Published:Updated:

"சிம்பு... மனசு சொல்றதைக் கேட்குறார்; ப்ரியாங்காவைக் கலாய்க்கிறார்!" - 'சூப்பர் சிங்கர்' ரஊஃபா

"சிம்பு... மனசு சொல்றதைக் கேட்குறார்; ப்ரியாங்காவைக் கலாய்க்கிறார்!" - 'சூப்பர் சிங்கர்' ரஊஃபா
"சிம்பு... மனசு சொல்றதைக் கேட்குறார்; ப்ரியாங்காவைக் கலாய்க்கிறார்!" - 'சூப்பர் சிங்கர்' ரஊஃபா

'அந்தக் கோவில் விவகாரத்துக்குப் பிறகு பஞ்சாயத்துப் பக்கமே வரக்கூடாதுன்னுதான் இருந்தேன்ப்பு' - 'தேவர் மக'னில் சிவாஜி கணேசன் பேசுவாரே, அதே... அதே போலத்தான் 'ஜோடி' சம்பவத்துக்குப் பிறகு ரியாலிட்டி ஷோ பக்கமே தலைகாட்டாமல் இருந்து வந்தார், சிம்பு. ஆனால், மறுபடியும் அதே விஜய் டிவி 'சூப்பர் சிங்கர்' ஷோவுக்குப் பெரும்பாடு பட்டு கூட்டி வந்து உட்கார வைத்துவிட்டார்கள். இம்முறை 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சியில் சிம்புவைப் பார்த்த, அவரது பேச்சைக் கேட்டவர்கள், அசந்து போய், 'சிம்பு இப்ப செம மெச்சூர்ட்..' என்கிறார்கள்.

சூப்பர் சிங்கர் இயக்குநர் ரஊஃபாவிடம் பேசினோம்.

''2006-ல் 'சூப்பர் சிங்கர்' முதல் சீசனில் சிம்பு கலந்துக்கிட்டார். குறிஞ்சி பூக்கிற மாதிரி சரியா பன்னிரெண்டு வருடத்துக்குப் பிறகு மறுபடியும் வந்தார், சிம்பு. கடந்த ரெண்டு சீசனுக்குமே முயற்சி செய்தோம். இந்த முறை சம்மதிச்சார். ஷோவுல கலந்துக்க கேட்டு அன்னைக்கும் அணுகின போதும் சரி, இன்னைக்கும் சரி... ஒரு விஷயம் அவர்கிட்ட மாறவே இல்லை. 'ஷோவுல வந்து நான் என்ன பேசணும்', 'எங்கிட்ட யார் என்ன கேட்பாங்க', 'இதைப் பேசலாமா, கூடாதா' இப்படி எந்தக் கேள்வியும் எங்ககிட்ட அவர் கேட்கலை. 'ஒளிவு மறைவு இல்லாதவர்'னு இந்த ஒரு விஷயத்தை வெச்சே எங்களால புரிஞ்சுக்க முடிஞ்சது. எந்தவொரு நிகழ்ச்சியிலேயும் 'கலந்துக்கலாம்'னு அவர் மனசு சொன்னா, சம்மதம் சொல்றார். எந்த ரெஸ்ட்ரிக்‌ஷனும் இல்லைங்கிறதே பெரிய விஷயமில்லையா?

இன்னொரு விஷயமும் இதுல அடங்கியிருக்கு. 'என்ன வேணா கேளுங்க, எங்கிட்ட பதில் இருக்கு'ங்கிற மாதிரியான ஒரு தெளிவு, துணிச்சல்னும் இதைச் சொல்லலாம்'' என்கிறார் ரஊஃபா.

இடையில் அந்த 'ஜோடி நம்பர் ஒன்' ஷோவில் நடந்தது குறித்து விஜய் டிவி தரப்பில் பேசியபோது,

''அந்த ஷோவுல நடுவரா வந்தார் சிம்பு. டான்ஸ் பண்ணின பப்லுவோட பெர்ஃபார்மன்ஸ்ல அவருக்குத் திருப்தி இல்லை. அவர்கிட்ட அதிகமா எதிர்பார்த்தார். அதனால, 'என்னால உனக்கு மார்க் போட முடியாது'னு சொன்னார். பதிலுக்கு பப்லு சில வார்த்தைகளைப் பேசினது, அவரை எரிச்சலடைய வெச்சிடுச்சு. இன்னொருபுறம், நடந்தது 'செட்-அப்'ங்கிற மாதிரி கிளம்பின பேச்சுக்கள் அவரை மேலும் அப்செட் ஆக்கியிருக்கும்னு நினைக்கிறோம்' என்றார்கள்.

இந்தமுறை 'சூப்பர் சிங்கர்' நிகழ்ச்சிக்காக அணுகியபோது அந்தப் பழைய சம்பவம் குறித்து ஏதும் பேசினாரா?

"நாங்களேகூட எதிர்பார்த்தோம். மனுஷன் ஒரு வார்த்தை கூடப் பேசலை. எங்களுக்கெல்லாம் ஒரே ஆச்சர்யம்! விஜய் டிவி ஷோக்களை அவர் விரும்பிப் பார்க்கிறது முக்கியமான ஒரு காரணமா இருக்கும்னு நினைக்கிறோம். 'மனசு டல்லா இருந்தா, கலக்கப் போவது யாரு பார்ப்பேன்'னு ஏற்கெனவே அவர் சொல்லியிருக்கார். எங்க ஆங்கர் பிரியங்காவோட சிரிப்பு அவருக்கு ரொம்பப் பிடிக்கும். இந்தமுறைகூட ப்ரியங்காவை செமயா கலாய்ச்சுக்கிட்டு இருந்தார்.  

இது எல்லாத்தையும்விட, இன்னைக்குச் சூழலுக்கு எதுக்கும் ரெடியா இருக்கார். 'ஜோடி', 'சூப்பர் சிங்கர்' எந்த நிகழ்ச்சிக்கும் நான் தெளிவாதான் இருக்கேன்; சர்ச்சைகளைப் பத்தி எனக்குக் கவலையில்லை'னு சொல்ற மாதிரி இருந்தது. அதேநேரம் அந்த ஆயத்தத்துல பக்குவம் ரொம்பவே இருந்ததை எங்களால புரிஞ்சுக்க முடிஞ்சது'' என்கிறார் ரஊஃபா.

சிம்பு ரிட்டர்ன்ஸ்!