Published:Updated:

''ரஜினியும், கமலும் எனக்கு தாய்மாமா மாதிரி!" நடிகை ஐஸ்வர்யா பெர்சனல்

''ரஜினியும், கமலும் எனக்கு தாய்மாமா மாதிரி!"  நடிகை ஐஸ்வர்யா பெர்சனல்
''ரஜினியும், கமலும் எனக்கு தாய்மாமா மாதிரி!" நடிகை ஐஸ்வர்யா பெர்சனல்

பி.சி.ஸ்ரீராம் இயக்கத்தில், விக்ரம் ஜோடியாக நடித்த 'மீரா' படம், நடிகை ஐஸ்வர்யாவுக்குத் தனி அடையாளத்துடன் வெள்ளித்திரையில் பெயர் பெற்றுத்தந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளில் தன்னை நிரூபித்தவர். 'ஆறு' படத்தில் சவுண்ட் சரோஜாவாக ரகளை செய்தார். தற்போது, சன் டிவியின் 'அழகு' சீரியலில் நடித்துவருகிறார். செல்லப் பிராணிகளை தன் உலகமாகக்கொண்ட அவரைச் சந்தித்தோம். 

''எப்பவும் ஜாலியா இருக்கீங்களே அதற்கான சீக்ரெட் என்ன?'' 

''நான் இதுவரை எந்த விஷயத்துக்காகவும் புலம்பினதே கிடையாது. எதுவாக இருந்தாலும் அதன் போக்கில் ஏத்துப்பேன். அதனால், மகிழ்ச்சியா இருக்கமுடியுது. எனக்கே எனக்காக, இந்தச் செல்லங்கள் இருக்காங்க. பூனை, நாய் என வீடு முழுக்க அவங்க ராஜ்ஜியம்தான். அவங்களோடு விளையாடும்போது எந்தக் கஷ்டமா இருந்தாலும் காணாமல்போயிடும்.'' 

''லட்சுமி அம்மா எப்படி இருக்காங்க?'' 

''அவங்களுக்கென்ன... சினிமாவில் எப்படி பார்க்கறீங்களோ அப்படியேதான் இருக்காங்க. ஷூட் முடிஞ்சு வீட்டுக்குப் போனதும் மணிக்கணக்கா ஜாலியா பேசிட்டிருப்போம். வீட்டுல கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி கொலு வெச்சோம். அந்தக் கொலுவைப் பார்க்க நிறைய குட்டி பசங்க வந்தாங்க. பெற்றோர்கள் இல்லாத குழந்தைகளுக்கு அம்மா உதவி பண்ணிட்டிருந்தாங்க. இவங்க எல்லாரும் அந்தப் பசங்கபோல என நினைச்சேன். அவங்க போனதுக்கு அப்புறமா, 'அந்தப் பசங்க எந்த டிரஸ்ட்?'னு கேட்டேன். 'அவங்க எல்லோரும் எய்ட்ஸ் பாதிச்ச குழந்தைக'னு சொன்னாங்க. ஷாக் ஆகி நின்னுட்டேன். அம்மா அந்தப் பசங்களையும் எங்களை பார்த்துக்குற மாதிரிதான் பார்த்துக்கறாங்க. நிறையக் குழந்தைகளின் கல்விக்கு ஹெல்ப் பண்றாங்க. தான் ஹெல்ப் பண்றதைச் சொல்லிக்கவே விரும்பமாட்டாங்க. 'எதைக் கொண்டுவந்தோம்; கொண்டு செல்வதற்கு' இதுதான் அம்மாவின் கேள்வி.'' 

''அம்மாவும் நீங்களும் சேர்ந்து நடிச்ச அனுபவம்?'' 

''என் முதல் படத்திலேயே சேர்ந்துதான் நடிச்சோம். சிவசந்திரன் சார் என்னுடைய குரு. அவர்தான் நடிப்பைச் சொல்லிக்கொடுத்தவர். எப்படி நடக்கணும், பிரேம்ல பார்க்கும்போது முகம் எப்படித் தெரியும், எனக்கு எந்த ஸ்டைல் செட்டாகும் எனப் பார்த்துப் பார்த்து கற்றுக்கொடுத்தார். என் வளர்ப்புத் தந்தை. அம்மாவுக்கு என்னை சினிமாவில் கொண்டுவரும் ஐடியாவே இல்ல. சிவசந்திரன் சார்தான் என்னை சினிமா உலகுக்குள்ளே கைப்பிடிச்சு அழைத்து வந்தார். என் காஸ்டியூம் விஷயத்தில் மட்டும்தான் அம்மா அதிகமா கேர் எடுத்துப்பாங்க. ஷூட்டிங் ஸ்பாட்ல எபப்வும் லூட்டி அடிச்சுட்டிருப்பேன்.'' 

''அம்மா அரசியலில் இருந்தவங்க. உங்களுக்கு அந்த எண்ணம் இருக்கா?'' 

''எனக்கு வாயில்லா ஜீவன்களுக்கும் குழந்தைகளுக்கும், வயசானவங்களுக்கும் உதவவே ஆசை. இப்போ, விலங்குகள் பாதுகாப்பு அமைப்புகளில் உறுப்பினரா இருக்கேன். பொதுவெளியில் இயங்க அரசியல்வாதியாக இருக்கணும் என்கிற அவசியம் இல்லை. வேறு வகையிலும் சமூக சேவையில் இருக்கலாம்.'' 

