங்க பார்த்துட்டு வர்றது எடிட் பண்ணித் தர்றது. எடிட் பண்ணாம அப்படியே தந்தா சிரிச்சு சிரிச்சே நீங்க சீரியஸ் கேஸ் ஆகிடுவீங்க. அவ்வளவு நடக்கும்.'

'மகிழ்ச்சியான இந்தத் தருணத்துல அவங்க இல்லாததை எப்படி எடுத்துக்கிறீங்க?'

'என்னத்தை எடுத்துக்கிடறது? ஷூட்டிங் ஸ்பாட்டை காலேஜ்னு சொல்லிட்டேன். எங்களுக்குள்ள கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆச்சுன்னு சொல்லிட்டேன். அவங்களுக்கு 'எகனாமிக்ஸ்'ல போயிடுச்சு. வேற என்ன சொல்ல?' என்கிறார் முத்து.

தேவதர்ஷினியிடம் கேட்டால், 'முத்துவோட நகைச்சுவைக்கு நான் எப்பவுமே ரசிகை. கஷ்டமான, சிக்கலான, தர்மசங்கடமான... இப்படி எந்த சூழல்னாலும் சிரிக்க வெச்சிடுறதுல அவர் கில்லாடி. அதனால, அவர் என்ன சொன்னாரோ அதை நான் அப்படியே வழி மொழிஞ்சிடுறேன்' என்கிறார்.