Published:Updated:

கமல் சார் கொடுத்த நம்பிக்கையில் மாஸ்டர் ஆனேன்!" - 'டான்ஸ் ஜோடி டான்ஸ் 2.0' நடிகை அபிநயஶ்ரீ

கமல் சார் கொடுத்த நம்பிக்கையில் மாஸ்டர் ஆனேன்!" - 'டான்ஸ் ஜோடி டான்ஸ் 2.0' நடிகை அபிநயஶ்ரீ
கமல் சார் கொடுத்த நம்பிக்கையில் மாஸ்டர் ஆனேன்!" - 'டான்ஸ் ஜோடி டான்ஸ் 2.0' நடிகை அபிநயஶ்ரீ

"டான்ஸ்தான் என் அடையாளம். அதுக்காக நிறைய உழைப்பைக் கொடுக்கிறேன். அதுக்குப் பரிசாக, டான்ஸ் மாஸ்டர் ஆகியிருக்கேன்" - உற்சாகமாகப் பேசுகிறார், நடிகை அபிநயஶ்ரீ.  நடிகை அனுராதாவின் மகள். தற்போது, ஜீ தமிழில் 'டான்ஸ் ஜோடி டான்ஸ் 2.0' நிகழ்ச்சியின் செலிப்ரிட்டி போட்டியாளரும்கூட. 

"செலிப்ரிட்டி போட்டியாளர் அனுபவம் எப்படி இருக்கு?'' 

"சாப்பாடு, தூக்கத்தைவிட எனக்கு டான்ஸ் பிரதானம். அதுக்காக அதிகபட்ச பெஸ்டை கொடுப்பேன். அதனால்தான், ஒவ்வொரு ரவுண்டிலும் நிறைய புதுமையைக் காட்டறேன். நான் மட்டும் ஆடறது முக்கியமே இல்லை. செலிப்ரிட்டி போட்டியாளர்கள் பலர் இருக்காங்க. மீடியா வெளிச்சம் படாத, திறமையான டான்ஸர்ஸ்தான் எங்க சக ஜோடிகள். அப்படி, கார்த்திக் என்ற போட்டியாளருக்கு ஜோடியா டான்ஸ் ஆடறேன். இந்த நிகழ்ச்சி, வித்தியாசமான அனுபவமாக இருக்கு. ரியாலிட்டி ஷோவில், சினிமா மாதிரி டேக் எடுத்து ஆட முடியாது. கொடுக்கப்பட்ட நிமிடத்துக்குள் ஆடணும். அதுக்காக, இரவு பகலா பிராக்டீஸ் எடுக்கிறோம். ஆன் தி ஸ்பார்ட்ல இருவரும் சிறப்பா ஆடறோம். ஒவ்வொரு ரவுண்டிலும் பாராட்டுகள் குவியுது." 

"பொங்கல் சிறப்பு எபிசோடில் அம்மாவுடன் டான்ஸ் ஆடின அனுபவம்..." 

"எஸ்! அந்த ரவுண்டில் ஒவ்வொரு போட்டியாளருடனும் ஒரு பிரபலம் டான்ஸ் ஆடும் கான்செப்ட். எங்களுடன் ஆடறதா அம்மா சொன்னாங்க. 'இந்த வயசுல முழு எனர்ஜியோடு ஆட முடியுமா?'னு

 தயங்கினோம். 'வில்லு' படத்தின் 'ராமா ராமா' பாட்டுக்கு மூணு பேரும் ஆடினோம். வெளியில் சிரிச்சுட்டிருந்தாலும் என் மனசுக்குள்ளே அம்மா எப்படி ஆடப்போறாங்களோனு பயம் இருந்துச்சு. ஆனால், அம்மா செமையா ஆடிட்டாங்க. 20 வருஷத்துக்குப் பிறகு ஆடினாலும், எங்களுக்குப் பயங்கர டஃப் கொடுத்தாங்க. நடுவர்களான கெளதமி, சினேகா, பிரியா மணி மூவரும் எழுந்து நின்னு பாராட்டினாங்க. அம்மாவின் டான்ஸ் எனர்ஜியைப் பார்த்து, நாம நிறைய உழைக்கணும் என்கிற உணர்வுதான் வந்துச்சு.'' 