''விலங்குகள் மீது இவ்வளவு அக்கறை வந்தது எப்படி?'' 

''மனுசங்களைவிட விலங்குகள் நல்லவை. எந்தக் கட்டுப்பாடும் அற்ற அன்பு செலுத்துபவை. பந்தாவுக்காக வெளிநாட்டு நாய்களை வளர்க்கும் ஆள் இல்லை. நம்ம ஊர் ராஜபாளையம் நாயைவிட காவலுக்குச் சிறந்தது எதுவுமில்லை. வெளிநாட்டு நாய்களுக்குச் சென்னை வெயில் செட் ஆகாது. அதை அழகுக்காக வாங்கிட்டு, பார்த்துக்க முடியாமல் ரெண்டு வருஷத்திலேயே அநாதையா விடறது பெரிய பாவம். கொஞ்சம் யோசிச்சு பாருங்க. தெருநாய்களைப் பாதுகாத்து அன்பும் அரவணைப்பும் கொடுக்கிறதுதான் என்னுடைய குறிக்கோள்.'' 

''ரஜினி, கமல் அரசியல் பிரவேசம் பற்றி என்ன நினைக்கறீங்க?'' 

''என் சின்ன வயசில் ரஜினி அங்கிள் மடியில் உட்கார்ந்து கார் ஓட்டியிருக்கேன். 'பஞ்சதந்திரம்' படத்தில் கமல் அங்கிளிடம் நிறைய விஷயங்கள் கத்துக்கிட்டேன். இவங்க ரெண்டு பேரையுமே ஒரு ஆர்டிஸ்டா பார்த்ததே இல்லை. என் தாய்மாமா மாதிரிதான் நினைக்கிறேன். இவங்க அரசியலுக்கு வரணும், அவங்க வரணும் என்ற எந்த எண்ணமும் எனக்கு இல்லை. யார் அரசியலுக்கு வந்தாலும் சமூகத்துக்கு நல்லது செஞ்சா போதும்.'' 

''உங்க பொண்ணு இப்போ என்ன பண்றாங்க?'' 

''படிப்பு முடிச்சுட்டு வேலையில் இருக்காங்க. நான் ஷூட்டுக்குப் போயிடறதால் தனியா வீட்டுல விடறது சரியில்லே. ஸோ, கொஞ்ச வருஷமா அவங்க அப்பா வீட்டுலதான் இருக்காங்க. என் மாமியார் தங்கமானவங்க. அவங்க என் பொண்ணை நல்லா பார்த்துக்கிறாங்க.'' 

''மாடித் தோட்டம் பற்றி விழிப்புஉணர்வை ஏற்படுத்திட்டு இருக்கீங்களே...'' 

''என் நண்பர் ஒருவர் கெமிக்கல் உணவுப் பொருள்களை வைத்து ஓர் ஆய்வு பண்ணி, எனக்கு அனுப்பிவெச்சார். அதைப் படிச்சதும் நாம எவ்வளவு கெமிக்கலை சாப்பிடறோம்னு புரிஞ்சது. பத்து வருஷத்துக்கு முன்னாடி வரை குளிர்பானங்கள், ஜங்க் ஃபுட் சாப்பிட்டவள்தான் நான். இப்போ, சுத்தமா விட்டுட்டேன். ஒவ்வொரு பழமும் ஒவ்வொரு சீசனில்தான் கிடைக்கிறதுதான் சரியான முறை. ஆனால், இப்போ எல்லா சீசனிலும் கேட்கும் பழங்கள் கிடைக்கிறது எப்படி? அதெல்லாம் நம் உடம்பை கெடுக்கும் விஷங்கள். அதனாலதான், வீட்டிலேயே மாடித் தோட்டம் அமைச்சு மற்றவங்களுக்கு விழிப்புஉணர்வை ஏற்படுத்தி இருக்கேன். நடிகர் மாதவன் பிஸி வேலையிலும் அவருடைய வீட்டுல ஆர்கானிக் தோட்டம் வெச்சு பராமரிக்கிறார். நாமே ஆசையா செடிவெச்சு, பராமரிச்சு அது காய் கொடுக்கும்போது வரும் மகிழ்ச்சி அளவே கிடையாது. தவிர, எனக்கு விதவிதமா கேக் செய்யறது பிடிச்ச விஷயம். பேக்கிங் கிளாஸ் முடிச்சிருக்கேன். எந்த கான்செஃப்ட் சொன்னாலும், சூப்பரா கேக் செஞ்சு அசத்திருவேன்.'' 

''உங்க நெக்ஸ்ட் பிளான்..?'' 

''சம்மர் சீசன் வரப்போகுது. வெயில் காலத்தில் மனிதர்களே ரொம்ப சோர்வாகிடுவோம். தெரு நாய்களை நினைச்சுப் பாருங்க. தண்ணீருக்காக தவிக்கும். அவங்களுக்காக வீட்டு வாசலில் தண்ணீர் வைக்கிறது என் நெக்ஸ்ட் பிளான். முடிஞ்சா நீங்களும் உங்க வீட்டு வாசலில் தண்ணீர் வைங்க. திரிஷாவும் நானும் தெரு நாய்கள் மீது அதிக அக்கறை காட்டுறோம். உங்களால் முடிஞ்ச அளவுக்கு அந்த நாய்களைப் பராமரியுங்கள். மனசுக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைக்கும்.''

அடுத்த கட்டுரைக்கு