Published:Updated:

"இரட்டை வேடத்துல நடிக்கும்போது இதெல்லாம் ரொம்ப முக்கியம்!" - 'அவளும் நானும்' மெளனிகா

"இரட்டை வேடத்துல நடிக்கும்போது இதெல்லாம் ரொம்ப முக்கியம்!" - 'அவளும் நானும்' மெளனிகா
"இரட்டை வேடத்துல நடிக்கும்போது இதெல்லாம் ரொம்ப முக்கியம்!" - 'அவளும் நானும்' மெளனிகா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் புதிய தொடர், 'அவளும் நானும்'. இரட்டையர்களை கதைக் களமாகக்கொண்டது இந்தத் தொடர். இந்த சீரியலில் நடிக்கும் மெளனிகா தேவி, நிஜமான இரட்டையர்களே நடிக்கிறார்களோ என வியக்கும் அளவுக்கு அந்தக் கதாபாத்திரங்களுக்கு உயிர்க் கொடுத்துள்ளார். 

''மெளனிகா பற்றி...'' 

''நான் பிறந்தது மட்டும்தான் சென்னை. படிச்சது, வளர்ந்தது எல்லாமே ஆந்திராவில். என் அப்பா பிசினஸ் பண்றார். அண்ணனுக்கு ஐடி கம்பெனியில் வேலை. மாடலிங்கிலிருந்து நடிப்பு வரை அம்மாதான் எனக்கு சப்போர்ட். எட்டாவது படிக்கும்போது, 'எதிர்காலத்துல என்னவா ஆகப்போறே?'னு கேட்டதுக்கு, 'சீரியலில் நடிகை ஆகணும்'னு சொன்னவள் நான். படிப்பு முடிஞ்சு குடும்பத்தோடு சென்னை வந்ததும் மாடலிங் பண்ண ஆரம்பிச்சேன். நூற்றுக்கும் மேலே விளம்பரப் படங்களில் நடிச்சிருக்கேன்.'' 

''அது ஏன் சீரியல் நடிகை ஆசை..?'' 

''ஸ்கூல் முடிஞ்சு வீட்டுக்கு வரும்போது, அம்மா சீரியல் பார்த்துட்டிருப்பாங்க. அதுபற்றி அவ்வளவு பேசுவாங்க. ஆக, சீரியலில் நடிச்சா எல்லோரின் மனசிலும் இடம்பிடிக்கலாம்னு தெரிஞ்சுக்கிட்டேன். படிப்பு முடிஞ்ச சமயத்தில், தெலுங்கில் நியூஸ் ரீடர் வேலை கிடைச்சது. அது பெரிய அனுபவம். சோகம், சந்தோஷம் என செய்திக்கு ஏற்ப குரலில் ஏற்றம், இறக்கம் ரொம்ப முக்கியம். இரண்டு வருஷம் நியூஸ் ரீடரா இருந்து, நிறைய விஷயங்கள் கத்துகிட்டேன்.'' 

'' 'அவளும் நானும்' வாய்ப்பு எப்படிக் கிடைச்சது?'' 

''என்னுடைய விளம்பரப் படங்களைப் பார்த்து, ஆடிசனுக்கு கூப்பிட்டாங்க. ரொம்ப நாளா எதிர்பார்த்த வாய்ப்பு. ஆடிஷனில் செலக்ட் ஆனேன். ஆரம்பமே இரட்டை கதாபாத்திரம். என் நடிப்புத் திறமையை வெளிப்படுத்த கிடைச்சிருக்கும் அருமையான பிளார்ட்ஃபார்ம். சென்னைக்கு வந்த புதுசுல தமிழ் தெரியாம ரொம்ப கஷ்டப்பட்டேன். இப்போ கொஞ்சம் கொஞ்சம் பேசுறேன். இந்த சீரியலுக்காக இன்னும் ஈடுபாட்டோடு பேச கற்றுக்கொண்டிருக்கேன்.'' 

''இரட்டை வேடத்தில் நடிக்கும் அனுபவம் எப்படி இருக்கு?'' 

''இரட்டை வேடத்தில் நடிக்கிறது பெரிய சவால். ஆனால், ஒரு விஷயத்தை நேசிச்சு செய்யும்போது சுலபம்தானே? நிஜமாவே நீங்க ட்வின்ஸானு பலரும் கேட்கிறாங்க. ஒரு டேக்லேயே இரண்டு டிரெஸ்ஸுக்கு மாறணும். இரண்டு கதாப்பாத்திரத்துக்கும் வித்தியாசம் காட்டணும். இன்ட்ரஸ்டிங்கா போயிட்டிருக்கு. நிலா & தியா கதாபாத்திரங்கள், இதுவரை நீங்க பார்த்த இரட்டையர்கள் மாதிரி இருக்க மாட்டாங்க. டைரக்டர் தனுஷ் அருமையா இந்தக் கதையை உருவாக்கியிருக்கார். உங்களால் நடிக்க முடியும்னு அவர் கொடுத்த நம்பிக்கை எனக்குள் பொறுப்பை அதிகமாக்கி இருக்கு.''

''இரட்டை வேடம் என்பதால் நிறைய காஸ்டியூம்ஸ் தேவைப்படுமே...'' 

''ஆமாம்! சேலை, வெஸ்டர்ன், சுடிதார்னு நிறைய வெரைட்டியான காஸ்டியூம்ஸ் போடமுடியுது. அது, காலேஜ் ஸ்டூடன்ஸை ரொம்பவே கவருது. இந்த சீரியல் கடவுள் கொடுத்த கிஃப்ட். ரொம்பவும் ரசிச்சு நடிச்சுட்டிருக்கேன். அதேசமயம், மாடலிங் துறையிலும் வலம் வந்துட்டிருக்கேன்.'' 

''உங்களை ரொம்ப கவர்ந்த கதாபாத்திரம் எது?'' 

'' 'படையப்பா' நீலாம்பரியை எனக்கு ரொம்ப பிடிக்கும். என் முகத்துக்கு நெகட்டிவ் செட் ஆகாதுன்னு சொல்றாங்க. ஆனா, எனக்கு நீலாம்பரி மாதிரி ஒரு கேரக்டர் பண்ணனும்னு ஆசை. எனக்கு நடிகர் கார்த்தி மேலே பயங்கர கிரஷ். அவருடைய 'நான் மகான் அல்ல' படத்தை 20 முறைக்கும் மேலே பார்த்தேன். மாடலிங் பண்ணும்போதே சினிமா வாய்ப்பு கிடைச்சது. எனக்கு சீரியல் பண்றதுதான் எய்ம். அதனால், அந்த வாய்ப்புகளை தவிர்த்துட்டேன்.'' 

''உங்க ரோல்மாடல் யார்?'' 

''என் அண்ணன்தான். நிறைய விஷயங்கள் எனக்குக் கற்றுக்கொடுத்தது அவர்தான். படிக்கும்போதும் சரி, மாடலிங் பண்ணும்போதும் எனக்குப் பெரிய சப்போர்ட்டா இருந்தார். ஐ லவ் மை பிரதர்.'' 

''எதிர்கால திட்டம் என்ன?'' 

''திட்டம்னு சொல்ல முடியாது. வருசத்துல ஒருநாள்கூட வீட்டுல உட்கார எனக்குப் பிடிக்காது. கடைசி வரை நடிச்சுட்டே இருக்கணும். அதுதான் என் விருப்பம்.''