Published:Updated:

"நானும் மானஸாவும் இப்போ ஃப்ரெண்ட்ஸ்; எதிர்காலத்துல...ம்ம்ம்!" 'ராஜா ராணி' சஞ்சீவ்

"நானும் மானஸாவும் இப்போ ஃப்ரெண்ட்ஸ்; எதிர்காலத்துல...ம்ம்ம்!"  'ராஜா ராணி' சஞ்சீவ்
"நானும் மானஸாவும் இப்போ ஃப்ரெண்ட்ஸ்; எதிர்காலத்துல...ம்ம்ம்!" 'ராஜா ராணி' சஞ்சீவ்

"ஆக்டிங் மூலமாக மக்கள் மனசுல இடம்பிடிச்சே தீரணும்னு இருந்தேன். சீரியலில் என்ட்ரி கொடுத்தேன். ஒரு வருஷத்திலேயே பெரிய ரீச் கிடைச்சதில் சந்தோஷம்" - உற்சாகமாகப் பேசுகிறார், நடிகர் சஞ்சீவ். விஜய் டிவி 'ராஜா ராணி' சீரியலின் ஹீரோ. 

"சினிமா டு சீரியல் என ரிவர்ஸ்ல பயணிச்சது ஏன்?" 

"மிடில் கிளாஸ் ஃபேமிலி. சினிமா ஃபீல்டில் சாதிக்க ஆசை. என் முதல் தமிழ் படம், 'குளிர் 100 டிகிரி'. ஏழு படங்களில் ஹீரோவா நடிச்சும் ரீச் ஆகலை. சரி, சீரியலில் கவனம் செலுத்துவோம்னு முடிவெடுத்தேன். ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, 'சரவணன் மீனாட்சி' ஆடிஷனில் கலந்துக்கிட்டேன். வாய்ப்பு அமையலை. ஒரு வருஷம் கழிச்சு கிடைச்ச வாய்ப்புதான், 'ராஜா ராணி'. ரொம்ப நல்லா போகுது. எதிர்பார்த்ததைவிட அதிக வரவேற்பு கிடைச்சிருக்கு. யங்ஸ்டர்ஸூம் எங்க சீரியலைப் பார்த்து ஆதரவு கொடுக்கிறாங்க. வாழ்க்கையில் பாசிட்டிவான கட்டத்துக்குப் போயிருக்கும் சந்தோஷம்." 

"ஷூட்டிங் ஸ்பாட்ல நடந்த மறக்கமுடியாத அனுபவம் பற்றி..." 

"எங்க சீரியலில் நிறைய யங்ஸ்டர்ஸ் இருக்கோம். ஒவ்வொரு நாள் ஷூட்லயும் கேலி, அரட்டைனு நிறைய விஷயங்கள் நடக்கும். ஒவ்வொரு நாளும் மறக்கமுடியாத அனுபவம்தான். சென்டிமென்ட், அழுகைதான் சீரியல் என்ற பிம்பத்தை கொஞ்சம் மாற்றி, ரொமான்ஸ், காமெடி உள்ளிட்ட நிறைய சீன்ஸ் வரும். டைரக்டர் பிரவீன் ஒவ்வொரு சீனையும் அழகாக் காட்சிப்படுத்துறார். எனக்கு ஜோடி, அலியா மானஸா. எங்களின் ரொமான்ஸ் சீன்ஸை ரசிக்கும் வகையில் எடுக்க டைரக்டர் நிறையவே மெனக்கெடுவார். அப்போ செட்ல நிறைய சிரிப்பலைகள் எழும்." 

"உங்களையும் மானஸாவையும் இணைச்சு நிறைய கிசுகிசு வருதே..." 

"மானஸா ஒரு ஜும்பா ட்ரெயினரும்கூட. என் சிஸ்டர், மானஸாகிட்ட கிளாஸ் போயிருக்காங்க. ஸோ, 'ராஜா ராணி' நடிக்கிறதுக்கு முன்னாடியே நாங்க ஃப்ரெண்ட்ஸ். ஜோடியா நடிக்கும் ஆர்ட்டிஸ்டுகளைச் சேர்த்துவெச்சு கிசுகிசு வர்றது இன்னிக்கு நேத்தா நடக்குது. எங்க ஆக்டிங் கெமிஸ்ட்ரி நல்லா வரணும்னு அந்நியோன்யமா நடிக்கிறோம். அதைப் புரிஞ்சுக்காம வதந்தி பரப்பறாங்க. இப்படியான விஷயங்களை மீடியா உலகத்துல தவிர்க்க முடியாது. அதனால், சிரிச்சுட்டு போயிடுவோம். இப்போதைக்கு நாங்க ஃப்ரெண்ட்ஸ்தான். எதிர்காலத்துல என்ன நடக்கும்னு கணிக்க முடியாது." 

"டான்ஸர் வொர்க்கை குறைச்சுக்கிட்டீங்களா?" 

"ஒரு ரியாலிட்டி ஷோ டான்ஸராகத்தான் என் மீடியா பயணம் தொடங்கிச்சு. எப்போதுமே டான்ஸ் மேல எனக்குப் பெரிய ஆர்வம் உண்டு. அதில், நிறைய வெரைட்டி காட்டுவேன். வெளிநாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் விஜய் டிவி நிகழ்ச்சிகள் என இப்போ செலக்டிவா டான்ஸ் ஆடறேன். பெரும்பாலும் நடிப்பில்தான் கவனம் செலுத்துறேன்." 

"உங்களின் முதல் சினிமா ஜோடி ஓவியாவுடனான நட்பு பற்றி..." 

"மலையாளத்தில் நடிச்ச 'அபூர்வா'தான் என் முதல் படம். அதில், எனக்கு ஜோடி, ஓவியா. அப்போ அவங்க பெயர், ஹெலன். அந்தச் சமயத்தில் நாங்க ரெண்டு பேருமே சினிமாவின் ஆரம்பக் கட்டத்தில் இருந்தோம். ஒரு மாசம்தான் ஷூட் நடந்துச்சு. விளையாட்டுத்தனமா நடிச்சோம். அப்போதிலிருந்து பல வருஷம் நல்ல நட்பில் இருந்தோம். அப்புறம் ஆளுக்கு ஒரு பக்கம் போயிட்டதால், நட்பை தொடர முடியலை. மற்றபடி எங்கேயாச்சும் பார்த்தா, பழைய நினைவுகளோடு பேசிப்போம்." 

"சினிமாவுக்கு பிரேக் கொடுத்துட்டீங்களா?" 

"இல்லை. தமிழ் மற்றும் கன்னடத்தில் தயாராகும், '16-ம் நம்பர் வீடு' படத்தில் ஹீரோவா நடிக்கிறேன். தொடர்ந்து சினிமா மற்றும் சின்னத்திரையில் நடிப்பேன். என் பூர்வீகமான கோயம்புத்தூர் பக்கம்தான் பாலக்காடு. என் முகச் சாயலும் பேச்சும் கேரளா பையன் மாதிரி இருக்கும். இப்படி என்னமோ ஒரு கலவை. அதனால், பலரும் என்னை கேரளா பையன்னு சொல்றாங்க."