" 'ஃப்ரெண்ட்ஸ்' படத்தில் நடித்த நினைவுகள் பற்றி..." 

"அம்மா நடிகை மற்றும் டான்ஸரா இருந்தாலும், நான் படிப்பில் கவனம் செலுத்தணும்னு ஆசைப்பட்டாங்க. ஆனால், சின்ன வயசுலேயே எனக்கு டான்ஸ் ஆர்வம் உண்டாகிடுச்சு. மைக்கேல் ஜாக்‌சன், பிரபுதேவா இருவரின் தீவிர ரசிகை நான். ஆறாவது படிக்கும்போது 'ஃப்ரெண்ட்ஸ்' படத்தில் அபிராமி என்கிற ரோலில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்துச்சு. அது பெரிய டீம். அம்மாவும் சம்மதம் சொல்லவே நடிச்சேன். கொஞ்சமும் டென்ஷனோ, பயமோ இல்லாமல்தான் நடிச்சேன். தொடர்ந்து நிறையப் படங்களில் நடிச்சதால், கரஸ்லதான் படிச்சேன். அப்புறம், எடிட்டிங் கோர்ஸ் முடிச்சேன்." 

"தமிழில் பெரிய அளவில் நடிக்காதது ஏன்?'' 

"தமிழைவிட தெலுங்கில்தான் நிறையப் படங்களில் நடிச்சேன். 'ஆர்யா' படத்தில் அல்லு அர்ஜூனோடு ஆடிய, 'ஆ அன்டே அமலாபுரம்' பாட்டு செம ஹிட். நிறைய டான்ஸ் மற்றும் காமெடி ரோல்களில் நடிச்சேன். 'பைசாலோ பரமாத்மா' படத்துக்காகச் சிறந்த காமெடி நடிகைக்கான நந்தி விருதையும் வாங்கினேன். தெலுங்கு சினிமாவில் நிறைவான சந்தோஷம் கிடைச்சது." 

"அம்மா அனுராதாவின் சப்போர்ட் பற்றி..." 

"1980-ம் ஆண்டுகளில் கிளாமர் ரோல்களில் அம்மா கலக்கினாங்க. ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட எல்லாப் பிரபல ஹீரோக்களுடனும் நடிச்சிருக்காங்க. வீட்டில் பெரும்பாலும் சினிமா விஷயங்களைப்

பேசிக்க மாட்டோம். ஆனால், நான் முழு நேரமா சினிமாவுக்கு வந்த பிறகு, நிறைய விஷயங்களைச் சொல்லிக்கொடுத்திருக்காங்க. என் டான்ஸ் கரியருக்கு நிறைய சப்போர்ட் பண்ணியிருக்காங்க. இப்பவும் டான்ஸில் நிறைய டிப்ஸ் கொடுப்பாங்க. இக்கட்டான சூழலில், அப்பாவையும் பராமரிச்சுகிட்டு, என்னையும் தம்பியையும் வளர்த்து ஆளாக்கினாங்க. அப்பாவின் மறைவுக்குப் பிறகு, சிங்கிள் மதரா எங்க அம்மா காட்டின அக்கறைக்கும் அன்புக்கும் ஈடு இணையே சொல்ல முடியாது." 

"டான்ஸ் மாஸ்டர் அபிநயஶ்ரீ...?'' 

"என் சின்ன வயசுல அம்மாவுடன் நடிகர் கமல்ஹாசன் சாரை சந்திக்கப் போனேன். 'எனக்கு டான்ஸ் மாஸ்டராக ஆசை சார்'னு சொன்னேன். 'நான் டைரக்டர் ஆகணும்னு ஆசைப்பட்டு சினிமாவுக்கு வந்து, நடிகனாகிட்டேன். இப்போ டைரக்‌ஷனும் பண்றேன். உங்க இலக்குல தீர்க்கமா இருந்தால், நிச்சயம் டான்ஸ் மாஸ்டர் ஆகிடலாம்''னு சொன்னார். இப்போ டான்ஸ் மாஸ்டர் ஆகிட்டேன். என் சொந்த உழைப்பில் மாஸ்டரா வெற்றி பெறணும். அம்மாவின் பெயரைக் காப்பாத்தணும். அதுதான் என் ஆசை."