Published:Updated:

``தமிழச்சியா இருந்தா அவாய்டு பண்றாங்க!" - தொகுப்பாளர் ஆர்த்தியின் ஆதங்கம்

``தமிழச்சியா இருந்தா அவாய்டு பண்றாங்க!" - தொகுப்பாளர் ஆர்த்தியின் ஆதங்கம்
``தமிழச்சியா இருந்தா அவாய்டு பண்றாங்க!" - தொகுப்பாளர் ஆர்த்தியின் ஆதங்கம்

மக்கள் தொலைக்காட்சி தொடங்கப்பட்ட புதிதில் பலராலும் கவனிக்கப்பட்டவர், ஆர்த்தி. ஆங்கிலக் கலப்பின்றி அழகான எளிய தமிழில் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி அனைவரையும் ஈர்த்தவர். அதன் மூலமே சன் டிவியின் முக்கிய நிகழ்ச்சியான `வணக்கம் தமிழகம்' நிகழ்ச்சியில் நேர்காணல் செய்யும் வாய்ப்பையும் பெற்றார். பிறகு, திருமணமானதும் சேனல் பணிக்குப் பிரேக் விட்டிருந்தவர், தற்போது பையன் பள்ளிக்குச் செல்லத் தொடங்கிவிட்டதால், மீண்டும் சேனல் பக்கம் வந்திருக்கிறார். ஆர்த்தி, இப்போது பொதிகைத் தொலைக்காட்சித் தொகுப்பாளினி. மகன் தியோடனுடன் கொஞ்சி விளையாடிக்கொண்டிருந்த ஒரு மாலை வேளையில் அவரைச் சந்தித்தோம்.

மக்கள், பொதிகை மாதிரியான சேனல்களே `செட்' ஆகும்னு நினைச்சுட்டீங்களா?

``அப்படி நினைக்கலை. தமிழ்மேல உள்ள பிரியத்துல மக்கள் டிவிக்கு விண்ணப்பிச்சேன். வேலை கிடைச்சது. அந்த அனுபவமே சன் டிவிக்குக் கூட்டிட்டுப் போச்சு. அதுக்குப் பிறகு நானா விட்ட இடைவேளைக்குப் பிறகு, இப்போ `பொதிகை'யில வாய்ப்பு அமைஞ்சிருக்கு. எந்த சேனல்லேயும் என்னால பணிபுரிய முடியும். அதேபோல ஆங்கிலக் கலப்பில்லாமலேயே ஒரு நிகழ்ச்சியை சுவாரஸ்யமாகக் கொண்டுபோறதும் சாத்தியமே!. ஆனா, `தமிழனா இருந்தா ஷேர் பண்ணுங்க'னு சோஷியல் மீடியாவுல சொல்றாங்களே, அதேபோல 'தமிழச்சியா இருந்தா அவாய்டு பண்ணுங்க'னு சேனல்கள்ல பாலிசி வெச்சிருக்காங்களோ என்னவோ... எனக்குப் பாப்புலாரிட்டி, பணத்தைவிட முக்கியமானது... செய்ற வேலை மனசுக்குப் பிடிச்சதா இருக்கணும்!''.

அரசுத் தொலைக்காட்சியில பணிபுரிகிற அனுபவம் எப்படி இருக்கு?

``இன்னைக்கு டிவியில பிரபலமான முகங்கள் எல்லோருமே தூர்தர்ஷன்ல பயிற்சி பெற்றுப் போனவங்கதானே? வித்தியாசம்னு எதையும் உணர முடியலை. ஆனா, விளம்பரப்படுத்திக்காம இங்கே எவ்வளவோ விஷயங்களைப் பண்ணிட்டிருக்காங்க. ஒரு உதாரணம் சொல்லணும்னா, `சூப்பர் சிங்கர்', `ஜோடி' மாதிரியான ஷோக்களை உங்களுக்குத் தெரியும். வருடத்துக்கு ஒரு சீசன்னு நடத்துறாங்க. ஜெயிக்கிறவங்களுக்கு வீடு, கார்னு பரிசு தர்றாங்க. ஆனா, பொதிகையில பாட்டு, நடனத்துக்கு `குயில்தோப்பு', `மயில்தோப்பு'னு ரெண்டு நிகழ்ச்சிகள். தனியார் சேனல்கள் மாதிரி ரெக்கார்டு செய்து ஒளிபரப்பாம, லைவ் ஷோவா நடத்துறோம். மாதமாதம் பரிசாக ரெண்டு லட்சம் தொகையாகவே தர்றாங்க. வருடத்துக்குத் தலா 24 லட்சம் ரூபாய். நிறைய பேருக்கு வாய்ப்பு கிடைக்குது.

பள்ளி ஆசிரியையாகவும் வகுப்பு எடுத்துக்கிட்டு இருக்கீங்களாமே? 

``ஆமா, கல்வி தொடர்பான ஒரு சர்வதேச இயக்கம். பள்ளிகள்ல பசங்களுக்கு இருக்கிற எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிடீஸைக் கண்டுபிடிக்க ஒரு திட்டம் தயாரிச்சு செயல்படுத்திட்டிருக்காங்க. இதுக்கான சிறப்பு வகுப்புகள் பள்ளிகள்ல நடக்கும். இந்த வகுப்பெடுக்க குழந்தைகளின் மனநிலையைப் புரிஞ்சவங்க வேணும்னு தேடியிருக்காங்க. மக்கள் டிவியில நான் தொகுத்து வழங்கிய குழந்தைகள் நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்துட்டு என்னைக் கேட்டாங்க. போன வருடம் சென்னையில ஒரு பள்ளியில போய் வகுப்பெடுத்தேன். இந்த வருடம் இனிமேல்தான் வகுப்பு தொடங்க இருக்கு.

சீரியல், சினிமா வாய்ப்புகள் வரவில்லையா?

``சீரியல்ல நடிக்கணும்னு ஆசை இருக்கு. ஆனா, கேரக்டர் நல்லா அமையணும்னு எதிர்பார்க்கிறேன். வெளியில `தமிழ் தமிழ்'னு கோஷம் போட்டுட்டு, டிவியில முகம் காட்ட வாய்ப்பு வந்ததும் மாடர்னா, தமிழ் கலாசாரத்துக்குச் சம்பந்தமில்லாத விஷயங்களைப் பண்ண என்னால முடியாது. (யாரைச் சொல்றார் தெரியலையே?!). சினிமாவைப் பத்தி முதல்ல நல்லா தெரிஞ்சுக்கிட்டுதான், ஆசைப்படணும். த்ரிஷா ஹீரோயினா நடிக்க, என்னோட கணவர் வர்ணிக் இயக்க உள்ள `குற்றப் பயிற்சி' படத்துல இருந்துதான் அந்தத் தேடலை ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்.