Published:Updated:

"பொண்ணை மீடியாக்குள்ள அனுப்பாதீங்கன்னு சொன்னாங்க!" 'சின்னத்தம்பி' ரேமா

வெ.வித்யா காயத்ரி
"பொண்ணை மீடியாக்குள்ள அனுப்பாதீங்கன்னு சொன்னாங்க!" 'சின்னத்தம்பி' ரேமா
"பொண்ணை மீடியாக்குள்ள அனுப்பாதீங்கன்னு சொன்னாங்க!" 'சின்னத்தம்பி' ரேமா

விஜய் தொலைக்காட்சியின் 'சின்னத்தம்பி' சீரியலில் கதாநாயகனின் தங்கையாகவும், குறும்புக்காரப் பெண்ணாகவும் கலக்கிவருபவர், ரேமா. ''இப்போதான் எனக்கு ஓட்டு போடும் 18 வயசே ஆரம்பிக்குது'' என ஆரம்ப வரியிலே வியக்கவைக்கிறார். 

''குறும்புல பின்னி எடுக்கறீங்களே, உங்க சொந்த ஊர் எது?'' 

''மதுரை. அப்பா, அம்மா ரெண்டு பேருமே டீச்சர்ஸ். அண்ணன் பெங்களூரில் வேலை பார்க்கிறார். நான் முதலாமாண்டு ஃபேஷன் டிசைனிங் படிச்சுட்டிருக்கேன். சின்ன வயசிலிருந்தே டான்ஸ் ஆர்வம் அதிகம். கலைஞர் டிவியின் 'ஓடி விளையாடு பாப்பா' நிகழ்ச்சியில் ஆடியிருக்கேன். விஜய் டிவியில் 'களத்து வீடு' சீரியல் வாய்ப்பு கிடைச்சது. எனக்கு சப்போர்ட்டா அம்மா அவங்க வேலையை விட்டுட்டு என்னோடு சென்னைக்கு வந்துட்டாங்க. நான் கிளாசிக்கல் டான்ஸர். மதுரையில் நிறையப் பேருக்கு நடனம் சொல்லிக்கொடுத்துட்டிருந்தேன். ஒரு டான்ஸருக்கு முகபாவனை இயற்கையாகவே வந்துடும். அதனால், நடிக்கிறதுக்காக நான் தயங்கலை. பெரிய ஹோம் ஒர்க் எதுவும் பண்ணலை.'' 

'' 'சின்னத்தம்பி' சீரியல் அனுபவம் குறித்து...'' 

''அந்த செட்டுலேயே நான்தான் ரொம்ப சின்னப் பொண்ணு. ஏதாவது சேட்டை பண்ணிட்டே இருப்பேன். ஒரு ஷூட்டுக்காக, 'சின்னத்தம்பி' சீரியலில் நடிக்கும் ஆர்டிஸ்ட் எல்லாம் சேர்ந்து ஷூட்டிற்காக ஒரு ட்ரிப் போனோம். பஸ்ல பாட்டு போட்டு செம்ம என்ஜாய்மென்ட். அந்த நிகழ்ச்சியை என்னால் மறக்கவே முடியாது.'' 

'' 'கல்யாணம் முதல் காதல் வரை' சீரியலில் திருமணமான பெண்ணாக நடிச்சிருக்கீங்களே...'' 

''அதில் நடிக்கும்போது பிளஸ் ஒன் படிச்சுட்டிருந்தேன். ஒரு நடிகைன்னா எந்த கதாபாத்திரத்திலும் நடிக்க ரெடியா இருக்கணும். நெற்றியில் குங்குமம் வெச்சு பக்கா குடும்பப் பெண்ணா நடிச்சது, புது அனுபவம்.'' 

''உங்களுடைய காஸ்டியூம்ஸ் செலக்‌ஷன் சூப்பரா இருக்கே...'' 

''என் அம்மாதான் அந்தப் பாராட்டுக்கு உரிமையானவங்க. டான்ஸ் நிகழ்ச்சிகளில் ஆடும்போதும் சரி, சீரியலில் நடிக்கும்போதும் சரி, எந்த காஸ்டியூம் மேட்ச் ஆகும்னு பார்த்துப் பார்த்து செலக்ட் பண்ணுவாங்க. எனக்கு நீளமான முடி. பார்க்குறவங்களெல்லாம் இது உண்மையாவே நிஜமான முடி தானான்னு சந்தேகப்படுவாங்க. அம்மா தான் என் முடியை பராமரிக்குற வேலையை பார்க்குறாங்க.  'பொண்ணை மீடியாக்குள்ளே அனுப்பாதீங்க'னு பலரும் சொன்னாங்க. இப்போவரைக்குமே சொல்லிட்டு தான் இருக்காங்க. ஆனால், என் அப்பா, அம்மா, அண்ணன் என் ஆசைக்கும் விருப்பத்தும் எப்பவும் உறுதுணையா இருக்காங்க. இந்த அன்பும் சப்போர்ட்டும் இல்லைன்னா என்னால் இந்த அளவுக்கு வந்திருக்க முடியாது.'' 

''மறக்கமுடியாத ஃபேன் மொமண்ட்...'' 

'' 'கல்யாணம் முதல் காதல்' வரை சீரியலில் நடிச்சதிலிருந்து ரசிகர் ஒருத்தர், சீரியலில் வரும் என் ஸ்டில்ஸை எடுத்து, என்னை டேக் பண்ணி போஸ்ட் பண்ணுவார். நான் தேங்க்ஸ் அண்ணான்னு மெசேஜ் பண்ணேன். தொடர்ந்து நான் நடிக்கும் சீரியல்களை புரொமோட் பண்ணிட்டு இருந்தவர், இப்போ எங்க ஃபேமிலி ஃப்ரெண்டாவே ஆகிட்டார். அப்பா, அண்ணன், அம்மா எல்லோரிடமும் பேசுவார். என் ஷோஷியல் மீடியா அட்மின் அவர்தான்.'' 

''உங்க பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் பற்றி..'' 

''காலேஜில் நிறைய ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. என் குளோஸ் ஃப்ரெண்ட் என்னிக்கும் அம்மாதான். என்ன நடந்தாலும் ஓப்பனா அம்மாகிட்ட சொல்லிடுவேன். பசங்க காதலிக்கறதா சொன்னதையும் சொல்லியிருக்கேன். எல்லா விஷயமும் கத்துக்கணும்னு சொல்வாங்க. நீச்சல், பாட்டு, டான்ஸ் என எல்லாத்தையும் சின்ன வயசிலேயே முடிச்சிருக்கேன். பியூட்டி கோர்ஸூம் முடிச்சிருக்கேன்.'' 

''சினிமாவில் நடிக்க ஆர்வம் இருக்கா?'' 

''இப்போதைக்கு சின்னத்திரை, மாடலிங், விளம்பரப் படங்கள் என இருக்கேன். சினிமா ஆஃபர்ஸ் நிறைய வருது. பொருத்தமான ரோலுக்காக வெயிட் பண்றேன். மறுபடியும் டான்ஸ் கிளாஸ் ஆரம்பிக்கும் எண்ணமும் இருக்கு. ஃபேஷன் டிசைனிங் படிச்சிருக்கிறதால், பொட்டிக் ஆரம்பிக்கும் பிளானும் இருக்கு. இப்படிப் பல எதிர்கால திட்டங்களுக்கான லிஸ்ட் போட்டு வெச்சிருக்கேன்.''